நான் இன்று உங்கள் முன்னிலையில் பேசப்போகும் விஷயமானது கேவலம் தேர்தல்களைப் பற்றியோ, தேர்தல்களில் யாருக்கு ஒட்டுக்கொடுப்பது என்பதைப் பற்றியோ பேச வரவில்லை. இத்தேர்தல்களில் யார் ஜெயித்தாலும் யார் தோற்றாலும் நமக்குப் பெரிய லாபமும் நஷ்டமும் ஒன்றும் ஏற்பட்டு விடாது. ஆதலால் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. எனக்குள்ள கவலையெல்லாம், மக்களின் பெரும் பகுதியினராகவும் எல்லா வழிகளிலும் இன்னாட்டிற்கு முக்கியமானவர்களாகவும் உள்ள நாம் தாழ்ந்தவர்களென்றும் அடிமைகளென்றும் கருதப்பட்டு சுயமரியாதையற்று கிடக்கிறோம். அன்னியர்களால் விலங்குகளைப் போல் நடத்தப்படுகிறோம். ஆதலால் இவ்விதக் குறைகள் ஒழிய வழி தேட வேண்டியது இப்பொழுதுள்ள நமது முக்கியக் கடமை என்பதேயாகும். அவற்றிற்கு நம்மாலானதைச் செய்ய வேண்டுமென்றும், அதற்காக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்களென்றும் சொல்லித் தெரிந்து போகவே இங்கு வந்திருக்கிறேன். நமது தேசத்தில் இப்போது ஒரு வகுப்பார் சுயநலங் கருதி ‘காங்கிரஸ்’, ‘தேசீயம்’ ‘சுயராஜ்யம்’ என்கிற பல செல்வாக்குள்ள பெயர்களைச் சொல்லிக் கொண்டு நமது சமூகத்தை அழித்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள இத்தேர்தல்களை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறபடியால் அவ்வேமாற்றத்தில் நீங்கள் ஏமாந்து போகக் கூடாதென்று சொல்ல வந்திருக்கிறேன் (கரகோஷம்) தயவு செய்து இனி மேல் கை தட்டாதீர்கள்.
தற்காலம் இந்நாட்டிலுள்ள ராஜீய வேஷங்கொண்ட பல பார்ப்பனர்கள் என்னை வகுப்புத் துவேஷக்காரனென்றும் வகுப்புக் கலவரங்களை மூட்டிவிடுகிறவனென்றும் சொல்லியும் எழுதியும் ஆள்களை விட்டுப் பிரசாரம் செய்தும் வருகிறார்கள். வகுப்புத் துவேஷமும் வகுப்பு வேற்றுமைகளும் என்னால் ஏற்பட்டதா? அல்லது நம்நாட்டுப் பார்ப்பனர்களால் ஏற்பட்டதா? என்பதை நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள். தயவு செய்து நீங்கள் என்னோடு எழுந்து வருவீர்களானால் இவ்வூருக்குள் சுற்றிப் பார்த்தால், பார்ப்பனர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு காப்பிக் கடைகளிலும் சாப்பாட்டுக் கடைகளிலும், ரயில்களில் உள்ள காப்பி சாப்பாட்டுக் கடைகளிலும், சத்திரம் சாவடிகளிலும், கோயில் குளங்களிலும் இது பிராமணர்களுக்கு, இது சூத்திரர்களுக்கு, பஞ்சமர்களுக்கும் முகமதியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இங்கு சாப்பாடு, பலகாரம், தண்ணீர் வகையறா முதலியன கொடுக்கப்பட மாட்டாது; இந்த இடத்தில் சூத்திரர்கள் தண்ணீர் மொள்ளக் கூடாது; இந்த இடத்தில் சூத்திரர்கள் குளிக்கக் கூடாது ; இந்தப் பள்ளிக்கூடத்தில் சூத்திரர்களை சேர்த்துக் கொள்ள முடியாது; இன்னின்ன விஷயங்களை சூத்திரர்கள் படிக்கக் கூடாது; பிராமணர்கள் மாத்திரம் இது வரையில் செல்லலாம்; சூத்திரர்கள் இந்த இடத்திற்கப்புறம் போகக் கூடாது; இந்த வீதியில் சூத்திரர் குடியிருக்கக்கூடாது; இன்ன தெருவில் பஞ்சமர் நடக்கக் கூடாது என்று இன்னும் பலவாறாகப் போர்டுகள் போட்டும் நிர்பந்தங்கள் ஏற்படுத்தியும் பிரித்து வைத்துத் துவேஷத்தையும் வெறுப்பையும் இழிவையும் உண்டாக்கி வருவது நானா? அல்லது பார்ப்பனர்களா? என் பதைக் கவனியுங்கள்.
