"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

 தீரா இடும்பை தரும்" -- திருக்குறள் 510.

தேர்தல் என்ற சொல்லுக்கு ஆராய்தல் என்று பொருள். தெளிதல் என்றால் முடிவு செய்தல். தம்மை அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு ஆள வேண்டியவர்களை வாக்காளர்களே தேர்ந்து தெளியும் வாய்ப்பை வழங்குவது குடியாட்சியத்தின் (சனநாயகத்தின்) மாண்புகளில் ஒன்று. இந்திய அரசமைப்புச் சட்டமும் தேர்தல் முறையும் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமையை உறுதி செய்கின்றன.

election indiaஅரசமைப்பின் சிற்பி அண்ணல் அம்பேத்கர் இந்த அரசியல் குடியாட்சியத்தைப் போற்றிய போதே இதிலடங்கியுள்ள அடிப்படை முரணிலையையும் தெளிவாக வெளிப்படுத்தினார்: ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்ற அரசியல் நிகர்மையை நாம் நிறுவியிருப்பினும், சமூகப் பொருளியல் ஏற்றத்தாழ்வு என்னும் அடித்தளத்தின் மீதுதான் இந்த மேற்கட்டுமானத்தை நிறுவியுள்ளோம். அந்த அடித்தளத்தை விரைவில் மாற்றியமைக்கத் தவறுவோமானால் சமூகப் பொருளியல் ஏற்றத்தாழ்வு அரசியல் நிகர்மையைத் தகர்த்து விடும். இது அண்ணலின் எச்சரிக்கை. அரசியல் குடியாட்சியத்துக்கு அடிப்படையாக சமூகக் குடியாட்சியம் தேவை என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் தாம் வரைந்த அரசமைப்பு சமூகக் குடியாட்சியத்தை நிறுவத் தவறி விட்டது என்பதை அவர் விரைவில் உணர்ந்து கொண்டார். இறையில்லம் ஒன்று கட்டினோம், அதில் பேய் புகுந்து கொண்டால் கொளுத்தி விட வேண்டியதுதான் என்றார்.

முதலியத் தனியுடைமை அமைப்பு குடியாட்சியத்தைப் பொய்மையாக்குவது பற்றி இலெனின் எழுதியுள்ளார். எவ்வளவு சிறந்த குடியாட்சியக் குடியரசும் சாறத்தில் முதலாளர் வகுப்பின் வல்லாட்சியமாகவே இருப்பதை எடுத்துக்காட்டினார். உடைமை உறவுகள் குடியாட்சியத்தின் சாற்றை உறிஞ்சி அதனை வெறும் சக்கை ஆக்கி விடுகின்றன, வெறும் வடிவ அளவிலான குடியாட்சியம் என்பது சனநாயகத்தைப் பணநாயகம் ஆக்கி விடுகிறது.

சமூகப் பொருளியல் ஏற்றத்தாழ்வு அரசியல் குடியாட்சியத்தைப் பொருளற்றதாக்கி விடுவது பற்றிய அம்பேத்கர் சிந்தனையும், உடைமை உறவுகளால் குடியாட்சியம் கூடாகிப் போவது பற்றிய இலெனின் கருத்தும் வெறும் கோட்பாடுகள் மட்டுமல்ல என்பதை இந்தியக் குடியரசின் எழுபதாண்டுப் பட்டறிவு நமக்கு உணர்த்தியுள்ளது. இந்தியா ஏழை நாடுதான் என்றாலும் இந்திய நாடாளுமன்றம் ஏழை எளியவர்களின் மன்றமன்று என்பது வெள்ளிடைமலை. தேர்தலில் போட்டியிடுவதற்கே கோடிகள் தேவை. ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒரு வேட்பாளர் 30 இலட்சம் செலவிடத் தேர்தல் ஆணையமே இசைவளிக்கிறது. சட்டப் பேரவைக்குக் குறைந்தது இலட்சாதிபதிகள், நாடாளுமன்றத்துக்குக் குறைந்தது கோடீசுவரர்கள்… இதுதான் எழுதப்படாத விதி.

