periyar 450லாகூர் காங்கிரஸ் தீர்மானத்தை அனுசரித்து என்று திருவாளர்கள் டாக்டர் யூ. ராமராவ் அவர்களும் ராமதாஸ் பந்தலு அவர்களும் ராஜிநாமா கொடுத்துவிட்ட ராஜாங்க சபை (ஸ்டேட் கவுன்சில்) ஸ்தானங்கள் இரண்டிற்கும் இரண்டு கனவான்கள் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாய் தெரிந்தோம்.

இவர்களில் ஒருவர் திருவாளர் எ. ராமசாமி முதலியாரும் மற்றவர் திருவாளர் டி. ஆர். ராமச்சந்திர அய்யரும் ஆவார்கள். சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் எதற்காக திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யரை ராஜாங்க சபைக்கு அனுப்பினார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் இந்து வருணாசிரம தர்ம ஸ்தாபனத்தின் தலைவர். மனுதர்ம சாஸ்திரத்தையும் அதில் சொல்லுகின்றவைகளையே சனாதன தர்ம மென்றும் சொல்லுகின்ற வருணாசிரம தர்மத்தை நிலைநாட்ட முயற்சி செய்யும் சங்கத்திற்கும் தலைவர். இதை அனுசரித்து தினமும் வருணாசிரம மகாநாடு, பிராமண தர்ம மகாநாடு, சனாதன தர்ம மகாநாடு, ஆரிய தர்ம மகாநாடு ஆகியவைகள் கூட்டி தீர்மானங்கள் செய்து பிரசாரமும் செய்பவர் அன்றியும்.

உயர்திரு ராமசாமி முதலியார் பெரிதும் பாடுபட்டு உதவி செய்து உருப்படி செய்த சாரதா மசோதாவை அடியோடு கவிழ்க்கவும் ஒழிக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். இவ்வளவும் இல்லாமல் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகளுக்கும் விரோதி. அதை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்டவரை சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட விட்டிருப்பதைப் பார்த்தால் இது ஜஸ்டிஸ் கட்சிக்கு மாத்திரமல்லாமல் சென்னை மாகாண பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே பெருத்த அவமானமென்றே சொல்லுவோம்.

ஏனெனில் ராஜாங்க சபைக்கு சென்னை மாகாணத்தார் சிறப்பாக தமிழ் நாட்டார்கள் திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யரை தங்கள் பிரதிநிதியாய் ஒரு மனதாய் தேர்ந்தெடுத்தனுப்பி இருக்கிறார்களென்பதும் இந்த நாட்டின் பொது ஜனஅபிப்பிராயம் ஒரு மனதாய் அவரது கொள்கைக்கே சாதகமாய் இருக்கின்றது என்பதும் அல்லது குறைந்த அளவு பெரும்பான்மையான ஜனங்கள் வருணாசிரமத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் இவற்றை வலியுருத் தும் மனுதர்மத்திற்கும் அனுகூலமாயிருக்கின்றார்கள் என்றாவதும் முடிவு செய்ய வேண்டியதாக இருக்கின்றது.

திரு. பனக்கால் அரசர் அவர்கள் சென்ற தேர்தலில் சட்ட சபைக்கு நிற்கும் போது பார்ப்பனர்களும் சிறப்பாய் சனாதன தர்ம வருணாசிரமக் காரர்களும் நடந்து கொண்டதற்கு சென்னை ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் இம்மாதிரி நடந்து கொண்டால் அவர்களது சுயமரியாதைக்கு நாம் வியாக்கியானம் சொல்லாமலே வாசகர்கள் தெரிந்து கொள்வார்களென்று நினைக்கின்றோம். நிற்க மேற்படி ஸ்தானங்களுக்கு திரு. எ. ராமசாமி முதலியாரும் திரு. எம். கே. ரெட்டியாரும் நிற்பதாய் முதலில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

பிறகு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பிரவேசித்து ராஜி செய்து திரு. ரெட்டியாருக்கு பதிலாக திரு கோபதி நாராயணசாமி செட்டியாரை நிற்கும்படி ஏற்பாடு செய்திருப்பதாக செய்தி தெரியவந்தது. ஆனால் கடைசியாக அந்த ஸ்தானத்தில் திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பார்த்தோம்.

