உலக நாடுகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளன. பெருகி வரும் மத பயங்கரவாதமாக இருந்தால்கூட தங்கள் நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள முடிகிறது. பெரிய அளவிலான நில அதிர்வு களைக்கூட மறுசீரமைப்பின் வழியாகக் கட்டமைக்க முடிகிறது. ஆனால் முதலாளித்துவ அமைப்பு உருவாக்கி வரும் திருட்டு புரட்டு மோசடி ஆகியன கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன. சந்தைப் பொருளாதாரத்தையும் உலகமயமாக்கல் வழியையும் பொருளாதாரப் பிரச்சி னைகளுக்குத் தீர்வாக முன்மொழிந்தவர்கள் விழிப் பிதுங்கி நிற்கிறார்கள்.
1990ஆம் ஆண்டிற்குப் பிறகு தாராளமயமாக்கல் தனியார் மயமாக்கல் உலகமய மாக்கல் கொள்கைகளால் ஏற்படும் வர்த்தக-வரிச் சிக்கல்கள்- வர்த்தகத் தடைகள் ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நெறிப்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட உலக வர்த்தக அமைப்பு (WTO) தடையற்ற வணிகம் என்ற கோட்பாட்டினைப் பிணக் குழியில் ஆழத் தோண்டி புதைத்துவிட்டது. வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது தொடர்ந்து பொருளாதார வர்த்தக மேலாதிக்கத்தைச் செலுத்தி வருவதால் அமைச்சர்கள் அளவிலான மாநாடு ஆறு முறை முடிந்து விட்டதாலும் டோஹா ஒப்பந்தத்திற்குப் பிறகு எவ்வித உடன்பாட்டினையும் எட்ட முடியவில்லை. வளர்ந்த நாடுகள், வளர்கின்ற நாடுகளுக்கு எவ்வித சலுகை களையும் அளிக்க விரும்பவில்லை.
இந்தச் சூழ்நிலையிலும் வளர்ந்த நாடுகளில் பொரு ளாதாரத் தேக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வருகிறது. வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் 2 விழுக்காட்டு வளர்ச்சியை எட்டுவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் தோல்வியில்தான் முடிந்து வருகின்றன. இந்த வீழ்ச்சிப் போக்கிற்குக் கட்டற்ற முதலாளித்துவத்தின் பேயாட்டம்தான் அடிப்படையாக அமைகிறது.
உயர் லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பன்னாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள் செயல்படுகின்றன. வரியை ஏமாற்றி சந்தைப் பொரு ளாதார விதிகளை மிதித்து தங்கள் அமைப்பிற்குக் கிடைக்கும் அதிக லாபத்தை இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தவறான முறையில் பல நாடுகளில் பெருக்கி வருகின்றன.
பணத்தைப் பதுக்குவதற்கும் அவ்வப்போது திருட்டுக் கணக்குகளைப் பார்ப்பதற்கும் சட்டவிதிகளைப் புறக் கணிப்பதற்கும் ஆயிரக்கணக்கான திறன்மிக்க கணக் காயர்களும் சட்ட வல்லுநர்களும் செயல்பட்டு வருகின்ற னர். உலக அளவில் இது போன்ற திருட்டு மோசடி விதி மீறல்கள் வழியாகப் பெறப்பட்ட பணம் 90 நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
சான்றாக நீராராடியா புகழ் டாட்டா நிறுவனம், அமெரிக்காவில் மென்பொருள் தொழிலில் புதிய தொழில் நுட்பத்தைத் திருடிப் பல இலட்சம் கோடியை இலாபமாக டாலரில் ஈட்டியுள்ளது. இதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு, டாட்டா நிறுவனத்திற்கு பல லட்சம் டாலரைத் தண்டமாக விதித்துள்ளது என்று இந்து ஆங்கில ஏடு 2016 ஏப்ரல் 17 அன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கோதாவரி நதிக்கரையில் ஒ.என்.ஜி.சி க்குச் சொந்தமான எரிபொருள் வாயுவை மோடியின் குஜராத்தி நண்பர் அம்பானி திருடியதாக மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வகைத் திருட்டும் மோசடியும்தான் இன்றைய முதலாளித்துவத்தின் இலாப வேட்டையாகும். இதில் ஒரு துண்டு எலும்புதான் அரசியல் தலைமைக்குக் கிடைக்கிறது. இவ்வகை உலகளாவிய திருட்டுப் பணத்தின் ஒரு சிறு துளிதான் பனாமாவில் உள்ளது.
