“இரண்டாயிரம் மக்கள் நடத்தும் போராட்டம்,” “தனிமைப்படுத்தப்பட்ட ஓர் ஒற்றை மனிதரின் போராட்டம்” என்றெல்லாம் முகமற்ற, முகவரியற்ற காங்கிரசுக்காரர்களால் விமர்சிக்கப்படும் நமது மாபெரும் போராட்டத்தின் அடுத்தக் கட்டம் என்ன? முதலில், இந்த “ஆடுகளம்” பற்றிய அடிப்படைத் தகவல்களிலிருந்து ஆரம்பிப்போம்: 

நாம் யார்? 

koodankulam_637

நாம் யார் என நமக்குத் தெரியும். சாதாரண உண்மையான, உழைத்து வாழும் மீனவர்கள், விவசாயிகள், சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறோம். தமிழமெங்குமுள்ள கற்றுணர்ந்தோர், கருத்துத் தெளிவுடையோர் பலரும் நம்மை ஆதரிக்கின்றனர். கூடவே அண்டை மாநிலமான கேரளத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும், உலகெங்குமுள்ள பலரும் நம்மை ஆதரிக்கின்றனர். எண்ணிக்கையில் நாம் பெரும்பாலானவர்களாக இருந்தாலும், நாம் யார், எவர் என்பதே நமக்குத் தெரியாது. காரணம் நாம் உலகெங்கும் பரந்து கிடக்கிறோம்; நமக்குள் பரந்துபட்ட ஒருங்கிணைப்பு எதுவும் கிடையாது. நமக்கு அதிகார பலம், பணபலம், இராணுவ பலம், ஊடக பலம் எதுவுமில்லை. நம்முடைய பலம் மாந்தநேயமும், மக்கள் அறமும், மென்முறைப் போராட்டமும்தான். 

நமக்கு என்ன வேண்டும்? 

நம்முடைய வாழ்வுரிமைகள், வாழ்வாதார உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும். நமது மண்ணும், பயிரும், கடலும், கடல் வளமும், நீரும், காற்றும், வளங்களும், வருங்காலமும், வரவிருக்கும் சந்ததிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இவர்களிடம் கமிஷன் பெற்று வாழும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கோடி கோடியாய் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்காக, நாமும், நம் பிள்ளைகளும் வஞ்சிக்கப்படக் கூடாது. நாம் அடிமைகளாக்கப்படக் கூடாது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் ஆபத்தான அணுக்கழிவை உருவாக்கும் அணுமின் நிலையங்கள் போன்ற திட்டங்களை நம் தலைகளில் கட்டக்கூடாது. கேரளத்தில் கட்ட முடியாத அணுமின் நிலையத்தை, கர்நாடகாவில் புதைக்க முடியாத அணுக்கழிவை தமிழர்கள் தலையில் சுமத்தக்கூடாது. 

நாம் என்ன செய்திருக்கிறோம்? 

கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டபோவதாக அறிவித்த காலகட்டத்திலிருந்தே, திட்டத்தைப் பற்றி எந்தத் தகவலும் தராமல், மக்கள் கருத்தைக் கேட்காமல், எதேச்சாதிகாரமாக புகுத்தப்படும்போது மக்கள் புழுங்கினார்கள். அப்போது நடந்த செர்னோபில் விபத்தைச் சுட்டிக்காட்டி பல்வேறு இயக்கங்கள், தலைவர்கள், போராளிகள் இந்தத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் திரு. ஒய். டேவிட் அவர்கள் தலைமையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் துவங்கப்பட்டது முதல், நமது எதிர்ப்பும், பரப்புரையும் தொடர்ந்து நடந்தன. 2011 ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு வீரியமான, உச்சக்கட்டப் போராட்டத்தை நடத்தி இடிந்தகரையை மையமாகக் கொண்டு நடத்தி வருகிறோம். 

தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அணுசக்திப் பிரச்சினையில் ஒரு நிலைப்பாடு எடுக்க வைத்திருக்கிறோம். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோதுகூட இந்த நாட்டில் எழாத ஒரு பரந்துபட்ட விவாதத்தை சாத்தியமாக்கியிருக்கிறோம். சாதி, மத பேதங்களுக்கு இடமளிக்காமல், தமிழர் எனும் அடையாளத்தை மையப்படுத்தி, அதே நேரம் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிற மாநிலங்களிலிருந்து வரும் மக்களையும் அரவணைத்துக் கொண்டு, துளியளவும் வன்முறை இல்லாமல் 835 நாட்களாக இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். பெண்களை, இளைஞர்களை, குழந்தைகளை முன்னிலைப்படுத்திப் போராடுகிறோம். மறு காலனி ஆதிக்கத்துக்கு (re-colonization) எதிராக, உலகமயமாக்கலுக்கு (globalization) எதிராக, ஹை-டெக் அணுசக்தி எதிர்காலத்தை உருவாக்குகிறோம் என்ற பெயரில் சாமான்ய மக்களின் வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை பணக்காரர்களின், பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்துக்காக அழிப்பதற்கு எதிராக தீரத்துடன் போராடுகிறோம். இந்திய சனநாயகத்தைக் காப்பாற்றவும், அடிப்படை உரிமைகளைக் காக்கவும் எழுந்து நிற்கிறோம். அணுசக்தியற்ற தமிழகம், இந்தியா, தெற்காசியா, உலகம் என்ற கனவுகளோடு இயங்குகிறோம். 

எதிரணியினர் யார்? 

தமிழக அரசு,

தமிழக அரசின் காவல்துறை, உளவுத் துறைகள்,

இந்திய அரசு மற்றும் அதன் பிரமாண்டமான கட்டமைப்பு,

இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்புப் படை,

மத்திய உளவுத் துறைகள்,

அணுசக்தித் துறை மற்றும் அதன் ஏராளமான அமைப்புக்கள்,

இந்தியப் பெருமுதலாளிகள், நிறுவனங்கள்,

ரஷ்ய அரசு, ரஷ்ய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உளவுத் துறைகள்,

அமெரிக்க அரசு, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உளவுத் துறைகள்,

பிரான்சு அரசு, பிரான்சின் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உளவுத் துறைகள்,

ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உளவுத் துறைகள்,

இந்தியாவோடு அணு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டிருக்கும் ஜப்பான், பிரிட்டன், கஸக்ஸ்தான், நமீபியா போன்ற நாடுகளின் அரசுகள், அவர்களின் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உளவுத் துறைகள்,

அகில உலக அணுசக்தி தொழில்துறை (global nuclear industry),

ஐ.நா. சபை மற்றும் அதன் சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency) முதலானவை. 

அவர்களுக்கு என்ன வேண்டும்? 

பணம், ஏராளமான பணம், இன்னும் அதிகமான பணம்,

எரிசக்தி, ஏராளமான எரிசக்தி, இன்னும் அதிகமான எரிசக்தி,

அணுகுண்டு, ஏராளமான அணுகுண்டு, இன்னும் அதிகமான அணுகுண்டு,

அதிகாரம், ஏராளமான அதிகாரம், இன்னும் அதிகமான அதிகாரம்,

பணம், ஏராளமான பணம், இன்னும் அதிகமான பணம். 

அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? 

அவர்களுக்கு ஏதுவான, தோதுவான ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சமூக-பொருளாதார-அரசியல் அதிகாரத்தை கையில் குவித்து வைத்திருக்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறார்கள். ஏராளமாக கடன் வாங்குகிறார்கள். ஊடகங்களை மிரட்டி அடிமைப்படுத்தி, அல்லது லஞ்சமளித்து அமைதிப்படுத்துகிறார்கள்; அல்லது அவர்களுக்கேற்றவாறு ஊடகங்களைப் பேச வைக்கிறார்கள். நமக்காக, நம்து வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, தங்கள் லாபத்தை, களவை, கமிஷனை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். 

எதிரணியினரோடு நேரடி சந்திப்பும், கருத்துப் பரிமாற்றமும் 

கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முதல் ஓர் உச்சக்கட்டப் போராட்டத்தை நாம் நடத்தி வருகிறோம். அன்று முதல் இன்று வரை போராடும் மக்களின் உணர்வுகளை, ஈடுபாடுகளை, தேவைகளை, விருப்பங்களை, அச்சங்களை, ஆசைகளை யாரும் உண்மையாகக் கேட்டதோ, கரிசனையுடன் பரிசீலித்ததோ, ஆழமாகப் புரிந்துகொண்டதோ கிடையாது. உள்ளூர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் போன்றோர் மேலிருந்து வரும் கட்டளைகளை எந்தக் கேள்வியுமின்றி அப்படியே அமுல்படுத்தும் அடிமைகளாகவே செயல்படுகின்றனர். அப்படித்தான் செயல்பட முடியும், செயல்பட வேண்டும் என்பது அரசின் எழுதப்படாத விதி. மனசாட்சியுள்ள அதிகாரிகள்கூட தன்னிச்சையாக இயங்க முடியாது. 

