அந்த நேரம் வரை மனிதனுக்குத் தெரிந்த போர்களிலேயே மிகவும் பெரியதாக இருந்த முதல் உலகப் போர் வெடித்ததிலிருந்து 100 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. முதல் உலகப் போரில் 7 கோடி பேர் போரிட்டனர். ஒரு கோடியே அறுபது இலட்சம் மக்கள் அதில் மாண்டனர். உலக மக்களுக்கு சொல்லொணாத் துயரங்களையும் இழப்பையும் இப் போர் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் இருந்த மிகப் பெரிய ஏகாதிபத்திய சக்திகள், தங்களுக்கிடையே இருந்த தீவிர பகைமை காரணமாகவும், உலகெங்கிலும் இருந்த நிலப் பரப்புக்களையும், சந்தைகளையும், வளங்களையும் கைப்பற்றுவதற்காகவும் இந்தப் போரில் ஈடுபட்டுனர்.

முதலாளித்துவமானது, தன்னுடைய கடைசி மற்றும் மிகவும் இரத்தம் உறிஞ்சும் நிலையான ஏகாதிபத்தியக் கட்டத்தை அடைந்து விட்டது என்றும், அதில் முதலாளித்துவத்தின் எல்லா முரண்பாடுகளும் கூர்மையடைந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே ஒரே வழி என்ற லெனினிசக் கோட்பாட்டைப் போர் தெள்ளத் தெளிவாக உறுதி செய்தது. இந்த ஏகாதிபத்திய போர் நடைபெற்ற அந்த சூழ்நிலையிலும், அப்போது நிலவிய புறவய சூழ்நிலைகளிலும் தான், லெனினுடைய போல்சவிக் கட்சியினால் வழி நடத்தப்பட்ட இரசிய பாட்டாளி வர்க்கம், புரட்சியில் எழுந்து, முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, இரசியாவை சோசலிசப் பாதையில் கொண்டு செல்வதன் மூலம், ஏகாதிபத்தியக் கொள்ளை மற்றும் ஆக்கிரமிப்புச் சங்கிலியை உடைத்தது.

முதல் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக 2014-இல் பிரசெல்சில் கூடிய பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் இன்றைய தலைவர்கள், வழக்கம் போல வரலாற்றை முழுவதும் உண்மைக்கு மாறாகத் திரித்து விளக்கம் தந்தனர். போரின் உண்மையான தன்மையை மறைக்க அவர்கள் அனைவரும் முயற்சித்தனர். போர், “சனநாயகத்தையும்”, “சுதந்திரத்தையும்” பாதுகாப்பதற்காக நடத்தப்பட்டதாகக் காட்ட அவர்கள் முயற்சித்தனர். பிரிட்டனுடைய பிரதமர் கேமரூன் கூறினார் – “முதல் உலகப் போரை ஒரு நோக்கமற்றப் போராகப் பல நேரங்களில் கூறப்படுகிறது. எதற்காகப் போராடுகிறோம் என்று கூடத் தெரியாத மக்களால் போராடப்பட்ட போராகக் கூறப்படுகிறது... ஆனால் அது தவறானதாகும். ஒரு கண்டம் மேலாதிக்கம் செலுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவும், நாம் இன்று உயர்த்திப் பிடிக்கும் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காகவும் அவர்கள் போராடினர்.” இது உண்மையைத் தலைகீழாக மாற்றுவதாகும். கொள்ளையடித்தல் மற்றும் மேலாதிக்கம் செய்யும் நோக்கங்களோடு, ஏகாதிபத்திய சக்திகள் போர் தொடுத்தன என்பதையும், போரை எதிர்த்துப் போராடிய தொழிலாளி வர்க்கமும், கம்யூனிச சக்திகளும் தான் சுதந்திரத்தையும், உழைக்கும் மக்களுக்கு விடுதலையையும் கொண்டுவந்தனர் என்பதையும், அவர்கள் எல்லா தேசங்கள் மற்றும் மக்களுடைய சுதந்திரத்திற்காகவும், இறையாண்மைக்காகவும் போராடினர் என்பதையும் வரலாறு காட்டியிருக்கிறது. மக்களுக்கு எதிரான தங்களுடைய கொடூரமானக் குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக இன்று அவர்கள் வரலாற்றைப் பொய்யாக ஆக்க விரும்புகின்றனர்.