உலகில் உள்ள 190 நேர்மையான ஊடகவியலா ளர்களின் கூட்டமைப்புத்தான் பனாமா திருட்டு மோசடி களைக் கண்டுபிடித்துள்ளது. Suddetsche Zeitung என்ற நாளிதழும் அமெரிக்க வாஷிங்டன் நகரிலிருந்து செயல்படும் பன்னாட்டு துப்புத் துலக்கும் ஊடகவியலாளரும் இணைந்துதான், பனாமா ஆவணத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்த அமைப்போடு இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்தச் சிறிய தீவில் கறுப்புப் பண ஆவணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 இலட்சமாகும்.
பனாமா ஆவணத்தில் நடிகர் ஜாக்கி சான், ரஷ்யாவின் விளாதிமிர். புதின், சீனாவின் ஜின்பெங், அமிதாப்பச்சன் ஐஸ்வர்யா ராய், டாடாவின் தரகர் நீரா ராடியா போன்றோர் இடம் பெற்றுள்ளனர். இந்தச் செய்தி வெளி வந்த பின்பு இதில் இடம் பெற்ற மருதுசகோதரர்களின் மரபு வழி உறவினர் அமிதாப்பச்சன் உட்பட அனைவரும் சட்டப் படிதான் நாங்கள் நடந்துள்ளோம் என்று கூறியுள்ளனர். சட்டத்தைப் புதைக் குழிக்கு அனுப்பிவிட்டு, மட்டைப் பந்து லலித் மோடியையும் மல்லையாவையும் தப்பவிட்ட புண்ணிய புமி அல்லவா இந்திய நாடு!
திருட்டுப் பணப்பட்டியலில் இடம் பெற்ற இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஏன் சிறிதளவும் இதைப் பொருட்படுத்த வில்லை என்ற வினா எழுப்பப்படுகிறது. சோனியா வழிகாட்டுதலில் மன்மோகன் சிங் பிரதமராக 2004இல் பதவி ஏற்றபோது, நடுவண் அரசு இந்திய மைய வங்கி வழியாகப் பணம் எடுத்துச் செல்வதற்கான விதியைத் தளர்த்தியது.
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வணிகம், மற்றும் தொழில் செய்பவர்கள் ஒரு கோடி 50 லட்சம் ரூபாயைத் தளர்த்தப்பட்ட விதி வழியாக வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்று கூறியது. தற்போது 150 கோடி ரூபாய் வரை எடுத்துச் செல்லலாம் என்று இது உயர்ந்துள்ளது. இவ்வழியாகத்தான் கறுப்புப் பணத் தைச் சட்டப்படி பனாமாவிற்கு இந்தப் பிரபலங்கள் எடுத்துச் சென்றுள்ளனர். எனவேதான் இந்தக் கறுப்புப் பணக்காரர்கள் கவலை இல்லாமல் உள்ளனர்.
இந்திய ஆட்சியாளர்களுக்கும் கறுப்புப் பண முதலாளிகளுக்கும் உள்ள உறவின் காரணமாகத்தான் இந்தியாவில் கறுப்புப்பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை. 2015 ஆண்டில் மட்டும் இந்தியாவின் கறுப்புப் பணம் 34 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நடுவண் அரசின் சிறப்புப் புலனாய்வு மையம் தெரிவித்துள்ளதைக் குறிப்பிடுகின்றனர். இந்த சிறப்புப் புலனாய்வு மையம் உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்ததலால் அமைக்கப் பட்டது. இந்தியாவில் கறுப்புப் பணம் எவ்வாறு தொடர்ந்து பெருகி வருகிறது என்பதை ஆராய்தல் அவசியமாகிறது.