மத்திய இணை அமைச்சரும், அணுசக்தி கழகத்தின் உறுப்பினருமான திரு. வி. நாராயணசாமி செப்டம்பர் 20, 2011 அன்று இடிந்தகரைக்கு நேரில் வந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்களை சந்தித்துச் சென்றார். “மக்களுக்காக மின்சாரமா, மின்சாரத்துக்காக மக்களா என்று போராளிகள் கேட்கிறார்கள்; மக்களுக்காகத்தான் மின்சாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை” என்ற தொனியில் பேசிச் சென்றவர், இடிந்தகரையை விட்டு வெளியேச் சென்றதும் மக்களுக்கு எதிராகப் பேசினார். 

கடந்த செப்டம்பர் 21, 2011 அன்று தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களை சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேசினோம். அதிகார வர்க்கத்தின் ஒரு பிரதிநிதியோடு அவ்வளவு நீண்ட நேரம், சுதந்திரமாக, உண்மையாக ஒரு கருத்துப் பரிமாற்றம் நடந்தது என்றால், அது இந்த சந்திப்பு மட்டும்தான். ஒரு தகராறுப் பேச்சுவார்த்தையில் என்னென்ன நடக்க வேண்டுமோ அது அப்போது நடந்தது. கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். அது முற்றுப்பெறும் நிலையில் இருக்கும் மத்திய அரசின் திட்டம், என்னால் பெரிதாக எதுவும் செய்ய இயலாது என்று முதல்வர் சுட்டிக்காட்டினார். பணிகளை நிறுத்திவைக்கக் கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றுகிறோம், பிரதமரை சந்திக்க ஏற்பாடுகள் செய்து தருகிறோம் என்று உறுதியளித்தார் முதல்வர். நாங்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்து ஊருக்குப்போய் மக்களிடம் பேசிவிட்டு நிறுத்திவிடுகிறோம் என்று வாக்களித்தோம். 

தமிழக அரசின் முயற்சியில், முன்னெடுப்பில் பிரதமரை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்டோபர் 7, 2011 அன்று பிரதமரை சந்தித்தோம். கூட்டம் நடந்த அறைக்கு பிரதமர் வரும்போது வீட்டின் உள்ளேயிருந்து அவரோடு தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர் மேனன், அறிவியல் ஆலோசகர் சிதம்பரம், இந்திய அணுமின் கழகத் தலைவர் எஸ்.கே. ஜெயின் போன்றோர் வந்தனர். நாடகம் அரங்கேறியது. நாங்களும் நடித்தோம், ஊர் திரும்பினோம். ஆனால் நிலைமை மாறவில்லை. பேச்சுவார்த்தை முடிந்து அன்று மாலை தில்லி விமான நிலையம் போவதற்கு முன்பே, மத்திய அரசின் மக்கள் விரோத நிலை அம்பலமாகியது. 

“கூடங்குளம் உலகிலேயே உன்னதமான அணுஉலை; ஒன்றும் செய்யாது; பயப்பட வேண்டாம்; பார்த்துக் கொள்ளலாம்; விஞ்ஞானிகள் நல்லவர்கள்; அவர்களை நம்ப வேண்டும்” என்றெல்லாம் நமக்கு எடுத்துச் சொல்லப்பட்டதே தவிர, எதுவும் செய்யப்படவில்லை. அரச விஞ்ஞானிகள், அரசவைக் கோமாளிகள், சிறப்பேதுமற்ற சில சினிமா நடிகர்கள், மற்றும் பிற சில்லறைகளை வைத்து மக்களுக்கு உறுதிமொழிகள் அழிக்கப்பட்டனவே தவிர உருப்படியாக எதுவும் செய்யப்படவில்லை. அணுமின் நிலையத்தில் ஒரு விபத்து நடந்தால் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் என ஒரு பேரிடர் பயிற்சி கூட இன்றுவரை இப்பகுதி மக்களுக்குத் தரப்படவில்லை. மாறாக “வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது,” “அமெரிக்க கைக்கூலிகள்” என்றெல்லாம் ஏராளமான பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். 

