modi 337இந்தியாவில் அக்டோபர் 31 வரை கோவிட் தடுப்பு மருந்து ஒரு முறை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 54.9 விழுக்காடாகவும், கோவிட் தடுப்பு மருந்து இருமுறை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 24.7 விழுக்காடாகவும் உள்ளது. தடுப்பு மருந்து, பொருளாதார சீர்திருத்தங்களால் இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக மீட்சியடைவதாகவும் கோவிட் தொற்றுக்கு முந்தைய பொருளாதார நிலையில் 90 விழுக்காட்டை அடைந்து விட்டதாகவும் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 2022ல் இந்தியாவின் மொத்தப் பொருளாக்க மதிப்பு இரட்டை இலக்க விகிதத்தில் விரிவடையும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஏற்படுத்திய கட்டமைப்பு சீர்திருத்தங்களால் ஊழல் ஒழிந்து பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது, நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய சூழல் எட்டப்படுவதாக வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் மத்திய வங்கியின் ஆளுநர் வளர்ச்சி இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய அளவில் இல்லை என்றும் ,பொருளாதாரத்தில் மந்தநிலை காணப்படுவதாகவும், 2021-22 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டுமே தொற்றுநோய்க்கு முந்தைய உற்பத்தி அளவை விட அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்.

திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, 2019-20 ஆம் ஆண்டைப் போலவே 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பொருளாக்க மதிப்பு எட்டு விழுக்காடு உயரும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். இந்திய தலைமை வங்கியால் கணிக்கப்பட்டுள்ள 9.5 விழுக்காடு மொத்த பொருளாக்க மதிப்பானது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் ஏனென்றால் அமைப்புசார் துறையை விட, அமைப்புசாரா துறை மிகவும் மோசமாக செயல்படுகிறது என்ற உண்மையை அது சரியாக பிரதிபலிக்கவில்லை என்கிறார். பொருளாதாரம் அதிக வளர்ச்சிக்கு திரும்ப வேண்டுமானால், முதலீடுகளுக்கு புத்துயிர் பெறச்செய்வது இன்னும் முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.

ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான நிதித்தொகுப்பை 10 விழுக்காடு போல் ஊதிப் பெருக்கிக் காட்டிய நிதியமைச்சர் கூறுகிறார்: இந்தியாவில் நிதித்தூண்டுதலை முடிவுக்குக் கொண்டுவர அவசரமில்லை, ஆனால் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. நிச்சயமற்ற தன்மையால் பொருளாதாரத்தை மீட்சிப் பாதையில் கொண்டு வருவதற்கான சில திட்டங்களை பாதிக்கக்கூடும் என்று.

இந்தியாவை 5 டிரில்லியன்(5 லட்சம் கோடி) பொருளாதாரமாக வளர்த்தெடுப்போம் என பாஜக அரசு சவால் விட்டிருந்தது. ஆனால் அவர்களின் பொருளாதாரச் செயல்பாடுகள் உண்மையான பொருளாதாரத்தை வளர்க்கவில்லை, பங்குச்சந்தையில் ஊகமுதலீடுகளையே வளர்த்துள்ளது. கோல்ட்மேன் சாசே நிதி நிறுவனம் இந்தியாவின் பங்குச் சந்தை மூலதனம் 2024ல் 5 டிரில்லியன் டாலராக உயரும் என கணிப்பீடு செய்துள்ளது. இந்தியாவின் உண்மையான பொருளாதாரமும், உற்பத்தி நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியப் பங்குச் சந்தையின் சந்தை மூலதனம் இந்த ஆண்டு 37 விழுக்காடு உயர்ந்து $3.46 டிரில்லியனாக (லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என்று ப்ளூம்பெர்க் குறியீட்டு எண் தெரிவிக்கிறது. ஐக்கிய முடியரசின் பங்குச்சந்தை மதிப்பு 9 விழுக்காடு அதிகரித்து $3.59 டிரில்லியனாக உள்ளது. இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பு, ஐக்கிய முடியரசின் பங்குச் சந்தை மதிப்பை நெருங்கியுள்ளது.

இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தொலைத்தொடர்பு துறையில் 100 விழுக்காடு நேரடி அன்னிய முதலீட்டை (FDI) அனுமதித்துள்ளது. இதுவரை, இத்துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை (OFB) கலைத்து அதிலிருந்து ஏழு அரசு பாதுகாப்பு நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின் 41 ஆயுத தொழிற்சாலைகளின் சொத்துக்கள் ஏழு புதிய நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவே தவிர புதிதாக எதையும் உருவாக்கவில்லை.

ராணுவ தளவாட ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள 25 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளதாகவும், விமானப்படை பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி மூலம் 2024-25க்குள் ரூ.35 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் கொள்கிறார்.வளர்ந்த நாடுகள் மட்டுமே ராணுவ தளவாட ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த நிலையில், இந்தியாவும் அதில் சேர்ந்துள்ளது. சமூக முன்னேற்றத்திற்கான துறைகளை புறந்தள்ளிவிட்டு பாதுகாப்புத் துறைக்கு அதீத முக்கியத்துவம் அளித்து இந்தியாவை இரண்டாவது இஸ்ரேலாக்கும் திட்டத்தையே நிறைவேற்றி வருகிறது பாஜக அரசு.

இந்த நிதியாண்டில் பாஜக அரசின் பங்கு விலக்க இலக்கான 1.75 லட்சம் கோடியில், பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்களில் உள்ள அரசு பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1 லட்சம் கோடியும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குவிலக்கலின் மூலம் 75,000 கோடி ரூபாயும் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் நிலம் மற்றும் பிற முக்கிய சொத்துக்களை பணமாக்குவதற்கு ஒரு நிறுவனத்தை அமைப்பதற்கான முயற்சியில் நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதற்கு பதிலளிக்கும் வகையில் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கூறுகிறார்: அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், பொதுத்துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளின் கடும் முயற்சியில் பொது மக்களின் வரிப்பணத்தில் கட்டி எழுப்பப்பட்டவை என்று கூறுகிறார்கள். ஆனால் அரசின் தனியார்மயமாக்கல் பட்டியலில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு காலத்தில் தனியாரால் உருவாக்கப்பட்டவை தான் என்று. இத்தகைய அறிவார்ந்த விளக்கத்தை அளிக்கும் பொருளாதார ஆலோசகர்கள் நாட்டில் ஒரு குண்டூசியைக் கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கே ஆலோசனை அளிப்பார்கள். இவர்களைக் கொண்டு பொதுத்துறைகளை எவ்வாறு வளர்த்தெடுக்க முடியும்?.

பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 7 பேரைக் கொண்ட இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருப்போர் கிரெடிட் சுசி கடன் தரமதிப்பீட்டு நிறுவனம், ஜேபி மார்கன் சர்வதேச நிதி நிறுவனம், உலகவங்கி ஆகியவற்றில் பணி புரிந்தோர், மொத்தத்தில் நவீன தாரளமயத்தின் ஆதரவாளர்களே உள்ளனர் எனும் போது சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளுக்கான ஆலோசனை வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.

பொதுத்துறை விமான நிறுவமான ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளை டாடா குழுமத்திற்கு ரூ.18000 கோடி ரூபாய்க்கு விற்பனை விற்பனை செய்வதை உறுதி செய்யும் கடிதத்தை (LoI) அரசு வெளியிட்டது. இதில் டாடா குழுமம் 2700 கோடி ரூபாய் (15 விழுக்காடு) ரொக்கப் பணம் செலுத்தினால் போதும். 15300 கோடி ரூபாய் கடனை மக்களின் வரிப்பணத்திலிருந்து மத்திய அரசு செலுத்தவுள்ளது. இதை எந்த விதத்தில் விற்பனை என்று கூறமுடியும். இந்திய அரசு டாடா நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட இலவசமாகவே ஏர் இந்தியா நிறுவனத்தை அளித்துள்ளது.

ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முடிவு நமது உறுதிப்பாட்டையும், முக்கியத்துவத்தையும் காட்டுகிறது, இந்தியாவில் இன்று இருப்பது போல் உறுதியான அரசு ஒருபோதும் இருந்ததில்லை என பிரதமர் நரேந்திர மோடி இதில் பெருமிதம் கொள்வதை என்னவென்று வர்ணிப்பது!.

நிட்டி ஆயோக் நாட்டின் புவிசார் ஆற்றல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் அனைத்து ஆற்றல் மூலங்களின் தரவுகளும் இடம்பெற்றுள்ளன.மக்களுக்கு சொந்தமான எஞ்சியுள்ள இயற்கை வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான முன்னோட்டமாகத் தான் இதைப் பார்க்க முடியும்.

உலகளவில் 43 ஓய்வூதியத்திட்டங்களை பகுப்பாய்வு செய்து மெர்சர் சிஎஃப்ஏ நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய ஓய்வூதியக் குறியீட்டில் இந்தியா 40வது இடத்தில் உள்ளது. 2020ல் 45.7ஆக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்தக் குறியீட்டு மதிப்பு 2021ல் 43.3ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பின் ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பை மேம்படுத்துவதற்கான பின்வரும் வழிமுறைகளையும் மெர்சர் ஆய்வு அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அவை 1. வயதான ஏழைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவை அறிமுகப்படுத்துதல், 2.அமைப்புசாரா தொழிலாள வர்க்கத்திற்கான ஓய்வூதிய அமைப்பை ஏற்படுத்தி விரிவுபடுத்துதல், 3.குறைந்தபட்ச அணுகல் வயதை அறிமுகப்படுத்துதல்.

இந்தியாவில் இந்திராகாந்தி தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மூத்தக் குடி மக்களின் சுயமதிப்பை அவமதிக்கும் வகையில் மாதம் வெறும் 500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. வெறும் 500 ரூபாயை அளித்து அதை ஓய்வூதியம் என்பது அவமதிக்கும் செயல் தானே. ஒரு முதியவரின் குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்ய 500 ரூபாய் எப்படி போதுமானதாக இருக்கும்?.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 71 விழுக்காட்டினருக்கு ஊதியம் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை என்றும் 14 விழுக்காட்டினருக்கு ஊதியம் வழங்குவதில் 30 நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுசெய்யப்பட்டதில் தெரியவந்துள்ளது.

விவசாயிகளின் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும் பிரதமர் பைசல் பிமா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.9,570 கோடி மட்டுமே இழப்பீடு பெறப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இது கடந்த 2019-20ம் ஆண்டைவிட 60 சதவீதம் குறைவாகும்.

மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்படி, 2020-21ம் ஆண்டில் நாட்டில் 445 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் 6.12 கோடி விவசாயிகளால் ரூ.ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 767 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டது. இதில் இழப்பீடாக ரூ.9570 கோடி வழங்கப்பட்டுள்ளது. கரீப் பருவத்தில் ரூ.6,799 கோடியும், ராபி பருவத்தில் ரூ.2,792 கோடியும் இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டில் விவசாயிகள் தரப்பில் ரூ.1.93 லட்சம் கோடி காப்பீடாக காப்பீடு நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்டு அதில் ரூ.9,570 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.1.84 லட்சம் கோடி காப்பீடு நிறுவனங்களுக்கு லாபமாகச் சென்றுள்ளன.

ஏழை விவசாயிகளையும், விவசாயக்கூலிகளையும் புறக்கணிக்கும் பாஜக அரசின் புதுத் தாராளிய செயல்பாடுகளால் 2020ல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 18 விழுக்காடு அதிகரித்துள்ளது.

