வேளாண் வரவு-செலவுத் திட்டத்தை (2021) முன்வைத்து

தமிழ்நாட்டு வரலாற்றில் வேளாண் துறைக்காகத் தனி வரவு-செலவுத் திட்டம் வரையறை செய்து வெளியிடுவது இதுவே முதன்முறை. வேளாண் துறை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் மாண்புமிகு எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் வரவு-செலவுத் திட்டத்தை டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் உழவர்களுக்கு அர்ப்பணித்து உரை தொடங்கியது சிறப்பு.

அமைச்சரின் அறிவிப்பில் உள்ள சிறந்த கூறுகளைக் காண்போம்.

(அங்கக) இயற்கை வேளாண்மைக்கான தனித் துறை உருவாக்கப்படும்.

இரசாயன வேளாண்மையில் பயன்படுத்தப்படும் உரம், பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் நமது நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி மக்களின் உடல்நலனைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. இயற்கை விவசாயம் மண்ணின் வளத்தையும் மக்கள்நலனையும் உறுதி செய்யும். வேளாண் இடுபொருட்செலவுகளைக் குறைக்கும். நிலத்தடிப் படிம எரிபொருட்களை எடுக்க வேண்டிய தேவை இருக்காது. எனவே புவி வெப்பமாதலை இத்திட்டம் குறைக்கும். இந்தத் திட்டத்தைத் தமிழ்நாட்டு அளவில் விரிவுபடுத்துவது பன்முக நலன்களைத் தரும். .

கிராமங்களின் தன்னிறைவுக்கான புது திட்டங்கள்:

என்ன திட்டங்கள் என்று குறிப்பிடவில்லை. நாம் பரிந்துரைக்க விரும்புவது: விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை, தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம். சுணக்கமற்ற கொள்முதல்.

“கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்” என்ற திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிடுகின்றது. இந்தத் திட்டத்தின் படி முதல் கட்ட நடவடிக்கயாக 2,500 கிராமப் பஞ்சாயத்துகள் எடுக்கப்பட்டு ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் சராசரியாக ரூ. 10 இலட்சம் ஒதுக்கப்படும். வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவையும் எட்ட இந்தத் தொகை போதாது. ஒற்றைப் பயிர் சாகுபடி, விதை உள்ளிட்ட அந்நிய வேளாண் இடுபொருட்களால் தமிழ்நாட்டு வேளாண் தொழில் சீரழிந்து கிடக்கிறது. வேளாண் தொழிலின் இன்றியமையாத் துணைத் தொழில்களான கால்நடை வளர்ப்பு, பறவைகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பு என யாவும் சீரழிந்து கிடக்கின்றன. வேளாண் பொருளாதாரம் அதீதச் சுரண்டலால் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. உழவர்கள், உழவுத் தொழிலாளர்கள் பெரும் நெருக்கடியில் உள்ளார்கள். பெரிய அளவில் புலம்பெயர்தல் நடக்கின்றது. கலைஞர் பெயரால் அறிவிக்கப்படும் இத்திட்டம் உண்மையாகவே நடைமுறைப்படுத்தப்பட்டால் ஒரு சமுதாய மாற்றத்தை உருவாக்கும் வலுக்கொண்டது. .

தரிசு நிலங்களை விளநிலங்களாக மாற்றும் திட்டம்

இருபோக சாகுபடி நிலங்களாகத் தற்போதுள்ள லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பை, 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்துவது.

நிலம் நம்மிடம் உள்ளது. நீராதாரத்தை மேம்படுத்தினால் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதும், இருபோகம் முப்போகம் பயிரிடுவதும் சாத்தியமே. ஆனால் திட்டம் நிலைத்து நீடிக்க வேண்டுமானால் தற்போதைய நீர் ஆதார உத்திகள் சாத்தியமில்லை.