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அக்டோபர் 13, 2011 அன்று “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று முதல்வர் உறுதியளித்தார். 2011 டிசம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் “ஓரிரு வாரங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கும்” என்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அறிவித்தபோது அதை உடனடியாகத் தட்டிக்கேட்டார் முதல்வர். சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரசுக் கட்சியும், பேசாமடந்தைகளை வைத்து அவர் நடத்தும் மத்திய அரசும் தமிழக முதல்வருக்கு நெருக்கடிகள் கொடுத்து, மிரட்டியிருக்க வேண்டும். முதல்வர் தனது நிலைப்பாட்டை மாற்றினார். 2012 மார்ச் மாதம் 18-ம் நாள் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும், தமிழக அரசும் நம்மை வெளிப்படையாக எதிர்த்தது. 

எளிய பாதையில் எதிர்த்து நின்றோம் 

சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் நான்கு அம்சங்களான உண்மையோடு, பொறுமையோடு, உறுதியோடு, அன்போடுப் போராடினோம். மக்களைத் திரட்டி திட்டத்தை எதிர்த்தால் ஒருவேளை மக்கள் விருப்பங்களுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெரும்பான்மையான நாடுகள் வெறுத்து ஒதுக்கும் அணுசக்தித் திட்டத்தை கைவிட்டுவிட மாட்டார்களா என்று ஆசைப்பட்டோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை தள்ளிவைத்து, உடல்களை வருத்தி, வேலைகளை இழந்து, பொருளாதார இழப்புக்களை ஏற்றுக்கொண்டு, வழக்குகளையும், அடக்குமுறைகளையும் சந்தித்துக் களமாடினோம். அந்நிய நாடுகளின் அரசுகளுக்காக, அவர்களின் பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்காக, அந்நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, எங்கள் உயிர்களை, வளங்களை, வருங்கால சந்ததிகளை காவு கொடுக்காதீர்கள் என்று கோரிக்கை வைத்தோம். 

மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் அரசு என்றால் மக்கள் சொல்வதைத்தானே செய்ய வேண்டும், மக்கள் கேட்பதைத்தானேக் கொடுக்க வேண்டும்? மக்களாட்சி நடைபெறுகிற நாடு என்றால், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், முதல்வர், பிரதமர் போன்றோர் மக்களை நேரில் வந்து சந்தித்து, அவர்கள் கருத்துக்களைக் கேட்டு, ஈடுபாடுகளை அறிந்து, நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டிருக்க வேண்டாமா? ஒரு கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருக்க வேண்டாமா? மக்கள் கருத்துக்களை அக்கறையோடு பரிசீலித்து, தாங்கள் என்னென்ன செய்ய முன்வருகிறோம் என்று அறிவித்திருக்க வேண்டாமா? முனைவர் முத்துநாயகம் குழு அமைக்கப்பட்டபோது, “எங்கள் ஊர்களுக்கு வாருங்கள், வந்து எங்கள் மக்களோடுப் பேசுங்கள்” என்று வலியுறுத்தினோம். “அப்படி செய்வதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை” என்றனர். முனைவர் இனியன் தலைமையில் தமிழக அரசு ஒரு குழு அமைத்தபோதும், இதே கோரிக்கையை முன்வைத்தோம். ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையைகூட அரசு தமிழக மக்களோடு பகிர்ந்துகொள்ளவில்லை. 

சர்ச்சைக்கிடமான பல ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து கூடங்குளம் அணுஉலைக்கு உபகரணங்களும், உதிரிப் பாகங்களும் வாங்கப்பட்டிருப்பதை, விதிமுறை மீறல்கள் நடந்திருப்பதை, பல கேள்விகளுக்கு பதிலேதும் சொல்லப்படாமலிருப்பதை, மக்களுக்குப் பேரிடர் பயிற்சிகள் கொடுக்காமலிருப்பதை – என பல பிரச்சினைகளை அறிவியல், சட்டவியல், அரசியல் தளங்களில் பணியாற்றி அம்பலப்படுத்தினோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை கண்கொத்திப் பாம்பாக அவதானித்து, மக்களுக்கு அரசுகளும், அணுசக்தித் துறையும் தராத தகவல்களை அறியத் தந்தோம். ஆனால் அரசுகளைப் பொறுத்தவரை, போராட்டங்களில் மக்கள் வெற்றி பெறக்கூடாது என்பதிலே மிகத் தெளிவாக, உறுதியாக இருக்கிறார்கள். “எங்களுக்கு எதிராகப் பேசாதே, நாங்கள் சொல்வதைக் கேட்டு நட” என்பதுதான் அவர்கள் நிலைப்பாடாக இருக்கிறது. 

