இனியன் தலைமையிலான குழு வந்தபோது நாங்கள் மன்றாடிக் கேட்டோம்.  நீங்கள் எங்கள் மக்களிடம் வந்து அவர்கள் சொல்வதைக் கேளுங்கள் என்றோம்.  அந்தக் குழுவில் இருந்த விஜயராகவன், ஸ்ரீனிவாசன் என்னும் அதிகாரிகள் இருவருக்கு இந்தக் கருத்தியலே புரியவில்லை.  அவர்கள் மறுபடியும் மறுபடியும் தாங்கள் சொன்னால் மக்களுக்குப் புரியாது என்றுதான் கூறினார்கள்.  நீங்கள் பேசவே வேண்டாம் வந்து கேளுங்கள் என்றுதான் நாங்கள் சொன்னோம்.  விஜய ராகவன் பெரிய அதிகாரியாக இருந்தவர்.  எம்.ஆர். ஸ்ரீனிவாசன் அணுசக்தித் துறையின் தலைவராக இருந்தவர். அவர்கள் இருவருக்கும் கேட்பது என்னும் கருத்தியலே புரியவில்லை. 

சாதாரண மீனவனுக்கும் நாடாருக்கும் தலித்துக்கும் என்ன பேசத் தெரியும் என்று அவர்கள் நினைத்தார்கள்.  அந்த ஆளுமைச் சித்தாந்தத்தோடு தான் இதைப் பார்த்தார்கள்.  சோ.ராமசாமி, சுப்பிரமணியசாமி போன்ற பார்ப்பனர்கள் எல்லாம் இதைக் கடுமையாக எதிர்ப்பதற்குக் காரணமே இனவெறிதான், சாதிவெறிதான்.  மீனவப் பயலுக்கு என்ன தெரியும் அணு மின்சாரம் பற்றி.  நாங்கள் எடுக்கும் முடிவை நீ வழிநடத்த வேண்டுமே தவிர, நீயாகச் சிந்தித்து எங்களைக் கேள்வி கேட்க முடியாது.  உனக்கு சிந்திக்கத் தெரியாது.  இப்படிப்பட்ட சித்தாந்தம் சமூகத்தில் மீண்டும் தலைதூக்குகிறது.  அதனால் அந்த வழியாகவும் இந்தப் போராட்டத்தைப் பார்த்தாக வேண்டும்.  தயவு தாட்சணியமின்றி இந்தப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும்.  உதயகுமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோ.ராமசாமி சொல்கிறார்.  இவர் பாசிஸவாதி.  இதன் பின்னணியில் பிராமணீயம் மீண்டும் தலைதூக்குகிறது.  இப்படிப்பட்ட கட்டமைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அதனால்தான் இந்தப் போராட்டம் முக்கியமான போராட்டம்.

- காலச்சுவடு, நவம்பர் 2012

Pin It