வரிக்கோட்பாடுகளில் நேரடி வரி, மறைமுக வரி என்ற இரு கோட்பாடுகள் சுட்டப்படுகின்றன. பெரும்பாலும் மறைமுக வரி ஏழை நடுத்தர மக்களை நேரடியாகத் தாக்குகிறது. அவர்களின் பொருளாதாரச் சுமைகளை மேலும் பெருக்குகிறது. மாறாக, நேர்முக வரி சமத்துவ நெறிக் கோட்பாடுகளின்படி அமைந்துள்ளது. குறிப்பாக வருமானம் உயர உயர வரியின் அளவும் உயரும். அதன் காரணமாக உயர் வருமானத்தைப் பெறுகிறவர்கள் அதிக வரியையும், குறைந்த வருமானத்தை ஈட்டுபவர்கள் அவர்களின் வரிதாங்கும் திறனிற்கு ஏற்ப வரியையும் அரசுக்குச் செலுத்துவார்கள். இதைத்தான் முற்போக்கு வரியியல் கொள்கை (Progressive Taxation) என்பர்.
ஆனால் வண்டியிழுக்கும் தொழிலாளி முதல் வேளாண் கூலி வரை அவர்கள் ஈட்டும் சொற்ப வருமானத்திலிருந்து தீப்பெட்டி உட்பட்ட பொருட்களை வாங்கும்போது, மறைமுக வரி செலுத்துகிற கட்டாயத் திற்கு உட்படுகிறார்கள். இம்முறையில் உயர் குறைந்த வருமானம் உள்ளவர்கள் ஒரே நிலையில் ஒரே விகித வரியைச் செலுத்தும் நிலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். எனவேதான் மறைமுக வரியைக் கடுமையான சுமை தரும் வரி (Regressive Taxation) என்று குறிப்பிடு கிறார்கள்.
இந்தியாவில் நிரந்தர மாத வருமானத்தைப் பெறுகிற அரசுப் பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்கள் ஏறக்குறைய 5 கோடிப்பேர் இருக்கிறார்கள். ஏறக்குறைய 2000 பெரும் முதலாளிகள் இருக்கிறார்கள். அதற்கு அடுத்த கட்டத்தில் நடுத்தர சிறு முதலாளிகள் பெரு வணிகர்கள் சிறு வணிகர்கள் ஆகியோர் இடம் பெறுகின்றனர். இந்தப் பிரிவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுடைய நேர்முக வருமான வரி மாத ஊதியத்திலேயே பிடிக்கப்படுகிறது. நிதியாண்டு முடிவதற்கு முன்கூட்டியே மாதந்தோறும் வருமான வரியைக் கட்டும் கட்டாயத்திற்கு உட்படுத்தப் பட்டுப் பிடிக்கப்படுகிறது. மிக அதிக வருமானத்தை ஈட்டும் மற்ற பிரிவினர் ஆண்டுக்கு ஒரு முறை கணக்குத் தணிக்கையாளர் வழியாகக் கணக்குகளை அளித்து வருமான வரியைக் கட்டுகின்றனர்.
நேரு காலத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிக்கோலஸ் கால்டார் என்ற பொருளாதார அறிஞர் வரிகளை மறுஆக்கம் செய்யுமாறு நடுவண் அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரது பரிந்துரையின்படிதான் மிக அதிக வருமானம் ஈட்டும் பிரிவினர் தங்கள் வருமானத்தில் 75 விழுக்காட்டை வரியாகச் செலுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்தார். நேரு காலத்திலேயே இது மிக அதிகமான வரி என்று முதலாளிகளும் பெரும் பண முதலைகளும் நடுவண் அரசிற்கு அழுத்தம் கொடுத்தபோதுகூட, நேரு கால்டாரின் பரிந்துரைகளை மாற்றம் செய்ய உடன்படவில்லை.