புதுத் தாராளியத்தின் பாகுபாடான தடையற்ற சர்வதேச வர்த்தகத்தால் ஏற்படும் பாதிப்பை உலக வர்த்தக அமைப்பின் தலைவரே ஒத்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பணக்கார நாடுகளில் அளிக்கப்படும், பெரும் விவசாய மானியங்கள் உலகளாவிய வர்த்தகத்தை தொடர்ந்து சிதைத்து, ஏழை நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் நியாயமற்ற போட்டியை உருவாக்குவதாக உலக வர்த்தக அமைப்பின் தலைவர் என்கோசி ஒகோன்ஜோ-இவேலா தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துக்கு சரிந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ஆம் ஆண்டில் 101-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளமும், வங்கதேசமும் 76-வது இடத்திலும், மியான்மர் 71-வது இடத்திலும், பாகிஸ்தான் 92-வது இடத்திலும் உள்ளன. உலக பட்டினிக் குறியீடு மிகைப்படுத்தப்பட்டது, உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவைக் குறைந்த தரத்தில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக பாரபட்சமான முறையில் வெளியிட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-IV இன் படி, நோஞ்சான் குழந்தைகளின் விகிதம் 14 மாநிலங்களில் அதிகரித்துள்ளது. அதற்கு முன் செய்யப்பட்ட நான்காவது கணக்கெடுப்பில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 38.4 விழுக்காட்டினர் உயரம் குறைவாகவும், 21 விழுக்காடு குழந்தைகள் எடை குறைவாகவும் இருந்துள்ளனர். 2014-15 ஆம் ஆண்டில், மதிய உணவுத் திட்டத்திற்கு 13, 215 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2021-22ல் வெறும் ரூ 11,500 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது (Financial express).

நடப்பு நிதியாண்டில், மார்ச் 2021 இன் இறுதியில் இருந்து வங்கிகளின் புதிய வைப்புத்தொகைகளின் வரவு 3.1 விழுக்காடு அதிகரித்துள்ளது, அதேசமயம் வங்கிக் கடன் வழங்குவதில் 0.3 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின் படி ஐந்து மாத சரிவிற்கு பிறகு நாட்டின் ஒட்டுமொத்த வங்கிக் கடனில் (ரூ.108.97 லட்சம் கோடி) சிறு குறு நிறுவனங்களின் பங்கு ஜூன் மாதத்தில் 9.55 விழுக்காடாகவும், ஜூலையில் 10.07 விழுக்காடாகவும், ஆகஸ்டில் 10.19 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளது. குறு, சிறு தொழில் வணிக நிறுவனங்கள் பெறும் கடன் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 1.1 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது.ஜூலை மாதத்தில் 0.2 விழுக்காடு மட்டுமே அதிகரித்திருந்தது. ஏப்ரலில் -2.2 விழுக்காடாகவும், மே மாதத்தில் -3.6 விழுக்காடாகவும், ஜூன் மாதத்தில் -3.5 விழுக்காடாகவும் மூன்று மாதங்களுக்கு எதிர்மறையான கடன் வளர்ச்சியை பதிவு செய்யப்பட்டிருந்தன.

பெண்களால் நடத்தப்படும் 1.5 கோடி சிறு குறு நிறுவனங்களில் $15800 கோடி டாலர் நிதி இடைவெளி காணப்படுவதாகவும், பெண்களால் நடத்தப்படும் சிறு குறு நிறுவனங்களில் வாராக்கடன் 40 விழுக்காடு குறைவாக உள்ளதாகவும் சர்வதேச நிதி நிறுவனத்தைச் சேர்ந்த கமர் சலீம் குறிப்பிட்டுள்ளார். பெண் சிறு குறு நிறுவனர்களில் 66 விழுக்காட்டினரிடம் வங்கிக் கணக்கு இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடுத்தர நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில் 54.6 விழுக்காடாக உள்ளது, ஜூலையில் கடன் வளர்ச்சி 70.9 விழுக்காடாகவும், ஜூன் மாதத்தில் 63.2 விழுக்காடாகவும் இருந்துள்ளது.