ஒப்புக்குப் போட்டியிடாமல் உண்மையிலேயே: ”வெற்றி வேட்பாளர்” என்று சொல்லிக் கொள்ளுமளவுக்குப் போட்டியிட வேண்டுமானால் பெருந்தொகைகள் தேவைப்படும். இருக்கிற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தை இன்னுங்கூட மேடுபள்ளமாக்குவதே இந்தத் தேர்தல்களும் இவற்றால் விளையும் ஆட்சிகளும் செய்யும் வேலையாக இருக்கும். அம்பேத்கர் சுட்டிய முரணிலை தணியவில்லை, மென்மேலும் முற்றி மோசமடைந்தே நிற்கிறது.

நிகர்மையும் நீதியும் குறிக்கோள்களாகக் கொண்டவர்கள் இப்படிப்பட்ட தேர்தல் அரசியலில் ஈடுபட்டு என்ன சாதித்து விட முடியும்? என்ற கேள்விதான் ஓங்கி எழுகிறது. பச்சைப் பெருவெள்ளத்தில் எதிர்நீச்சலிடக் குதித்தவர்கள் மூழ்கிப் போகின்றார்கள். அல்லது அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றார்கள். இடதுசாரிகள், குடியாட்சியர்கள், குமுகியர்கள் (சோசலிஸ்டுகள்), பொதுமையர், சமூகநீதியாளர்கள் என்று பலதரப்பட்ட முற்போக்காளர்களும் இந்தத் தேராத் தேர்தலில் அடைந்துள்ள பட்டறிவே இதற்குப் போதிய சான்று!

பொதுமையரை எடுத்துக் கொள்வோம். இந்தக் குடியாட்சியத்தில் வாக்குப் பெட்டி வழியாகப் பாட்டாளிகளின் அரசமைக்கும் முயற்சி என்னவாயிற்று? 540க்கு மேற்பட்டோரைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் கால் பங்கு இடங்களில் கூட அவர்களால் போட்டியிட முடியவில்லையே, ஏன்? ஓரிரு மாநிலங்களில் மட்டுமே அவர்களால் பெருந்தொகையான இடங்களில் போட்டியிடவே முடிகிறது. ஆளும் வகுப்புக் கட்சிகளால் மட்டுமே அனைத்திந்திய அளவில் போட்டியிடவும் மாறிமாறி ஆட்சியைக் கைப்பற்றவும் முடிகிறது. மற்றக் கட்சிகள் அவற்றோடு ஒட்டிக் கொண்டால் மட்டும்தான் தங்கள் இருப்பைப் பதிவு செய்யவே முடியும் என்ற நிலை!

இந்தியா ஒற்றைத் தேசமன்று, பல தேசங்களைக் கொண்ட நாடு! புவியியல் நோக்கில் ஒரு துணைக்கண்டம்! அரசியல் நோக்கில் ஓர் அரசக் கட்டமைப்பு! மாநிலங்கள் என்று மங்கலமாய் வழங்கிடும் இந்தத் தேசங்களின் நலனைக் குறித்திடும் அரசியல் ஆற்றல்கள் தனித்தோ கூட்டாகவோ தேர்தல் வழியாக அதிகாரப் படிகளில் ஏறிச்செல்வது பற்றி எண்ணிப் பார்த்திடவும் கூடுமா? ஆளும் வகுப்புக் கட்சிகளின் தயவில் மட்டும், இடைக்கட்டங்களில் மட்டும் நாற்காலி விளிம்பில் அமர்ந்து பார்க்கலாம். அதற்கு மேல் ஆசைப்பட்டு விடக் கூடாது. தேவ கௌடாவும் ஐகே குஜ்ராலும் சந்திரசேகரும் நடத்திய நொண்டியாட்டம் வரலாற்று நினைவுகளில் பதியுமளவுக்காவது நீடித்துண்டா?

பணநாயகத்தின் இயங்குமுறையே உழைக்கும் மக்களையும் ஒடுக்குண்ட saமுகாயங்களையும் சிறுபான்மை மக்களையும் தேசிய இனங்களையும் அதிகார நிழலில் ஒதுங்க விடாமற்செய்து விடுகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆகவே விடியல் தேடி மாற்றம் நாடும் ஆற்றல்களை வழிமறிக்கவே வாக்குப் பெட்டிகள் பயன்படுகின்றன. ஆளும் அரசமைப்பை அப்படியே ஏற்று, அடிப்படை மாற்றங்களை எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்குள் மட்டும் அதிகாரப் போட்டியைக் குறுக்கிக் கட்டுப்படுத்தவே இந்தத் தேர்தல் முறை உதவுகிறது.