எனது மாணவரின் தந்தை முனைவர் சிவசாமி என்பவர் வருமான வரித்துறையில் முதன்மை ஆணையராகப் பல மாநிலத் தலைநகரங்களில் பணியாற்றியவர். பின்பு நடுவண் அரசின் நேரடி வரி வாரியத்தின் தலைவராகப் பணிபுரிந்தபோது, சென்னைப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறையில் ஓர் அறக்கட்டளைச் சொற்பொழிவிற்காக அவரை அழைத்திருந்தேன். அப்போது அவர் என்னிடம் பல அதிர்ச்சி தரும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
75 விழுக்காடு உயர் வரிவிகி தத்தை வருமான வரியாக இவ்வாரியம் திரட்டிய போது, அரசிற்கு அதிக வருவாய் கிடைத்தது. ஆனால் 1985க்குப் பிறகு, வருமான வரியின் உயர் வரிவிகித்தை 75 விழுக்காட்டிலிருந்து 30 விழுக் காடாகக் குறைத்த பிறகு நடுவண் அரசு எதிர் பார்த்த நேர்முக வரி வருமானம் கிட்டவில்லை. இந்த வரிச்சலுகைகளைப் பெற்றுக் கொண்ட பெரும் முதலாளிகளும் வணிகர்களும் கணக்கில் வராத கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்குவதற்கு முற்பட்டனர் என்று குறிப்பிட்டார்.
வருமான வரியை முறையாகச் செலுத்தாத பெரும் பணக்காரர்கள் பெரும் முதலாளிகளுக்கும் நடுவண் அரசால் அவ்வப்போது அளிக்கப்படும் தாமாக முன்வந்து வருமானத்தைத் தெரிவிக்கும் திட்டத்தால் (Voluntary Disclosure Scheme) கிடைக்கும் வருவாயைவிட அத்திட்டம் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள்தான் அதிகம் என்று முனைவர் சிவசாமி அப்போது குறிப் பிட்டார்.
பெங்களுரில் வருமான வரி ஆணையராக இருந்த போது ஒரு பெரும் முதலாளி தான் பத்தாண்டு களாக வரி செலுத்தாத கறுப்புப் பணத்திற்கான கணக்கை இத்திட்டத்தின் கீழக்காட்டிவிட்டு வரிப் பணத்தைப் பெட்டி பெட்டியாக ஒப்படைத்துவிட்டு வெள்ளை மனிதராக வெளியேறினார். ஏனென்றால் இத்திட்டத்தின்படி பத்தாண்டுகளாக எவ்வகையில் இந்த வருமானம் இந்த முதலாளியால் ஈட்டப்பட்டது? ஏன் வரியைக் கட்ட வில்லை? போன்ற எவ்வித வினாக்களும் இத்திட்டத்தில் கேட்கப்படுவதில்லை.
“பணம் பாதாளம் வரை பாயும்” என்ற ஒரு பழமொழி சுட்டப்படுகிறது. இது உண்மையா என்று நான் வினவினேன். அதற்கு அவர் பாதாளத்தில் மட்டுமல்ல பணக்காரர்களின் வீட்டில் உள்ள நீச்சல் குளங்களில் கூட பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்.
ஒரு முறை ஒரு பெரும் பணக்காரர் வீட்டில் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்ற தகவலின் அடிப்படையில் சோதனை செய்த போது, எவ்வித ஆவணமும் கிடைக்க வில்லை. பிறகு ஒரு வருமான வரி அலுவலர் சந்தேகத்தின் அடிப்படையில் நீச்சல் குளத்தில் இருந்த நீரை வெளியேற்றிவிட்டுக் கீழ்ப் பகுதியை உடைத்த போது கட்டுக்கட்டாக, பாலிதீன் உறைகளில் கோடிக் கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது என்று குறிப் பிட்டார்.
