காப்பீடு சட்டங்கள் (திருத்தம்) மசோதா மாநிலங்களவையில் 12 மார்ச் 2015 அன்று நிறைவேற்றப்பட்டது. இதனால் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பு இதுவரை இருந்த 26% இருந்து 49% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், இதே நேரத்தில் ஓய்வூதிய நிதிகளில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பும் 49% ஆக உயர்த்தப்பட்டுவிடும். ஏனெனில், ஓய்வூதிய நிதிகளின் ஒழுங்குமுறை மசோதா, ஓய்வூதிய துறையின் அந்நிய நேரடி முதலீட்டை காப்பீட்டுத் துறையின் அந்நிய நேரடி முதலீட்டோடு பிணைத்துள்ளது.

காப்பீடு சட்டங்கள் (திருத்தம்) மசோதா முன்னர் மக்களவையிலும், மார்ச் 2015-இல் மாநிலங்களவையிலும், காங்கிரசு கட்சியின் ஊக்கமான ஆதரவினால் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 84 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாகவும் வெறும் 10 பேர் மட்டுமே எதிராகவும் வாக்களித்தனர். ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, திருணாமூல், பிஎஸ்பி போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரசு கட்சியின் வாக்குகளும், வெளிநடப்பு செய்தும் அல்லது வசதியாக வாக்கெடுப்பிற்கு வராமல் இருந்தும் மறைமுகமாக தங்கள் ஆதரவைத் தந்ததும் மக்களுக்கு எதிரான இந்தச் சட்டத்திற்கு முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்த ஒற்றுமையை வெளிப்படுத்தியது.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கை, இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்காக இந்தியாவின் நிதித்துறையை தனியார்மயப்படுத்தி தாராளமயப்படுத்துவதன் ஒரு பகுதியாகும். 2000-த்தில் காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) இயற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்திய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வணிகத்தில் நுழைந்தனர். அவர்கள் தொடர்ந்து சீராக வளர்ந்து வருகின்றனர். இன்று அவர்கள் தங்கள் வெளிநாட்டு கூட்டாளிகளின் அதிக ஒத்துழைப்புடன் மேலும் வளரவேண்டும் என்று முயற்சிக்கின்றனர். அந்த வெளிநாட்டு கூட்டாளிகளில் பலர் மிகப் பெரிய பன்னாட்டு நிதிமூலதன ஏகபோகங்களாக இருக்கின்றனர்.

அவர்களின் இலாபத்திற்கு ஆதாரமாக இருக்கும் பெரிய அளவிலான நிதி மூலதனம், இப்பொழுது இந்த நிதிமூலதன ஏகபோகங்களுக்கு எளிதாகக் கிடைக்கும். இந்திய ஏகபோகங்களான ரிலையன்சு, டாடா, பாரதி, பஜாஜ் மற்றும் பிறரும், அவர்களின் வெளிநாட்டு கூட்டாளிகளும் இந்தியச் சந்தையின் பெருத்த வளர்ச்சியையும் அதிகமான விரிவையும் எதிர்பார்க்கின்றனர். இங்கிலாந்தின் புருடென்ஷியல் மற்றும் பிபூபா-வும், ஜப்பானின் நிப்பான் லைப்-உம் மற்றும் அமெரிக்காவின் மெட்லைப்-உம் கூட்டு நிறுவனங்களில் தங்களுடைய முதலீட்டை உயர்த்த ஆயத்தமாக உள்ளனர். எதிர்பார்த்தது போல, இந்திய மற்றும் வெளிநாட்டு தொழில்துறை மற்றும் நிதிமூலதனத்தின் பல்வேறு தலைவர்கள் பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறியதை, "சாதகமான முன்னேற்றம் என்றும், அது காப்பீட்டுத் தொழில்துறை வளர்ச்சிக்கு மிகவும் தேவையான முதலீடுகளைக் கொண்டு வரும்" என்றும் பாராட்டியுள்ளனர். "மிகவும் தேவையான" முதலீடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிப்பதற்காக அல்ல, அது தனியார் நிறுவனங்கள் பெருத்த இலாபத்தை அடையும் தேவைக்காக ஆகும். உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை இந்தச் சட்டம் பிற்போக்கானதும் மக்களுக்கு எதிரானதும் ஆகும். 

காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு தவணைத் தொகைகளாக சேகரித்த நிதியைப் பராமரித்து, இறப்பு, விபத்துகள் நிகழுமானால், காப்பீடு செய்தவர்களின் அல்லது அவர்களின் வாரிசுகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவு செய்யும் வகையில் முதலீடு செய்ய வேண்டும். உலகமெங்கும் நிதிமூலதனத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக காப்பீட்டு துறை உள்ளது. ஏனெனில், இந்தத் துறையில் மூலதனம் செய்வதன் மூலம், முதலாளிகள் தங்கள் வசமுள்ள காப்பீட்டு நிதிகளை எல்லா வகையான ஊக முதலீடுகள் செய்து, அதிகபட்ச இலாபங்களை அடைகின்றனர். இதுவே காப்பீட்டு நிறுவனங்களையும் அதன் வாடிக்கையாளர்களையும் பெருத்த ஆபத்திற்கு ஆளாக்குகிறது. ஏனெனில், ஊக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் நிதிகளினால் இந்த நிறுவனங்கள் திவாலாகும் வாய்ப்புக்களும் உள்ளன. அல்லது விபத்துகள் நேரிடும் போது காப்பீடு செய்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிறுவனங்களிடம் நிதி இல்லாமல் போகலாம்.

தற்பொழுது இந்தியாவில் ஏழு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவை, 1956-இல் நிறுவப்பட்ட லைப் இன்ஷியூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி), நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்கள், மறுகாப்பீடுகளில் தனித்துவம் பெற்றிருக்கும் பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் பயிர் காப்பீட்டிற்காக 2002-இல் நிறுவப்பட்ட வேளாண் காப்பீட்டு நிறுவனம் ஆகும். அண்மைக் காலம் வரை, காப்பீடு என்பது பொதுத் துறையாகவும் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதன் நிதிகள் பாதுகாப்பாக இருந்தன. ஓய்வூதிய நிதியாகவோ அல்லது உயிர் காப்பீட்டுத் திட்டமாகவோ தொழிலாளியின் சேமிப்புக்கு மிதமான வருமானம் இருந்தது. எல்.ஐ.சி-யிடம் மட்டுமே மிகப் பெரிய அளவு நிதி உள்ளது. அதை வைத்து அது 12000 கோடி ரூபாய் அளவுக்கு வருடாந்திர ஈவுத் தொகையை அரசாங்கத்திற்கு கொடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், வருடா வருடம் பலவகைப்பட்ட காப்பீடுகளுக்கான தேவைகளும் தவணைகளாக கட்டப்படும் நிதிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் இந்த துறையில் தனியார்களையும் அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்குமாறு நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு கோரி வருகிறார்கள் என்பதில் வியப்பொன்றும் இல்லை.

ஓய்வூதியம் பெறுபவர்களும் காப்பீடு செய்தவர்களும் தங்களுடைய ஓய்வூதிய பங்களிப்பு அல்லது காப்பீட்டுத் தவணை ஆகியவற்றிலிருந்து நிலையான வருமானம் பெறுவதோடு திருப்திப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று காரணத்தைக் காட்டி, இத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டையும், தனியார்மயப்படுத்துவதையும் பெரிய முதலாளிகள் நிர்பந்தித்து வருகிறார்கள். நிதி சந்தைகளில் பல்வேறு நிதி கருவிகளில், தங்களுடைய வருங்கால வரவுகளை மூலதனமாக்க ஒப்புக் கொள்வதன் மூலம், அவர்கள் மேலும் அதிக வருமானம் ஈட்டலாம். நிதி சந்தைகளில் மூலதனம் செய்வது மிகவும் ஆபத்தானது என்பதும், அதனால் உழைக்கும் மக்கள் கவனமாக சேமித்து வைத்த எல்லாவற்றையும் இழக்க நேரிடலாம் என்பதும் மறைக்கப்படுகின்றது. மேலும், இந்த துறைகளிலுள்ள மிகப் பெரிய நிதிகளை இந்திய மற்றும் வெளிநாட்டு பெரிய முதலாளிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறார்கள் என்பதும் மறைக்கப்படுகின்றது. அதே நேரம் காப்பீட்டிற்கான தவணைத் தொகை அதிகமாகும். காப்பீட்டுத் துறையில் நடந்த முந்தைய சுற்று தாராளமயத்தினால் பலவகைப்பட்ட காப்பீட்டு திட்டங்களின் சராசரி தவணைத் தொகை 40% வரை அதிகரித்தது.

