சென்னை அரசாங்க மந்திரிகளின் நிலை ஆட்டம் கொடுத்திருக்கும் விஷயம் யாவரும் அறிந்ததே. மந்திரிகளின் நியமனத்தின் போது காங்கிரஸ் பார்ப்பனர்களும் ஒத்துழையா பார்ப்பனர்களும் ஐகோர்ட் ஜட்ஜ் பார்ப்பனர் களும் நிர்வாகசபைப் பார்ப்பனர்களும் உள் உளவாய் இருந்து பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஒப்பந்தம் பேசிக் கொண்டு, பார்ப்பனரல்லாதாரிலேயே மூவரைப் பிடித்து சுயேச்சைக் கக்ஷி மந்திரிகள் என்று பெயர் தந்து, மந்திரி சபையை சிருஷ்டித்தார்கள். உதாரணமாக இம்மந்திரிகளை நியமிக்கும் விஷயத்தில் ஒத்துழையாமைக்கார ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியார், ஸி. விஜயராகவாச்சாரியார் முதலியோரும், காங்கிரஸ் முட்டுக்கட்டைகளாகிய ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சீனிவாசய்யங்கார் முதலியோரும், சட்ட மெம்பர் ஐகோர்ட் ஜட்ஜுகள் முதலியோரும் வெளிப்படையாகவே எடுத்துக் கொண்ட முயற்சி யாவருக்கும் தெரிந்ததே.

periyar 450இவர்கள் தயவால் ஸ்தானம் பெற்ற மந்திரிகளும் மேற்கண்ட பார்ப்பனர்கள் சொன்னபடியெல்லாம் ஆடினதும் பார்ப்பனரல்லாதார் கட்டைக் குலைத்து அவர்களது இயக்கத்தையே பாழாக்க எவ்வளவு தூரம் கொடுமைகள் செய்யலாமோ அவ்வளவு தூரம் செய்ததும் மறக்கக் கூடியதல்ல. கடைசியாக பார்ப்பனரல்லாதார் கோவையில் மகாநாடு கூடி இம் மந்திரிகளை ஒழிக்கக் கருதி “இரட்டை ஆக்ஷி ஒழியும் வரை உத்தியோகம் ஏற்பதில்லை” என்கின்ற தீர்மானம் செய்த பிறகு மந்திரிகள் பயந்து போய் பார்ப்பனரல்லாதாருக்கும் சிற்சில உத்தியோகங்களும் நியமனங்களும் செய்ய வேண்டி நிர்பந்தம் வந்து விட்டது. இந்த சிற்சில உத்தியோகங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு மந்திரிகள் கொடுக்க ஏற்பட்டதால் பார்ப்பனர்கள் பொறுக்க மாட்டாமல் மந்திரிகளை நெருக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு முக்கிய காரணம் சட்ட கலாசாலை தலைமை உபாத்தியாயர் (அதாவது லா காலேஜ் பிரின்சிபால்) வேலையை ஸ்ரீமான் ரத்தினசாமி என்கின்ற ஒரு கிருஸ்தவ கனவானுக்கு கொடுத்ததினால் எல்லா பார்ப்பனரும் ஒன்றுகூடி மந்திரியை ஒழிக்க கங்கணங்கட்டிக் கொண்டார்கள். ஸ்ரீமான் ரத்தினசாமி ஒரு பாரிஸ்டர் இங்கிலீஷில் உயர்ந்த கல்வியாளர். மேல்நாட்டு கல்வி அனுபவமும் உள்ளவர். சட்டசபை பிரசிடெண்டாக 2000 ரூ. சம்பளம் வாங்கி வந்தவர். பச்சையப்பன் பள்ளிக் கூடத் தலைமை உபாத்தியாயராக கிட்டத்தட்ட 1000 ரூ. சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர். இந்தியா சட்டசபை மெம்பர். இவ்வளவு யோக்கியதையும் உள்ள ஒருவருக்கு 1000 ரூ. சம்பளமுள்ள ஒரு வேலை கொடுத்ததற்காக மந்திரி சபையே ஆட்டங் கொடுக்கத்தக்க நிலைமையை பார்ப்பனர்கள் உண்டாக்கி விட்டார்கள்.

