சட்டசபை வோட்டுப் பிரசாரத்திற்கு 30 ரூபாய் சம்பளத்திலும் 30 ரூபாய் பத்தாவிலும் ஆக 60 ரூபாயில் பிரசாரகர்களை நியமிக்க தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி அதன் அக்ராசனருக்குப் பூரண அதிகாரம் கொடுத்திருக்கிறது.
இனி தேசியத் தொண்டர் என்போருக்கு இது கை முதலில்லாத வியாபாரமாய்ப் போய்விட்டது. ஒத்துழையாமை மும்மரமாக நடந்த காலத்தில் ஆவேசத்தின் காரணமாய் ஜெயிலுக்குப் போய்வந்து பட்டணங்களிலும், கிராமந்தரங்களிலும் செல்வாக்குப் பெற்று இப்போது கஞ்சிக்கில்லாமல் திருடவும், ஒருவரிடம் கூலி வாங்கிக் கொண்டு ஒருவரைத் திட்டவும், அடிக்கவும் செய்து கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது தொண்டர்களின் யோகம்தான்.
ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் போன்ற தலைவர்கள், இப்படி ஒரு தீர்மான மில்லாமலிருக்கும்போதே இம்மாதிரியான தொண்டர்களைக் கொண்டு தலைவராகியிருக்க, காங்கிரஸிலே இம்மாதிரி ஓர் தீர்மானமும் அதன் அதிகா ரமும் அவர் கையிலே இருக்க ஏற்பட்டதானது, தொண்டர்களின் யோகத்தை விட தலைவர்களின் யோகமே பெரிதெனச் சொல்லவேண்டும்.
இனி ஒவ்வொரு ஊரிலும் சுயராஜ்யக் கக்ஷித் தலைவர்களுக்கு “ஜெய்” சப்தம் வானத்தைப் பிளக்கும். ஜஸ்டிஸ் கக்ஷியைத் திட்டும் சப்தம் மேல் உலகத்தையும் நடுக்குறச் செய்யும். சுயராஜ்யக் கக்ஷியை ஒப்புக் கொள்ளாதவர்கள் வெளி ஊர்களில் மீட்டிங்கு போட முடியாது, போட்டாலும் விளக்கு வராது, வந்தாலும் கல்லுகளும், மண்ணுகளும், கேள்விகளும் பறக்கும். மிஞ்சி இத்தனையும் சகித்துக்கொண்டு நடத்தினாலும் பத்திரிகைகளில் வராது. கூச்சலும் குழப்பமும் மீட்டிங்கைக் கலைக்கும்.
இதெல்லாம் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணமும், காங்கிரஸ் பணமும் செய்தாலும் பிராமணப் பத்திரிகை ஜஸ்டிஸ் கக்ஷியும் சுயராஜ்யக் கக்ஷியை ஒப்புக்கொள்ளாதவர்களும் செய்ததெனப் பிரசாரங்கள் செய்யும்.ஆதலால் சுயராஜ்யக் கக்ஷிக்கு இனி மேல் என்ன குறை! இம்மாதிரி சுயராஜ்யக் கட்சியே! நீ நீடுழி வாழ்க!!
(குடி அரசு - கட்டுரை - 07.02.1926)