விமானங்களுக்குப் பயன்படும் எரிபொருள் விலையைவிட வாகனங்களுக்குப் பயன்படுத்தும் எரிபொருள் விலை 30 விழுக்காடு உயர்ந்து விட்டது. விமானங்களுக்குப் பயன்படுத்தும் ஏடிஎப் எரிபொருளின் விலை ஒரு லிட்டர் ரூ.79. ஆனால், வாகனங்களுக்கான பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110க்கு மேல் சென்று விட்டது.தங்கம், பிட்காயின் ஆகியவற்றின் மதிப்பும் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.கச்சா எண்ணெய், நிலக்கரி, உலோகங்களின் விலை உயர்வால் வர்த்தகப்பற்றாக்குறை அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சி பாதியாகக் குறைந்து 23 விழுக்காடாகவும், இறக்குமதி வளர்ச்சி கணிசமாக அதிகரித்து 85 விழுக்காடு உயர்ந்துள்ளது. சென்ற மாதத்தில் 13.3 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை செப்டம்பர் மாதத்தில் 22.59 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்தப் பணவீக்க அழுத்தத்தால் அண்மையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.ரூபாய் மதிப்பு குறையும் போது அதிலிருந்து ஆதாயம் அடைவதற்காகவே “தேசப்பற்று” மிகுந்த பல பணக்கார இந்தியர்கள் டாலர் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம்:

மொத்த விலை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.66 விழுக்காடாக உயர்ந்துள்ளது, எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 24.81 விழுக்காடு உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு 4.35 விழுக்காடு அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களின் விலைவாசி 0.68 விழுக்காடு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 22.47 விழுக்காடு குறைந்துள்ளது. பழங்களின் விலைவாசி 3.70 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 8.75 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை 7.06 விழுக்காடு உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 34.19 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலைவாசி 7.99 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி 11.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, செய்பொருளாக்கத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றில் உற்பத்தி முறையே 23.6, 9.7, 16.0 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மை பொருட்கள், மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி அளவுகள் முறையே 17.0, 19.9, 10.3, 11.1 விழுக்காடு உயர்ந்துள்ளன. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 5.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 8.0 விழுக்காடு அதிகரித்துள்ளது.

செப்டம்பரில் தொழில்துறை வளர்ச்சி:

இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக் குறியீடு செப்டம்பரில் 4.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாத உற்பத்தி அளவோடு ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 8.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 1.7 விழுக்காடு குறைந்துள்ளது, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 6.0 விழுக்காடு அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 0.02 விழுக்காடு அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 27.5 விழுக்காடும், உருக்கு உற்பத்தி 3.0 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 10.8 விழுக்காடும், மின்சார உற்பத்தி 0.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

2020 ஏப்ரல்-செப்டம்பரில் ரூ.1.28 லட்சம் கோடியாக இருந்த பெட்ரோல் மீதான வரி வசூல் 2021 ஏப்ரல்-செப்டம்பரில் ரூ.1.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல்-செப்டம்பர் 2019ல் வசூலான ரூ.95,930 கோடியை விட 79 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பணவீக்கத்தின் மேல் நோக்கிய போக்கைக் கட்டுப்படுத்த பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி குறைப்பு அவசியம்" என்று மத்திய வங்கி பணக் கொள்கைக்குழுவின் வெளி உறுப்பினர் ஆஷிமா கோயல் அறிவுறுத்தியுள்ளார்.

நுகர்வோரின் சுமையை குறைக்க, பெட்ரோல் விலையில் 54 விழுக்காடும், டீசலின் விலையில் 48 விழுக்காடும் உள்ள வரிகளை அரசாங்கம் குறைக்குமா என்ற கேள்வி பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகிறார்; விலைகள் உயர்கின்றன ஏன் வரியைக் குறைக்கக்கூடாது எனக் கேட்கும் போக்கு நம் காலை நாமே கோடரியால் வெட்டுவதைப் போன்றதாகும். லிட்டருக்கு 32 ரூ கலால் வரியின் மூலமாகத் தான் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது, 90 கோடி மக்களுக்கு ஒரு வருடம் முழுவதும் (தொற்றுநோயின் போது) ஒரு நாளைக்கு 3 வேளை உணவு வழங்கப்பட்டது, உஜ்வாலா திட்டத்தில் (8 கோடி ஏழை பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயுவும் அளிக்கப்பட்டது என ‘நியாயம்’ கற்பிக்கிறார்.

