kuthoosi gurusamy“ஓய்! எப்படீங்காணும் சாப்பாடு! பார்த்தீரா! ஒரு இலை நாலு ரூபா பொறுங்காணும், இந்தப் பஞ்சகாலத்திலே! மகராஜா தீர்க்காயுசோடே இருக்கணும்!”

“நானும் இந்தக்கையாலே அள்ளி வாயிலே போட்டிருக்கிற விருந்து எத்தனையோ இருக்கும்! சுமார் ஆயிரத்துக்குக் குறையாது ஓய்! ஆனால் இந்த மாதிரி விருந்து சாப்பிட்டதேயில்லை! பரம்பரைப் பெரிய மனுஷாள் பெரிய மனுஷாள்தான்! சிலதுகளுக்குப் புதுசா நாலு காசு கிடைச்சுட்டா பகலிலே வாண வேடிக்கை வைக்கிறதுகளே, அது மாதிரியா?”

“அப்படிச் சொல்லாதேயும், ஓய்! இவர் கூடப் புதுப்பணக்காரர்தான். ஆனாலும் எவ்வளவு அன்பு! எவ்வளவு பெருந்தன்மை பார்த்தீரோ? அடாடா! என்ன கூட்டம்! வந்திருந்த பட்டுப் புடவைகளும் வைர நகைகளும் மட்டும் என்ன மதிப்பிருக்கும், ஓய்? கோடி ரூபாய் இருக்குமா?”

“நன்னா சொன்னீர்! கோடி ரூபாயா? சினிமா ஸ்டார்கள் ஒன்று கூட பாக்கியில்லே! நம்பளவா பொம்மளாட்டிகள் ஒருத்தர் கூட அன்னிக்கு வீட்டிலே இல்லேண்ணா, பார்த்துக்குமே! பத்து அல்லது பதினைந்து கோடி ரூபாய்க்குக் குறையவே குறையாது, ஓய்! அசல் குபேர பட்டணந்தான்! லட்சுமீபுரம் என்று கூடச் சொல்லலாம்! அது சரி! சுமார் நாலாயிரம் பேர் ஒவ்வொரு வேளைக்கும் சாப்பிட்டிருப்பாளே! இந்தக் கஷ்ட காலத்திலே இத்தனை பேருக்கு அரிசி எப்படிக் கிடைச்சுது இவருக்கு?”

எப்படியா? நன்றாய்க் கேட்டீர், ஒரு கேள்வி! இவருக்கு அரிசி இல்லேண்ணா, சர்க்கார் கிடங்கிலேயே அரிசி இல்லேண்ணுதான் அர்த்தம்! இவர் தான் சர்க்கார்! சர்க்கார் தான் இவர் யாராரெல்லாம் வந்திருந்தா பார்த்தீரோன்னோ?”

“ஆமா! ஜட்ஜ்களெல்லாம் கூட வந்திருந்தாளே!”,

“ஜட்ஜ்களா? அது ரொம்ப சாதாரணம் ஓய்! இந்தக் காலத்திலே ஜட்ஜ்கள் வராத இடம் ஏதாவது ஒன்று சொல்லும்! அது ஒரு பிரமாதமில்லை ஓய்! தலைவர்கள் சர்க்கார் தலைமை உத்தியோகஸ்தர்கள்! பத்திரிகை ஆசிரியர்கள்! யார்தான் பாக்கி?”

“இவ்வளவு பேருக்குத்தான் விருந்து வைக்கணும் என்று ஏதோ சட்டமிருக்காமே? இவர் எப்படி நாலு நாளைக்கு இத்தனை ஆயிரம் பேருக்கு விருந்து வைத்தார்?”

“சட்டமா? அது ஒரு ரப்பர் ஓய்! ஆளுக்குத் தகுந்த மாதிரி நீண்டு கொடுக்கும்! செத்துப்போன கிழவிக்காக தவறுதலாக அதிக ரேஷன் வாங்கின ஒரு ஏழைக்குத் தண்டனை கொடுத்தாளா இல்லையா, சில மாதங்களுக்கு முன்னே, இதே மயிலாப்பூரிலே? இப்போ பார்த்தீரா? எல்லாம் பணங்காணும் பணம்! ஈஸ்வரனைக் கூட புஷ்பத்தாலே அர்ச்சனை பண்ணாமே பணத்தாலே அடிச்சுப் பாரும்!

உடனே காட்சி கொடுப்பர்! இந்தக் காலத்திலே உம்மையும் என்னையும் போலே பிராமணார்த்தத்துக்காக நாக்கைத் தொங்கப் போட்டூண்டு தெருத் தெருவா திரிஞ்சீண்டிருந்தா, ஒரு நாய் கூட நம்மை மதிக்காது ஓய்!”

“நம்மளவா இப்போ ஒவ்வொரு துறையிலேயும் முன்னுக்கு வந்திண்டிருக்கா! அது ரொம்ப விசேஷந்தான்! சதா உத்யோகம் உத்யோகம் என்று அதையே கட்டீண்டு அழாமே! “டி. வி. எஸ்.” என்ன! ஒரு “ஹிந்து” பத்திரிகை என்ன! ஒரு “ஜெமினி” என்ன! ஒரு “உட்லண்ட்ஸ்” என்ன!

ஒரு “சேஷசாயி” என்ன! ஒரு “சிம்ப்ஸன்” என்ன! இவைகளெல்லாம் இருக்கிறதாலே தான் லட்சக்கணக்கான நம்மளவாளெல்லாம் பிழைக்க முடியறது! இல்லாட்டிப் போனால் இந்தக் காலத்திலே திண்டாடித் தெருவிலே நிற்க வேண்டாமோ?”

“அதிலென்ன சந்தேகம்! சூத்திரன்களுக்குள்ளே பணக்காரனாயிருப்பவன்களுக்கு இந்த மாதிரிப் புத்தியும் இன உணர்ச்சியும் இல்லையே அது ஏன், ஓய்?”

“அவன்கள் நாசமாய்ப்போகட்டும்! நமக்கென்ன ஓய்! பணக்கார சூத்திரன்களுக்குப் புத்தியில்லாமலிருந்தால் தானே நீரும் நானும் அவன்களைச் சுரண்டிக் கொண்டிருக்க முடியும்? சரி! சித. பெரி. மு. மூளைக் கோளாறு செட்டியார் ஆத்திலே நாளைக்குத் தானே வருஷாப்தீகம்? அங்கேயும் நம்மளவாளுக்குத் தான் நல்ல வேட்டை! நல்ல அசடுகள் நமக்குக் கிடைச்சுது ஓய்! ஆயுசோட இருக்கணும், இந்த அசடுகளெல்லாம்! பிராமணர்களை ஒழிக்கப் போறாளாம், ஒழிக்க! சூரியன் புறப்படுகிற வரையிலே தூக்கிக் கொண்டிருக்கிற இந்தத் தூங்கு மூஞ்சிகளா நம்மை ஒழிக்கப் போறதுகள்; அதிகாலையிலே நாலு மணிக்கு எழுந்திருக்கிற நம்மை? சுத்த அசடுகள்!”

குத்தூசி குருசாமி (24-5-50)

நன்றி: வாலாசா வல்லவன் 

Pin It