இந்தியச் சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகளில் ஒன்று சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையிலானது. இந்த முரண்பாட்டின் வெளிப்பாடுதான் தீண்டாமை. பெரும்பான்மைக்கு அதிகாரம் தருதல் என்ற தேர்தல் முறையின் அடிப்படை சிறுபான்மையினரான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அமைந்து விடும் என்ற நியாயமான அச்சம் அம்பேத்கருக்கு இருந்தது. தனித் தொகுதி (ரிசர்வ் தொகுதி) ஏற்பாடு இதற்குப் போதாது என்ற புரிதலோடுதான் இரட்டை வாக்குரிமையும் தனித் தொகுதியும் என்ற கோரிக்கையை அவர் எழுப்பினார். தலித் அமைப்புகளே இப்போதெல்லாம் இந்தக் கோரிக்கையை எழுப்புவதில்லை. எழுப்புவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் போலும்.

தலித் விடுதலை, சமூக மாற்றம், மக்கள்-குடியாட்சியம் ஆகிய உயர்ந்த குறிக்கோள்களை அடைவதற்கு இப்போது இந்த நாட்டிலுள்ள தேர்தல் முறை உதவாது என்பதால் முற்போக்கு ஆற்றல்கள் வாக்கரசியலை மூலவுத்தி வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்கிறோம். இந்தத் தேர்தல் முறையில் அடிப்படையான சீர்திருத்தங்கள் வேண்டும் என்பதற்காகப் போராடலாம். இதற்கிடையில் வாக்கரசியலைப் புறக்கணிப்பது தவிர வேறு வழியில்லை. இது மூலவுத்தி வகைப்பட்ட புறக்கணிப்பு (strategic boycott).

ஆனால் தேர்தல் அரசியலைப் பகுதிக் கோரிக்கைகளுக்காகவும், சில உடனடி நோக்கங்களுக்காகவும், பார்க்கப் போனால் நாடாளுமன்ற அரசியலின் வரம்பை உணர்த்துவதற்காகவும் கூட பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறான நிலைமைகளில் தேர்தல்களிலும் தேர்தல் வழி நாடாளுமன்றம், சட்ட மன்றங்களிலும் பங்கேற்பது தேவையான ஒன்று. இவ்வாறான பங்கேற்பை குறுவுத்தி வகைப்பட்ட பங்கேற்பு (tactical participation) என்கிறோம். முதலியத் தேர்தலிலும் நாடாளுமன்றத்திலும் பங்கேற்க வேண்டிய தேவையை மறுத்த பல நாடுகளையும் சேர்ந்த இடதுசாரிகளைக் குற்றாய்வு செய்து இலெனின் எழுதிய நூல்: ”இடதுசாரிப் பொதுமை” – ஓர் இளம்பருவ நோய்!

உருசியப் புரட்சியின் வரலாற்றில் இலெனின் தலைமையிலான போல்சுவிக்குகள் டூமா எனப்படும் ஜாராட்சிக் கால நாடாளுமன்றத்தைப் புறக்கணித்ததும் உண்டு, அதில் பங்கேற்றதும் உண்டு. சீனப் புரட்சியின் வரலாற்றில் தேர்தலில் பங்கேற்பது, நாடாளுமன்றம் செல்வது பற்றிய கேள்வியே எழவில்லை. ஏனென்றால் அப்படி எதுவும் அங்கே இல்லை.