காரணம் என்னவென்றால் சட்ட கலாசாலையில் படிப்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். அவர்களுக்கு பார்ப்பனர் உபாத்தியாராய் இருந்தால் எவ்வளவு அனுகூலம் உண்டாகுமோ அவ்வளவு அனுகூலம் உண்டாகாதே என்கின்ற பயமும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் படித்து முன்னுக்கு வந்து விடுமோ என்கின்ற வயிற்றெரிச்சலும் அவர்களைப் பிடித்துக் கொண்டது. இதனால் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து முதல் மந்திரியிடம் இந்த வேலைக்கு ஒரு பார்ப்பனரையே நியமிக்கச் சொல்லிப் பார்த்தும் வேறு எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் யார் பேச்சையும் கேளாமல் டாக்டர். சுப்பராயன் பார்ப்பனரல்லாதாரையே நியமித்துவிட்டார். மற்றும் சில இடங்களில் பார்ப்பனரல்லாதார் விஷயத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாரே என்கின்ற பயமும் பார்ப்பனர்களுக்கு நன்றாய் விழுந்து விட்டது.

எனவே, மந்திரி சபையை கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இப்பொழுது மந்திரி கட்சியில் பிளவு உண்டாகிவிட்டது. மந்திரி கட்சியில் உள்ள பார்ப்பனர்கள் அவரை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். மற்றும் பல பார்ப்பனரல்லாதார்களும் பல மீறமுடியாத செல்வாக்குகளால் பார்ப்பனர்களைப் பின்பற்ற வேண்டி வந்துவிட்டது. மற்றொரு மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்கநாத முதலியார் பார்ப்பனர்கள் சொல்லுகிறபடி ஆடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். அதிலிருந்து அவர் ஒரு சிறிதும் மாறவும் இல்லை. பார்ப்பனர்களுக்கு ஸ்ரீமான். முதலியாரின் குருவாகிய ஸ்ரீ பெசண்டம்மையாரின் ஜாமீனும் இருக்கின்றது. மற்றபடி மற்றொரு மந்திரி ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியார் அவர்களைப் பற்றியோ யாருக்கும் கவலையில்லை. அதாவது ‘அடிப்போன சட்டி ஆத்தாள் வீட்டிலிருந்தாலும் ஒன்று தான் மகள் வீட்டிலிருந்தாலும் ஒன்றுதான்’ என்பது போல் அவர் பார்ப்பனர்கள் போட்ட கோட்டை மீற முடியாதவர். எனவே சைமன் விஷயத்தில் சட்டசபையில் டாக்டர் சுப்பராயனுக்கு எதிரிடையாக அவர் கூட்டு மந்திரிகளும் கட்சி மெம்பர்களில் சிலரும் ஓட்டு கொடுத்ததால் மந்திரி கட்சி ஒழுங்கற்றதாகி விட்டதுடன் டாக்டர் சுப்பராயனுக்கு மந்திரி கட்சியில் ஆதரவு இல்லை என்றும் ஏற்பட்டுவிட்டது. இதனால் ஒன்றா கவர்னராகவே மந்திரிகளைக் கலைக்க வேண்டும். அல்லது மந்திரிகளாவது ராஜீனாமா கொடுக்க வேண் டும்.

இந்த இரண்டும் நடக்காவிட்டால் பலக் குறைவான மந்திரியாவது ராஜீனாமா கொடுத்து விட வேண்டும். அல்லது மறுபடியும் எல்லோரும் ராஜியாகி விடவேண்டும். இந்நான்கில் ஒன்று நடந்தாக வேண்டுமேயல்லாமல் சும்மா இருக்க முடியாது. இந்த நிலைமை தான் டாக்டர். சுப்பராயன் அவர்கள் ராஜீனாமா கொடுத்துவிட்டார்கள் என்கின்ற சங்கதி வெளியாகக் காரணமாயிருந்தது. முதல் மந்திரி ராஜீனாமா கொடுத்ததாக சொல்லப்படும் விஷயத்திற்கு அஸ்திவாரமில்லை என்றுதான் அசோசியேட் பிரஸ் சொல்லக் கூடுமேயல்லாமல் ராஜீனாமா கொடுக்கவில்லை என்று சொல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை. இன்று நாளைக்கில்லாவிட்டாலும் மந்திரிகளுக்குள் புது ஒப்பந்தம் ஏற்பட்டு காங்கிரஸ் பார்ப்பனர்களும் உத்தியோகப் பார்ப்பனர் களும் ஆதரிப்பதாக வாக்கு கொடுக்காத பட்சம் ராஜினாமா சங்கதி வெளியாகித்தான் தீரும் என்றே சொல்லுவோம். ஸ்ரீமான் டாக்டர். சுப்பராயன் மந்திரி நிலைக்க வேண்டுமானால் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு பதிலாக ஜஸ்டிஸ் கட்சியார் உதவி செய்வதாக வாக்களிக்க வேண்டும். அவர்களும் ஒன்று அல்லது இரண்டு மந்திரி ஸ்தானங்களை ஒப்புக்கொள்ளத் தயாராயிருக்க வேண்டும். ஆனால் ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்களுக்கு இது சமயம் மந்திரி ஸ்தானம் ஒப்புக்கொள்ள சற்று பயமாயிருக்கிறதென்றே தெரிகின்றது.

