நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன், ஆனால் நீங்கள் அதை சொல்வதற்கான “உரிமைக்காக சாகும் வரை போராடுவேன்: என்றார் பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் வால்டேர்.
கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை. இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் உண்டு என்பதை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது.
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆண்டுக்கு ஒரு முறை இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்வது எதற்கு?
இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமக்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதற்காக.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்கள் பதட்டத்தோடும், பயத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தலித் மக்கள், சிறுபான்மையின மக்கள் பெண்கள், குழந்தைகள் என்று.
கருத்துரிமை என்றால் என்ன? அப்படி ஒன்று உள்ளதா? என்று பா.ஜ.க.வோடு அரசும், அரசுத் துறை நிர்வாகிகளும் கேட்கும் நிலை உள்ளதா?
குறிப்பாக இந்துதுவத்திற்கு எதிராக, மனித நேயத்திற்கு ஆதரவாக பேசும் கலைஞர்கள், பகுத்தறிவாளர்களுமே குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
மகாராஷ்ராவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோவிந்த் பன்சாரே, ம.ம.கல்புர்கி கௌரி லங்கேஷ் வரை தொடர்ந்து துப்பாக்கியால் படுகொலை செய்யப்பட்டனர்.
இது பகுத்தறிவாளர்களுக்கும், முற்போக்காளர்களுக்கும் விடப்பட்ட சவால், அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டப் போர்.
பா.ஜ.க.வின் மாண்புமிகு அமைச்சர்கள் பேசிவருவதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
ராமன் பிறந்த இடத்தில் கோவில் கட்டித் தான் தீருவோம்.
முதலில் ராமன் பிறந்த இடத்தில் கோவில் கட்டத் தான் முடியுமா? அப்போ, ராமன் தற்கொலை செய்து கொண்ட சராயூ நதியில் நினைவிடம் கட்டத் தயாரா?
மதச்சார்பின்மையைச் சீர்குலைக்கும் வகையில், மத வெறியைத் தூண்டும் வகையில் ‘‘ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் பிறந்தவர்கள் இந்த நாட்டில் இருங்கள். மற்றவர்கள் வெளியேறலாம் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள். மாட்டு மூத்திரத்தைக் குடியுங்கள்’’ என்று சொல்வதற்கு அவர்களுக்கு கருத்துரிமை உள்ளது என்றால், ‘‘பசு மாட்டு மூத்திரத்தை நீங்கள் குடியுங்கள், மாட்டை சூப்பு வைத்து நாங்கள் குடிக்கிறோம்’’ என்று சொல்வதற்கு நமக்கும் கருத்துரிமை உண்டு.
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உலகத்தை ஆளும் பாதுகாக்கும் ஆண்டவன் சிவனையே கதைப்படி கேள்வி கேட்ட தமிழ்நாட்டு ஆழ்வார்கள், சிவனடியார்கள், ரிஷிகள், ராமானுஜர்கள் வாழ்ந்த இந்த ஆன்மீக பூமியில் ஏன், எதற்கு எப்படி என்று அறிவு, ஆராய்ச்சி மூலம் கேள்வி கேட்டு கருத்துகளை பட்டித் தொட்டி எல்லாம் பரப்பி மனிதநேயத்தோடும், பகுத்தறிவு, நாகரிகத்தோடு மாற்றிய பெருமை தந்தை பெரியாருக்கும் திராவிடர் இயக்கத்திற்கும் உண்டு.
கடவுள் கோவில்களும், சிலைகளும், சிற்பங்களும் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் தான், கடவுள் மறுப்பு கொள்கையை கடவுளுக்கு அருகிலேயே சிலையாக வைத்த வரலாறும், வைக்கப்பட்ட வரலாறும் இங்கு உண்டு.
பொதுக் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த தந்தை பெரியார் மீது செருப்பு வந்து வீழ்ந்தது, கடவுளே இல்லை என்று சொல்லும் ராமசாமி போரான் என்று செருப்பால் அடி பெரியார் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் அதே இடத்தில் கடவுள் மறுப்பைச் சொல்கிறார் மீண்டும் ஒரு செருப்பு வந்து வீழ்ந்தது. ஒரு ஜோடி செருப்புக் கிடைத்தது என்று மகிழ்ச்சியோடு சென்றார்.
செருப்பு வீசிய அதே ஊரில் தந்தை பெரியாருக்கு சட்டப்படி இந்துக்களால் சிலை வைக்கப்பட்டது. ‘‘செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்” இதுவே பெரியாரின் இயக்கம் என்றார். கவிஞர் கருணானந்தம்.
இப்பேர்பட்டத் தமிழ்நாட்டில் இன்றைய நிலை கருத்துரிமைக்கு எதிராக மிக மோசமான சூழ்நிலை உள்ளது. துண்டறிக்கை கொடுத்தால் கைது. ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று பேசினால் சோடா பாட்டில் வீசப்படும் என்ற அச்சுறுத்தல். தொலைக்காட்சி விவாதத்தில் தன் மனதில் பட்ட கருத்தை வெளிப்படுத்தினால் கொலை மிரட்டல். ஜனநாயக முறையில் போராடினால் அடித்து உதைத்து வழக்கு. தலைவர்கள் சிலைக்கு மாலை போட்டால் கைது. டெல்லியில் ஆய்வு மாணவி “பாசிச பாஜக ஒழிக” என்று அவர் போட்ட முழக்கத்திற்காக உடனே அவரின் பாஸ்போர்ட் விசாவை முடக்கி வைத்து கைது வழக்கு என்று சட்ட ஒழுங்கை உடனடியாக காப்பாற்றுகிறது பா.ஜ.க.வின் வழிகாட்டுதலோடு நடக்கும் ராஜாவை விஞ்சிய ராஜா விஸ்வாசியாக தமிழக அரசு.
இந்த கருத்துரிமைக்கு எதிரான போர் ஏதோ எழுத்தாளர்களுக்கோ, பகுத்தறிவாளர்களுக்கோ, பேச்சாளர்களுக்கோ, நாத்திகர்களுக்கோ மட்டும் அல்ல. சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல் துறைக்கும், மக்களின் கடைசி நம்பிக்கையாக விளங்கும் “நீதி துறைக்கும்” பொருந்தும்.
மக்களால் மனநோயாளியாக விமர்சிக்கப்படும் சில தமிழர் உரிமைக்கு எதிரானவர்கள் “நீதிமன்றத்தின் மாண்பையே தனது திருவாயை மலர்ந்து அநாகரீகமாக கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி உள்ளார்கள்’’ என்பதை மறக்கக் கூடாது.
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சுய மரியாதையோடும், சுதந்திரத்தோடும் வாழ்ந்தால் தான் அது நாடு. இல்லையேல் தந்தை பெரியார் கூறியது போல் அது வெறும் கடும் புலிகள் வாழும் காடாகும்.
எனவே கருத்துரிமைக்கு எதிரான போரில் நின்று, வென்று காட்டுவோம்.