தாங்களே நம் ஜாதிகளைப் பிரித்து நம்மை இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்து விட்டு ஏனையா இப்படிச் செய்கிறீர்கள்? இது தர்மமா? நியாயமா? என்று கேட்டால், நம்மை வகுப்புத் துவேஷக்காரன் என்றும் வகுப்புப் பிரிவினைக்காரன் என்றும் வகுப்புரிமைக்காரன் என்றும் சொல்லி கொன்றுவிடப் பார்த்தால் அதற்கு நான் பயந்து கொள்ளுவேனா என்று கேட்கிறேன். ரயில்வே ஸ்டேஷன்களிலுள்ள ஓட்டல்களை எடுத்துக் கொள்ளுங்கள். ரயிலில் பெரும்பான்மையாய்ப் பிரயாணம் செய்கிறவர்கள் நாமாயிருக்கிறோம். ஓட்டல்காரனுக்கு அதிகமான லாபம் கொடுக்கிறவர்கள் நாமாயிருக்கிறோம். ஆனால் அந்த ஓட்டலுக்காக ரயில்வே அதிகாரிகள் கொடுத்த இடத்தில் முக்கால் பாகத்திற்கு மேலாக தாங்கள் எடுத்துக் கொண்டு கொஞ்சம் இடத்தை நமக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த இடத்திலும் எச்சில் போடவும் சாணி சட்டி விளக்குமார் வகையறாக்களை வைக்கவும் கை கழுவவும் செய்கிறார்கள். ஒரு பார்ப்பனன் குஷ்டரோகியானாலும் அவன் நேரே சமயலறைக்குப் போய் சுடச் சுட உள்ள பதார்த்தங்களில் தனக்கு வேண்டுமானதை அடுப்பிற்குப் பக்கத்திலிருந்தே எடுத்துச்சாப்பிட்டு விடுகிறான். நம்மில் எவ்வளவு பெரிய மனிதர்களானாலும் வெளியில் நின்று கொண்டு நாலாணாவைக் கையில் தூக்கி காட்டிக் கொண்டு, இடைச்சி மார்க்கு கட்டிப் பால் விளம்பரப் படத்தில் பெண்கள் கூட்டம் பால் கேட்பது போல் ஒரு கையைத் தூக்கிக் கொண்டு சாமி சாமி என்று கத்த வேண்டியதாயிருக்கிறது. ஆறினதையும் ஈ, பூச்சி, புழுக்கள் வீழ்ந்ததையும் விற்காமல் தேங்கினதையும் நாம் வாங்கிச் சாப்பிட வேண்டியதாயிருக்கிறது. இந்த நிலையில் வகுப்பு வித்தியாசத்தையும் வகுப்புத் துவேஷத்தையும் வளர்க்கிறவர்கள் நாமா? இந்தப் பார்ப்பனர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
நம்முடைய பணத்தைக் கொண்டு மத சம்பந்தமான கல்விகளுக்கென்றும் வேத பாடசாலை என்றும் பெரிய பெரிய பள்ளிக்கூடங்களைக் கட்டிக்கொண்டு அதில் பிராமணர்கள்தான் படிக்கலாம், சூத்திரர்கள் படிக்கக் கூடாது என்று சொல்லி நம்மைத் தள்ளி வைத்து விடுகிறார்கள். ஜாதி வித்தியாசத்தையும் வகுப்புத் துவேஷத்தையும் வளர்க்கிறவர்கள் நாமா? அவர்களா? நம்முடைய பணங்களிலேயே பெரிய பெரிய கோவில்கள் கட்டப்பட்டு, நம்முடைய பணங்களைக் கொண்டே பூஜைகள் செய்யப்பட்டு வரும் சுவாமிகளிடத்தில் நம்மைப் போகக்கூடாது என்று சொல்லுகிறார்கள். இதனால் வகுப்புத் துவேஷத்தை உண்டாக்குகிறவர்கள் நாமா? அவர்களா? ஆகவே இப்பொழுது ஜாதி வித்தியாசம் வளரக்கூடாதென்பதும் வகுப்புத் துவேஷங்கள் ஒழிய வேண்டுமென்பதும்தான் நமது கொள்கை. அதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன். ஜாதி வித்தியாசங்களான மக்கள் உயர்வு, தாழ்வு என்பதை ஒழிப்பதற்கும் வகுப்புத் துவேஷங்கள் ஒழிவதற்கும் முட்டுக்கட்டையாயிருந்து வருகிறவர்கள் நாமா? அந்தப் பிராமணர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஜாதி வித்தியாசம் நிலைத்திருப்பதற்கும் வகுப்புத் துவேஷங்கள் வளருவதற்கும் நிரந்தரமான ஏற்பாட்டை பார்ப்பனர்களே செய்து வைத்துக் கொண்டு நம் மீது குறை கூறுகிறார்கள். நாம் இப்போது பார்ப்பனர்களைக் கேட்பதெல்லாம் எங்களையும் சமமாகப் பாவியுங்கள், எங்களைத் தாழ்ந்தவர்கள் என்று சொல்லி இழிவுபடுத்தி எங்களுடைய சுயமரியாதையைக் கொல்லாதீர்கள் என்பதையன்றி வேறில்லை. இதை அவர்கள் கொஞ்சமும் கவனியாமல் இந்த தேசத்தில் 100-க்கு 97 பேர்களாயிருக்கிற நம்மை சூத்திரர்களென்றும் தாழ்ந்தவர்களென்றும் சொல்லுவதோடல்லாமல் நமக்கு இவர்கள் தர்மகர்த்தாக்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு சர்க்காருக்கு உள் உளவாயிருந்து எல்லா உத்தியோகங்களையும் அதிகாரங்களையும் இவர்களே கைப்பற்றிக்கொண்டு நமக்குக் கொடுமை செய்துவருகிறார்கள். நாம் நமது சுயமரியாதைக்காகத்தான் இவ்வளவு பிரயத்தனப்படுகிறோமேயல்லாமல் கேவலம் இந்த உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டல்ல. ஆனால் நமது பார்ப்பனர்கள் இந்த உத்தியோகங்களைக் கைப்பற்றிக் கொண்டதன் பலனாகவே நம்மை தங்களுக்கும் சர்க்காருக்கும் நிரந்தரமான அடிமைகளாக்கி நம்மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவற்றிலிருந்து தப்பி நமது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே இப்பார்ப்பனர்களை எப்படியாவது எல்லாவித உத்தியோகங்களிலிருந்தும் ஒழிக்க வேண்டுமென்று கஷ்டப்படுகிறோம். (பார்ப்பனர்களுக்கு வெட்கம், வெட்கம் என்கிற சப்தமும் கரகோஷமும்)
