திருவண்ணாமலை கோயில் வளாகத்தில் கிராமத்தில் இருந்து வந்த ஒரு தம்பதியினர் முட்டை பிரியாணி சாப்பிட்டார்கள் என்பதற்காக கோயில் தீட்டாகி விட்டது என்று கூறி, தீட்டு கழிக்கும் சடங்குகளையும் யாகங்களையும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் அசைவம் சாப்பிடுகிறவர்கள்தான்!

அவர்களை கடவுள் ஏற்றுக் கொள்கிறார், ஆனால் அவர்கள் சாப்பிடுகிற அசைவ உணவு ஆண்டவனுக்கு தீட்டு என்று சொல்லி அசைவ உணவுக்காரர்களையே ஆரியம் அவமதிக்கிறது.

ஆண்டவனின் உணவு பியூர் வெஜிடேரியன் என்று இவர்களுக்கு யார் சொன்னது? அர்ச்சகராக இருக்கிறவர்கள் சைவ உணவுக்காரர்களாக இருக்கிறார்கள், என்பதற்காக கடவுளையும் சைவத்திற்கு இவர்கள் மாற்றிக் கொண்டு விட்டார்களா?

அசைவ உணவுக்காரர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொன்னால் கோயில்களை இழுத்து மூடி விட வேண்டியதுதான்.

பெரும்பான்மை மக்களை இப்படி புண்படுத்துகிறவர்கள்தான் இந்துக்களைப் புண்படுத்துகிறார்கள் என்று அவ்வப்போது கூச்சல் போட்டு வருகிறார்கள்.

மதக்கலவர நோக்கத்தோடு மதுரையில் முருகன் மாநாட்டை நடத்துகிறது பாரதிய ஜனதா கட்சி. முருகன் தமிழ்க் கடவுள் என்று வேதவாதிகள் தொலைக்காட்சிகளில் பேசுகிறார்கள். ஆனால் வேதவாதிகள் எவரும் முருகன் என்ற தமிழ்ப் பெயரை சூட்டிக் கொள்வதில்லை. சமஸ்கிருத மயமாக்கப்பட்ட சுப்ரமணியன், ஸ்கந்தன், கார்த்திகேயன் என்றுதான் பெயரிடுவார்கள்.

சுப்பிரமணியன் என்று சொன்னால் சுத்தமான பிராமணன் என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரி விளக்கம் தந்திருக்கிறார். தமிழ்க் கடவுளை இப்படி பார்ப்பனியம் விழுங்கி ஏப்பம்விடுகிறது.

சட்டத்தில் தீண்டாமை குற்றம்; ஆனால் இந்து சமயத்தில் தீண்டாமை புனிதம்.

கோயில் வளாகத்துக்குள் அசைவத்தை தீட்டு என்று கூறுகிறவர்கள், கோயில் இருக்கும் ஊரிலேயே அசைவம் தீட்டு என்று அறிவிக்கும் காலம் வந்தாலும் வியப்பதற்கு இல்லை. அயோத்தியில் இது தொடங்கிவிட்டது. தசையும் எலும்பும் தீட்டு என்று சொன்னால் மனிதர்களே தீட்டுதான்; அவர்களின் உடல் செடி கொடிகளின் சைவம் அல்ல."

விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.