நிதி மூலதனம் தன் நச்சுக் கொடுக்குகளை தொழிலாளிகளின் கடின உழைப்பின் சேமிப்புகளின் மீதும் ஒய்வூதியங்களின் மீதும் பரப்புகிறது

ஊழியர் வருங்கால வைப்பு நிதிகள் மற்ற வகைப்படுத்தாத ஏற்பாடுகள் சட்டம், 1952-இல் முக்கிய திருத்தங்களை தேசிய சனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் தொழிலாளர் அமைச்சகம் முன்வைத்துள்ளது. அமைச்சகம் இந்த சட்டத்தின் "பங்குதாரர்களாக"க் கருதும் – வேலை கொடுப்பவர்களின் சங்கங்கள் மற்றும் அரசாங்கம் "அங்கீகரித்திருக்கின்ற" அந்த மத்திய தொழிற்சங்கங்கள் – ஆகியோரிடமிருந்து கருத்து கேட்டிருக்கிறது. மக்கள் தொகையில் தோராயமாக பாதி இருக்கும் நம் நாட்டின் தொழிலாளி வர்க்கம் பங்குதாரர்களாகக் கருதப்படவில்லை. இந்தத் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டால், அது சட்டமாகும். 2 வருடங்களுக்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் தான் முதலில் இந்த திருத்தங்களை முன்வைத்தனர் என்றாலும், தற்பொழுதுள்ள தேசிய சனநாயக கூட்டணி அரசாங்கம், பாராளுமன்றத்தின் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலோ அல்லது மழைக்கால கூட்டத் தொடரிலோ, இந்தத் திருத்தங்களை சட்டமாக ஆக்க முனைப்புடன் இருப்பதாகத் தெரிகிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்) என்றால் என்ன?

நம் நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலும் பல்வேறு தொழில் துறைப் பிரிவுகளிலும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக, நம் நாட்டின் தொழிலாளி வர்க்கமும் கம்யூனிச இயக்கமும் சக்தி வாய்ந்த போராட்டங்களை நடத்தி வந்த சூழ்நிலைகளில் 1952-இல் இ.பி.எப் சட்டம் இயற்றப்பட்டது. உலகளவில் சோசலிசம் மற்றும் சோவியத் யூனியனின் பெருமை மிகவும் உயர்ந்திருந்தது. இ.பி.எப் சட்டத்தின் படி, பொருளாதாரத்தின் அணி திரட்டப்பட்ட துறைகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை எதிர்காலத்திற்குச் சேமிப்பாக ஒதுக்கி வைப்பர். திருமணம், உடல் நலக் குறைவு போன்ற ஏதாவதொரு அவசரம் ஏற்பட்டாலோ அல்லது அவர்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலோ இதிலிருந்து அவர்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். சட்டப்படி, வேலைக்கு வைத்திருப்பவரும் அதே அளவு தொகையை தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு வலைக்காகப் பங்களிக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதியை அரசாங்கம் மேலாண்மை செய்ய வேண்டும். அதன் நிதிகள், தொழிலாளிகளையும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தையும் பாதிக்காதவாறு, பாதுகாப்பாக முதலீடு செய்யப்பட வேண்டும்.