இவ்விதம் நீங்கள் கூச்சலிடுவதில் பயனில்லை; கூச்சலிடுவதற்காகவோ கரகோஷம் செய்வதற்காகவோ நான் உங்கள் முன்னால் பேச வரவில்லை. உத்தியோக விஷயத்தில் மாத்திரம் பார்ப்பனர்கள் விஷயத்தில் பொறாமையும் துவேஷமும் இருக்கிறதேயல்லாமல் வைதீகச் சடங்குகளில் நீங்கள் அவர்களை உங்களை விட உயர்ந்தவர்களென்றே எண்ணியிருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு படித்தவர்களாயிருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியிலும் அதிகாரத்திலும் இருந்தாலும் இரண்டு காய்ந்த தர்ப்பைப் புல்லைக்கொண்டு சாம்பலையோ நாமத்தையோ அடித்துக் கொண்டு ஒரு பார்ப்பனன் உங்கள் வீட்டிற்கு வருவானேயானால் ‘சுவாமி’ என்று அவன் காலில் விழுகத் தயாராயிருக்கிறீர்கள். அவனுக்குப் பணத்தைக் கொடுத்தால் உங்கள் பெற்றோருக்கு மோக்ஷம் கிடைக்கும் என்கிற முட்டாள்தனமான எண்ணம் இன்னமும் உங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டு இருக்கிறது. அவன் கைப்பட தாலி எடுத்து கொடுத்து நீங்கள் அதை கும்பிட்டு வாங்கி பெண்களின் கழுத்தில் கட்டினால்தான் உண்மையான கலியாணம் என்று நினைக்கிறீர்கள்; ஒரு பார்ப்பனன் உங்கள் வீட்டுப் பெண்ணையும் பிள்ளையையும் படுக்கை அறைக்குள் அனுப்பிக் கதவைச் சாத்தினால்தான் நல்ல பிள்ளைகளைப் பெற முடியுமென்று நினைக்கிறீர்கள்; ஒரு பார்ப்பனனுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுத்து அவன் காலைக் கழுவின தண்ணீரை சாப்பிட்டால்தான் உங்கள் பாவம் துலையுமென்றும் நீங்கள் மோக்ஷத்திற்குப் போகக் கூடுமென்றும் நினைக்கிறீர்கள். இவ்வித முட்டாள்தனமான மனப்பான்மையை மாற்றிக் கொள்ளத் தயாராயிருக்கிறீர்களா? (ஆம், ஆம் என்கிற சப்தம்) அப்படியானால் உங்களுடைய சந்தோஷங்களுக்குப் பொருள் உண்டு. அப்படிக்கில்லாமல் வீண் ஆரவாரங்களினாலும் அற்ப சந்தோஷத்தினாலும் பலனென்ன?
ஆதலால் நாம் இப்பொழுது செய்யும் இந்தப் போராட்டம் சுயமரியாதைப் போராட்டமேயல்லாமல் உத்தியோகத்திற்காகவே செய்யும் உத்தியோகப் போராட்டமல்லவென்பதை நன்றாய் உணருங்கள். நமது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இவ்வித உத்தியோகங்கள் சகாயமாயிருக்கும். மோட்சம் என்கிற வார்த்தையினாலும், சுயராஜ்யம் என்கிற வார்த்தையினாலும், சமூக வாழ்க்கையிலும் அரசியலிலும் முறையே நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி ஆதிக்கம் பெற்று விட்டார்கள். இவ்விரண்டு விஷயங்களிலும் பார்ப்பனர்களுக்குள்ள ஆதிக்கத்தை விரட்டி அடித்தால் தான் நாம் சுயமரியாதை அடைய முடியும். இந்தச் சுயமரியாதைக்காக நாம் இன்று, நேற்று மாத்திரம் போராடவில்லை. ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டும், நாயர், செட்டியார் என்கிற மகான்களின் இயக்கம் ஏற்பட்டும் சுமார் பத்தாண்டுகள் தானாகின்றன. இன்றைக்கு எத்தனையோ ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னதாகவே இப்பார்ப்பனரின் கொடுமையை உணர்ந்த நம் தமிழ் மக்கள் அதிலிருந்து தப்பவேண்டுமென்று எவ்வளவோ பிரயத்தனம் செய்திருக்கிறார்கள். நமது சித்தர்களெல்லாம் எவ்வளவோ தெளிவாய்ப் பார்ப்பனர்களின் அக்கிரமங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் நமது பார்ப்பனர்கள் சித்தர் நூல்களையெல்லாம் ஒழித்து, சித்தர் உபதேசங்களையெல்லாம் மறைத்து இராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் முதலிய நூல்களைப் பார்ப்பனர்களுக்கனுகூலமாக எழுதி அவற்றிக்குச் செல்வாக்குண்டாக்கி, அவற்றைப் படித்தால் மோட்சம் என்று சொல்லி நம்மை ஏமாற்றி விட்டார்கள். கபிலர், பாய்ச்சலூரார், ஒளவையார், திருவள்ளுவர் முதலிய பெரியோர்கள் செய்திருக்கும் நூல்களினாலும் அவர்களுடைய உபதேசங்களினாலும் இன்றைக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே பார்ப்பனர்கள் கொடுமைகளை வெளிப்படுத்தி அவைகளை ஒழிக்கப் பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள். சமீபகாலத்தில் புத்தர், சமணர் முதலியோர்களும் பார்ப்பனர்கள் கொடுமையை ஒழித்து மக்கள் எல்லோரும் சமம் என்பதும் அன்பும் சமரச உணர்ச்சியும் தான் கடவுளென்பதும் உலகத்திற்குணர்த்த வந்ததை இப்பார்ப்பனர்கள் சகிக்காமல் இவர்கள் பிரயத்தனத்தையெல்லாம் ஒழித்து விட்டார்கள்.