கடின பாதையில் பயணம் செய்வோம் 

எளிய பாதை அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், கடின பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. “அடிக்கிற வழியில் போகவில்லையென்றால், போகிற வழியில் அடிப்போம்” என்பார்கள். மக்கள் போராட்டம் அடிக்கிற வழியில் வெற்றியை நோக்கிப் போகவில்லை. அதற்காக அது போகிற தோல்வி வழியில் அடித்துக் கொண்டிருக்க முடியாது. “மாடுகளை மாற்றுவோம், சாலைகளை சரி செய்வோம், பின்னர் அடிக்கிற வழியில் போகவைப்போம்” என்பதுதான் நமக்கு உள்ள ஒரே வழி இப்போது. இது மிகக் கடினமான வழிதான். குறுகிய கால--மக்கள் திரள்—நேரடி--கள நடவடிக்கைகளுடன் நீண்ட கால--கருத்துத் திரள்—மறைமுக—அரசியல் நடவடிக்கைகளையும் கையிலெடுக்க வேண்டும். 

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் பற்றி மட்டுமல்லாது, அணுசக்திக் கொள்கை, எரிசக்திக் கொள்கை, தொழிற் கொள்கை, வளர்ச்சிக் கொள்கை எனப் பரந்துபட்ட கொள்கை அளவிலும், கோட்பாடுகள் அளவிலும், அரசியல் தளத்திலும் இயங்க வேண்டும். அதிக நேரத்தையும், அதிக கவனத்தையும், அதிக சக்தியையும், அதிக உழப்பையும் தர அணியமாக வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவது மலை ஏறுவது போல. துவக்கம் எளிதானது, ஆனால் தொடர்வது கடினமானது. அடிவாரத்தில் ஆழமாக சுவாசிக்கலாம், ஆனால் உயரப் போகுந்தோறும் ஆசுவாசமாக சுவாசிப்பது இயலாது போகும். ஏறுவது சுலபம், ஆனால் இறங்குவது கடினம். 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல கோளாறுகளும், குளறுபடிகளும் இருப்பதாகத்தான் கேள்விப்படுகிறோம். அது நொண்டிக் கொண்டிருப்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. ஆனால் அதிகாரமுள்ளவர்கள் சொல்லும் பொய்கள் உண்மையாகிவிடுவதால், நாம் சொல்லும் உண்மைகள் பொய்யாகவேப் பார்க்கப்படுகின்றன. மாஸ்கோ நகரிலுள்ள ஆட்டம்இன்ஃபோ (AtomInfo) எனப்படும் அணுசக்தி ஆய்வு மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் யுவாரோவ் (Alexander Uvarov) சொல்கிறார், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும், குற்றங்குறைகள் களையப்படவேண்டும், எனவே வர்த்தகரீதியில் மின்சாரம் தயாரிக்க ஒரு வருடமோ அதற்கும் மேலாகவோ ஆகலாம் என்று. அத்தைக்கு மீசை முளைத்தால்தானே சித்தப்பா ஆவார்? 

இந்திய அணுசக்தித் துறை நாட்டு மக்களிடம் எந்தத் தகவலும் சொல்வதில்லை; உண்மை பேசுவதில்லை; திறந்தவெளித்தன்மையோ, பொறுப்புணர்வோ கிடையாது; சனநாயகப்பண்புகள் அறவே கிடையாது. இந்தியாவை மாறி மாறி ஆளுகின்ற காங்கிரசு கட்சியும், பா.ஜ.க.வும் பல லட்சம் கோடி பணம் புரளும் அணுசக்தி கனவுலகத்துக்கே நம்மை இட்டுச்செல்ல விரும்புகின்றனர். இந்தியாவிலுள்ள பிற தேசியக் கட்சிகள், பிராந்தியக் கட்சிகள் அனைத்தும் கனமாகக் கமிஷன் கிடைப்பதால் கவலையோ, கரிசனமோ இன்றி கையைக்கட்டிக் கொண்டு வாளாவிருக்கின்றனர். 

இந்த நிலையில் நாம் என்னென்ன செய்ய முடியும்? 

[1] தொடர்ந்து போராடுவோம்:

குறுகிய கால--மக்கள் திரள்—நேரடி--கள நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். வெற்றி-தோல்வியைப் பற்றி கவலைப்படக் கூடாது. பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுவது போல வெற்றி வீடு தேடி வரும் என்று கருதக்கூடாது. இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்று உறுதியாக எண்ணிக் கொண்டு ஒரு கரும யோகியாகவே செயல்பட வேண்டும். “கற்பி, ஒன்று சேர், போராடு (Educate, Organize, Agitate)!” எனும் புரட்சியாளர் அம்பேத்கர் மந்திரத்தை மனதிற்கொண்டு முன்னேறுவோம். 