 அமெரிக்க மத்திய வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்கும் செயல்பாடுகளைக் நவம்பரில் இருந்து குறைக்கவுள்ளது. இந்திய மத்திய வங்கி 2020-21 நிதியாண்டில் வெளிச்சந்தை நடவடிக்கைகள் (OMO) மூலம் ரூ.3.1 லட்சம் கோடியை செலுத்தியது. நிதியாண்டு. 2021-22 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ‘ஜி-சேப்’ உட்பட திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் ரூ.2.37 டிரில்லியன் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருவூலப் பத்திரங்களின் வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் மத்திய வங்கி ‘ஜி-சாப்’ எனப்படும் அரசுப் பத்திரங்களை வாங்கும் திட்டத்தை செயல்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவந்தது. ஆனபோதும் மத்திய வங்கி திறந்த சந்தை செயல்பாடு (OMO), திருப்ப செயல்பாட்டையும் தொடரும் என்றும் தேவைப்பட்டால் ‘ஜி-சாப்’திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அது என்ன திறந்த சந்தை செயல்பாடு, திருப்ப செயல்பாடு?

ரூபாய் மதிப்பினை ஏற்ற இறக்கங்களிலிருந்து காத்திட மத்திய வங்கி திறந்தவங்கி செயல்பாட்டில் ஈடுபடுகிறது. மத்திய வங்கி திறந்த சந்தை செயல்பாடு (OMO) வழி மூலம் சந்தையில் இருந்து 17,000 கோடி ரூபாய்க்கு பத்திரங்களை வாங்கியுள்ளது. திருப்பச் செயல்பாட்டின் மூலம் குறுகிய கால கருவூலப் பத்திரங்களை விற்று நீண்ட கால கருவூலப் பத்திரங்களை வாங்குகிறது. திருப்பச் செயல்பாட்டின் மூலம் நீண்ட கால கருவூலப் பத்திரங்களின் வட்டிவிகிதம் குறைக்கப்படுகிறது.

இந்திய தலைமை வங்கியின் துணை ஆளுநர் ரபி ஷங்கர்.முழுமையாக மாற்றத்தக்க மூலதனக் கணக்கிற்கு வங்கிகள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். உலக நிதிச் சந்தையுடன் முற்றிலுமாக இணையும் விதமாக இந்தியாவின் மூலதனக் கணக்கை விரைவில் முழுமையாக மாற்றத்தக்கதாக ஆக்கப்படவுள்ளது என்பதையே இது குறிப்பிடுகிறது. இதன் மூலம் இந்தியக் கடன் சந்தை வெளி நாட்டினருக்கு முழுமையாக அணுகக்கூடியதாக திறந்துவிடப்படும். அரசு-கருவூலப் பத்திரங்களிலும் வெளிநாட்டினர் அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும். மூலதனக் கணக்கை மாற்றுவது அதனுடன் தொடர்புடைய சில அபாயங்கள் மற்றும் சவால்களைக் கொண்டுவரும், மேலும் சந்தை பங்கேற்பாளர்கள், குறிப்பாக வங்கிகள், "வணிக செயல்முறை மாற்றங்கள், மூலதன மாற்றத்துடன் தொடர்புடைய உலகளாவிய அபாயங்களை நிர்வகிக்க தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய குறியீடுகளில் தேசத்தின் பத்திரங்களைச் சேர்க்கும் திசையில் அரசு நகர்கிறது என்று நிதி அமைச்சர் கூறியது இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்தவுள்ளனர் என்பதையே குறிக்கிறது.