20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலக முதலாளித்துவ-ஏகாதிபத்திய அமைப்பின் எல்லா முரண்பாடுகளும் கூர்மையடைந்திருந்தன. காலனிய ஒடுக்குமுறையாகவும், ஒரு சில “முன்னேறிய” நாடுகள் மிகப் பெரும்பான்மையான உலக மக்கள் தொகையின் குரல்வளையை நிதியால் நெரிக்கும் ஒரு உலக அமைப்பாகவும் முதலாளித்துவம் வளர்ந்திருந்தது. உலகை மறு பங்கீடு செய்து கொள்வதில், பல்வேறு முதலாளித்துவ சக்திகளுக்கும், அவர்களுடைய குழுக்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு மிகவும் தீவிரமடைந்திருந்தது. பிரிட்டன், பிரான்சு மற்றும் இரசியா போன்ற பழைய ஏகாதிபத்திய சக்திகள், உலகின் பகுதிகளை தங்களுக்கிடையே பங்குபோட்டுக் கொண்டுவிட்டன. அதே நேரத்தில், செர்மனி போன்ற புதிய ஏகாதிபத்திய சக்திகள், எங்களுக்கும் இதில் பங்கு வேண்டுமென இவர்களோடு மோதி வந்தன. முதலாளித்துவ நாடுகளில், தொழிலாளி வர்க்கத்திற்கும், ஆளும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடும் தீவிரமடைந்திருந்தது. பெரும்பாலான இந்த நாடுகளில், கம்யூனிச மற்றும் தொழிலாளர் கட்சிகள் வளர்ந்து வலிவு பெற்றிருந்தன. சோசலிசத்திற்கான இயக்கம் மக்களிடையே பரவியிருந்தது. இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, பல்வேறு காலனிய நாடுகளிலும், சார்ந்த நாடுகளிலும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராகவும், தேசிய விடுதலைக்காகவும் போராட்டம் வேறூன்றி வளர ஆரம்பித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் முதல் உலகப் போர் 1914-இல் வெடித்தது.

போர் வெடித்த போது, அதை “தாய் நாட்டைப் பாதுகாப்பதற்கான” போர் என தங்கள் நாட்டு முதலாளி வர்க்கம் கூறிய அதே நிலைப்பாட்டை இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த பல சோசலிச கட்சித் தலைவர்கள் மீண்டும் பாடி வந்தனர். இந்த வெட்கமற்ற சந்தர்ப்பவாதத்திற்கு நேர் மாறாக, போருக்கு எதிராக, கொள்கை அடிப்படையிலான மார்க்சிச நிலைப்பாட்டை லெனினும், இரசிய போல்சவிக் கட்சியும் எடுத்தனர். இரசியாவில் பிற்போக்கான சாரிசம் வீழ்ச்சியடைவதை ஒரு புரட்சியின் மூலம், போர் துரிதப்படுத்தியது. ஆனால் இந்த எழுச்சியின் மூலம் அதிகாரத்திற்கு வந்த கெரன்சிகி போன்ற முதலாளி வர்க்கத் தலைவர்கள், இரசியாவை போரிலிருந்து வெளியேக் கொண்டுவர மறுத்துவிட்டனர். அந்த நேரத்தில், ஏகாதிபத்தியப் போரை, முதலாளி வர்க்கத்திற்கு எதிரான உள்நாட்டுப் போராக மாற்றுமாறு லெனின் அறைகூவல் விடுத்தார். அவருடைய தலைமையில் இருந்த போல்சவிக் கட்சி, “நிலம், உணவு, அமைதி” என்ற முழக்கத்தையொட்டி, தொழிலாளி வர்க்கத்தையும், பெருந்திரளான இரசிய மக்களையும் வீரத்தோடு அணிதிரட்டியது. முதலாளி வர்க்க ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டி, அவர்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தினர். அவர்கள் இரசியாவை, போரிலிருந்து மீட்டு, சோசலிசப் பாதையில் வழி நடத்தினர். தங்களுடைய செயல்பாடுகள் மூலம், ஏகாதிபத்தியத்திற்கும், ஏகாதிபத்தியப் போருக்கும் ஒரு உண்மையான தீர்வு, பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே எனக் காட்டினர்.