பார்ப்பனர்கள் தங்களை உயந்த ஜாதியார் என்று சொல்லிக் கொண்ட காலத்தில் பலவான்களாக இருந்தவர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் பலாத்காரத்தை உபயோகப்படுத்த வந்த சமயத்தில், தந்திரமாய் நீங்கள் க்ஷத்திரியர்களாயிருந்து அரசாட்சி செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு மந்திரிகளாயிருந்து ‘யோசனை’ சொல்லுகிறோமென்று சொல்லி அவர்களை ஏமாற்றி கைக்குள் போட்டுக் கொண்டார்கள். கையில் செல்வமும் செல்வாக்கு முள்ள மற்றொரு கூட்டத்தார் ‘நீங்கள் எப்படி உயர்ந்த ஜாதியாகலாம்’ என்று விவாதிக்கையில் ‘நீங்கள் வைசியர்களாக இருங்கள், உங்களுக்குக் கீழ் அநேகர் இருக்கிறார்களெ’ன்று சொல்லியும் ‘உங்களுக்கும் எங்களைப் போல் பூணூல் போடுகிறோ’மென்றும் சொல்லி அவர்களையும் ஏமாற்றி கைக்குள் போட்டுக் கொண்டார்கள். பிறகு பெரும்பான்மையாயிருந்த விவசாயக்காரர்களையும் கைத் தொழிற்காரர்களையும் பார்ப்பனர்களுக்கு முதல் மூன்று வகைப் பிரிவுக்காரர்களுக்கும் வேலை செய்கிறவர்களென்று ஏற்படுத்தி விட்டார்கள். அவர்களில் பலர் இதை ஒப்புக் கொள்ளாமல் வாதாடவே ‘உங்களுக்கும் கீழாக ஒரு பிரிவாரை வைத்திருக்கிறோம், அவர்களுக்கு நீங்களே தான் எஜமானர்கள், உங்கள் இஷ்டம் போல் அவர்களை நடத்திக் கொள்ளலாம்’ என்று சொல்லி சாந்தமே உருவாகவும், சூதுவாது தெரியாத சாது ஜனங்களாகவும் இருந்தவர்களை பஞ்சமர்களென்று பெயர் வைத்து அவர்களை சூத்திரர் என்பவர்களுக்குக் காட்டிக் கொடுத்து அவர்களையும் ஏமாற்றி விட்டார்கள். கடைசியாக வாயில்லாப் பூச்சிகளாகிய ஒரு வகுப்பார் தீண்டாதவர்களாகி துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்விதக் கொடுமை செய்தவர்களைத்தான் நீங்கள் இன்றைய தினம் உங்கள் மத குருவாய் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இவ்விதக் கொடுமை நம்மை விட்டு விலக வேண்டுமானால் மத விஷயத்திலும் அரசியல் விஷயத்திலும் நாம் ஆதிக்கம் பெற வேண்டும். ஆக்கம் பெற்று நமது சுயமரியாதையை அடைய முயற்சிக்க வேண்டும். ஒரு சமூகத்திற்கானாலும் ஒரு தேசத்திற்கானாலும் சுயராஜ்யத்தை விட சுயமரியாதையே பிரதானமானதென்பது எனது தாழ்மையானதும் முடிவானதுமான கொள்கை. அச் சுயமரியாதைக்கு மகாத்மாவின் நிர்மாணத் திட்டமும் மறைவுபட்ட இந்த சமயத்தில் அரசியலிலுள்ள சகல பதவிகளையும் சகல ஸ்தானங்களையும் சகல அதிகாரங்களையும் சகல உத்தியோகங்களையும் எப்படியாவது நாம் கைப்பற்றியாக வேண்டும். ஆதலால் இப்பொழுது நடக்கிற தேர்தல் ஸ்தானங்கள் எல்லாம் இக்கருத்துக் கொண்ட பார்ப்பனரல்லாதார்களே கைப்பற்றும்படி நாம் செய்ய வேண்டும். அதின் மூலம் நமது கருத்தை நிறைவேற்றிக்கொள்ள எவ்வெவ் வழிகளில் சாத்தியப்படுமோ அவ்வவ்வழிகளிலெல்லாம் உழைக்க வேண்டும். இதுதான் நம்முடைய தேசீய வேலை. இதை விட்டு விட்டு காங்கிரஸ் என்றும் சுயராஜ்யம் என்றும், காங்கிரஸ் மூலம் சுயராஜ்யம் அடையலாமென்றும் சொல்லுவதெல்லாம் பார்ப்பனர் மூலம் மோட்சமடையலாமென்று சொல்லுவது போலத் தான் ஆகும்.
காங்கிரசின் ஆரம்பமே பார்ப்பனர்கள் எப்படி உத்தியோகம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைக் கொண்டுதான் ஆரம்பிக்கப்பட்டதேயல்லாமல் வேறல்ல. அது போலவே காங்கிரஸ் ஏற்பட்டதற்குப் பிறகுதான் உத்தியோகங்களெல்லாம் பார்ப்பன மயமாவதற்கு அநுகூலமேற்பட்டது. மகாத்மா காந்தி காங்கிரசை தலைமை வகித்து நடத்திய காலத்தில் பார்ப்பனர்களுக்கு ஆதிக்கமும் செல்வாக்கும் உத்தியோகமும் குறையத் தலைப்பட்டது. அதனால்தான் இந்தப் பார்ப்பனர்கள் மகாத்மாவை காங்கிரசை விட்டு ஓடும்படி செய்துவிட்டார்கள். அதனாலேயேதான் தமிழ்நாட்டில் மகாத்மா காங்கிரசுக்காக உழைத்து வந்த பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் காங்கிரசை விட்டு ஓடும்படி செய்து விட்டார்கள். காங்கிரஸ் ஏற்பட்டதின் பலனாய் பார்ப்பனர்கள் லாபமடைந்தார்களே ஒழிய ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் குடியானவர்களுக்கும் அதிக கஷ்டம் தான் ஏற்பட்டது.