காவிரி நீர் பெருக வாய்ப்பே இல்லை. ஏனைய ஆற்றுநீரிலும் அண்டை மாநிலங்கள் குறுக்கீடு செய்கின்றன. நிலத்தடிநீரை மேலும் உறிஞ்சுவது தற்கொலைக்கொப்பானது. நாம் மழைப்பொழிவைச் சார்ந்து நிற்க வேண்டும். மழைப் பொழிவைக் கூடுதலாக்கும் வழிவகைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் சுமார் 1,000 மிமீ மழை பொழிகிறது. 1,30,058 சதுர கிலோ மீட்டர் பரப்புக் கொண்ட தமிழ்நாட்டில் பெய்யும் மழை அளவு 4,586 டிஎம்சி. 90 விழுக்காடுதான் மழைப் பொழிவு என்றால் கூட நாம் பெறும் மழைநீர் 4,127 டிஎம்சி. (காவிரித் தீர்ப்பு 177 டிஎம்சிதான். )

சமவெளியில் இந்த நீரை எப்படிச் சேமிப்பது? நமது மன்னர் காலத் தொழில்நுட்பமே நமக்கு உகந்தது. ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீரைச் சேமிக்க வேண்டும். ஏரி, குளங்களைப் புதிதாகவும் உருவாக்க வேண்டும். ஏரி குளங்கள் மழை நீர் அறுவடை செய்வதோடு, பலநோக்குத் திட்டங்களின் மையப் புள்ளியாகவும் அமைக்கப்பட வேண்டும்.

 சராசரியாகக் குளத்து நீர் ஒரு மாதத்தில் ½ அடி அளவிற்கு ஆவியாகும் என்பது கணிப்பு. எனவே 6 அடிக்கு மேல் குளம் ஆழமாக இருந்தால் அடுத்த மழைக் காலம் வரை குளத்தில் நீர் இருக்கும். 12 அடி ஆழம் என்றால் ஒரு ஏக்கர் குளத்தில் சுமார் 6 அடி வரை பயன்படும். அதாவது 1829 மிமீ. ஒரு போகம் நெல் சாகுபடி செய்ய 1200 மிமீ நீர் தேவை. கரும்புக்கு 2,100 மிமீ. பருத்திக்கு 600 மிமீ. சோளம் 500 மிமீ. நிலக்கடலை 450 மிமீ. சிறு தானியங்கள் 400 மிமீக்கு குறைவு. மேற்கண்ட ஒரு ஏக்கர் குளத்தைக் கொண்டு 4½ ஏக்கர் நிலத்தில் சிறு தானியம் பயிரிடலாம். குளத்தில் மீன்வளர்ப்பு மிகவும் இலாபகரமானது. வறட்சிமிக்க இடத்தில் கூட கால்நடைகள் வளர்க்கலாம். பல வகை மரங்கள் வளர்க்கலாம். குளம் வெட்ட ஆகும் செலவைச் சில வருடங்களில் ஈட்டி விட முடியும். சுற்றுச்சூழலுக்கு விலைமதிப்பில்லாக் கருவூலமாகக் குளங்கள் இருக்கும். ஏரி குளங்களின் தொகுப்பு சுற்றுச்சூழலை மேம்படுத்தி உயிர்ப் பன்மையத்தை ஊக்குவிக்கும்.

வேளாண் பயன்பாட்டிற்கு இலவய மின்சாரம் தர மின் வாரியத்திற்கு ரூ 4,508.23 கோடி அரசு ஒதுக்கீடு செய்யும்.

 நிலத்தடி நீரை வேளாண் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது விவேகமற்ற செயல். மழைநீரை நிலத்தடி நீராக மாற்றினால் சிறப்பு. பசுமை செழிக்கும். மழைப் பொழிவு அதிகமாகும். வேளாண் துறையால் மின் உற்பத்தி செய்ய முடியும். கால்நடைக் கழிவு, மனிதக் கழிவு, பண்ணைக் கழிவுகள், நகரக் கழிவுகள், சாக்கடைக் கழிவுநீர் ஆகியவை கொண்டு மீத்தேன் தயாரிக்க முடியும். நாட்டில் சாக்கடைகள் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

 சென்னைப் பெருநகர் தண்ணீர் மற்றும் கழிவு நீர் வாரியம் பெருங்குடி, கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம் ஆகிய இடங்களில் கழிவுநீரைச் சுத்திகரித்து, கிடைக்கும் அடிக்கசடில் இருந்து மீத்தேன் எடுக்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையத்தின் சொந்தப் பயன்பாட்டிற்கு வெளியில் இருந்து மின்சாரம் தரப்படுவதில்லை.