இ.பி.எப் நிதி மூன்று பாகமாக பிரிக்கப்படுவதை இ.பி.எப் சட்டம் உறுதி செய்கிறது. அதில் ஒரு பகுதி வருங்கால வைப்பு நிதிக்கு செல்கிறது. இரண்டாவது பகுதி ஊழியர்களின் ஒய்வூதிய திட்டத்திற்காகவும் மூன்றாவது பகுதி ஊழியர்களின் வைப்போடு இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்திற்காகவும் ஒதுக்கப்படுகிறது. இது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். தொழிலாளியின் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதிக்கு மட்டும் தான் செல்கிறது, ஆனால் சட்டப்படி வேலைக்கு வைத்திருப்பவரிடமிருந்து திரட்டப்பட்ட தொகை, மத்திய அரசின் அவ்வப்போதைய அறிவிப்புகளின்படி, வருங்கால வைப்பு நிதிக்கும், ஒய்வூதிய திட்டத்திற்காகவும். ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்காகவும் பிரிக்கப்பட்டு முதலீடுகள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. மத்திய அரசாங்கமும் ஒய்வூதிய திட்டத்திற்காக பங்களிக்கிறது. இந்த நிதிகளின் மேலாண்மை, இ.பி.எப்.ஓ-வின் கீழுள்ள அந்த சட்ட விதிகளின் படி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தொழிலாளர்களில் மிகச் சிறிய பகுதியினரே இ.பி.எப் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றாலும், இ.பி.எப்.ஓ-வின் (இ.பி.எப் நிறுவனத்தின்) கட்டுப்பாட்டிலுள்ள நிதிகள் மிகப் பெரியது. கீழ்காணும் புள்ளிவிவரங்கள் இ.பி.எப்.ஓ எந்த அளவிற்கு விரிவடைந்துள்ளது என்று காண்பிக்கின்றன. 2012-2013-இல் மட்டும், 32.2 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, 31 மார்ச் 2013-இல் இ.பி.எப்.ஓ-வின் மொத்த உறுப்பினர்கள் 88.8 லட்சமாக ஆனது. அந்த வருடம் 3 லட்சம் புதிய ஓய்வூதியம் பெறுபவர்கள் சேர்க்கப்பட்டு மொத்த ஓய்வூதியம் பெறுபவர்கள் 44 லட்சமாக ஆனது. (இ.பி.எப்.ஓ-வின் கீழ் புதிய ஓய்வூதியத் திட்டம் என்று அழைக்கப்படும் ஓய்வூதிய திட்டம் 1995-ஆம் ஆண்டிலிருந்து உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.) 31-மார்ச்-2013 தேதியில், மொத்ததில் 7.43 லட்சம் நிறுவனங்களுக்கு இ.பி.எப் சேவை செய்கிறது.

இ.பி.எப்.ஓ-வின் கீழ் 2012-2013-இல் ரூ. 77,000.94 கோடிகள் பங்களிப்பாக திரட்டப்பட்டது. அதில் ரூ. 60,257 கோடிகள் வருங்கால வைப்பு நிதிக்காவும் ரூ. 16,124 கோடிகள் ஓய்வூதிய நிதிக்காகவும் ரூ. 620 கோடிகள் ஆயுள் காப்பீட்டு நிதிக்காகவும் திரட்டப்பட்டுள்ளது. அந்த வருடத்தில் ரூ. 35,119 கோடிகள் பயன்கள் கோரியவர்களுக்கு கொடுக்கப்பட்டது. 11.1 லட்சம் கோரிக்கைகள் தீர்த்து நிறைவு செய்யப்பட்டன. 2013 முடிவில் இ.பி.எப்.ஓ-வின் மொத்த முதலீட்டு தொகுப்பு ரூ. 6.32 லட்சம் கோடிகளுக்கு மேல் உள்ளது.

சமூக பாதுகாப்பும் தொழலாளி வர்க்கமும்

எல்லோருக்கும் சமூகப் பாதுகாப்பு வேண்டும் என்ற நெடுநாளைய கோரிக்கைக்காக தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராடி வருகிறது. தங்கள் உழைப்பு சக்தியை மூலதன சொந்தக்காரர்களிடம் விற்று கூலிக்காக வேலை செய்வதைத் தவிர வேறு எந்த வாழ்வாதாரமும் இல்லாத எல்லோருக்கும், வயதான காலத்தில் ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஒய்வூதியம், அவர்கள் இறந்தால் அவர்களை நம்பி உள்ளவர்கள் வாழ்வதை உறுதி செய்வது போன்ற தேவையான சமூகப் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் எதிர்பாராத அவசர நிலைகளை அவர்களால் சமாளிக்கவும் முடிய வேண்டும்.

இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு மிகவும் குறைவானதே. உழைக்கும் மக்கள் தங்கள் குடும்பங்களையும் சேர்ந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசாங்க ஊழியர்களும் பெரும் தொழில்துறைகளில் உள்ள நிரந்தரத் தொழிலாளர்களும், குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்களில் உள்ளவர்களுக்கும் ஏதோ வடிவத்தில் சமூக பாதுகாப்பு என்ற நன்மை கிடைத்துள்ளது.

நம் நாட்டில் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்று வரும் வேளையில், பெரிய கூட்டு குடும்பங்கள் உடைந்து வரும் வேளையில் நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பாதிக்கும் மேலான மக்கள் தொகை கூலித் தொழிலாளியாகி வரும் இந்த வேளையில், அரசு தேவையான அளவு சமூக பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்றால் நம் உழைக்கும் மக்கள் தொகையில் பெரும் பகுதி ஆதரவற்றுப் போகும் அபாய சூழ்நிலை வளர்ந்து வருகிறது.

ஆனால், முதலாளி வர்க்க அரசான இந்திய அரசு, நமது சமுதாயத்திற்கு மிக முக்கியமாக உள்ள இந்த பிரச்சனையை வெறும் வார்த்தை அளவிலேயே பேசி வருகிறது. அது முதலாளி வர்க்க நலன்களையும் பணமூட்டைகளின் நலன்களையும் நிதி மூலதன கழுகுகளின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. தொழிலாளிகளின் வாழ்க்கை சேமிப்பை வைத்து சூதாடி, எப்படி நிதி முதலாளிகளைக் கொழுக்க வைப்பது என்ற குறுகிய பார்வையிலேயே, அது தொழிலாளிகளின் சமூகப் பாதுகாப்பு என்ற கேள்வியை அணுகுகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதிகள் மற்றும் வகைப்படுத்தாத ஏற்பாடுகள் சட்டம் 1952-இல் அது முன்வைத்துள்ள திருத்தங்களையும் அதற்கு முன் மத்திய அரசாங்கம் இ.பி.எப்.ஓ திட்டத்தை பற்றிய அறிவிப்புகளையும் பார்த்தால் இது தெளிவாகிறது.

முக்கிய கேள்வி இது தான். தங்கள் வாழ்க்கை முழுவதும் உழைத்து தங்கள் உழைப்பால் உபரி மதிப்பையும் செல்வச் செழிப்பையும் உருவாக்கியவர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் அவர்களுடைய வயதான காலத்திலும் அல்லது ஏதாவது விபத்துகள் ஏற்பட்டாலும் பாதுகாப்பான மற்றும் கெளரவமான வாழ்கையை உறுதிப்படுத்தும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அது, இதைச் செய்வதற்கெல்லாம் நிதி இல்லை என்று அறிவித்துவிட்டு உழைக்கும் மக்களும் அவர்களுடைய குடும்பங்களும் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளட்டுமென விட்டு விடுமா?

தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு மனித நேயம் கொண்ட அணுகுமுறையை பின்பற்றும் அரசாங்கமாக இருந்தால், அது இதை ஒரு பிரச்சனையாகவோ அல்லது ஒரு செலவாகவோ பார்க்காது. அது, தொழிலாளிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தேவையான முதலீடுகளைச் செய்யும். சமூக உபரியிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து அது, தொழிலாளர்கள் ஒய்வு பெற்ற பிறகும் அல்லது ஊனமுற்றாலும், அவர்களுடையத் தேவைகளை நிறைவு செய்வதை உறுதி செய்யும்.

ஆனால் இந்தக் கேள்விக்கு மூலதனத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றும் அரசாங்கம், முதலாளிவர்க்கம் மற்றும் நிதிமூலதனத்தின் நலன்களை முன்நிறுத்தும். தொழிலாளிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் கேள்வியை, எல்லோருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசு கடமைப்பட்டிருக்கிறது என்ற அறிவார்ந்த கண்ணோட்டத்தோடு அது அணுகாது.

