தொழிலாளர்கள் என்ற வார்த்தை உடலுழைப்பைச் செலுத்தும் அனைவரையும் ஒன்றாக உணர வைத்தாலும், தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தவரை சற்று கீழ்நிலையில் வைத்துதான் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் செய்யும் வேலையை, அந்தத் தரத்தை நிர்ணயிக்கின்றன போலும். அதுபோலவே அவர்கள் நடத்தப்படுவதும் தொடர்கின்றன. இதற்கெல்லாம் எடுத்துகாட்டாக சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை குறிப்பிடலாம். இரண்டு வாரங்களாக நடைபெறும் அவர்களின் போராட்டங்கள் வெகுவாக அதை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.
சென்னை போன்ற பெருநகரங்களில் உழைக்கும் அடித்தட்டு மக்களில் ஒரு பகுதியினராக தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உரிமைகளை வீதிக்கு வந்து கேட்டார்கள் என்பதற்காக, அரசு தனது போலீஸ் படையைக் கொண்டு காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளது. இதுபோன்ற சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதே.
எதற்காக இந்தப் போராட்டம்?
சென்னை, மாநகராட்சியின் சில மண்டலங்களின் துப்புரவுப் பணிகளை தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது, முன்னாள் இருந்த அதிமுக அரசு. அப்போதைய எதிர்க்கட்சியான திமுக இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்தது.
ஆனால்தற்போது திமுக அரசும் இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணிகளை தனியார் வசமே ஒப்படைத்திருக்கிறது, மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்களாக தூய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றப்பட்டிருக்கின்றனர்.
இதில் இருபது ஆண்டுகளாகப் பணிபுரிந்தவர்களும் அடக்கம். இந்த பணியாளர்கள் குறித்து எந்த நிபந்தனைகளையும் அரசு அந்தத் தனியார் கம்பெனிக்கு விதித்ததாகத் தெரியவில்லை.
23,000 ஊதியம் பெற்றவர்களுக்கு16,000 ரூபாயாக ஊதியம் குறைக்கப்பட்டிருக்கிறது, குறைந்த பட்சம் அதே ஊதியம் வழங்கப்படும், அதே பணி நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்ற உத்தரவாதத்தைக்கூட அரசு இந்தப் பணியாளர்களுக்கு வழங்கவில்லை, இனி உங்களுக்கும் எங்களுக்கும் பேச்சில்லை, எதுவாக இருந்தாலும் அந்தத் தனியார் கம்பெனியுடன் பேசிக் கொள்ளுங்கள் என்று அரசு கைகழுவ நினைக்கிறது.
இத்தகைய போக்குகளை துளியும் விரும்பாத தூய்மைப் பணியாளர்கள், வேறு வழியின்றி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களின் அமைதிப் போராட்டம் அரசின் மௌனத்தைக் கலைப்பது மட்டுமில்லாமல், வெகுவாகப் பொது மக்களின் கவனத்தையும் பெற்றிருந்தது என்றால் மிகையல்ல.
இழப்பு யாருக்கு?
பழைய ஊதியம் கேட்கும் நீண்டகால பணியில் உள்ள பணியாளர்களை நீக்கிவிட்டு அடிமாட்டு சம்பளத்திற்கு புதிய பணியாளர்களை நியமித்து தனியார் நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டும்.
இது எல்லா மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் வரைக்கும் நீட்டிக்கப்பட்டு எல்லாப் பக்கமும் தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படலாம்.
மாநிலம் முழுவதும் அரசு ஒப்பந்தப் பணியாளர்களான அனைத்துத் தூய்மைப் பணியாளர்களும் தனியார் கம்பெனிகளுக்குக் கொத்தடிமைகள் என்ற நிலைக்கு ஆக்கப்படலாம். ஒருவேளை அப்படி உடன்படாதவர்கள் வேலையிழக்க நேரிடும்.