சீர்திருத்தத்தால் விளைந்த கேடு
உதாரணமாக காங்கிரசுக்கு முன்பாக 50 கோடி ரூபாயிக்குள்ளாகத் தான் நாம் சர்க்காருக்கு வரிகொடுத்துக் கொண்டு வந்தோம். காங்கிரஸ் பெருக்கப் பெருக்க ஏழைகளுக்கும் வரி பெருகிக் கொண்டே வந்து 50 கோடி ரூபாயிலிருந்த வரி இன்றை தினம் 160 கோடி ரூபாயில் வந்து நிற்கிறது. காங்கிரஸ் பெற்ற பிள்ளைகளான இரண்டு சீர்திருத்தங்களும் தேசத்திற்கு கஷ்டத்தையும் அதிக வரியையும் ஒற்றுமைக் குறைவையும் ஜனங்களுக்கு பந்தோபஸ்துக் குறைவையும்தான் ஏற்படுத்தி இருக்கிறதேயல்லாமல் வேறு ஒருவித நன்மையும் உண்டாக்கவேயில்லை. இன்னும் ஒரு சீர்திருத்தம் வருமேயானால் இனியும் அதிகமான வரியும் கஷ்டமும் பந்தோபஸ்து குறைவும் தான் ஏற்படுமேயல்லாமல் அநுகூலம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. இப்பொழுதிருக்கும் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்திற்காக வேண்டி பொய்யும் புரட்டும் ஏமாற்றமும் நிறைந்து கிடக்கின்றன.
தூக்குமேடை!
அதில் ஏமாற்றுகிறவர்களுக்கும் வஞ்சிக்கிறவர்களுக்கும் சுயநலக்காரர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும்தான் இடமிருக்கிறதேயல்லாமல் யோக்கியர்களுக்கு இடமில்லாததோடு ஏழைகளுக்கனுகூலமான திட்டங்களும் அதில் ஒன்றுகூட இல்லை. காங்கிரசின் குற்றங்களை எடுத்து யாராவது வெளியில் சொன்னால் அவர்களை காங்கிரஸ் துரோகி என்று சொல்லுகிறார்கள். சர்க்காரின் குற்றங்களை யாராவது வெளியில் எடுத்துச் சொன்னால் எப்படி அவன் ராஜத் துரோகியாய் விடுகிறானோ, பார்ப்பனர் குற்றங்களை யாராவது வெளியில் எடுத்துச் சொன்னால் எப்படி அவன் பிராமணத் துவேஷியாய் விடுகிறானோ, சாஸ்திரங்களின் புரட்டுகளை யாராவது வெளியில் எடுத்து சொன்னால் எப்படி அவன் மதத்துரோகியாய் விடுகிறானோ அது போலவே நமது பார்ப்பனர்களும் தங்கள் அநுகூலத்திற்காக ஏற்படுத்தி வைத்திருக்கிற காங்கிரஸ் குற்றத்தை யாராவது பேசினால் அவனைக் காங்கிரஸ் துரோகி என்பதோடு மாத்திரமல்லாமல் தேசத் துரோகி என்றும்கூட சொல்லி பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக வேண்டியே என்னை தூக்கில் இடுவதற்காக நமது பார்ப்பனர்கள் ஒரு கமிட்டி ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனது நண்பர்கள் ஸ்ரீமான்கள் சக்கரை, ஆரியா இவர்களை தூக்கில் போட்டு விட்டார்கள். மற்றும் ஸ்ரீமான்கள் கலியாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடுகாரு இவர்களை மிரட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.
தலைவிரித்தாடும் தற்காலத் தலைவர்கள்
காங்கிரசைப் பற்றி குற்றம் சொல்லாத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா? ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பேரில் செருப்பையும் ஜோட்டையும் வீசியெறிந்துவிட்டு வெளியில் வந்து விட்ட மகான்களின் படம் இன்றைய தினம் உங்கள் வீடுகளிலெல்லாம் தொங்குகிறதா, இல்லையா? காங்கிரசையும் காந்தியையும் குழி தோண்டிப் புதைக்க வேண்டுமென்று சொன்னவர்கள் இன்றைய தினம் பெரிய தலைவர்களாகவில்லையா? “மகாத்மாவிற்கு மண்டையில் மூளை இல்லை” என்று சொன்னவர்களும் மகாத்மா சொல்லுவது சட்டத்திற்கு விரோதமென்று சொல்லி அவரைக் கைது செய்யச் சொன்னவர்களும் இன்றைய தினம் காங்கிரசுக்கும், சுயராஜ்யக் கட்சிக்கும் தலைவராக இல்லையா? இன்னும் ஸ்ரீமதி பெஸண்ட் அம்மையார் முதற்கொண்டு, மகா மகாகனம் ஸ்ரீனிவாச சாஸ்திரி முதற் கொண்டு ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி அய்யர், ரெங்கசாமி ஐயங்கார் வரையிலும் எத்தனையோ பேர் காங்கிரசையும் மகாத்மாவையும் திட்டிக்கொண்டு அதன் கொள்கைகளுக்கு விரோதமாய் எதிர்ப்பிரசாரமும் திருட்டுப் பிரசாரமும் செய்துகொண்டு இருந்தவர்கள் இன்றைய தினம் யோக்கியர்களாகி விடவில்லையா? அவர்களுக்கெல்லாம் தூக்குக் கிடையாது; எங்களை மாத்திரம் தூக்கில் போட வேண்டுமாம். காங்கிரஸ் யோக்கியமாயிருந்த காலமாகிய மகாத்மா காங்கிரசில் இருந்த காலத்தில் இப்போதைய காங்கிரஸ் தலைவர்களாகிய இந்தப் பார்ப்பனர்களெல்லாம் அப்பொழுது எங்கு போயிருந்தார்கள்?