[2] மக்களுக்குத் தோள்கொடுப்போம்:

அரசுக்கு, அதிகார வர்க்கத்துக்கு எதிராகப் போராடுகிற அதே வேளையில், மக்களுக்கு, பாதிப்புக்குள்ளாகிறவர்களுக்கு ஆதரவாகவும் இயங்க வேண்டும் நாம். இங்கே நமது மந்திரம்: “காத்துக் கொள், அணியமாக்கு, தொடர்ந்து செல் (Protect, Prepare, Proceed)” என்பதாகத்தானிருக்க முடியும். 

[3] காத்துக் கொள்வோம்:

[i] மக்களை, பிற உயிர்களை காத்துக் கொள்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அவ்வப்போது காற்று, நீர், கடல் வழி வெளியேறும் கழிவுகளை, கசிவுகளை, கதிர்வீச்சை அவதானிக்கத் தேவைப்படும் கருவிகளோடு, மக்களைக் காக்கும் “அவதானிப்பு நிலையங்கள்” (Monitoring Stations) ஆங்காங்கே நிறுவப்பட வேண்டும். 

[ii] அணுமின் நிலையம் முறையாக செயல்படத் துவங்கும்போது மக்களை, பிற உயிர்களை பல்வேறு நோய்கள் தாக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் ஒப்பீடு செய்து பார்ப்பதற்கு, இந்த நிலையம் இயங்கத் துவங்குவதற்கு முன்பிருந்த சுற்றுச்சூழல், மக்கள் உடல்நலம் பற்றி நாம் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். இம்மாதிரியானத் தரவுகளை (Baseline Data) நாம் சேர்த்து பாதுகாத்து வைக்க வேண்டும். 

[4] அணியமாக்குவோம்:

[i] கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய தகவல்களை, செய்திகளை, சங்கதிகளை, சங்கடங்களை, கோளாறுகளையெல்லாம் சேகரிக்கும், தொகுக்கும், தொடர்புபடுத்தும், ஆய்வுகளுக்கு உதவும், மக்களுக்கு அறியத்தரும் ஓர் “ஆவணக் காப்பகம் மற்றும் தகவல் மையம்” (Documentation and Information Centre) ஏற்படுத்தப்பட வேண்டும். 

[ii] கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடக்கும், நடக்கவிருக்கும் நிகழ்வுகளை புரிந்து கொள்ளவும், செய்திகளை மக்களுக்கு முறையாகக் கொண்டு செல்லவும் உதவும் வகையில் அவ்வப்போது ஊடகத் தோழர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும், சமூக சேவகர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏனையோருக்கும் “ஊடகப் பயிற்சி மற்றும் தகவல் முகாம்கள்” (Media Training and Information Campaign) நடத்தப்பட வேண்டும். 

[iii] இந்திய ஆளும் வர்க்கம் மிகப் பெருமளவில் அணுமின்சாரம் தயாரிக்கத் திட்டமிடும்போது, கல்வியறிவற்ற, காரண காரியங்கள் எதுவும் அறியாத நமது மக்களுக்கு அணுமின் நிலையங்கள், அணுவாயுதங்கள், யுரேனியச் சுரங்கங்கள், கதிர்வீச்சுக் கழிவுகள், அணுமின் நிலையங்களை செயலிழக்கச்செய்தல் போன்றவை பற்றியெல்லாம் நாம் சொல்லிக் கொடுத்தாக வேண்டும். 

மத்திய, மாநில அரசுகள் இந்தப் பணிகளை செவ்வனேச் செய்ய மாட்டார்கள். ஏற்கனவே அணுசக்தித் துறையின் செயல்பாடுகள் முழுவதுமாக மூடிமறைக்கப்படுகின்றன. துணுக்குத் தகவல்களையும், அரைகுறை உண்மைகளையும், அப்பட்டமானப் பொய்களையும் பேசும் இந்தத் துறைக்கு திறந்தவெளித் தன்மையோ, பொறுப்புணர்வோ, சனநாயகப் பண்புகளோ அறவே கிடையாது. இவர்கள் எதிர்ப்பை சகித்துக் கொள்ளாதவர்கள், எதிரிகளை அழிக்கத் துடிப்பவர்கள், பயத்தின் உதவியோடு மக்களைக் கட்டுப்படுத்த முனைகிறவர்கள். 