தனியார் கம்பெனிகள் சொற்பக் கூலியில் வடமாநிலத்திலிருந்து பணியாளர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, இப்போதுள்ள பணியாதளர்களை நிர்க்கதியாக வீட்டுக்கு அனுப்பும் நிலை உருவாகும்.
இவையெல்லாம் தனியார் மயத்தால் நடக்காது என்ற உத்திரவாதத்தையும், நம்பிக்கையையும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கொடுக்க முடியாதல்லவா? தனியார் கம்பெனிக்கு என டெண்டர் விட்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் போட்ட பின்னர் அதை மாற்ற முடியாது என்பதற்காகவே பணியாளர்களை எதையாவது சொல்லி தனியார் கம்பெனி வசமாக்குவதற்காக துடித்துக் கொண்டிருக்கிறது அரசு நிர்வாகம். இந்த முறையால் தனியார் கம்பெனிக்கு கணிசமான லாபம் கிட்டும். அரசுக்கு நிதிச்சுமை குறையும் என்ற மறைமுகத் திட்டத்தின் வெளிப்பாடே இத்தகைய போக்குகளை அரசு கடைபிடிக்க காரணம். இதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியுமா? அதனால்தான் பணிக்குத் திருப்பச் சொல்லி தூய்மைப் பணியாளர்களிடம் வெறுமனே பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் தூய்மைப் பணியாளர்களுக்கு நயாப் பைசா பிரயோஜனம் இல்லை.
போராட்டத்தில் அடக்குமுறையைப் பிரயோகிக்கலாமா?
தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கையோடு கடந்த 13 நாள்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள்13.08.2025அன்று நள்ளிரவில் மிகக் கொடூரமான முறையில் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை, அரசின் ஏவல் துறையாகத் தனது கடமையை செவ்வனே செய்கிறது.
கூலி உயர்வு கேட்டுப் போராடும் தூய்மைப் பணியாளர்களை ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசு ஏன் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறது? சமூகநீதி, சமத்துவம் என்ற வார்த்தைகளை இரவில் அடகு வைத்து விடுவார்களா? அதைத் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையினர் கடைபிடிக்க அறிவுறுத்த மாட்டாரா முதல்வர்?
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பல்வேறு பேருந்துகளில் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டு கொஞ்சம் தூரமாக சென்றதும் வேறு வேறு பகுதிகளில் இறக்கி விட்டுள்ளார்கள். ஆக இவர்களின் நோக்கம் உறுதி குலையாமல் போராடும் இவர்களின் போராட்டத்தை களைப்பதுதான்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் போது பெண்களை தாக்கியுள்ளனர். சிலரின் உடைகள் கிழிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை கொடூரமாக காவல் துறை நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் மிக அமைதியான முறையில்தானே நடைபெற்றது. அப்படியிருக்க அவர்களின் மீது வன்முறையை ஏவுவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது?
போராட்டத்திலிருந்தவர்களை வெளியேற்ற முயன்று பேருந்தில் ஏற்றி உள்ளே தள்ளி விட்டதில் ஒரு பெண் முற்றிலும் மயங்கிய பின்பும் ஒரு மணி நேரமாக பேருந்திலேயே வைத்து அலைக்கழித்து உள்ளனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடும் செய்யப்படவில்லை என்பது மிகவும் விரும்பத்தகாத விசயம். இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் பரவலாகக் காணக் கிடைக்கின்றன.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கைதான சிலரின் செல்போன்களையும் காவல் துறையினர் பறித்து வைத்துள்ளனனர். ஒருவேளை அவர்கள் போராட்டம் குறித்து வீடியோ பதிவு செய்து அவற்றை வெளியிடலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் இதுபோன்று காவல் துறையினர் செயல்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அதையும் மீறி சிலர் அலைபேசி வாயிலாக போராட்டத்தை லைவ்வாக காட்டும் நபர்களுக்கு காவல் துறையினர் தரப்பிலிருந்து மிரட்டல் விட்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற நடவடிக்கைகள்தான் சமூகநீதியுடன் நடந்து கொள்ளும் அரசின் வெளிப்பாடா? என்ற கேள்வியையும் பலரும் முன்வைத்துள்ளார்கள்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் மெல்ல மெல்ல மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கியதும் அரசு, நீதிமன்ற உதவியுடன் அதைத் தற்காலிகமாக கலைத்து விட்டது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வெல்கிறதோ அல்லது தோற்கிறதோ. ஆனால் அவைகள் விலைமதிப்பற்ற அனுபவங்களை அவர்களுக்குக் கொடுத்துச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
முன்பெல்லாம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கொஞ்சநாள் ஒப்பந்தப் பணி செய்த பிறகு நிரந்தர ஊழியர்களாக மாற்றப்படுவார்கள். உலகமய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிறகு NULM போன்ற பல்வேறு திட்டங்களின் படி இவர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக சேர்க்கபடுகின்றனர். நிரந்தரப் பணியாளர்கள் ஆக்கப்படுவதே இல்லை. இந்த நடைமுறைகளுக்கு எதிராகவே தூய்மைப் பணியாளர்கள் தங்களின் வலுவான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தனியார் மயம் ஏன்? எதற்காக?
