இந்தப் பிரபஞ்சத்தில் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என நம் பூமி மட்டும் தான் நமக்குத் தெரிந்து நாம் உயிர் வாழத் தகுதியானதாக இருக்கிறது. ஆனால் மனித இனத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகளால், கெடுவாய்ப்பாக பூமி கொஞ்சம் கொஞ்சமாக அந்த அற்புதமான பண்பை இழந்து வருகிறது. அதன் உயிர்ச் சூழல் அழிந்து கொண்டே வருகிறது. அந்த அழிமானம் தற்பொழுது முன்னெப்பொழுதையும் விட அதிவிரைவாக நிகழ்கிறது. ஏனென்றால் இந்த மண்ணையோ, மக்களையோ பற்றி அக்கறையற்ற தன் சுயலாபத்தை மட்டுமே கணக்கு பார்க்கும் முதலாளித்துவத்தின் அனைத்தையும் அபகரிக்கும் தான்தோன்றித்தனமான திட்டமிடாத உற்பத்தி முறையும், நுகர்வுக் கலாச்சாரமும், பூமியின் இயற்கை, உயிர் வளங்களையும், மனித வளங்களையும் ஒன்றுமில்லாமல் ஒட்ட உறிஞ்சி விட்டது. அதோடு மட்டுமல்லாமல் உயிர்ச் சூழலில் தொடர்ந்து புகையையும், அமிலத்தையும், நஞ்சையுமே கக்கிக் கொண்டிருந்தால் பூமியால் எவ்வளவு காலம் தான் தாங்க முடியும். வளிமண்டலத்தில் கரியமில வாயு, பசுமைக்குடில் வெப்ப வாயுக்களின் அளவு மிகவும் அதிகமானதில் பூமியானது அதீதமாக வெப்பமாக்கப்பட்டு காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காலநிலை மாற்றமோ புவிவெப்பமயமாதலோ ஒரு கற்பனையானக் கருத்தாக்கம் அல்ல. அதுவே இன்றைய நிகழ்வாகவும் அறிவியல் உண்மையாகவும் உள்ளது. பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் அதிகரித்துள்ளது. உயிர்க் கோளத்தின் சுவாசப் பரிமாற்றத்திற்குத் தேவையான நுரையீரல்களான காடுகள் பெருமளவில் அழிக்கப் பட்டிருக்கிறது. அதன் இரத்த ஓட்டமான நீர் நிலைகள் எங்கும் நஞ்சு பரவியுள்ளது. இதனால் பெருமளவில் பல்வேறு வகையான உயிரினங்கள் அழிக்கப்பட்டுள்ளது. மனித இனம் வாழ்வதற்கு சாதகமான ஒப்பீட்டளவில் நிலையான காலநிலையைக் கொண்டிருந்த ஹாலோசீன் யுகத்தை மனித இனம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

நாட்டு மக்கள் மீதே அக்கறை இல்லாத அரசுகளா காலநிலை மீது அக்கறை கொள்ளப் போகின்றன. சூழலைப் பற்றியோ, மனிதர்களைப் பற்றியோ கவலையில்லாத அரசுகளால் நாம் பெருமளவிற்கு பொருளாதார வாழ்வாதார இழப்புகளை சந்தித்துள்ளோம். பல உயிரினங்களை இழந்துள்ளோம். அப்படி இருந்த போதும் இது வரை 45 நாடுகளில் மட்டுமே காலநிலை அவசரநிலைப் பிரகடனம் செய்து. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவிலோ மத்திய அரசும், மாநில அரசும் பேரழிவுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தான் குறியாய் உள்ளன. அரசு செயல்படுத்தாவிட்டால், செயல்படுத்த வைக்க வேண்டியது மக்களின் பொறுப்பு. ஏனென்றால் செயல்படுத்தாவிடில் இறுதியில் பாதிக்கப்படப் போவது மக்களே. மாற்றம் என்பது மக்களிடமிருந்தே தொடங்கட்டும். இதையெல்லாம் அரசியல் செயல்பாடுகள் மூலமே பெருமளவில் மாற்ற முடியும் என்பது உண்மை தான். அதற்காக சமூக மாற்றத்தில் தனிநபரிடம் ஏற்படும் மாற்றம், அதன் பங்கு குறித்து குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதும் அவசியமில்லை. தனி நபரிடம் ஏற்படும் மாற்றம் அவருடன் முடிவடைந்து விட்டால் நாம் அப்படி தான் கருத முடியும். ஆனால் அதுவே ஒரு சமூக வினையூக்கியாக தொடர்வினை ஏற்படுத்தி சமூக மாற்றத்தை விரைவுபடுத்தவும் காரணியாகவும் இருக்கலாம் என்பதையும் மறக்கக் கூடாது.