தனியார் காப்பீடு நிறுவனங்கள் இலாபத்தையே தங்களுடைய உந்து சக்தியாகக் கொண்டுள்ளனர், அவர்களுடைய நோக்கம், உழைக்கும் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் எதிர்பாராத அபாய நிகழ்வுகளிலிருந்து பாதுகாப்பதல்ல. அவர்கள் நகரங்களிலுள்ள ஓரளவு பணக்கார பகுதி மக்களிலிருந்து வியாபாரத்தைப் பெறுவதிலும் அதனால் மேலும் இலாபத்தை ஈட்டுவதிலும் கவனம் செலுத்துகின்றனர். அவர்களுடைய நோக்கம் இந்தியாவில் "நிதியில் மேலும் பலரையும் சேர்ப்பதே" என்று சொல்லிக் கொள்கிறார்கள், அதாவது அதிக மக்களை காப்பீட்டுப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வருவதாகும் என்கிறார்கள். ஆனால் காப்பீடு தவணைத் தொகை பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு எட்டாததாக உள்ள காப்பீட்டு திட்டங்களை அவர்கள் தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அரசாங்க எல்.ஐ.சி-யில் காப்பீடு எடுத்த ஒரு நபருக்கு சராசரி வருடாந்திர தவணைத் தொகை ரூ. 9000 தான், ஆனால் அதே தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளரிடமிருந்து தவணைத் தொகை சராசரியாக ஒரு வருடத்திற்கு ரூ. 60,000 வசூலிக்கப்படுகிறது. இது மேற் கூறிய கருத்தை உறுதிப்படுத்துகிறது.

உழைக்கும் மக்களை ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்குப் பதிலாக, இலாபமே தனது முக்கிய குறிக்கோளாக கொண்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், உழைக்கும் மக்களின் எதிர்காலத்தை மேலும் ஆபத்திற்கு ஆளாக்குகின்றன. ஏற்கெனவே நமது நாட்டில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுடைய நிதிகளை அதிகமான இலாபங்களை அளிக்கக் கூடிய கருவிகளிலும் துறைகளிலும் முதலீடு செய்துள்ளனர். அதே நேரத்தில் அவை அபாயகரமான முதலீடுகளாகும். அமெரிக்க காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி 2008-இல் தன்னுடைய அபாயகரமான முதலீடுகள் வாராக் கடன்களாக ஆனதால் கடுமையாக வீழ்ச்சியடைந்ததை நாம் நினைவு கூறலாம். இந்த வகையில் அது காப்பீடு செய்த இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் பொருளாதாரத்தையும் தீவிர பிரச்சனைக்கு உள்ளாக்கியது.