உலகமய பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படை பண்பு அவற்றின் ரகசிய தன்மை. இந்தத் தனியார்மயம், தனியாரை அனுமதிக்கும் உத்தரவுகள் எதுவுமே சட்டசபை, மாநகர சபை, நகர சபை போன்றவற்றில் முழுமையாக விவாதிக்கபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
எனவே பல்வேறு துறைகள், மக்கள் பங்கெடுக்கும் ஜனநாயக அமைப்புகளின் பார்வைக்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. அரசாணைகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமே இவை ரகசியமாக நகர்த்தப்பட்டு தனியார் மயப்படுத்தப்படுகின்றன.
தனித் தனியாக உடைப்பது என்பது இதுதான். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக அனைத்தும் ஏற்றுக் கொண்ட பொருளாதார கொள்கை இது. ஆகவே இவற்றை வெளிப்படையாக சொல்ல முடியாமல் ஒப்பந்தம் போட்டாச்சு. டெண்டர் விட்டாச்சு. இனி ஒன்றும் செய்ய முடியாது. தனியார் நிறுவத்திடம் வேலை செய்யுங்கள். அதற்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம். அரசிடம் என்னென்ன சலுகைகள் எல்லாம் கிடைத்ததோ அவை அனைத்தும் அங்கும் கிடைக்கும் என்கிறார்கள் அமைச்சர் பெருமக்கள். அப்படியானால் தூய்மைப் பணியாளர்களை அரசே நிர்வகிக்கிலாமே? எதற்காக இடையில் தரகு நிறுவனம் ஒன்று வரவேண்டும் என்பதே தூய்மைப் பணியாளர்கள் எழுப்பும் வலுவான கேள்வி. அதற்குப் பதில் சொல்ல முடியாமல்தான் அரசு தனது எந்திரத்தை அனுப்பி வைத்து தூய்மைப் பணியாளர்களின் போராட்டதை கலைக்கிறது. சிதைக்கிறது. கைது என்ற பெயரில் அவர்களை குப்பைகளை தூக்கி வீசுவது போன்று வீசுகிறது. மனிதாபிமானம் இல்லாத வகையில் நடந்து கொள்கிறது. நடத்தவும் செய்கிறது.
எந்தக் கூலிக்கு முன்னுரிமை?
அசல் கூலிகள் தெருவில் நின்று போராடுகிறார்கள். ஒரு படத்திற்கு 200கோடிகூலி பெறுபவர் நடிகர் ரஜினிகாந்த். கூலி என்கிற படத்தை இயக்கும் இயக்குநருக்கு 50 கோடி எனச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்த 50 கோடி கூலிகளுக்கு மத்தியில் இரண்டு வாரங்களாகப் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைத் தொழிலாளர்களின் முழக்கம் அரசுக்கு மறைக்கிறது. அன்றாங்காய்ச்சிகளாக இருக்கும் தூய்மைப் பணியாளர்களின் குறைகளை களைவதைவிட, பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் கூலி படம் முக்கியமானது. அப்படத்தின் காட்சிகளையும், இத்தகு காஸ்ட்லி கூலிகளையும் பார்த்து மகிழ்கிறார் நம் முதல்வர். இதுபோன்ற இடங்களில் சமூகநீதியை கொஞ்சம் ஓரம் கட்டி வைத்துவிடுவார் போலும்!