காங்கிரஸ் யோக்கியப் பொறுப்பற்று விபசாரித்தனமாயிருக்கிற காலத்தில் இப்பொழுது வந்து அதைக்கட்டி அணைந்து கொண்டாடுகிறார்கள். இப்போதைய காங்கிரஸ் தேசத்திற்கனுகூலமாக என்ன திட்டத்தை உடைத்தாயிருக்கிறது? என்ன காரியத்தைக் கொண்டு காங்கிரசை நாம் மதிக்கக் கூடியதாயிருக்கிறது? ஒரு ஸ்தாபனத்திற்கு நாம் மதிப்புக் கொடுப்பதாயிருந்தால் அதனிடத்திலிருக்கிற கொள்கைக்காகவேயல்லாமல் அதனுடைய பெயருக்காக அல்ல. அதுபோலவே மகாத்மா காந்தியை நாம் மதிப்பதும் அவரிடத்தில் பக்தி செலுத்துவதும் அவரிடத்திலுள்ள கொள்கைக்கும், குணத்திற்கும், நடவடிக்கைக்குமேயல்லாமல் அவருடைய பெயருக்கும், சரீரத்துக்கும், யௌவன அழகுக்குமல்ல. ஆதலால் காங்கிரசின் குற்றத்தை வெளியில் எடுத்துச் சொல்வதினாலேயே ஒருவன் தேசத் துரோகியென்று அழைப்பதென்றால் அப்பேர்ப்பட்ட தேசத் துரோகத்திற்கு நான் கொஞ்சமும் பயப்படவில்லை.
இராஜகோபாலாச்சாரியாரின் இரகசியம்
1923 -த்தில் நடந்த சென்ற சட்டசபைத் தேர்தலின்போது கூட நானும் எனது நண்பர்கள் ஸ்ரீமான்கள் எஸ்.இராமநாதன், தண்டபாணி பிள்ளை, ஆர்.சின்னைய பிள்ளை முதலிய அநேகர் ஒத்துழையாமைக்கு விரோதமாய்ப் புறப்பட்டு டில்லி ஸ்பெஷல் காங்கிரஸ் கட்டளைக்கு விரோதமாக எங்கள் சொந்தத்திலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து கொண்டு பிரசாரங்கள் செய்தோம். மறுபடியும் என்னையேதான் காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகவும் ஸ்ரீமான் இராமநாதன் அவர்களைக் காரியதரிசியாகவும் நியமித்தார்கள். நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கூட சொன்னோம். ஆனால் ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள், இப்பொழுது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் அஸ்ஸாம் காங்கிரஸில் எல்லாம் சரிப்படுத்தி விடுகிறேன் என்று சொல்லி ஏமாற்றி ஆள் சேர்த்து வருவதுபோல், காக்கிநாடாக் காங்கிரசில் எல்லாம் சரிப்படுத்தி விடுகிறேன் என்று சொல்லி எங்களை ஒத்துக் கொள்ளும்படி செய்தார். காக்கிநாடா காங்கிரசில் ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார்தான் எங்களிடம் சொன்னதற்கு விரோதமாய் சட்டசபைப் பிரவேசத்தை ஆதரித்துத் தீர்மானத்தை பிரேரேபித்தார். அது முதற் கொண்டே எங்களுக்கும் அவருக்குமிருந்த கட்டுப்பாடும் நம்பிக்கையும் குலைந்து போய் விட்டது. அதிலிருந்துதான் ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாகவும், நாங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு அனுகூலமாகவும் இருந்து வருகிறோம். ஆனால் அவர் இரகசியமாகவும் தந்திரமாகவும் செய்கிறார்; நாங்கள் வெளிப்படையாகவும் தைரியமாகவும் செய்கிறோம்.
கள்ளை நிறுத்துவது என்கிற பெயரை வைத்துக் கொண்டு பார்ப்பனர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதற்காக ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் ஒரு இயக்கம் என்று ஆரம்பித்துக் கொண்டு ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்தார். அதன் பலனாகத் தான் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதற்காக சில கிராமங்களுக்குச் சென்று பிரசாரமும் செய்தார். அதனால்தான் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காரின் உண்மை நிலையைப் பற்றி நானும் எனது பத்திரிகையின் மூலம் பிரசாரம் செய்தேன். ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் சுயராஜ்யக் கட்சிக்காரர் கள்ளை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டார்கள், ஆதலால் அவர்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்கிறார்; ஆனால் சுயராஜ்யக் கட்சிக்காரர்களோ, ஒருவர் சட்டசபையில் கள்ளை நிறுத்த முடியாது என்கிறார்; மற்றொருவர் முட்டுக்கட்டை போடுவோமென்கிறார்; வேறொருவர் முட்டுக் கட்டை போட முடியாது அரசாங்கத்தைத் திணறச் செய்யலாமென்கிறார்; பிரிதொருவர் அரசாங்கத்தை அசைக்க முடியாது, இதன் மூலம் ஜனங்களுக்கு ஒரு படிப்பினை உண்டாக்கலாமென்கிறார்; இன்னொருவர் படிப்பு ஒன்றும் உண்டாக்க முடியாது; இரட்டை ஆட்சியை ஒழிக்கலாமென்கிறார்; மற்றொருவர் இரட்டை ஆட்சியை ஒழிப்பதில் ஒரு காரியமும் முடிந்து விடாது, சர்க்கார் சொல்லுகிறபடி கேட்கிற ஆள்கள் போய் உட்காருவதைவிட தேசீயவாதியாகிய நாம் போய் உட்காருவது நல்லதல்லவா என்கிறார்; வேறொருவர் தேசீயவாதியானாலும் சரி, யாரானாலும் சரி எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காகப் போக வேண்டுமென்கிறார்.