ஒரே நேரத்தில் அரசு வழியிலான பெரும சமூக மாற்றத்திற்காகவும், தனி நபர் வழியிலான நுண்ம சமூக மாற்றத்திற்காகவும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.

காலநிலை மாற்றத்திற்கானத் தீர்வாக பசுமை முதலாளித்துவத்தை (Green Capitalism) முன்வைக்கும் போக்கும் காணப்படுகிறது. முதலாளித்துவம் எப்பொழுதுமே பசுமையான நினைவுகளைக் கூடத் தந்ததில்லை.

முதலாளித்துவத்தின் பச்சையான அகோர லாபவெறியை எந்தப் பசுமைப் போர்வையாலும் மறைக்க முடியாது என்பதே உண்மை. அதற்காக முதலாளித்துவ அமைப்பில் இதற்கு தீர்வில்லை என்பதால் இப்பொழுது காலநிலை நீதிக்காகப் போராட வேண்டாம் என விட்டுவிட முடியுமா. இப்பொழுது தான் அதிகம் போராட வேண்டியது அவசியம். நாம் அழிவின் விழிம்பில் நிற்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.. அழிவது முதலாளித்துவ அமைப்பாக இருக்கட்டும். காக்கப்படுவது. நம் உயிர்க்கோளமாக இருக்கட்டும்.

புவியின் உயிர்க் கோளம், ஒரு கூட்டுயிரி, நாம் காட்டில் இருந்தாலும் சரி, நாட்டில் இருந்தாலும் சரி, மனித இனம் இந்த மாபெரும் உயிர்க் கோள வலை பின்னலில் ஒரு நுண்ணிய இழை அவ்வளவு தான். இந்த உயிர்க் கோளத்தின் உயிர்ச் சூழல் காக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு மனித இனத்தின் இருப்பு மட்டும் போதாது, பல்வேறு வகையான பன்மயமான தாவரங்கள், பறவைகள், பூச்சியினங்கள், விலங்குகள் இருந்தாலொழிய சூழல் சமநிலையை நம்மால் பாதுகாக்க முடியாது.

நம் முன்னோர்களிடமிருந்த பெற்ற இப்பூமியை நம் வருங்கால சந்ததியினரிடம் இன்னும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் ஒப்படைக்க வேண்டியப் பொறுப்பு நம்மிடம் உள்ளது. பூமி மனுதனுக்கு சொந்தம் அல்ல, மனிதன் தான் பூமிக்கு சொந்தம் என்பதையே நம் செவ்விந்தியத் தோழர் சியாட்டிலிலிருந்து, நம் அய்யா நம்மாழ்வார் வரை இயற்கை மீது பற்று உள்ள அனைவரும் திரும்ப திரும்ப உணர்த்தியிருக்கிறார்கள். ஆதிமனித இனம் இயற்கையை மதித்துப் போற்றுவதாகவே இருந்துள்ளது. இயற்கையைப் போற்றும் சமூகமாக தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு நம் சங்க இலக்கியங்களே சான்று பகர்கின்றன.

காலப்போக்கில் மனித இனம் இயற்கையை மதிக்கவும், பாதுகாக்கவும் தவறியதால், நஞ்சையே விதைத்ததால் நம் பூமித்தாய் காய்ச்சல் கொண்டிருக்கிறாள், இரண்டு நாளில் சரியாகும் சாதாரணக் காய்ச்சல் அல்ல அது. உயிரைப் போக்கும் விசக்காய்ச்சலால் உயிர்க் கோளம் சின்னாபின்னமாக்கப் பட்டுள்ளது.

இதைப் பற்றி அதிகம் உணர்ந்து கொதித்துப் போனக் குட்டிப் பெண் கிரெடா த்யுன்பெர்க் காலநிலை மாற்றத்தை உலகமே உணர்ந்து விழிப்பு பெறுமளவிற்கு போராடியுள்ளார். அதற்கு புவியர்கள் அனைவரும் அவருக்கு நன்றி பாராட்ட வேண்டும். நமக்கு நம்பிக்கையூட்டும் விதமாக கால நிலை நீதிக்கான போராட்டத்தை உலகெங்கும் இளம் போராளிகள் முன்னெடுத்து அதில் அனைத்து தரப்பினரையும் உள்ளிழுத்து செல்கின்றனர். அவர்களோடு அற வழியில் நாமும் இணைந்து செயலாற்றுவோம். இயற்கையை மதித்து நேசித்து செயல்படும் சமூகத்தைக் கட்டமைப்போம்.

- சமந்தா

Pin It