இதிலிருந்து அதாவது திரு. எம். கே. ரெட்டி விலக்கப்பட்டதற்கும் திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் புகுத்தப்பட்டிருப்பதற்கும் இடையில் ஏதாவது சூழ்ச்சியோ தந்திரமோ புகுந்திருக்கவேண்டுமே அல்லாமல் ஒரு சிறிது கூட நியாயமோ நாணையமோ இருக்க இடமில்லை என்றே கருத வேண்டியிருக்கின்றதற்கு வருந்துகின்றோம்.

நிற்க, தஞ்சை ஜில்லாவுக்கும் இது போலவே திரு. சர். பி. ராமசாமி அய்யர் அவர்களைச் சுலபமாய் தெரிந்தெடுக்கப்பட சில ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் ஒப்புக் கொண்டாய் விட்டதாகவும் தெரிந்தோம். இது முன் விஷயத்தைக் காட்டிலும் அதிகமான மானக்கேடான விஷயமாகும். பார்ப்பனரல்லாதார் நன்மையையோ ஜஸ்டிஸ் கட்சியின் (தனிப்பட்ட நபர்களின் நன்மைகள் தவிர) பொது நன்மையையோ கருதிப் பார்ப்போமானால் மேல் கண்ட இரண்டு பார்ப்பனர்களிலும் திரு. சர். சி. பி. அய்யரே பெரிய ஆபத்தும் சரியான எதிர்ப்புமானவர். எப்படியென்றால் முன்னவர் வாயில் சத்தம் போடுகின்றவர் அவரால் ஒன்றும் பிரமாதமான ஆபத்து வந்து விடாது.

ஏதோ சில பணக்காரர்கள் பட்டை நாமத்தையும் விபூதிப் பூச்சையும் பூசிக்கொண்டு பார்ப்பனர்கள் பின்னால் சாமி சாமி என்று கும்பிடவும் ஏழைகளைப் பார்த்தால் சீறி விழவும் முடியும். அன்றியும் வெளிநாட்டு மக்கள் நம்மை இழிவாய் நினைப்பார்கள். மற்றபடி பின்னவரோ என்றால் அவர் காரியத்தில் கழுத்தை அறுப்பவர். திரு. சர். சி. பி. அய்யர் சென்னை அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருக்குமட்டும் சென்னை அரசாங்கத்தில் உத்தியோகம் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கோயமுத்தூர் மகாநாட்டில் சொன்னோம்.

அன்றியும் அவர்களாலேயே ஜஸ்டிஸ் கட்சியார்கள் உத்தியோகம் பதவி அதிகாரம் ஆகியவைகள் இழந்து பரித விக்க நேர்ந்தார்களென்றும் ஜஸ்டிஸ் கட்சிக்கு அவர் செய்த கொடுமையையும் துரோகத்தையும் வண்டி வண்டியாய் எடுத்துச் சொன்னதோடு அவர் நாணையத்தைப் பற்றியும் குற்றம் கூறி ஆகாயத்திற்கும் பூமிக்குமாக பிரசாரம் செய்தோம்.

அப்படிப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் இப்போது அவரை (சர். சி. பி. யை) இந்தியா சட்டசபைக்கு கஷ்டமின்றி சற்று ஏறக்குறைய போட்டியின்றி அனுப்பப்படுகிறாரென்றால் பொது ஜனங்கள் என்ன நினைப்பார்கள்? எனவே இதற்கு அனுகூலமாயிருக்கும் கட்சிப் பிரமுகர்கள் சிலரின் நாணையத்தைப் பற்றி என்ன சொல்வது என்பது நமக்கே விளங்கவில்லை.

அதிலும் சர். சி. பி. அவர்கள் இந்திய சட்டசபைக்கு தான் போவதற்காக சொல்லும் காரணம் என்ன வென்றால் ரவுண்டேபிள் கான்பரன்சுக்கும் புதிய சீர்திருத்தத்தில் விதிகள் செய்வதற்கும் தனக்கு சௌகரியம் இருக்குமென்று கருதியே இப்போது தான் ஆசைப்படுவதாக சொல்லி கேட்டுக் கொண்டாராம்.

அப்படியானால் இந்த சமயத்தில் அவர் அங்கு போக நாம் விடலாமா? என்று யோசித்தால் கடுகளவு சுயமரியாதை இருந்தாலும் அவர் அங்கு போகாமல் இருப்பதற்கு தன்னால் கூடியவரை முயற்சி செய்வதே உண்மையான பார்ப்பனரல்லாதாருக்கோ ஜஸ்டிஸ் கட்சியாருக்கோ கடனாகும். அப்படிக்கு இல்லாமல் அவரைச் சுலபமாய்ப் போக விடுவது என்பது நினைக்க நினைக்க பதறக்கூடிய காரியமாய் இருக்கின்றது.