இலாப வெறியோடு அலையும் பன்னாட்டு நிறுவனங்களும், இரகசியத் தன்மையோடு இயங்கும் அரச இயந்திரமும், எதேச்சாதிகாரப் போக்கு கொண்ட அணுசக்தித் துறையும் கைகோர்த்தால், பாமர மக்கள் பாழுங்கிணற்றுக்குள் தள்ளப்படுவார்கள். இந்த முதலாளித்துவ-அரசத்துவ-அணுத்துவக் கலவை மீனவர், தலித், சிறுபான்மையினர் போன்ற விளிம்புநிலை மக்களை வீழ்த்தி அழித்துவிடும். 

எனவே அணுசக்தித் தொடர்பான தொழிற்சாலைகள் கடலோர மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமைகள் மீதும், உட்பகுதி மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து உரிமைகள் மீதும் ஏற்படுத்தும் தாக்கங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாலைகள் அருகே வாழும் விளிம்புநிலை மக்களின் பொருளாதார, உணவு, ஊட்டச்சத்துத் தணிக்கை (economic, food and nutrition audits) அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். இந்த ஆபத்தான பகுதிகளில் வாழும் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், கால்நடைகள், வனவிலங்குகள், பறவைகள், மரம் செடி கொடிகள், பயிர்கள் போன்றவற்றின் மீதான கதிர்வீச்சுத் தாக்கங்கள், நோய்வாய்ப்படுதல், பாதுகாப்புக் குறைகள் போன்றவற்றைத் தொடர்ந்து ஆய்வுசெய்து, அவதானித்துக் காத்துக்கொள்ள வேண்டும். 

இம்மாதிரி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அறிவியலாளர்களும், மீன்வள நிபுணர்களும், விவசாயிகளும், ஊட்டச்சத்து விற்பன்னர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் அணியமாக இருந்தாலும், தேவையானத் தகவல்களை சேகரிக்க, ஆவணப்படுத்த, அணுவிசை எதிர்ப்பு குழுக்களுக்குக் கொடுத்து உதவ ஆய்வு மையங்கள் தேவைப்படுகின்றன. அணு இயற்பியல் (Nuclear Physics), அணுப் பொருளாதாரம் (Nuclear Economics), அணு அரசியல் (Nuclear Politics) போன்ற நுண்ணறிவு விடயங்களை சாதாரண மக்களும் தெரிந்து, புரிந்துகொள்ளும் வகையில் தகவல்களை சேகரித்து, இந்தியாவின் முக்கிய மொழிகளில் மொழிபெயர்த்து, துண்டறிக்கைகளாக, சிறு வெளியீடுகளாக, புத்தகங்களாக வெளியிட வேண்டும். இன்னோரன்ன வேலைகளைச் செய்ய “அணுசக்தி கண்காணிப்பகங்கள்” (Nuclear Energy Watch Services, NEWS) தொடங்கப்பட வேண்டும். 

[5] தொடர்ந்து செல்வோம்:

இடிந்தகரையில் நடப்பது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மட்டும் எதிரான போராட்டமல்ல. இது கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் மற்றும் அங்கே நடக்கும் விரிவாக்கத்தை எதிர்க்கும் போராட்டம். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் அமைக்கப்படும் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அகில இந்திய அணுக்கழிவுக் கிட்டங்கியாகப் போகும் சதியை எதிர்க்கும் போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கிராமத்திலுள்ள அணுவாற்றல் எரிசக்தி மையத்தின் (Nuclear Fuel Complex) சிர்க்கோனியம் ஆலையை (Zirconium Complex) மூடச் சொல்லும் போராட்டம். உலக நாடுகள் அனைத்தும் அணுவாயுதங்களை அழிக்கக்கோரும் போராட்டம். ஒட்டுமொத்த அணுசக்திக்கு எதிரானப் போராட்டம். இந்தியாவின் தவறான எரிசக்தி கொள்கைக்கு எதிரானப் போராட்டம். அணுசக்தியற்ற தமிழகம், இந்தியா, தெற்காசியா, உலகம் போன்றவற்றை உருவாக்குவது இடிந்தகரை மக்களும், கடலோர மக்களும், கடற்கரையோர மக்களும், போராட்டக் குழுவிலுள்ளோரும் மட்டுமேக் கவலைப்படக்கூடிய விடயமல்ல. இது ஒரு பரந்துபட்ட, நீண்டகாலப் போராட்டம். 