இந்நிகழ்வு நடந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னையில் வருமான வரித்துறையின் ஆணையராக அவர் இருந்தபோது பெங்களுரில் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிய அதே நபர் மீண்டும் சென்னைக்கு வந்து அதே முறையில் வரியைச் செலுத்திவிட்டு எவ்வித சலனமுமின்றி வெளியேறினார். என்னைப் போன்ற நேர்மையான அதிகாரிகள்தான் இந்நிகழ்வால் வேதனையடைந்தோம் என்று குறிப்பிட்டார்.
1951க்குப் பிறகு இது வரை பத்து முறை தானாக முன்வந்து வருமானவரியைச் செலுத்தும் திட்டத்தை நடுவண் அரசு நடைமுறைப் படுத்தியுள்ளது. நேர்மை யாக வரி செலுத்தி வருகிற வெள்ளை மனிதர்களின் முகத்தில் கறுப்பு மையை வீசி வருகிறது அரசு.
2014இல் மோடி அரசு அமைந்த பிறகு 2015இல் இயற்றப்பட்ட கறுப்புப் பணச் சட்டத்தின்படி மூன்று மாதங்களுக்குள் தாமாக முன்வந்து கறுப்புப் பணத் திற்கான வரியைச் செலுத்தி வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்த பிறகும், பெரிய அளவிற்கு இத்திட்டம் வெற்றி பெறவில்லை. இந்தியாவில் 664 பேர்தான் இச்சலுகையைப் பயன்படுத்தி ஏறக் குறைய 4000 கோடி வரியைச் செலுத்தினர். மேற் குறிப்பிட்ட 664 பேர் என்பது மிகமிக குறைவான எண்ணிக்கையாகும்.
ஏறக்குறைய ஒரு இலட்சம் பெரும் பணக்காரர்கள் தவறான வழியில் ஈட்டிய பணத்தையும் பல நாடுகளில் மறைத்து வைப்பதற்கும், மீண்டும் அதே பணத்தைஇந்தியப் பங்கு சந்தையில் முதலீடாகச் செய்வதற்கும் சட்டங்களில் இடம் இருப்பதனால் இந்தப் பெரும் பண முதலைகள் எந்த விதிக்கும் அஞ்சாமல் வலம் வருகின்றனர்.
இதுவரை சுவிட்சர்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் போன்ற நாடுகளில்தான் இந்தியாவின் கறுப்புப்பணம் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பனாமாவில் இந்திய முதலாளி களும் அரசியல் தலைவர்களும் பதுக்கி வைத்துள்ள பணத்தைப் பற்றி அறிந்தவுடன் அனைவரும் அதிர்ந் துள்ளனர். பனாமாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கு மேற்கத்திய நாடுகள் முனைப்புக் காட்டி வருகின்றன.