அண்மைக் காலத்தில் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெற்றி கண்ட நேபாளப் புரட்சியின் வரலாற்றில் மாவோவியர்கள் முதலில் நாடாளுமன்றம் சென்றார்கள், பிறகு மக்கள்-போர் என்ற ஆயுதப் போராட்ட வழியைப் பத்தாண்டு காலம் கையாண்டார்கள். பிறகு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஏனைய குடியாட்சிய ஆற்றல்களுடன் இணைந்து பெருந்திரள் எழுச்சியில் பங்கேற்றார்கள். எழுச்சியின் உச்சமாக அரசமைப்புப் பேரவைக்கான தேர்தலை நடத்தச் செய்து அதில் போட்டியிட்டு வென்றார்கள். இன்றளவும் பல சிக்கல்கள் நீடித்தாலும் நேபாள இந்துத்துவ முடியாட்சி ஒழிந்தது ஒழிந்ததுதான்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க வல்லரசியத்தின் புதுக்காலனிய ஆளுமையை எதிர்த்துப் போராடுவதில் தேசியக் குடியாட்சிய ஆற்றல்கள் தேர்தல்களைப் பயன்படுத்திக் கொள்வதில் வெற்றியும் தோல்வியும் கலந்த செழுமையான பட்டறிவு பெற்றுள்ளன. இந்தச் சிக்கல் தொடர்பான அலசலில் இந்நாடுகளின் பட்டறிவிலிருந்து கற்க வேண்டியன நிறைய உள்ளன. தென் ஆப்பிரிக்கத் தேசிய விடுதலை இயக்கம், பாலத்தீனத் தாயக மீட்பு இயக்கம் ஆகியவற்றின் பட்டறிவும் கூட நம் பாதையில் ஒளியூட்டும்.

இவ்வகையில் பலதரப்பட்ட பன்னாட்டுப் பட்டறிவு நிறையவே உண்டு. அறுதிப் புறக்கணிப்போ அறுதிப் பங்கேற்போ ஏற்புடைத்தன்று, போராட்டத்தின் நலன் கருதி இரண்டில் ஒன்றை நிலைமைக்கேற்பத் தேர்வு செய்யலாம். இதற்கும் மேலே போராட்டக் களங்களை இரு பெரும் வகைகளாகப் பிரித்துக் கொள்வது நம் ஆய்வுக்கு உதவும் என நம்புகிறேன். இலெனினுடைய ஆய்வு முழுவதும் உருசியா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய தேசங்கள் தொடர்பாக அமைந்தது. தேச அரசுகளாக உருவான நாடுகளில் தேசிய விடுதலை பற்றிய கேள்வி எழாத சமூகச் சூழலில் அவர் இச்சிக்கலை ஆராய்ந்தார். தேசிய விடுதலைப் போராட்டக் கட்டத்தில் இருக்கும் நாடுகளில் தேர்தல் பங்கேற்பு அல்லது புறக்கணிப்பு பற்றிய விவாதங்கள் இலெனின் ஆய்வுகளில் இடம்பெறவே இல்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட நாடுகளில் தேர்தல் குடியாட்சியம், நாடாளுமன்றம் எதுவும் அவர் அறிந்த வரை இல்லை. சீனத்தில் குடியாட்சியப் புரட்சியில் வலுவான தேசிய விடுதலைக் கூறு இருந்தது. வியத்நாமிலும் இதே நிலைதான். ஆனால் அங்கெல்லாம் இந்தச் சிக்கல் அவரறிய எழவே இல்லை.

ஆனால் பிரித்தானிய இந்தியா வன்குடியேற்ற நாடாக இருந்த போதே வாக்குரிமையும் தேர்தலும் நாடாளுமன்றமும் வந்து விட்டன. சிலோன் என்றறியப்பட்ட இலங்கையில் 1930களிலேயே வயதுவந்த அனைவருக்குமான வாக்குரிமை வந்து விட்டது. இந்த வாக்குரிமையே சிங்களப் பேரினவாத மேலாளுமைக்குத் துணையாகிப் போயிற்று. பெரும்பான்மை வைத்தது சட்டம் என்பது ஒரே தேசிய இனத்துக்குள் குடியாட்சியத்தை நிலைநிறுத்தும் கொள்கை என்ற நிலையிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் கொண்ட ஒரு நாட்டில் பெரும்பான்மைத் தேசிய இனத்தால் சிறுபான்மைத் தேசிய இனம் ஒடுக்கப்படுவதற்கு எளிதில் வழிசெய்து விடுகிறது. எனவேதான் குடியாட்சியம் மெய்ப்பட வேண்டுமானால் வயதுவந்த அனைவர்க்கும் வாக்குரிமை மட்டும் போதாது. ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தன்தீர்வுரிமையும் (சுயநிர்ணய உரிமை) வேண்டும்.