அரசாங்கத்தின் அணுகுமுறை

ஒய்வூதியம், மருத்துவ வசதி உட்பட சமூகப் பாதுகாப்பு எல்லா கூலித் தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றும், ஒய்வூதியத்தை கடைசியாகப் பெற்ற ஊதியத்துடன் தொடர்புடையதாகவும், பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்தப்படுவதாகவும், முதுமைக் காலத்தில் வசதியாக வாழ்வதற்குப் போதுமானதாகவும் இருக்க வேண்டுமெனத் தொழிலாளர்களும் அவர்களுடைய சங்கங்களும் கோரியதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் நிராகரித்தது.

தொழிலாளர்களிடமிருந்தும், வேலைக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தும் இ.பி.எப்-க்கு அவர்களுடைய பங்காகத் திரட்டப்பட்ட நிதி மிகச் குறைவானது என்றும், எனவே குறைந்தபட்ச ஒய்வூதியமான ரூ. 1000-த்திற்கு மேல் எதையும் கொடுக்க முடியாதென ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் வாதிட்டனர். அதையே தேசிய சனநாயகக் கூட்டணி அரசாங்கமும் பின்பற்றி வருகின்றனர். அது அக்டோபர் 2014-இல் குறைந்தபட்ச ஒய்வூதியம் ரூ. 1000-ஆக இருக்கும் என்று அறிவித்தது. இதற்கு முன்னர், குறைந்தபட்ச ஒய்வூதியம் ரூ. 250-ஆக இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் வழங்க முன்வந்ததை தேசிய சனநாயக கூட்டணி அரசாங்கம் நடைமுறைப் படுத்தியது. இந்த அரசாங்கம் தொழிலாளர்கள் ஒய்வு பெற்ற பிறகு ஒரு மாதத்திற்கு ரூ. 1000-த்தில், அதாவது ஒரு நாளைக்கு ரூ.30-இல் வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது, ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒருவர் வாழ்நாள் முழுவதும் உழைத்துவிட்டு, ஓய்வு பெற்ற பிறகு ஒரு தொழில் திறமையற்ற கூலித் தொழிலாளி இன்று சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கில் வாழ்ந்திட வேண்டும் என்கின்றனர்!

அக்டோபர் 2014-இல் அரசாங்கம் ஒரு உத்தரவின் மூலம் கட்டாய இ.பி.எப் பிடிப்பின் வரம்பை ரூ.6500 சம்பளம் பெறுபவர்களிலிருந்து ரூ. 15,000 சம்பளம் பெறுபவர்கள் வரை உயர்த்தியுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த இரண்டிற்கும் இடையில் சம்பாதிக்கும் மற்றும் 20 தொழிலாளர்களுக்கும் மேல் வேலையில் அமர்த்தியுள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் எல்லா தொழிலாளர்களும், இப்பொழுது இ.பி.எப் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தாக வேண்டும். அரசாங்கத்தின் இந்த ஆணையினால், இ.பி.எப் உறுப்பினர்கள் 50 லட்சம் அதிகமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட இ.பி.எப் உறுப்பினர்களிடமிருந்து பெறும் பங்களிப்பு, மாதத்திற்கு ரூ. 6500 ஊதியம் பெறும் உறுப்பினர்களை விட மிக அதிகமாக இருக்கும் என்பதனால், இ.பி.எப்-இன் அமைப்பின் கருவூலத்தில் நிதி பெருமளவு அதிகரிக்கும்.

கடந்த சில வருடங்களாகவே, அரசாங்கம் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதிகள், வருங்கால வைப்பு நிதி போன்றவற்றைத் தனியார் நிதி மேலாளர்களின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் இந்த நிதிகளைத் தங்களுடைய இலாபங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக முதலீடு செய்து கொள்வார்கள். இந்த நிதிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்குக் கூறப்பட்ட காரணம், தொழிலாளர்களுக்கு இதன் மூலம் அதிக வருங்கால வைப்பு நிதியும் ஓய்வூதியமும் கிடைக்கும் என்பதாகும். அமெரிக்காவிலும் மற்ற முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் அண்மையில் நிகழ்ந்த நெருக்கடியில் தொழிலாளர்களின் ஓய்வூதியத்திற்கு நடந்தது போல, நிதி மூலதனம் மக்களுடைய கடின உழைப்பினால் சேமித்து வைத்ததைச் சூதாடி அதை இழந்துவிடும் வரலாறு உள்ளது என்பது மறைக்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக தொழிலாளர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தைத் தொழிலாளி வர்க்கம் எதிர்த்து வருவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