மேலும் சேனல் தீவுகள், கரிபீயக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள பிரித்தானிய வெர்ஜின் தீவுகள், கேமன் தீவுகள், பசுபிக் கடற்கரையை ஒட்டிய பனாமா நாடு, பஹரைன் நவுரு வனாட்டுத் தீவுகள் ஆகியவற்றிலும் பெருமளவில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையின் முன்னாள் உயர் அலுவலரும் தேசியப் பொது நிதியியல் ஆய்வு மையத்தில் பணியாற்றியவரும் ஆன தீக்ஷத் சென்குப்தா ஓர் ஆய்வுக் கட்டுரையில் (‘The problem of secretive tax havens’, The Hindu, April, 11 2016) குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கேப்ரியல் சுக்மேன் (Gabriel Zucman), நாடுகளின் மறைத்து வைக்கப்பட்டுள்ள செல்வங்கள்: வரி ஏமாற்றுவோரின் புகலிடம் (The Hidden Wealth of Nations: The Scourge of Havens) என்ற நூலில் வரியைக் கட்டாமல் எவ்வாறு ஏமாற்று கிறார்கள் என்றும், அதை எவ்வாறு மேற்குறிப்பிட்ட தீவுகளில் பதுக்கி வைக்கிறார்கள் என்பதையும், அவற்றை எவ்வாறு கைப்பற்ற முடியும் என்றும் விளக்கமளிக்கிறார் இந்நூலாசிரியர். மேலும் இந்திய அரசியல் தலைமை கடுமையான நடவடிக்கைகளின் வGabriel Zucmanழியாக இந்தக் கணக்கில் வராத பணத்தை எடுத்து வருவதில் சிறிதளவும் அக்கறை காட்டவில்லை என்பதைப் பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பனாமா ஆவணம் வெளியிடப்பட்டு இந்தியாவில் இருந்து பணம் பதுக்கியவர்களின் பெயர்கள் வெளி வந்த பின்னரும், உரிய நடவடிக்கை எடுப்போம் என்று மேம்போக்காக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். உரிய சட்டங்கள் வழியாகக் கடுமையான நடவடிக்கைகளின் வழியாக இது போன்று பணம் பதுக்குவோர்களைத் தண்டித்தால் ஒழிய ஒரு நாளும் இந்தப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் வெளிவராது என்பதுதான் உண்மை.
ஒரு பக்கம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீரற்ற தன்மையில் இருந்து வருகிறது. வேளாண்மை சரிந்து வருகிறது. உழவர்கள் ஆயிரக் கணக்கில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல வட மாநிலங்களில் குடிநீர் கிடைப்பதே அரிதான செயலாக உள்ளது. மக்கள் போராடிய பிறகு தான், கறுப்புப் பணக்காரர்களும் சூதாட்டக்காரர்களும் சேர்ந்து நடத்துகிற ஐபில் மட்டைப் பந்து போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இந்திய மைய வங்கியின் ஆளுநர் ரகுராம்ராஜன் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் 60000 கோடி அளவிற்குப் பணம் சுழலுவதாக எச்சரித்துள்ளார். பனாமாவில் பாதாளம் வரை கறுப்புப் பணம் பதுக்கப்பட்டு வெளிக் கொணரப்படுகிறது என்பதே இந்திய மைய வங்கி ஆளுநரின் எச்சரிக்கையாகும். இதற்குப் பின்பும் இந்திய அரசியல் தலைவர்களை நாடு நம்ப வேண்டுமா?
உள்நாட்டில் பாதாளத்தில்-வெளிநாடுகளில் வங்கிகளில் பதுக்கப்பட்ட பணத்தின் அளவு இதுவரை யாராலும் துல்லியமாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு வருமானத்தின் சம அளவிற்குக் கறுப்புப் பணம் இந்தியாவில் உருவாக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் அரசு மட்டு மல்ல-ஏழை நடுத்தர வர்க்கத்தினரும் என்பதை யாரும் உணரவில்லை.
நடுவண் அரசினுடைய இவ்வாண்டு வரி வருவாயில் ஏறக்குறைய 60 விழுக்காட்டிற்கு மேல் மறைமுக வரியின் வழியாகத்தான் கிடைத்திருக்கிறது என்பதை அண்மையில் அரசுப் புள்ளிவிவரங்களே பறைசாற்றுகின்றன.
வரிச்சுமையைச் சுமக்கும் ஏழைகள்-வரியை மொத்தமாக ஏமாற்றும் பணக்காரர்கள் வளர்ந்து வருவது காரல் மார்க்சே நினைக்காத- எதிர்பார்க்காத ஒரு புதிய சுரண்டும் வர்க்கம், இந்தியாவில் உருவாகி வருகிறது. இந்த வர்க்கம்தான் இந்திய அரசியலையே உருவாக்குகிறது; ஆட்டிப் படைக்கிறது என்பதை மக்கள் எப்போது உணர்வார்களோ?