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் பதினைந்து பேர் கொண்ட போராட்டக்குழுவும், இடிந்தகரை எனும் ஒரு சிறிய கிராமமும், எங்கள் பகுதி மீனவ மக்களும், விவசாயிகளுமாக சுமார் 850 நாட்கள் இந்தப் போராட்டத்தை இழுத்து வந்திருக்கிறோம். இனி தமிழகமெங்குமுள்ள சமூக, அரசியல் செயல்பாட்டாளர்கள் இதை ஏற்று நடத்த முன்வரவேண்டும். மேலே குறிப்பிட்டது போல, நீண்ட கால--கருத்துத் திரள்—மறைமுக—அரசியல் நடவடிக்கைகளை நாம் அனைவருமாக மேற்கொண்டாக வேண்டும். 

எரிசக்தி, அணுசக்தி போன்ற கொள்கைகளை மாற்றுவதற்கு அரசியல் மற்றும் அரசக் கொள்கை ஆதரவுத் தேடல்கள் (Political and Policy Lobbying) நடத்த வேண்டும். வாசிக்கும், வளமாக சிந்திக்கும், வாதிக்கும் மக்கள் மத்தியில் அரசியல் மற்றும் அரசக் கொள்கைகள் பற்றிய விவாதம் நடத்துவதற்காக “முகநூல் நாடாளுமன்றம்” என்ற ஓர் அரசியல் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறோம். இடிந்தகரை போராட்டத்தின் காரணமாக அணுசக்திக்கு எதிராக நிலைப்பாடு எடுத்திருக்கும் அரசியல் கட்சிகள் அரசியல் தளத்தில் கருத்துப் பரப்பல் முதல் தேர்தல் பிரச்சினையாக்குவது வரை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். 

நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால், அனைத்து அணுசக்தித் திட்டங்களைப் பற்றிய ஒரு பரந்துபட்ட தேசிய விவாதம் நடத்துவோம். நாடெங்கும் நிறுவப்படவிருக்கும் திட்டங்கள் பற்றிய கீழ்க்காணும் அறிக்கைகளை ஆங்கிலம், இந்தி, மற்றும் உள்ளூர் மொழிகளில் தயாரித்து வழங்குவோம்:

  • சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை (Environmental Impact Assessment),
  • தல ஆய்வறிக்கை (Site Evaluation Report),
  • பாதுகாப்பு ஆய்வறிக்கை (Safety Analysis Report),
  • பேரிடர் தயாரிப்புத் திட்டம் (Emergency Preparedness Plan),
  • உலைகளின் தொழில் ஆற்றுகை மதிப்பீடு (Concerned Reactor’s Performance Report),
  • இழப்பீடு அறிக்கை (Liability Regimes). 

இந்திய தேசம் முழுவதும் இந்த அறிக்கைகளை, அணுசக்தித் திட்டங்களின் அபாரமான செலவை; உணவு இழப்பு, ஊட்டச் சத்து இழப்பு மற்றும் நோய்வாய்ப்படுதல் போன்ற மறைமுக விலைகளை; அணுக்கழிவு மேலாண்மைக்கும், செயலிழக்கச்செய்யவும் ஆகும் செலவுகளை; பாதுகாப்புப் பிரச்சினைகளை எல்லாம் விவாதிப்போம். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியாவை அணுசக்திமயமாக்க வேண்டுமா என்று அனைவரையும் கேட்போம். பெரும்பாலானோர் “ஆமாம்” என்று பதிலிறுத்தால், அப்படியேச் செய்வோம். 

ஆனால் மக்கள் கருத்துக்களை அறியாது, அவர்களுக்கு எந்தத் தகவலும் கொடுக்காது, இந்திய ஆட்சியாளர்கள் தங்களின் கமிஷனுக்காக, இந்திய அறிவியலாளர்கள் தங்களின் சுகபோக வாழ்வுக்காக, இந்திய முதலாளிகள் தங்கள் லாபத்துக்காக ஒட்டு மொத்த மக்களையும் ஒரு பேராபத்துக்குள் தள்ள நாம் அனுமதிக்கக்கூடாது. 

நம்மைப் பொறுத்தவரை, தொடங்கியதைத் தொடர்வோம். துணிச்சலுடன் நிற்போம். நமது குழந்தைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்கு எந்தவிதமான தமிழகத்தை, இந்தியாவை, உலகத்தை விட்டுச் செல்ல வேண்டும் என மக்களே முடிவெடுக்கட்டும்!

- சுப.உதயகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It