சென்னையைக் கல்கத்தாவாக்க முயலுகிறார்களா?
வெளியில் இப்படி பலவித அபிப்பிராய பேதங்களிருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் உள் அந்தரங்கத்தில் இவர்கள் எல்லோருக்கும் ஒரே அபிப்பிராயந்தான். அதென்னவென்றால் எப்படியாவது பார்ப்பனரல்லாதாருக்கு இதுசமயம் கொஞ்ச நஞ்சமிருந்துவரும் செல்வாக்கையும், அதிகாரங்களையும், உத்தியோகங்களையும் ஒழித்து அந்த ஸ்தானங்களையும் பார்ப்பனர்களே கைப்பற்ற வேண்டுமென்பதுதான். இந்த மாதிரி கெட்ட எண்ணங்கள் என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்கு நமது பார்ப்பனர்களுக்கு ஆபத்தாய்த்தான் முடியப் போகிறது. உதாரணமாக, கல்கத்தாவில் இரட்டையாட்சியை ஒழித்ததன் பலன்தான் அங்கு இந்து முஸ்லீம் கலகமென்னும் நெருப்பு பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. கல்கத்தா இரட்டையாட்சியை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமே அங்குள்ள மகமதிய மந்திரிகளை ஒழிப்பதற்காக செய்த சூழ்ச்சிகளேயாகும். மந்திரிகளை ஒழித்து வெற்றி பெற்றதன் பலன் இந்து முஸ்லீம் கலகமாய்ப் போய் விட்டது. அதுபோலவே சென்னையிலும் பார்ப்பனரல்லாத மந்திரிகளை ஒழிக்க நமது பார்ப்பனர்கள், காங்கிரஸ் பெயராலும் தேசத்தின் பெயராலும் செய்யும் சூழ்ச்சிகள் நிறைவேறுமானால் என்ன நடக்குமென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
சென்ற வருடம் சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி வெற்றியடைந்ததினால் இவ்வருடம் அத்தேர்தல்களில் என்ன நடக்கிறதென்பதைக் கவனித்தால் நடக்கப் போவது நன்றாய் விளங்கும். சென்ற வருடத்திய பஜனை எங்கே? கொடிகள் எங்கே? மகாத்மாவின் படமெங்கே? தேங்காய் பழம் பூஜையெங்கே? இவர்களுக்காகப் பிரசாரம் செய்த ஸ்ரீமான்கள் சக்கரைச் செட்டியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார் முதலிய பெரியார்களெங்கே? வீதிவீதிக்கு கூட்டமெங்கே? சோம்பேறிப் பையன்களுக்குக் காசு கொடுத்து பார்ப்பனரல்லாத பெரியார்களை திட்டச் சொன்னதும், அடிக்கச் சொன்னதுமான தைரியமெங்கே? ஒரு சிறு புரட்டு வெளியானதெங்கே? இவ்வளவு பலன்கள் காரியங்கள் மறைபட்டிருந்தால் இனி பெரும் புரட்டு வெளியாய் விட்டால் இந்தப் பார்ப்பனர்களின் கதி என்ன ஆகுமென்று நினைக்கிறீர்கள்? வங்காளத்தை விட எண்மடங்கு அதிகமாகுமா இல்லையா? அப்புறம் யாரால் இக்கலகங்களை அடக்க முடியும். அரசாங்கத்தாரும் நன்றாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு சிரிப்பார்களேயொழிய ஒரு கட்சிக்கும் சிபார்சுக்கு வரமாட்டார்கள். பின்னால் கையில் பலத்தவன் காரியமாய்த்தான் போய் விடும். பிராமணர்களே மந்திரியாயும் போலீஸ் அதிகாரியாகவும் வந்தாலும் கூட பார்ப்பனரல்லாதார்கள்தான் போலீஸ்காரர்களாகவும் பட்டாளத்து சிப்பாய்களாவும் இருப்பார்கள். அதுசமயம் மகாத்மா காந்தி வந்தாலும் 4 நாள் பட்டினி இருக்கத்தான்முடியுமே தவிர வேறு ஒரு காரியமும் செய்து விட முடியாது. ஆதலால் இப்பொழுதிருக்கிற ஏதோ சில விஷமக்கார பார்ப்பனர்கள் தாங்கள் வெகு புத்திசாலிகளென்றும் தந்திரசாலிகளென்றும் நினைத்துக் கொண்டு செய்வதின் பலன் நாளைய தினம் ஒரு பாவமுமறியாத இவர்களின் குழந்தை குட்டிகளுக்கும் மாணவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கஷ்டத்தை விளைவிக்குமென்று வருத்தப்படாமலிருக்க முடியவில்லை. ஆதலால் பார்ப்பனர்களில் வாலிபர்களாகவும் பட்ச பாதமற்ற வர்களாகவும், பரிசுத்தர்களாகவும் இருக்கிறவர்கள் தேச நன்மையையும், தங்களது சமூக நன்மையையும் உத்தேசித்து ஒன்று சேர்ந்து தங்கள் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணம் வைத்துக்கொண்டு தேசத்தின் பெயரால் சாது ஜனங்களுக்குச் செய்யும் கொடுமையைத் தடை செய்து கர்மபலனை அடையாமலிருக்கும்படி பிரயத்தனப்பட வேண்டியது அவர்களது கடமையாகும்.