வெளிநாட்டுக் கடன் இருப்பு அதிகரிப்பது தேசத்தின் இறையாண்மைக்கு ஆபத்தானது. இதனால் இந்தியாவின் நிதி நிலை திடீர் ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டு நிலையற்றத் தன்மையை ஏற்படும் அபாயம் ஏற்படும். இதனால் ரூபாயின் மதிப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்பதும் எச்சரிக்கைக்குரியது.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், கிரிப்டோ நாணயங்களுக்கான சந்தை இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.உலகளவில் இந்தியா 10.06 கோடி கிரிப்டோ நாணய முதலீட்டாளர்களுடன் கிரிப்டோ நாணய சந்தையில் முதலிடத்தில் உள்ளது. 2020 மார்ச்சில் கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்வதற்கான தடை உச்சநீதிமன்ற தீர்ப்பால் நீக்கப்பட்டது. கிரிப்டோ நாணயம் அரசு தலையீடில்லாத மக்களுக்கான நாணயமாகவும், ஜனநாயக ஊடகமாகவும் கூட முன் நிறுத்தப்படுகிறது. ஆனால் உண்மை நிலவரம் அதற்கு நேர்மாறாக உள்ளது. தற்போது கிரிப்டோ நாணயங்களில் ஊக முதலீடுகளே மிகவும் அதிகரித்து வருகின்றன. பாலிவுட் திரைப்பட நாயகர்களைக் கொண்டு விளம்பரப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. இதை உடனடியாக ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் மெர்செடெஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களின் விற்பனை 2021 ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்தும் விதத்தில் தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றப்படும் வேளையில் ஐஸ்லாந்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு நம் கவனத்திற்குரியதாக உள்ளது. 2,500 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு அவர்களின் வார வேலை நேரம் குறைக்கப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் தொழிலாளர்கள் குறைந்த நேரத்தில் அதே ஊதியத்துடன் உற்பத்தித் திறனை பராமரிக்கவும், தனிப்பட்ட நல்வாழ்வை மேம்படுத்தவும் முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட் (David Card), ஜோஸ்வா D. அங்ரிஸ்ட் (Joshua D. Angrist) மற்றும் கொய்டோ இம்பென்ஸ் (Guido W. Imbens) ஆகிய மூன்று பொருளாதார வல்லுனர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு எனக் கருதப்படும் ஸ்வெரிஜெஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. அவர்காளது ஆய்வில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது குறைவான வேலைவாய்ப்புக்கு வழிவகுக்காது என்றும், புலம்பெயர்ந்தோரால் பூர்வீகமாக குடியிருக்கும் தொழிலாளர்களின் ஊதியம் குறைக்கப்படுவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் பிறந்தவர்களின் வருவாய் புதிதாக குடியேறியவர்களால் பயனடையலாம் என்றும், அதே சமயம் முன்னதாக குடியேறியவர்கள் அதனால் எதிர்மறையாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என்றும் ஆய்வுகளின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜி 20 கூட்டமைப்பில் 136 நாடுகளின் ஆதரவுடன் 15 விழுக்காடு உலகளாவிய குறைந்தபட்ச கார்ப்பரேட் வரியை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரி புகலிடங்கள் என்று அழைக்கப்படும் - குறைந்த கார்ப்பரேட் வரி உள்ள நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்தைத் பதுக்குவதைத் தடுப்பதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 15 விழுக்காடு என்பது மிகவும் குறைவு என்பதால் இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாது என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜி-20 நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாநாட்டில் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவதற்கான இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். ஜி-20 கூட்டமைப்பில் உள்ள பிரேசில், சீனா, இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் உலகளாவிய பசுங்குடில் வாயு உமிழ்வு 80 விழுக்காட்டை உமிழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இயற்கைப் பேரழிவுகளால் இந்தியாவுக்கு 2020-ல் மட்டும் ரூ.65.33 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாக உலக வானிலை அமைப்பு தகவல் அளித்துள்ளது.

வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தைச் (CSDS) சேர்ந்த மஞ்சேஷ் ராணா ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டுக்கு எழுதியக் கட்டுரையில் சொத்திருப்புகளின் அடிப்படையில் இந்திய குடும்பங்களின் செழிப்பு நிலையை பகுப்பாய்வு செய்ததை விவரித்துள்ளார். மகிழுந்து, அறைக் குளிரூட்டு, தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, கணினி/மடிக் கணினி போன்ற உடைமைகளை செழுமைக்கான குறியீடுகளாக பயன்படுத்தியதில், 33 இந்திய குடும்பங்களில் ஒன்று மட்டுமே (வெறும் 3%) ஐந்து உடைமைகளையும் சொந்தமாகக் கொண்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பட்டியலின சாதி (SC) குடும்பங்களுடன் ஒப்பிடும்போது பொதுப்பிரிவைச் சேர்ந்த இந்து குடும்பங்கள் ஐந்து உடைமைகளையும் ஏழு மடங்கு அதிகமாக வைத்திருக்கும் நிலை காணப்படுகிறது. ஆயிரத்தில் மூன்று பட்டியலின பழங்குடி குடும்பங்கள் மட்டுமே இவற்றை உடைமையாகக் கொண்டுள்ளன. பொதுப்பிரிவு இந்துக் குடும்பங்களில் ஐந்தில் ஒரு குடும்பமும், பட்டியலின சாதி குடும்பங்களில் இருபதில் ஒரு குடும்பமும் மகிழுந்து வைத்துள்ளன. சீக்கியர்கள் மற்ற சமூகங்களை விட செழிப்புடையவர்களாகவும், முஸ்லீம் சமூகம் மற்ற சமூகங்களை விட செழிப்பு குறைந்தும் காணப்படுவது தெரியவந்துள்ளது. 2014ல் நூறில் இரண்டு முஸ்லீம் குடும்பங்கள் ஐந்து சொத்துக்களையும் சொந்தமாக வைத்திருந்தாலும், 2019ல், நூறில் ஒரு குடும்பம் மட்டுமே மேல் குறிப்பிட்ட ஐந்து உடைமைகளையும் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் 20 விழுக்காட்டில் உள்ள 93 விழுக்காடு குடும்பங்கள் முறையான சுகாதார வசதியைப் பெற்றுள்ளனர். கீழே உள்ள 20 விழுக்காடு குடும்பங்களில் 6 விழுக்காட்டினர் மட்டுமே சுகாதார வசதியைப் பெற்றுள்ளனர், மேலும் பாதுகாப்பான பிரசவ சேவைகளை பெறுவதில் ஏழைகளுக்கும், முதல் 20 விழுக்காடு பணக்காரர்களுக்கும் இடையே 35 விழுக்காடு இடைவெளி உள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் சொத்து இருப்புகளில் இடைவெளியும், படி நிலைகளும் வேரூன்றிய ஏற்றத்தாழ்வை சுட்டிக் காட்டுகின்றன. சொத்துவரியை நடைமுறைப்படுத்துவதன் மூலமே இந்த இடைவெளியைக் குறைக்க முடியும்.

அமெரிக்காவில் சொத்துவரியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க செனட் நிதிக் குழுவின் தலைவர் ரான் வைடன், அமெரிக்காவின் பெரும்பணக்காரர்களின் மீது மூலதன ஆதாயவரி விதிப்பதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார். 100 கோடி டாலர் நிகர மதிப்பு சொத்துடையவர்கள் அல்லது 10 கோடி டாலர் ஆண்டு வருவாய் பெறுபவர்களின் மீது இவ்வரி விதிக்கப்படும். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் டெமோக்ராட்ஸ் உட்பட 700 பேர் இவ்வரியை செலுத்தும் கடப்பாடுடையவராவர்.

முதலாளித்துவ தலைமை நாடான அமெரிக்கா மூலதனத்தின் மீது வரி விதிக்கவுள்ள நிலையில் உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’ நாடாக அழைக்கப்படும் இந்தியாவில் பொருளாதார ஏற்றத் தாழ்வின்மையைக் குறைக்கும் விதமாக கார்ப்பரேட் வரியை அதிகரிப்பது, மூலதனம், சொத்தின்மீது வரி விதிப்பது என்ற பேச்சுக்கே இடமளிக்காத புதுத் தாராளிய அடிவருடியாகவும், தனியார்துறையின் பாதுகாவலனாகவும் பாஜக அரசு உள்ளது.

- சமந்தா

Pin It