இடிந்தகரைப் போராட்டம் துவங்கி வீரியத்துடன் நடந்துகொண்டிருந்தபோது, நண்பர் முகிலன் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தான் கலந்துகொண்ட பல போராட்டங்களின் பத்திரிக்கைச் செய்திகளின் தொகுப்பை என்னிடம் கொடுத்தார். முன்பின் சந்தித்திராத நாங்கள் பரிச்சயமாகிக் கொண்டோம். அவ்வப்போது இடிந்தகரைக்கு வந்து சென்றவர், பின்னர் எங்களுடனேயேத் தங்கினார். அவர் அப்படித் தங்கியதும், தொலைக்காட்சிகளுக்கு நான் பேட்டிக் கொடுக்கும்போது அவர் எனதருகே வந்து நின்றுகொள்வதும் பலருக்கும் பிடிக்கவில்லை. தீவிரவாத அமைப்பு ஒன்றைச் சார்ந்த அவர் போராட்டத்தை அபகரிக்க வந்திருப்பதாகவும், நான் அப்படியே முழுமையாக அவரை நம்புவதாகவும், அளவுக்கு மீறி அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் என்னிடம் சிலர் முறையிட்டனர். நான் அந்த நண்பர்களை அமைதிப்படுத்தினேன்.

கடந்த 2014 சனவரி 3-ஆம் நாள் இரவு இடிந்தகரையில் தமிழமெங்குமிருந்து வந்திருந்த தோழர்களோடு ஆம் ஆத்மி கட்சியில் சேரும் திட்டத்தைப் பற்றி விவாதித்து அறிவுரை கோரினோம். அந்தக் கூட்டத்தில் தானும் கட்சியில் சேரவும், தேர்தலில் போட்டியிடவும் அணியமாக இருப்பதாக முகிலன் தெரிவித்தார். ஆனால் அடுத்த வாரம் தனது முடிவை மாற்றிக்கொண்டார். “என்ன ஆயிற்று?” என்று கேட்டபோது, எந்த பதிலும் சொல்லவில்லை. எதிலும் கலந்து கொள்ளாமல், தான் எழுதிக்கொண்டிருந்த தாதுமணல் கொள்ளை பற்றிய புத்தக வேலையை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தார்.

2014 பிப்ருவரி மாதம் 28-ஆம் நாள் நானும், ராயனும், மை.பா.வும் இடிந்தகரையைவிட்டு வெளியேறியபோது எங்களுடன் வெளியேறிய முகிலன், மீண்டும் இடிந்தகரைக்குச் சென்று ஒரு மாத காலம் தங்கியிருந்தார். அப்போது 2001-ஆம் ஆண்டு அய்யா ஒய். டேவிட் அவர்கள் தலைமையில் துவங்கி, பலரும் பங்களித்த, பல்வேறு போராட்டங்களுடன், தியாகங்களுடன், அர்ப்பணிப்புடன் நடத்தி வளர்க்கப்பட்ட “அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பை “கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழு” என்று முகிலன் மாற்றியமைத்திருக்கிறார். இந்தத் தகவல் எனக்கோ, பிற தோழர்களுக்கோ தெரிவிக்கப்படவேயில்லை.

அடுத்த சில மாதங்களில் கும்பகோணத்தில் வைத்து நடந்த மீத்தேன் எதிர்ப்பு மாநாடு ஒன்றில் முகிலனை சந்தித்தபோது, அவரது பெயருக்குப் பின்னால் “கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழு” என்று போடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி “இப்படிப் போட்டிருக்கிறார்களே?” என்று கேட்டேன். “ஆமாம், தவறாக போட்டிருக்கிறார்கள்” என்றார் முகிலன். ஓரிரு வாரங்களுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் துண்டுப்பிரசுரத்திலும் இப்படியே பதிவாகியிருந்தபோது, மீண்டும் முகிலனிடம் சுட்டிக்காட்டினேன். “பழைய துண்டுப்பிரசுரத்தைப் பார்த்து அப்படியேப் போட்டிருக்கிறார்கள்” என்று விளக்கம் சொன்னார். இந்த மாதிரியானத் தவறுகள் எல்லாம் வழக்கமாக நடப்பவைதான் என்பதால், யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பல மாதங்களுக்குப் பின்னர், சென்னையில் ‘பூவுலகின் நண்பர்கள்’ தோழர் சுந்தரராஜன் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முகநூல் பதிவு ஒன்றில் முகிலன் தன்னை “ஒருங்கிணைப்பாளர்: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழு” என்று அடையாளப்படுத்தி இருந்ததை கவனித்து, அவரை அழைத்துப் பேசினேன். “நாமனைவரும் ஒன்றாகச் சேர்ந்துதானே இயங்குகிறோம்; அப்படியிருக்கும்போது, வெவ்வேறு பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும்? ‘அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ பெயரையே அனைவரும் பயன்படுத்துவோமே?” என்று கேட்டுக் கொண்டேன். அது சரிதான் என்று முகிலனும் ஒத்துக் கொண்டார். தொடர்ந்து சேர்ந்தே இயங்கினோம்; பல்வேறுப் போராட்டங்களை முன்னெடுத்தோம்.