பார்ப்பனர்கள் கடமை
இவ்விஷயங்களைப் பற்றி எடுத்து நான் சொல்லுவதை நீங்கள் அலட்சியமாய் கருதிவிடக்கூடாது. என்னைப் பொருத்தவரையிலும் நான் உண்மையாய் உணர்வதையும் எனக்கு உண்மை என்று பட்டதையுமே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பார்ப்பனர்களை உதைத்துவிட முடியுமென்றாவது இந்நாட்டை விட்டு ஓட்டிவிட முடியுமென்றாவது நான் ஒரு காலமும் நினைக்கவே இல்லை. எப்படியானாலும் மகமதியர் கிறிஸ்தவ சகோதரர்களைப் போலவே அவர்களும் இந்த நாட்டிலேயே இருக்கவேண்டியதுதான். ஆனால் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரர்களாகவும் தேச நன்மைக்குற்றவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும். தேசத்தில் அவர்களிடத்தில் யாருக்கும் நம்பிக்கையில்லை.
சுயராஜ்யமா? சுயமரியாதையா?
இக்காலத்தில் நானும் இந்தப் பார்ப்பனர்களை நம்பி அவர்கள் பின்னால் திரிந்துகொண்டு ஜஸ்டிஸ் கட்சியார் உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொன்னதுண்டு. ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிரிடையாக வேலை செய்த காலமுமுண்டு. அப்படியிருக்க அவர்களைப் பற்றி நான் ஏன் இப்பொழுது குறை கூறுகிறேன். அவர்களால் எனக்கு ஒரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் அவர்களுடைய அந்தரங்கத்தைக் கூடவேயிருந்து பார்த்ததில் அவர்களை விட ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஆயிரம் மடங்கு யோக்கியர்களென்பதே எனது அபிப்பிராயம். பார்ப்பனர்கள் தங்கள் நன்மைக்கும் பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பதற்கும் நம்மை உபயோகப்படுத்திக் கொண்டார்களென்பதையும், இவர்களால் என்றைக்கும் நமது நாட்டிற்கு சுயராஜ்யம் வராதென்பதையும் நன்றாய் நான் அறிந்து கொண் டேன். சுயராஜ்யத்தை விட சுயமரியாதை தான் இப்போது எனக்குப் பெரிதாயிருக்கிறது. நமது சமூகத்திற்கு ‘சூத்திரன்’ என்கிற பெயர் இனி அரை நாழிகையும் இருக்கக்கூடாது. நம்மை அடிமை என்றும் வைப்பாட்டி மகன் என்றும் சண்டையில் ஜெயித்த கைதிகளென்றும் பொருள்கள் கொண்ட ‘சூத்திரன்’ என்கிற பெயரால் அழைப்பதை எப்படி பொறுத்துக் கொண்டிருக்கலாம். ஆதலால் சுயமதிப்பையே பிரதானமாகக் கருதுவது ஒருக்காலும் குற்றமாகாது. இம்மாதிரி ஒரு வகுப்பாரை ஒரு வகுப்பார் கொடுமைப்படுத்தியும் தாழ்மைப்படுத்தியும் தீண்டாதாராக்கியும் நடத்திக் கொண்டிருப்பதை விட மனதில்லாதிருக்கும் போது அந்த தேசம் எப்படி சுயராஜ்யம் அடைய முடியும்?
யார் சம்மதிக்கிறார்கள்?
இவ்விதம் தங்கள் சுயமரியாதையைப் பெறமுடியாத ஜனங்கள் எப்படி சுயராஜ்யம் பெறத் தகுதியுடையவர்களாவார்கள்? வெள்ளைக்காரர்கள் நம்மைப் பார்த்து உங்கள் ராஜ்யத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் போகிறோம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளுவதற்கு இந்தியராகிய நம்மில் யார் தயாராயிருக்கிறோம்? யார் ஏற்றுக் கொள்வதை யார் சம்மதிக்கத் தயாராயிருக்கிறார்கள்? இந்துக்கள் வசம் ஒப்படைத்தால் முஸ்லீம்கள் சம்மதிப்பார்களா? இந்து முஸ்லீம் இருவர்களும் சம்மதித்தால் கிறிஸ்தவர்கள் சம்மதிப்பார்களா? இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் மூவரும் சம்மதித்தாலும் தீண்டக் கூடாது, தொடக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது என்று கொடுமைப்படுத்தி வைத்திருக்கும் பஞ்சமர்கள் என்று சொல்லும் சகோதரர்கள் சம்மதிப்பார்களா? முதலாவது இந்துக்களிலேயே யார் ஏற்றுக் கொள்வதை யார் சம்மதிக்கப் போகிறார்கள்? (பனகால் அரசர் ஏற்றுக் கொள்வதை நானும் நீங்களும் சம்மதிப்போம் என்கிற குரல்) நானும் நீங்களும் சம்மதித்தால் போதுமா? மயிலாப்பூர் அய்யங்கார், அய்யர் சம்மதிப்பார்களா? அல்லது பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்வதை நாம் சம்மதிப்போமா? ஆகையால் இதுசமயம் ஒற்றுமைக்கும், நம்பிக்கைக்கும், சுயமரியாதைக்கும் பாடுபடுவதை விட்டுவிட்டு சுயராஜ்யத்தைப் பற்றிப் பேசுவது வீண் பேச்சேயாகும்.
(சென்னை திருவல்லிக்கேணியில் 31.07.1926 இல் நடைபெற்ற கூட்டத்தின் சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 22.08.1926)