ஒரு நாடு சமூக மாற்றத்துக்கான போராட்டக் கட்டத்தில் இருக்கும் போது முற்போக்கு ஆற்றல்கள் தேர்தலில் போட்டியிட்டு மெல்ல மெல்லப் பெரும்பான்மை பெற்று அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு கோட்பாட்டு வாய்ப்பு (theoretical possibility) உள்ளது. தேசிய விடுதலைக்கான போராட்டக் கட்டத்தில் இருக்கும் போது இப்படிப்பட்ட வாய்ப்பு அரிதிலும் அரிதே. அதிலும் குறிப்பாக ஒடுக்குண்ட தேசம் மொத்தத்தில் சிறுபான்மையாக இருக்குமானால் இந்தக் கோட்பாட்டு வாய்ப்பே இல்லாமற்போய் விடுகிறது. எனவேதான் சமூக மாற்றத்துக்கான போராட்டக் கட்டத்தில் பங்கேற்பும் தேசிய விடுதலைப் போராட்டக் கட்டத்தில் புறக்கணிப்பும் பொது வழியாக உள்ளன. இந்த இருபெரும் வகைகளையும் அருவியல் கோட்பாடுகளின் (abstract theories) அடிப்படையில் வேறுபடுத்திக் காண்பதோடு சிக்கல் முடிந்து விடுவதில்லை. வரலாற்று வழியில் உருவியல் நிலைமைகளைக் (concrete conditions) கணக்கில் கொண்டுதான், அதாவது களமும் காலமும் கருதித்தான் தேர்தல் தொடர்பான அணுகுமுறையைத் தீர்மானிக்க வேண்டும்.

இந்தியாவை இயல்பான ஒரு தேசமாகக் கற்பிக்க ஆளும் வகுப்புகள் ஓயாது முயல்கின்றன. ஆனால் இந்தியா என்ற அரசியல் கட்டமைப்பு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பீரங்கி முனையில் கட்டப்பட்டது என்பதே வரலாற்று உண்மை. கிழக்கிந்தியக் கும்பினியாரோ விக்டோரியா மகாராணியாரோ இந்தியாவின் வளங்களைக் கொள்ளையிடவும் இந்தத் துணைக்கண்டத்து மக்களினங்களை அடக்கியாளவும் வரலாற்று உரிமை வழங்கியது யார்? இந்தக் கேள்வி நம் காலத்திய இந்திய ஆட்சியாளர்களுக்கும் பொருந்தக் கூடியதே.

காசுமீரம் இந்தியாவுக்குச் சொந்தம் என்ற வாதத்துக்குச் சான்றாக மன்னர் அரிசிங் ஒப்பமிட்ட இணைப்பு ஒப்பந்தம் காட்டப்படுகிறது. தமிழ்நாடு இந்தியாவுக்குச் சொந்தம் என்பதற்கு ஒப்பந்தம் உண்டா? உண்டென்றால் அதில் ஒப்பமிட்டவர் யார்? அன்றும் இன்றும் இந்தியா விரும்பிச் சேர்ந்த தேசங்களின் ஒன்றியம் இல்லை. இந்தச் செயற்கைக் கட்டமைப்பை நியாயப்படுத்தவும், வல்லரசியத்தின் சமூக அடித்தளத்தை விரிவாக்கிக் கொள்ளவும், தமக்கெதிரான போராட்டங்களை மடைமாற்றவும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இந்தியாவில் தேர்தல் முறையை வரம்புக்குட்பட்ட அளவில் புகுத்தினார்கள்.