இந்த நிலையில் கூடங்குளம் வழக்குகள் அழைப்பாணை (சமன்) பிரச்சினை எழுந்தது. இதில் எந்த மாதிரியான அணுகுமுறை எடுப்பது என்பது பற்றி ஆகஸ்ட் 11, 2015 அன்று இடிந்தகரையில் ஊர்க் கமிட்டி கூட்டம் ஒன்று நடத்தினோம். அந்தக் கூட்டத்துக்கு வருமுன்னரே முகிலன் தான் கைதாகி நீண்டநாட்கள் சிறை செல்லவிருப்பதாக முகநூலில் எழுதியிருந்தார். "யாரையும் கலந்தாலோசிக்காமல் இப்படி எழுதியிருக்கிறீர்களே; இதுவரை நாம் ஒன்றாகப் பேசித்தானே முடிவெடுத்து அறிவித்திருக்கிறோம்" என்று அவரிடம் கூட்டத்திலேயேக் கேட்டேன். அவர் பதிலேதும் சொல்லவில்லை; அமைதியாக இருந்தார். வழக்கறிஞர்களிடம் பேசி முடிவெடுப்பது என்று அந்த கூட்டத்தில் முடிவெடுத்தோம். கூட்டம் முடிந்தகையோடு அடுத்த சில நாட்களில் மீண்டும் மீண்டும் தனது பதிவை முகநூலில் மறுபதிவு செய்தார் முகிலன். 'கீற்று' இணைய இதழிலும் வெளியிட்டார்.

பின்னர் ஆகஸ்ட் 17 அன்று மாலை மதுரையில் எங்கள் வழக்கறிஞர்கள் அனைவரும் சந்தித்து இந்த பிரச்சினை குறித்துப் பேசி சில முடிவுகள் எடுத்தோம். ஓரிருவர் மட்டும் கைதாவதில் பலனில்லை என்றும், சிறப்பு நீதிமன்றம் கேட்பது என்றும் முடிவெடுத்தோம்.

இந்நிலையில் தோழர் பொன் சந்திரன் அக்டோபர் 25 அன்று என்னை அழைத்து, முகிலன் கோவை சென்றிருந்ததாகவும், அவர் நீதிமன்றத்தில் சரணடையவிருப்பதாகவும் தெரிவித்தார். நான் இதற்கு முந்தைய நிகழ்வுகளை விளக்கிச் சொல்லி, போராட்டக்குழுவில் பேசிவிட்டு பதில் சொல்வதாகச் சொன்னேன். கோவையிலோ, இடிந்தகரையிலோ குழுவைக் கூட்டலாம் என்று நண்பர் சந்திரன் சொன்னார். போராட்டக் குழுவைக் கூட்ட நான் விடுத்த அழைப்பு பலனளிக்கவில்லை.

அக்டோபர் 27 அன்று கடலூர் ‘சைமா’ போராட்டத்தில் நானும், கெபிஸ்டனும், குணாவும், முகிலனும் சந்தித்துக் கொண்டோம். அப்போது முகிலனிடம் "பொன் சந்திரன் போன் பண்ணினார். நமக்குள் என்ன பிரச்சினை? என்னிடமே நீங்கள் நேரடியாகப் பேசலாமே? கைதாகப் போகிறேன் என்று தனி ஆவர்த்தனம் செய்வது தேவையா?" என்று கேட்டேன். அதற்கு முகிலன் "நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்து கொள்ளுங்கள் என்று முன்னர் கூறினீர்கள்; அந்த அடிப்படையில்தான் இப்படி முடிவெடுக்கிறேன்" என்றார். இந்த நீ-நான் வாதத்தை தொடர விரும்பாத நான் அமைதியாக நின்றேன். அருகே நின்ற கெபிஸ்டன், "எதுவாக இருந்தாலும், ஊர்க் கமிட்டியிடம் பேசிக் கொள்ளுங்கள்" என்று முகிலனிடம் சொன்னார். ஆனால் தான் ஏற்கனவே ஊர்க் கமிட்டியிடம் பேசிவிட்டத் தகவலையோ, அவர்கள் எங்களோடு கலந்தாலோசித்து இயங்கச் சொன்ன அறிவுரையையோ முகிலன் எங்களிடம் சொல்லவே இல்லை (ஓரிரு நாட்களுக்குப் பிறகு இதை நாங்கள் அறிந்தோம்).