 காற்றாலை மின்சாரமும் ,கதிரவ ஒளி மின்சாரமும் நிலத்தைப் பெருமளவில் ஆக்கிரமிக்கின்றன. இன்றளவில் நமது நாட்டின் சொந்ததத் தயாரிப்புகள் அல்ல இவை. இவை உருவாக்கும் கழிவுகள் எதிர்காலச் சிக்கல்களாக உருவாகும்.

 ஆனால் மனித சமூகங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் கழிவுகள் உருவாகவே செய்யும். ஆரோக்கியமான சூழலுக்குக் கழிவுகளை அகற்றியாக வேண்டும். கழிவுகளை அகற்றும் அதே நேரத்தில் அவறில் இருந்து நமக்கு அவசியமான எரிவாயுவையும் ,மின்சாரத்தையும் எடுப்பதோடு குப்பைகளைப் பயிருக்கு உரமும் ஆக்கலாம். மக்கும் கழிவுகளில் இருந்து மீத்தேன், மின்சாரம் எடுப்பதோடு, இந்த ஆலைகள் வெளித் தள்ளும் செரிக்கப்பட்ட கழிவுகளைப் பயிர்களுக்கு உரமாக்கலாம். இவ்வகை ஆலைகளுக்கு மூலதனம் குறைவு. சிறு சிறு அமைப்புகளாகப் பரவலான இடத்தில் அமைக்கப்படுவதால் போக்குவரத்துச் செலவுகள் குறைவு. மின்சார இழப்பும் மிகவும் குறையும். விவசாயத்தை மையமாக கொண்டு இயங்கும் கழிவுகள் மூலம் பெறும் மின்சக்தியே சாலச் சிறப்பானது. ஊர்தோறும் நகரந்தோறும் மீத்தேனும் ,மின்சாரமும் உற்பத்தியானால் அது ஒரு புரட்சியாக அமையும். டீசலுக்கு பதிலாக மீத்தேன் பயன்படுமென்பதால் புதைபடிவ எரிபொருளான டீசல் தேவைப்படாது. அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டாலும் மீத்தேன் மின்நிலையங்கள் நாடெங்கும் இயங்கும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 573.24 கோடி ஒதுக்கப்படுகிறது.

பசுமைப் புரட்சி என்ற வேளாண்மையை ஒழித்த திட்டத்திற்கு வேலை செய்து பழகிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு எவ்வளவு பெரிய தொகை தரப்பட்டுள்ளது! எதிர்மறைப் பங்களிப்பிற்கு ஊக்கம் அளிப்பது மக்களை திசைதிருப்பும். ராக்ஃபெல்லர்/ஃபோர்டு அறக்கட்டளைகளும், கார்னல் பல்கலைக்கழகமும் தரும் ஆலோசனைகளின் படி செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இது வரையிலும் அன்னியச் சக்திகளின் விரிவாக்கத்திற்கு உதவும் வேலையைத்தான் செய்துவருகிறது. இந்த மண்ணின் மரபுகளை மதித்துப் பாரம்பரிய வேளாண்மையை அறிவியல்வழியில் செழுமைப்படுத்த அவர்கள் அணியம் என்றால் மட்டுமே இந்தச் செலவை நியாயப்படுத்த முடியும்.

கிராமப்புற இளைஞர் வேளாண் திறன் வளர்ச்சிப் பணி (Rural Youth Agricultural Skill Development Mission):

 உயரிய நோக்குகளை இளைஞர்களிடம் முன்வைப்பதானால் முதலில் வேளாண் தொழில், துணைத்தொழில்கள் இலாபகரமாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். வேளாண்மைக்கான இடுபொருட்கள் அனைத்தும் கம்பெனிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் வேளாண்மையின் பெருஞ்செல்வம் வெளியேறுகின்றது. மான்சாண்டோ போன்ற பகாசுரக் கம்பெனிகள் மரபீனி மாற்று விதைகள் மூலம் நாட்டின் வேளாண் உற்பத்தியை அடிமைப்படுத்த முயல்கின்றன. ஒன்றிய அரசும் இதற்கு உடந்தையாகவே உள்ளது. விளைபொருட்களின் விலையையும் ஒன்றிய அரசு அரசியல் பொருளாதார அடிமைப்படுத்துமுகமாகக் கட்டுப்படியாகாத நிலையிலேயே வைத்துள்ளது. வேளாண் தொழில் வளர ஒன்றிய அரசின் குறுக்கீடுகள், சட்டங்கள் மறுதலிக்கப்பட வேண்டும். இவை நடந்தால் அன்றி வேளாண் துறை இளைஞர்களின் மனத்தை ஈர்க்க முடியாது. .