உண்மையில் 1935ஆம் ஆண்டு ஆங்கிலேயர் கொண்டுவந்த இந்திய அரசாங்கச் சட்டம் மாகாணங்களுக்கு வழங்கியதை விடக் குறைவான அதிகாரங்களையே இந்திய அரசமைப்புச் சட்டம்-1950 மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களின் நிலை அ இவ்வகையில் மிண்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம் (1909), மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் (1919), இந்திய அரசாங்கச் சட்டம் (1935) ஆகியவை கொண்டுவரப்பட்டன. 1920ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம் மாகாணங்களில் இரட்டையாட்சியை உருவாக்கியது. முகன்மையற்ற சில அதிகாரங்களைத் தேர்தல் வழித் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு வழங்கியது. அதை வைத்துக் கொண்டு நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் சில சீர்திருத்தங்கள் செய்தது. 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாகாண சுயாட்சி வழங்குவதாகக் கூறிக்கொண்டது. மத்தியில் இரட்டை ஆட்சியை உருவாக்கியது. ஒப்பளவில், 1935ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் மாகாணங்களுக்கு அதிக உரிமைகளை, அதிகாரங்களை வழங்கியது. ஆனாலுங்கூட, ஒரு நாட்டை அடக்கி மேலாளுமை செலுத்துவதற்கான ஒரு சட்டமாகத்தான் ஆங்கிலேய அரசு அதை உருவாக்கியிருந்தது. அது மாகாண சுயாட்சி அளிப்பதாகக் கூறியிருந்தாலும்கூட, அந்த மாகாணங்களை "மாண்புமிகு நகராட்சிகள்" (Honourable Municipalities) என்று காந்தியார் வண்ணித்தார். இந்த 1935ஆம் ஆண்டுச் சட்டம்தான் சிற்சில மாற்றங்களுடன் 1950ஆம்ஆண்டு இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்டமாயிற்று என்பது வல்லுநர்தம் கருத்து.

வலமான ஒன்று. மாநில அரசுகள் மிகக் குறைந்த அதிகாரங்களுடன் தட்டுத் தடுமாறியே காலந்தள்ள வேண்டிய நிலை! இரந்து உயிர்வாழும் இழிநிலைக்கு மாநிலங்கள் தள்ளப்பட்டுள்ளன.

மாநிலச் சட்ட மன்றங்களுக்குச் சட்டமியற்றும் இறைமை கிடையாது. சட்ட முன்வடிவுகளை மட்டுமே அவற்றால் இயற்ற முடியும் 

சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, நடுவணரசைத்தான் மாநில அரசுகள் தொங்கிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, தாமாகச் சட்டமியற்ற அதிகாரமில்லை. 1974ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவை இயற்றிய மாநில சுயாட்சித் தீர்மானத்தை இந்திய நடுவண் அரசு குப்பைக் கூடையில் வீசி 46 ஆண்டுகள் ஆகி விட்டன.

மாநில அரசுக்கென்று இருக்கும் கொஞ்சநஞ்ச அதிகாரங்களும் இந்திய ஆட்சியாளர்களால் மென்மேலும் பறிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் பொருளியலாகச் சூறையாடப்படுகிறது. பண்பாட்டில் பார்ப்பனியம் ஆட்சி செய்கிறது. தமிழ் மொழி ஆட்சிமொழியாக, வீட்டு மொழியாக, நீதி மொழியாக, வழிபாட்டு மொழியாக விளங்க வாய்ப்பின்றிக் கிடக்கிறது. இந்திய வல்லரசுக்குத் தமிழ்த்தேசம் அடிமைப்பட்டுள்ளது. இந்த அடிமைநிலை ஒழிய வேண்டும் என்ற நோக்கத்துக்குத் தேர்தல் அரசியல் எந்த அளவுக்குப் பயன்படும் என்ற வினா எழுகிறது.

நிகழ் அரசமைப்பு மாற்றியமைக்கப்பட்டு, தேசிய இனக் குடியரசுகளின் கூட்டமைப்பாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் நலன் வேண்டுவோர் வலியுறுத்தும் கொள்கையாக இருக்க முடியும். பிரிந்து போகும் உரிமையோடு கூடிய தன்தீர்வுரிமை என்பது ஐநா பட்டயம் உள்ளிட்ட பன்னாட்டு சட்டங்களில் ஏற்கப்பெற்றுள்ளது. இந்த உரிமையை ஏற்காத எந்த அரசமைப்பும் முழுமையான குடியாட்சியம் என்ற தகுதியைப் பெற முடியாது. ஆனால் தேசிய இனங்களின் இருப்பையே ஏற்காத இந்திய அரசமைப்புக்கு இணங்கி நடந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையில், தமிழ்த் தேசத் தன்தீர்வுரிமை, தமிழ்த்தேச இறைமை, தமிழ்த் தேச விடுதலை என்ற கொள்கைகளை எடுத்துரைத்து மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்கவாவது இந்தியத் தேர்தல்களில் வாய்ப்புண்டா?