ஏகாதிபத்தியம் இருக்கும்வரை, ஏகாதிபத்தியப் போர் அபாயம் தொடரும் என, லெனினும், ஸ்டாலினும் தொழிலாளி வர்க்கத்திற்குக் கற்பித்தனர். ஏகாதிபத்தியத்தின் கீழ் முதலாளித்துவ நாடுகளின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி விதியின் காரணமாக, சந்தைகளுக்காகவும், மேலாதிக்கம் செலுத்தப் பகுதிகளுக்காகவும் புதிதாக எழும் ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து ஆதிக்கம் செலுத்திவரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு சவால் அடிக்கடி எழும் என லெனின் காட்டியிருக்கிறார். இது அவசியம் போருக்குக் கொண்டு செல்லும். அதே நேரத்தில், ஏகாதிபத்தியர்களுக்கு இடையிலான போட்டியும், தங்கள் நாட்டிலும், பிறநாடுகளிலும் தொழிலாளர் உரிமைகள் மீதும் மக்கள் மீதும் அவர்கள் நடத்தும் தாக்குதல்களும், இந்த அமைப்பிலுள்ள எல்லா முரண்பாடுகளையும் கூர்மைப்படுத்தும். அவை ஒவ்வொரு நாட்டிலும் சுரண்டல் அதிபர்களுக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையிலுள்ள முரண்பாடுகளும், ஏகாதிபத்தியத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடும், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலுள்ள முரண்பாடுகளும் ஆகும். கூர்மையடைந்துவரும் இந்த எல்லா முரண்பாடுகளும், எங்கெல்லாம் ஏகாதிபத்திய சங்கிலி பலவீனமாக இருக்கிறதோ அங்கு ஒன்றல்லது பல நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. முதல் உலகப் போரின் போது, தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கி அதை வழி நடத்திய ஒரு கம்யூனிஸ்டு கட்சி இருந்த இரசியாவில் இது தான் நடைபெற்றது.

முதல் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவை நினைவு கூறும் இந்த வேளையில், தங்களுடைய மேலாதிக்கத்தை உலகெங்கிலும் விரிவுபடுத்தவும், மற்ற நாடுகளுடைய வளங்களிலும், சந்தைகளிலும், பகுதிகளிலும் பெரிய பங்கைக் கைப்பற்றுவதற்காகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில், பெரிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே மீண்டும் ஒரு முறை கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த ஏகாதிபத்திய சக்திகள் ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும், சிரியாவிலும், லிபியாவிலும், உக்ரேனிலும் மற்றும் பிற நாடுகளிலும் போர் தீப் பிழம்புகளைப் பரப்பியிருக்கிறார்கள். அவர்கள், இந்த நாடுகள் மீது குண்டு மழைப் பொழிந்தும், எல்லா இடங்களிலும் தங்களுடைய படைகளையும், போர்க் கப்பல்களையும் அனுப்பி வைத்தும், ஒருவருக்கொருவர் எதிராகப் போராடுவதற்கு எல்லா வகையான ஆயுத கும்பல்களுக்கு ஆயுதமளித்தும், அவர்களைத் தூண்டிவிட்டும், எல்லைகளை திரும்ப வரைந்தும், பல்வேறு நாடுகளை நிலைகுலைக்க எல்லா வகையிலும் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீண்டுமொரு உலகப் போருக்கு உலகைத் தள்ளி வருகிறார்கள் என்பது என்பது தெளிவு. வெறுப்பை உருவாக்கும் வகையில் தாங்கள் அமைதிக்காக இருப்பதாக அவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் ஆசியாவில் வட்டார அரசியல் பிளவுகளைத் தூண்டிவிடுவதற்காக அவர்கள் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலைகளில், நூறாண்டுகளுக்கு முன்னர் தொடுக்கப்பட்ட இந்தப் போரிலிருந்து எல்லா நாடுகளைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கமும், மக்களும் சரியான படிப்பினைகளைப் பெற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். உலகெங்கிலும், போருக்கும் ஆக்கிரமிப்பிற்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்புதான் மூல ஆதாரமாக இருக்கிறது. ஏகபோக முதலாளித்துவத்தின் கீழ், ஏகாதிபத்தியப் போர்கள் தவிற்க முடியாததாகும். இந்த கொள்ளையடிக்கும் போர்களுக்கு முடிவு கட்டுவதற்கு, இந்த நாடுகளிலுள்ள முதலாளித்துவ அமைப்பைப் புரட்சியின் மூலம் தூக்கியெறிவதற்கு, எல்லா மக்களையும் ஒன்று கூட்டுவதற்கு ஒவ்வொரு நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்கத்தையும் அணிதிரட்ட வேண்டும். முதலாளித்துவத்தை இறுதியாகத் தோற்கடிப்பதும், அதனுடைய இடத்தில் சோசலிசத்தை நிர்மாணிப்பதும் மட்டுமே, மனித குலத்தின் நீடித்த அமைதிக்கு வழி வகுக்கும்.

Pin It