“கைது ஆவது என்கிற தோழர் முகிலனின் முடி்வால் போராட்டத்திற்கு எவ்வித பலனும் இருக்காது. ஊர் மக்களும் போராட்டக் கமிட்டியும் ஒன்று கூடிப் பேசி முடிவெடுப்பதே சரியானதும் தேவையானதும். இது மக்கள் பிரச்சினை” என்று வழக்கறிஞர் ரமேஷ் சொன்ன கருத்துக்கும், “கலந்து பேசி முடிவெடுப்பது சரியான முறை. முகிலனும் ஊரு கமிட்டி முடிவிற்கு கட்டுப்பட ரெடியா?” என்று நித்தியானந்த் ஜெயராமன் கேட்டக் கேள்விக்கும் முகிலன் பதில் சொல்லவேயில்லை.

நவம்பர் 23 அன்று கூடங்குளம், இடிந்தகரை ஊர்களுக்குப் போயிருந்தேன். இடிந்தகரையில் பெண் போராளிகள், ஊர்க் கமிட்டி உறுப்பினர்கள், போராட்டக்குழு உறுப்பினர்கள் பலரோடு நீண்டநேரம் பேசினேன். தமிழகத்தில் ஒரு தொடர்வண்டிப் பிரச்சாரப் பயணம் செய்வது, முக்கிய கட்சித் தலைவர்களை ஒரு நிலைப்பாடு எடுக்கக் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல முடிவுகள் எடுத்தோம்.

டிசம்பர் 15 அன்று, சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருக்கும் ரயில் பரப்புரையில் கலந்துகொள்ளும்படி அனைவருக்கும் தகவல் சொன்னேன். முகிலனையும் அழைத்தேன். இரண்டாவது முறையாக அழைத்தபோது போனை எடுத்தார். விவரத்தைச் சொன்னதும், "நான் இந்த வாரம் சரண்டர் ஆகி விடுவேன், எனவே நான் இருக்க மாட்டேன்" என்று சொன்னார்.

சரணடைவது முகிலனின் “தனிப்பட்ட முடிவு” என்று விட்டுவிட முடியாது. அவர் இன்று தமிழகம் முழுவதும் அறியப்படுவதற்கு காரணம் இடிந்தகரை, கூடங்குளம் மற்றும் அப்பகுதி மக்களின் போராட்டங்களும், தியாகங்களும், உழைப்பும் தான். அதில் வளர்ந்த ஒருவர் அந்த மக்களின் நலன்களை முழுவதுமாகப் புறந்தள்ளிவிட்டு, "தனிப்பட்ட" முறையில் தனியாவர்த்தனம் செய்வது ஒரு தன்னல நடவடிக்கை என்றே நான் கருதுகிறேன்.

போராட்டக் குழு உறுப்பினர்களிடமும் பேசாமல், ஊர்க்கமிட்டி சொன்னதையும் கேட்காமல், “தனிநபர் புரட்சி” நடத்த முயற்சி செய்வதும், இடிந்தகரையிலுள்ள போராட்டக்குழு அறையை பயன்படுத்துவதும், அங்கிருந்து ஆவணங்களை எடுத்துச் செல்வதும், போராட்டக் குழு வழக்கறிஞர் வழ. செம்மணியிடம் போய் முழுத் தகவல்களை, உண்மைகளைச் சொல்லாமல் ஆவணங்களை வாங்கிச் செல்வதும் தவறு என்று நான் நினைக்கிறேன்.

இந்த "தனிநபர் புரட்சி" உண்மையிலேயே தனி நபரால் நடத்தப்படுவதல்ல, இதன் பின்னணியில் இருந்து இயக்குகிறவர்கள் யார் யார், அவர்களின் நோக்கங்கள் என்னென்ன என்பவைப் பற்றியெல்லாம் பலரும் பல தகவல்களைச் சொல்கிறார்கள். அடிப்படை உண்மையோ, நேர்மையோ, சனநாயகப் பண்போ, திறந்தவெளித் தன்மையோ இல்லாமல் இயங்கும் ‘புரட்சியாளர்’களை, அவர்கள் நடத்தும் ‘புரட்சி’களை யாரும் பொருட்படுத்துவதில்லை.

பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் எனக்கும், அனைத்து நண்பர்களுக்கும் ஒரே ஒரு குறளைத்தான் நினைவுபடுத்த விரும்புகிறேன்:
அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை 
வியந்தான் விரைந்து கெடும்.

நேர்மறையாக மாற்றி பொருள் கொண்டால், மற்றவர்களோடு ஒத்துப்போவதும், தன் வலிமையின் அளவை அறிந்திருப்பதும், தன்னையே வியந்து போற்றிக் கொண்டிராமல் இயங்குவதும்தான் வெற்றிக்கு வழி. பொதுவாழ்வின் அடிப்படையே “பொது” என்பதுதான். இங்கே “தனிநபர் புரட்சி"களுக்கு இடமேயில்லை.

-    சுப.உதயகுமார்

Pin It