திரை நடிகர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கொஞ்சம் சென்னை மாநகரின் தூய்மையைப் பராமரிக்கும், தூய்மைப் பணியாளர்கள் மத்தியிலும் காட்டலாம் அல்லவா? ஆனால் ஆட்சியாளர்கள் பாராமுகமாகவே நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு எடுத்துகாட்டாக இச்செய்தியை நாம் புரிந்து கொள்ள முடியும்.
திரை முகங்களுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?
எம். என் ராஜம் என்றொரு பழம் பெரும் நடிகை. முதல்வரைக் காண விரும்பி காணொலி ஒன்றைப் பதிவிடுகிறார். மறுநாள் அவர் வீட்டின் கதவைத் தட்டுகிறார் முதல்வர்.
ஏனென்றால் அவர் திரைத்துறையில் உள்ளவர் என்ற காரணம்தான். அதேநேரத்தில் ஏழை தூய்மைப் பணியாளர்கள், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இரவு பகல் பாராமல், அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடத்தில் அமர்ந்து அவர்கள் போராடுவதற்குக்கூட போதிய இடத்தை அனுமதிக்காமலும், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காமலும் இருக்கிறீர்களே இது சரியா?
காணொலி பதிவிட்டவரை ஓடிப் போய்ப் பார்க்கிற பண்பு, பல நாட்களாக மழை, வெயில், இரவு பகல் என எதையும் பொருட்படுத்தாமல், போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை ஆறுதலுக்காகக்கூட ஒருமுறை சந்திக்க மனமற்று இருப்பதுதான் ஏனோ? இதுபோன்ற இடங்களில்தான் சமூகநீதி என்னானது என்ற கேள்வி பலமாக எழுகிறது?
கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
புயல், மழை, பெருவெள்ளம், கோவிட் பெருந்தொற்று காலங்களில் அத்தனை கழிவுகளையும் அள்ளி, சென்னையை சுத்தம் செய்த மக்கள், இன்றைக்குச் சோறு, தண்ணீர், தூக்கம் இன்றி, நிர்கதியாய் நடுத் தெருவில் நின்று போராடுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் சென்னை போன்ற பெருநகரங்களைச் சுத்தம் செய்யும் எளிய மக்களை, குறைந்த கூலிக்கு உர்பசெர் சுமீட் (Urbaser Sumeet), ராம்கி என்விரோ எஞ்சினியர்ஸ் லிமிடெட் (Ramky EnviroEngineers Ltd) போன்ற தனியார் நிர்வாகத்திடம் அடகு வைக்க முயல்வது என்ன விதமான அணுகுமுறை?
ஒருவேளை இதற்கு முன்பிருந்த அரசும் இதைத்தானே செய்தது என்று சொன்னால், அப்படியென்றால் திராவிட மாடல் என்ற வார்த்தை எவற்றிளெல்லாம் பொருந்தும்? அதற்கான வரையறைதான் என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
எளிய மக்களின் உள்ளக்குமுறலைப் பொருட்படுத்தாது, செவிமடுக்காது இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த மாற்று வழியைத் தேடுவார்கள். அது பல காரியங்களில் திராவிட மாடல் என்றொரு பாணியை முன்னெடுத்துச் செல்லும், உங்களுக்குப் பலத்த சரிவை ஏற்படுத்தவும் கூடும். ஆகவே தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல் அணுகுவதே இப்போதுள்ள உடனடித் தேவை.
- மு.தமிழ்ச்செல்வன்