ஏனெனில் கோயமுத்தூர் தீர்மானம் ஒன்று குறுக்கே நிற்பதாலும் மறு எலக்ஷனுக்கு போனால் ஜனங்கள் பரிகாசம் செய்வார்களே என்கின்ற எண்ணத்தாலும்தான் காங்கிரசுக்குள் இருந்தே வேறு கக்ஷி ஆரம்பித்த ஸ்ரீ முத்தய்ய முதலியார் அவர்கள் கக்ஷியார் தாராளமாய் மந்திரி பதவி ஒப்புக் கொள்ளலாமானாலும் பார்ப்பனர்கள் போக மீதி இருக்கும் மந்திரிக் கக்ஷியும் ஸ்ரீமுத்தைய்யா முதலியார் கட்சியும் ஒன்று சேர்ந்தாலும் போதுமான மெஜாரிட்டி கிடையாததால் அவர் அந்த ஒரு கட்சியின் உதவியைக் கொண்டு அமைக்க முடியாது. மற்றபடி இண்டிபெண்டண்ட் ஆபோசீஷன் என்கின்ற ஸ்ரீமான் சி.எஸ். ரத்னசபாபதி முதலியார் அவர்களுடைய கட்சிக்கு ஒரு மந்திரி கொடுத்து அக்கட்சியையும் சேர்த்துக் கொள்வதானாலோ அப்பொழுதும் தைரியமாய் இருக்கத்தக்க மெஜாரிட்டி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

டாக்டர். சுப்பராயனை வெளியேற்றி விட்டு ஸ்ரீமான்கள் ரங்கநாத முதலியாரும் ஆரோக்கியசாமி முதலியாரும் இருந்து கொண்டு மற்றொரு மந்திரியை தெரிந்தெடுக்க வேண்டுமானால் ஒரு பார்ப்பன மந்திரியைத்தான் தெரிந்தெடுத்தாக வேண்டும். இதற்கு காங்கிரஸ்காரர்களின் உதவி வேண்டியது அவசியம். ஆனால் காங்கிரசினுள் சில பார்ப்பனரல்லாதார்கள். மந்திரி பதவி தங்களுக்கு வருவதாயிருந்தால் வரட்டும் இல்லாவிட்டால் வேறொரு பார்ப்பனனுக்கு உதவி செய்து பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று உறுதியாய் மறுக்கிறார்கள். இந்த நிலையில் பார்ப்பனர்களின் நாக்கில் ஊறும் தண்ணீருக்கு கணக்கு வழக்கு இல்லை. கடைசியாக இது எப்படி முடியும் என்று சொல்லுவதும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

எப்படியானாலும் நிலைக்கத்தக்க மந்திரி சபையை அமைக்க கவர்னர் பிரபு படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இதற்காக வேண்டியே சட்டமெம்பர் வேலையை கையில் கெட்டியாய் வைத்துக் கொண்டு, மந்திரி சபையை உறுதியாக்குகிறவர்களுக்கு கொடுப்பதாய் ஆசை காட்டி வருகின்றார். சட்ட மெம்பர் வேலை பார்ப்பனரல்லாதாருக்கு கொடுப்பதானால் மந்திரிகளிலும் ஒரு பார்ப்பனர் இருக்க வேண்டும் என்று வேலையை விட்டுப் போகும் உத்தியோகஸ்தர் சர்க்காரை மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் வெகுபேர்களுக்கு தூக்கமே இல்லை. வெகு பேர்களுக்கு சாப்பாடு இறக்கமே இல்லை. வெகுபேர் இளைத்துப் போய்விட்டார்கள். கடைசியாக என்ன ஆகுமோ தெரியவில்லை. இவற்றுள் ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர் கோயமுத்தூர் தீர்மானத்தை மதித்து அதை மீறக் கூடாது என்று சொல்லி மந்திரி வேலையை உதைத்துத் தள்ளி வந்திருப்பதானது ஒரு விஷேஷம் என்று சொல்லலாம். மறுபடியும் மந்திரி வேலை ஒப்புக் கொள்ளுவதானால் வேறொரு மகாநாடு கூட்டி அதற்குத் தகுந்த காரணங்களைக் காட்டி பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் சம்மதம் பெறாமல் மந்திரி வேலை ஒப்புக் கொள்ளுவார்களேயானால் காங்கிரஸ்காரர்களுக்கும் ஜஸ்டிஸ் கக்ஷியாருக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லாமல் போவதோடு இரண்டு கக்ஷியாருக்கும் நாணயம் கிடையாது என்றும் சமயம் போல மக்களை ஏமாற்றுகின்றவர்கள் என்றும் பொது ஜனங்கள் சொல்லிவிடுவார்கள் என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 19.02.1928)