தவிர சென்னை நகரத்தில் காலியாயிருக்கும் ஒரு சென்னை சட்டசபை ஸ்தானத்திற்கு ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் ஒருவரும் நிற்காமல் அதையும் ஒரு வருணாசிரமக்காரராகிய திரு. சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கு போட்டியின்றி விட்டு விட்டதாகத் தெரிகின்றது. இதுவும் ஜஸ்டிஸ் கட்சிக்கு பெரிய அவமானமும் அதன் பலக்குறைவைக் காட்டக் கூடிய அறிகுறியும் ஆகும் என்றே சொல்லுவோம்.

ஜஸ்டிஸ் கட்சி உண்மை வீரர் எனத்தகும் திரு. சுந்திரராவ் நாயுடு அவர்கள் அந்த ஸ்தானத்திற்கு நிற்பதாக தெரிவித்துவிட்டு கடைசியாக வருணாசிரமத்திற்கு போட்டியின்றி விடுவதென்றால் இதிலும் எந்தத் தலைவர் புகுந்து என்ன புரட்டுப் பண்ணினார்களோ என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறதும் தவிர இது மிகவும் வருந்தக்கூடிய காரியமாகும்.

இவைகள் தவிர சென்னை நகரத் தொகுதியில் இந்திய சட்டசபைக்கு காலியான ஒரு ஸ்தானத்திற்கு ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் இரண்டு கனவான்கள் நிற்கின்றார்கள். ஒன்று பி. டி. குமாரசாமி செட்டியார், இரண்டு திரு. சிவப் பிரகாச முதலியார் ஆவார்கள். இதில் ஏன் இந்தப் பிரமுகர்கள் போட்டிப் போடுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

ராஜாங்க சபைக்கு ஒரு பார்ப்பனர் போட்டி இன்றிப்போக பைசல் செய்த தலைவர்களுக்கு இதை போட்டியில்லாமல் செய்யத்தக்க யோக்கியதை இல்லையா என்று கேட்கின்றோம். ஆகக் கூடி இந்தப் போட்டி சுயநலப் போட்டியே தவிர இதில் சிறிதாவது பொதுநலப் போட்டி இருப்பதற்கு இடமிருப்பதாய்த் தெரியவில்லை.

ஏனெனில் திருவாளர்கள் டி. ஆர். ராமச்சந்திர அய்யரையும் சாமி வெங்கிடாசலம் செட்டியாரையும் போட்டி அன்றியில் விட்டவர்கள் இதில் போட்டிபோடுவது பொது நலத்தை உத்தேசித்ததாய் இருக்க முடியுமா என்று கேட்கின்றோம். அந்தப்படி இதில் இந்திய சட்டசபையில் பொது நலப் போட்டிக்கு கடுகளவாவது இருப்பதாக யாராவது காரணம் சொல்ல வரக் கூடுமானால் அப்போது சென்னை சட்டசபையும் இராஜாங்க சட்டசபையும் மனுதர்மத்திற்கும் வருணாச்சிரம தர்மத்திற்கும் போட்டி இல்லாமல் விட்டதில் கண்டிப்பாய் சுயநலத்தைத் தவிர வேறு ஒன்றுமே இருக்க முடியாது என்று தான் சொல்லித் தீர வேண்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட கனவான்களாலேயே ஜஸ்டிஸ் கட்சியானது ஜாண் உயரவும் முழம் தாழவுமாய் கஷ்டப்பட்டுக் கொண்டு வருகின்றது. இனியும் அதே நிலைமை நிலைத்திருக்கப் பாடுபடுவது சென்னையில் உள்ள சிலருக்கு ஏதாவது பலன் விளைவிக்கக் கூடியதாயிருந்தாலும் சென்னை மாகாணத்தில் சென்னைக்கு வெளியில் சிறப்பாக தமிழ் நாட்டில் அது பொது ஜனங்களுக்கு பெருத்த ஆபத்தையும் அவமானத்தையும் கொடுக்கக் கூடியதாகவே முடிவதாகும் என்று மிகுதியும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 16.02.1930)