mkstalin and ptr palanivel thiagarajanஓர் அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்போது, அதனை ஆளும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியினர் வரவேற்பதும், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பதும் இயல்பானவை! ஆனால் இம்முறை தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை வேறு சிலரும் வரவேற்றுள்ளனர்.

‘டெக்கான் கிரானிக்கல்’ ஏடு TN’s Budget Transparency’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. “பொருளாதாரமும், சமூக நீதியும் சம அளவில் முதன்மை பெற்றுள்ள நிதிநிலை அறிக்கை” என்று அந்த ஏடு சொல்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அதுதான் திராவிட மாடல் என்பதை நாம் அறிவோம். அதனைத்தான் அந்த ஏடு எதிரொலித்துள்ளது.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, சமூக வலைத்தளத்தில் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “நான் 1952 முதல் வாக்களித்து வருகின்றேன். நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த பட்ஜெட், இன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்தான். அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது, இந்த பட்ஜெட்... ஒரு பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என ஒன்றியத்திற்கே கற்றுக் கொடுப்பதாக இந்த பட்ஜெட் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

இப்படிப் பலரும் பாராட்டுவதற்குரியதாக நிதிநிலை அறிக்கை இருப்பதற்கு அடிப்படையான காரணங்கள் பல இருக்கின்றன. குறிப்பாக ஒன்றை நாம் சொல்லலாம். கல்வி, மருத்துவத்தை உள்ளடக்கிய மக்கள் நலம் ஆகிய இரண்டு துறைகளுக்கும்தான் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறைக்கு மட்டும் 42 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், பள்ளிக் கல்விக்கு 36 ஆயிரம் கோடி தரப்பட்டுள்ளது.

அதே போல ஊரக வளர்ச்சி, குடிநீர் வழங்கல், மருத்துவம், மக்கள் நல்வாழ்வு ஆகியனவற்றிற்கு, ஏறத்தாழ 65 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 இத்தகைய மக்கள் நலத் திட்டங்கள் ஒருபுறமிருக்க, மீண்டும் சமத்துவபுர வீடுகள், பிற மொழிகளில் பெரியாரின் நூல்கள் என்பன போன்ற கொள்கைவழித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்ணல் அம்பேத்கரின் எழுத்துகள் பல்வேறு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளதைப் போல, தந்தை பெரியாரின் எழுத்துகளும் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லப்படுமானால், சமூக மாற்றத்திற்கு அது வழி வகுக்கும். குறிப்பாக, வடஇந்தியாவில் ஒரு விழிப்புணர்வை அது ஏற்படுத்தக் கூடும்!

ஆனால், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியும், அண்ணாமலையும் இந்த நிதிநிலை அறிக்கையை எதிர்க்கின்றார்களே என்று கேட்கத் தோன்றும். அதுவும் ஒரு விதத்தில் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்துள்ள சான்றிதழ்தான்!

- சுப.வீரபாண்டியன்

Pin It