அமெரிக்க அரசாங்கம், வரிப்பணமாக உழைக்கும் மக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட பொது மக்களின் பணத்தில் தோராயமாக 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்து ஏ.ஐ.ஜி-யை மீட்டது. உலகம் முழுவதுமுள்ள பல தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அவர்களிடம் எழுப்பப்படும் காப்பீடு கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நல்ல வரலாறு இல்லை என்பது தெரிந்ததே. இந்தியாவில் எல்.ஐ.சி-யின் கோரிக்கை-பணம் செலுத்தும் விகிதம் 99% மேல் உள்ளது, ஆனால், அதே விகிதம் தனியார் காப்பீடு நிறுவனங்களில் சராசரியாக 79%-மே உள்ளது. இதற்கு, கோரிக்கை செய்பவர்களில் 20%-மானவர்களுக்கும் மேல் பணம் கொடுக்கப்படுவது இல்லை என்று பொருள்.

காப்பீட்டுத் துறையில் "சீர்திருத்தங்களும்" அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை அதிகரிப்பதும், மேலும் மேலும் அதிகமான உழைக்கும் மக்களின் எதிர்காலத்தை ஆபத்துக்கு உள்ளாக்குவதாகும். அவர்களுடைய கடின உழைப்பினால் சேமித்த பணத்தை கொண்டு வாங்கிய காப்பீடு, ஆபத்துக்கு உட்படுத்தப்படும், அந்த ஆபத்துக்கள் உண்மையில் நிகழுமானால் அதனால் ஏற்படும் சேதங்களை அவர்கள் தான் தாங்க நேரிடும். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதையும் தனியார்மயப்படுத்துவதையும் காப்பீட்டுத் துறை தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த பரந்துபட்ட எதிர்ப்பின் ஒரு பகுதியாக காப்பீட்டுத் துறையை தனியார்மயப்படுத்துவதையும் அதில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதையும் எதிர்த்து மார்ச் 9, 2015 அன்று நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங்களில், எல்.ஐ.சி மற்றும் பிற காப்பீட்டு நிறுவனங்களின் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ அமைப்பில், தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் உழவர்களும் பெருவாரியான நகரத்து சிறு முதலாளிகளும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் இறப்பு, விபத்துகள், உடல் நலமின்மை, சொத்துகள் இழப்பு, விளைச்சல் இழப்புகள், இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றிலிருந்து எந்த வகையான பாதுகாப்பிற்கும் அரசு உத்திரவாதம் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக, தங்கள் கடின உழைப்பினால் சேமித்து வைத்ததிலிருந்து ஒரு பகுதியை, அப்படிப்பட்ட ஆபத்துக்களிலிருந்து தங்களை ஓரளவிற்காவது பாதுகாத்துக் கொள்வதற்காக, பல வகைப்பட்ட காப்பீட்டு நிதிகளில் தங்களை இணைத்துக் கொள்ள அவர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். இந்த எதிர்பாராத தன்மையையும் அபாயமான நிலைமைகளையும் காப்பீட்டு நிறுவனங்கள், இன்று தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் காப்பீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது, பெரு முதலாளிவர்க்கம் முழுக்க முழுக்க தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் எதிரானது என்றும் சமூக விரோதமானது என்றும் காண்பிக்கிறது. தன்னைத் தானே கொழுக்க வைப்பது என்ற குறுகிய நலனுக்காக, அது சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சூதாடுவதற்கு துணிகிறது. முதலாளி வர்க்க திட்டமான தாராளமயத்தையும் தனியார்மயத்தையும் எதிர்த்த போராட்டத்தை தங்குதடையின்றி விட்டுக் கொடுக்காமல் தொடர வேண்டும். எந்தவொரு முதலாளித்துவ கட்சியும் தங்களுடைய நலன்களை பாதுகாக்கும் என்று எந்தவொரு மாயையும் தொழிலாளி வர்க்கம் கொண்டிருக்கக் கூடாது. அரசு அதிகாரம் முதலாளிவர்க்கத்திடம் உள்ளது. அதிகாரத்திற்கு வரும் எந்தவொரு கட்சியும் முதலாளிவர்க்கத்திற்கு அதனுடைய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மேலாளராக மட்டுமே இருக்கும். அதனால் தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை மாற்றி, தொழிலாளர்கள் உழவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் பொருளாதாரத்தை மாற்றி அமைத்து மக்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.

Pin It