முன்வைக்கப்பட்டுள்ள முக்கியத் திருத்தங்கள் பின்வருமாறு:

1. 10 தொழிலாளிகள் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் எல்லா தொழிலாளர்களையும் உள்ளடக்குமாறு இ.பி.எப் விரிவாக்கப்படும். (20 அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்களை வேலையில் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு தற்போது இந்தச் சட்டம் பொருந்தும்.) அதை நடைமுறைப் படுத்தினால் இ.பி.எப் திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். ஆனால், இது நடைமுறைப்படுத்தப்படுமா என்பதில் பெரும் சந்தேகம் உள்ளது. ஏனெனில், முதலாளிகள் வர்த்தகம் செய்வதற்குள்ள தடைகளை நீக்க வேண்டும் என்று மோடி அரசாங்கம் தானே வலுக்கட்டாயமாக அறிவித்துள்ளது. தன் விருப்பம் போல அரசாங்கம் செய்ய முடியுமானால், 50 தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகளும் வேலையிடங்களும் கூட தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்ய வேண்டியதில்லை! எனவே, 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்களை இ.பி.எப் திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசாங்கம் எப்படி உத்தேசித்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.

2. சில வகை தொழில் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இ.பி.எப்-இலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவிப்பதற்கு வழிவகை செய்யுமாறு இ.பி.எப் சட்ட திருத்தம் முன் மொழியப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறினால், அப்படிப்பட்ட துறைகளில் வேலைக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே இ.பி.எப்-க்கு பங்களிப்பார்கள், தொழிலாளர்கள் தங்கள் சமமான பங்கை அளிக்கத் தேவையில்லை. மிகச் சுரண்டலான சூழ்நிலைகளில் வேலை செய்யும், உரிமைகளே இல்லாத தொழிலாளர்களிடையே, அவர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி கிடைக்கும் என்ற பிரம்மையை இந்தத் திருத்தத்தின் மூலம் உருவாக்குவதற்கு இதைப் பயன்படுத்துவார்கள். இதுவும் நடைமுறைப் படுத்தப்படாமலேயே போகலாம்.

3. ஊதியத்தின் விளக்கமானது அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி போன்ற அனைத்து வகைகளான படிகளையும் உள்ளடக்கியதாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களிடமிருந்தும் வேலைக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தும் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு கணிசமாக அதிகரிக்கும்.

4. வேலைக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தும், தொழிலாளர்களிடமிருந்தும் இ.பி.எப் பிடிப்பின் அளவு 10%-இலிருந்து 12%-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவும் இ.பி.எப்-இன் நிதியை அதிகரிக்கும். அதே நேரத்தில், சில சிறப்பு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் வேலைக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தும், தொழிலாளர்களிடமிருந்தும் இ.பி.எப் பிடிப்பின் அளவை 10%-மாக ஆக்கலாம். அரசாங்கம் சில வகைப்பட்ட நிறுவனங்களை இ.பி.எப் சட்டத்திலிருந்து அறிவிப்பு கொடுத்து விலக்களிக்கலாம் என்ற உரிமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றாலும், அரசாங்கமும், ஆளும் வர்க்கங்களும் இ.பி.எப்-இன் எல்லையை விரிவுபடுத்த முனைந்துள்ளனர் என்பது தெளிவு.

5. இ.பி.எப் அமைப்பின் உச்ச மட்ட குழுவின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு, எங்கு எப்படி அமைப்பின் நிதிகளை முதலீடு செய்வது என்று முடிவு செய்யும் அதிகாரம் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், இ.பி.எப் சட்டத்தின் திருத்தங்கள், தொழிலாளர்களின் கடின உழைப்பின் மூலம் கிடைத்த கூலியை இன்னும் அதிக அளவில் நிதி மூலதனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் என்பதை அறியலாம்.

Pin It