பனைப் பாதுகாப்பு, பனை விதை நடுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் தமிழ்நாட்டு அரசை பாராட்டுவோம்.

 பனையை ஆந்திர மாநிலத்தில் கற்பகத்தரு என்று அழைக்கின்றனர். மகாத்மா காந்தி அவர்களும் அவ்வாறே அழைத்தார். பனைக்குத் தேவையான இடம், நீர்த் தேவை மிகக் குறைவு. ஆனால் ஒரு பனை தரும் வெல்லம் ஒரு குடும்பத்திற்குப் போதுமானது. தமிழ்நாட்டில் இருக்கும் பனைகள் மக்களுக்குத் தேவையான சர்க்கரைத் தேவையை நிறைவு செய்யும். பனை வெல்லம் பலவித சத்துகள் கொண்டது. நீரிழிவு நோய், சோகை நோய் வர மாட்டா. நிறையப் தண்ணீர்த் தேவை கொண்ட கரும்புப் பயிர் பயிரிடுவதைக் குறைக்கலாம்.

தமிழ்நாட்டில் சுமார் 9,46,393 ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகின்றது. இதற்கு தேவைப்படும் நீர் சுமார் 284 டிஎம்சி. இவ்வளவு நீரை செலவிட்டு உருவாக்கப்படும் சர்க்கரை ஏற்றுமதி ஆவதே அதிகம். இன்று 10. 09. 2021 செய்திப்படி 70 இலட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி ஆகிறது. இதற்குச் செலவிடப்பட்ட நீர் 78 டிஎம்சி என்பதை மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். பனையை சரியாகக் கையாண்டால் தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மாற்றம் வரும் .

13,300 உழவர் குடும்பங்கள் பயனடையும் விதத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பு குறிப்பான செயல் திட்டம் வேண்டும்.

தலைமைச் செயலர் தலைமையில் வேளாண் குழு அமைத்தல்; வேளாண் திட்டங்களைப் பரிசீலித்தல் மற்றும் தீர்வுகள் காணுதல்.
 
காய்கறிப் பயிர் சாகுபடிக்கு விதைகள் விநியோகம் செய்யும் திட்டம்:

இது பெரிய அளவில் நஞ்சில்லா உணவு உற்பத்திக்கு உதவும். ஆனால் பரவி வரும் மரபீனி மாற்று விதைகளைத் தவிர்த்துப் பாரம்பரிய விதைகளைப் பரப்ப வேண்டும். நமது நாட்டு உணவே நமக்கு மருந்து.

உழவர்களுக்கு விளைபொருட்களை உலர்த்தும் 28 இடங்கள்.

கதிரடிக்கக் களம், உலர்த்தும் கருவிகள், சேமிப்பு வசதி ஊர்தோறும் அமைப்பது பயனுள்ளதாக இருக்கும்.

நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்

நம்மாழ்வாரின் திட்டங்கள், கருத்துகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கருத்துகளுக்கு நேர் எதிரானவை. எனவே இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தை திரு சுல்தான் ஐயா போன்ற வேளாண் அறிஞர்களின் பார்வையில் தனித்து இயங்கும் அமைப்பாக நிறுவுவதே சரியானதாக இருக்கும். . தொகுத்துக் கூறுவதென்றால் தமிழ்நாட்டரசின் வேளாண் வரவு செலவுத் திட்டத்தின் பார்வை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. புதிய பாதைகள் ஆர்வமூட்டுகின்றன. இடைவிடா முயற்சியுடன் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திற்கு ஒரு மாதிரியாக அமையும்.

கோ. திருநாவுக்கரசுதாளாண்மை உழவர் இயக்கம்