மொழித் தேசிய இனத் தாயகங்களின் உறுதியான போராட்டங்களால் மொழிவழி மாநிலங்கள் அமைப்பை வேறுவழியின்றி இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால் தேசிய இனங்களின் வாழ்புலத்தை மொழிவழித் தேசிய இனங்களின் தாயகமாக அது மதிக்கவில்லை. அவற்றை வெறும் ஆட்சிப் பிரிவுகள் போலவே பார்க்கிறது. மொழிவழி மாநில அமைப்பை அறவே கலைத்துப் போடுவது இப்போதுள்ள ஆட்சியாளர்களின் வெளிப்படையான நோக்கம்.

 இந்திய அரசமைப்பில் மூன்றாம் உறுப்பு மாநிலங்களை உடைக்கவோ பிரிக்கவோ கலைக்கவோ பெயர் மாற்றம் செய்யவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரமளிக்கிறது. அதுவும் எளிய பெரும்பான்மை கொண்டே இதைச் செய்ய முடியும். இந்திய அரசமைப்பின்படி மாநிலங்களை அழிக்க முடியும்; ஆனால் இந்திய ஒன்றியத்தை அழிக்க முடியவே முடியாது. ஆகவே சர்க்கஸ் கூடாரத்தில் இரும்புக் கூண்டுக்குள் ’மோட்டார்-பைக்’ ஓட்டுவது போன்றதுதான் இந்தியத் தேர்தல்முறை. ஓசைக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் பயனொன்றும் விளையாது.

 விடியல் வேண்டி நிற்கும் நாம் என்ன செய்யலாம்? இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றும் நோக்கில் நாடாளுமன்றத்துக்குச் செல்லலாம். லோக் சபா என்னும் மக்களவையில் 543 உறுப்பினர்கள். அதில் தமிழ்நாட்டிற்கு 39 பேர் - புதுவைக்கு ஒருவர்! ஆக மொத்தம் 40 பேர். 543இல் 40 என்பது அற்பச் சிறுபான்மை! நாடாளுமன்ற வழிமுறையில் நம்மால் ஒரு மாற்றமும் கொண்டுவர முடியாது. நம் உரிமைகளைப் பலி கொள்ளும் பீடம் அது!

பீரங்கிக் குண்டுகளாலும், மரங்களில் தொங்கிய தூக்குக் கயிறுகளாலும், தீவுச் சிறைகளாலும், தோலுரித்த கசைகளாலும், கையிழுப்புச் செக்குகளாலும், கால்விலங்குச் சங்கிலிகளாலும், கல்லுடைப்புத் தண்டனைகளாலும்… தமிழர்களும் பல்வேறு இன மக்களும் அடக்கி அடிமை கொள்ளப்பட்டு கொள்ளைக்கார வெள்ளையரால் கட்டப்பட்டதுதான் இந்தியா! இந்தியாவின் உண்மையான தந்தைமார் இராபர்ட் கிளைவ் வகையறாக்களே! இன்று தில்லியிலிருந்து நம்மை அடக்கி ஆண்டு கொண்டிருப்பவர்கள் கிளைவ் வழிவந்தவர்களே! நமக்கு அயலவர்களே! அறிஞர் அண்ணா சொன்னது போல் அவர்கள் நம்மவர்களும் அல்ல! நல்லவர்களும் அல்ல! பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி எதனோடு ஒப்பிட்டாலும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நாம் இந்தியாவுக்குள் சேர்க்கப்பட்டதால் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டு விட்டோம். இதுதான் இந்திய நாடாளுமன்றத்தில் எதிரடிக்கிறது. நாடாளுமன்றக் குடியாட்சியம் என்பது தமிழர்களுக்கு வாக்குப்பெட்டிகளால் கட்டப்பட்ட அடிமைச் சிறையே! நாமாகவே கழுத்தில் மாட்டிக் கொள்ளும் தூக்குக் கயிறே!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து மாநில உரிமைகளை மீட்க முடியுமா? நடுவண் அரசு பறித்துக் கொண்ட மாநில உரிமைகளை மீட்க மாநிலச் சட்டப் பேரவைக்கு அதிகாரம் கிடையாது! தீர்மானங்கள் நிறைவேற்றி மகிழலாம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. தமிழ்நாடு அரசையும் சட்டப் பேரவையையும் உரிமை மீட்புப் போராட்டக் கருவியாக மாற்றலாமே? அந்த ஆட்சியையும் பேரவையையும் இந்திய அரசு கலைத்து விடும்!

ஆக, எப்படிப் பார்த்தாலும், மக்கள்நலன் நாடும் அரசியல் இயக்கங்கள் மெய்யாகவே மாற்றத்துக்கான கொள்கைகளை முன்னிறுத்தித் தேர்தலை எதிர்கொள்வது என்ற வாய்ப்பே விட்டுவைக்கப்படவில்லை. இந்திய வல்லரசியச் சட்டகம் மாநிலத் தேர்தல் கட்சிகளைத் தன் ஆளுகைக்கு உட்பட்ட கங்காணிக் கட்சிகளாக வதக்கிப் பழக்கி வைத்துக் கொள்கிறது.

இதனால் கொள்கை முழக்கங்களோடு புறப்பட்ட தேர்தல் கட்சிகள் தனியார் பெருங்குழுமங்களாகச் சீரழிந்து விட்டன. மக்களின் வரிப் பணத்தைக் கொள்ளையடித்து, பெரும்பெரும் முதலாளிகளாக - கட்சித் தலைவர்கள் வலம் வருகிறார்கள். இலவசங்கள் வழங்குவது, வாக்குகளுக்குப் பணம் கொடுப்பது போன்றவற்றின் மூலம் மக்களை ஊழல் குட்டையில் ஊறவைப்பதே தங்கள் கொள்ளைக்கும் தலைமைக்கும் பாதுகாப்பு என்பது இத்தலைவர்களின் உள்ளக் கிடக்கை!

முற்போக்குக் கூட்டணி! சனநாயகக் கூட்டணி! சமயச் சார்பற்ற கூட்டணி! மக்கள் நலக் கூட்டணி! இப்படி எத்தனையோ நாமகரணங்கள்! நெருக்கிக் கேட்டால் கூட்டணிக்குக் கொள்கை தேவையில்லை என்று சொல்லி விடுவார்கள். அப்படியானால் கொள்கையற்ற கூட்டணி என்றே பெயர் சூட்டிக் கொள்ள வேண்டியதுதானே! இந்திய அரசமைப்பும் அதன் உறுப்பாகிய தேர்தல் முறையும் கொள்கைவழி அரசியலுக்கு இடந்தர மாட்டா. அவை பதவி வேட்டை அரசியலின் நாற்றங்கால்கள்! ஊழலின் ஊற்றுக் கண்கள்! கொள்ளையடிப்பது தவிர வேறு கொள்கை முளைவிடவே இடந்தராத நச்சு வயல்கள்!

நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சட்ட மன்றத் தேர்தல் என்றாலும் ஒரே ஒரு கொள்கைக்குத்தான் இடமுண்டு! அது ஆளும் வகுப்பின் நலன் பேணும் கொள்கை! பொருளியல், அரசியல், பண்பாட்டுக் கொள்கை! இந்தக் கொள்கையை ஒரு கட்சி வெளிப்படையாக வலியுறுத்தும்! பிறிதொரு கட்சி வேறு சொற்களில் எடுத்துரைக்கும். இந்தக் கொள்கையை எதிர்த்துப் பேசவும் கூட செய்யலாம். ஆனால் இந்தக் கொள்கைக்கு ஒரு மாற்றுக் கொள்கையை முன்னிறுத்தி வெற்றிபெறச் செய்ய முடியாது.

மாற்றம் வேண்டுவோர், விடியல் விழைவோர் தமக்குத் தேவையானதைத் தேர்ந்து தெளியத் தேர்தல் களம் உதவாது! அவர்கள் நாட வேண்டிய களங்கள் வேறு!

தியாகு

Pin It