ranjit 350பாரதி: மெட்ராஸ் படத்தில் ‘மனுசன மனுசன் புரிஞ்சிக்கிறதுக்கும் சமூகப் பிரச்சனையை அணுகறதுக்கும் இந்தக் கல்வி போதாது’ என்று ஒரு வசனம் உள்ளது. இதன் மூலம் புதிய கல்விமுறையின் தேவையைக் கோடிட்டுக் காட்டுகிறீர்கள். இன்றைய கல்விமுறை ஏன் உங்களுக்கு நிறைவைத் தரவில்லை?

இரஞ்சித்: இன்றைய கல்வி முழுக்க முழுக்கத் தொழில்முறைக் கல்வியாக மட்டும்தான் இருக்கிறது. நாம் படித்த கல்வி எதற்குப் பயன்படுகிற-தென்று இதுவரைக்கும் எனக்குத் தெரியவில்லை! கணிதமோ, இயற்பியலோ, நடைமுறை வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். டெல்டா, ஆல்ஃபா என்று கணிதத்தில் ஏதேதோ யோசிக்கிறார்கள்.

கணிதத்தையே தொடர்ந்து படித்து, அது சார்ந்தே வாழ்வையும் அமைத்துக் கொள்கிறவர்களுக்கு உதவலாம்!

ஆனால், நம்மைப் போன்றவர்களுக்கு என்ன பயன் உள்ளது? நமக்கு இந்தக் கல்வியை அடிப்படையிலிருந்து தருகிறார்களா என்று பார்க்க வேண்டும்.

சமூக உறவை இந்தக் கல்வி நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறதா? நம் சமூகத்துக்குத் தேவையானதாக இந்தக் கல்விமுறை இருக்கிறதா? இங்கே அடிப்படையிலேயே சாதிப் பாகுபாடுகள் இருக்கின்றன. அதைக் களைகிற கல்வியாக இது இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும்.

அதாவது எல்லாப் பாடப் புத்தகங்களும் தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று சொல்கின்றன. வகுப்பறையில் அதை முதலில் எத்தனை ஆசிரியர்கள் பின்பற்றுகிறார்கள்?

இப்போது கூட மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் கழிப்பறையை சுத்தப்படுத்துவதற்கு மூன்று பெண் குழந்தைகளை ஆசிரியர் ஒருவர் அனுப்பியிருக்கிறார். அந்த மூவரும் துப்புரவுத் தொழிலாளிகளுடைய குழந்தைகள்! உன் தந்தை செய்த பணியைப் பள்ளியில் நீ செய் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படித் தரப்படுகிற கல்வி எப்படி சமத்துவத்தையும் அதன் அடிப்படையிலான சமூகத்தையும் உருவாக்கப் பயன்படப் போகிறது?

எல்லாக் கல்வி நிலையங்களிலும் குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்துகிறார்கள். மத சம்பந்தமான விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. மதம், கடவுள் தொடர்பான போதனைகள் நடக்கின்றன. இது நம்மை எங்கே கொண்டு போய் விடும்? மதம் என்பது இங்கே அடிப்படையில் சாதி உணர்வாகத்தான் இருக்கிறது. மதம் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது.

அது குறித்துக் கேள்வி எழுப்புவதாக இந்தக் கல்வி முறை இல்லையே! மாணவர்கள் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பதற்கு ஆசிரியர்கள் எந்த வகையிலும் உதவுவதில்லை. நம் குழந்தைகள் சமூகப் பிரச்சனைகளை அடிப்படையிலிருந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு ஏற்ற வகையில் புதியதொரு கல்வி புகட்டப்பட வேண்டும்.

தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்ற பேதம் இருக்கக் கூடாது என்பதை வெளிப்படையாக நாம் பேசுவது இல்லை. அதே போல் குழந்தைகளையும் நாம் பாகுபடுத்திப் பார்க்கிறோம். நாம் வாழும் சமூகத்தைப் புரிந்து கொள்கிற கல்வி நமக்குக் கிடைக்காமல் இருக்கிறது. அதனால்தான் இடஒதுக்கீடு குறித்த சரியான பார்வை இல்லாமல் அதை எதிர்க்கிறார்கள்.

இடஒதுக்கீடு மூலமாகக் கல்வி கற்றவர்களே கூட இடஒதுக்கீடு தேவையில்லை என்று கருதுகிறார்கள். இது எங்கே போய் முடியும்? இடஒதுக்கீடு மூலமாகக் கிடைக்கிற கல்வி அடுத்த தலைமுறைக்குக் கிடைக்காமல் போய்விடுகிற ஆபத்தை நாம் உணர வேண்டும். நமக்கென்று ஒரு கல்விக் கொள்கை தேவை என நாம் கேட்கத் தயாராக வேண்டும்.

அப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறோம். சாதியமைப்பு, வர்க்கப் போராட்டங்கள், நிறவேற்றுமை இவை போன்ற சிக்கல்களைக் களைந்து சமத்துவத்தை வலியுறுத்துகிற கல்வியைக் குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் நாம் தர வேண்டும். அதற்கேற்ற வகையில் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும்.

ஏனென்றால் மேற்சொன்ன சிக்கல்களைக் கட்டிக் காப்பதே இன்று படித்தவர்கள்தான். இங்கே மிகப் பெரிய கல்வியாளர்கள், அறிவாளர்கள்தான் சாதிவெறியை மதவெறியைத் தூண்டும் விதமாக வலைதளங்களில் அச்சு ஊடகங்களில் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். அதனால் கல்வி அடிப்-படையிலேயே சமத்துவத்தைத் தருவதாய் மாற வேண்டும்.

பாரதி: அதேபோல் காலம்காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட நமக்குத் தேவையான முழக்கம் அனைவருக்கும் கல்வி! இந்த முழக்கம் நிறைவேற வேண்டுமானால் அனைத்துக் கல்வியும் தமிழில் இருந்தால்தான் முடியும். அனைவருக்கும் கல்வி; அனைத்தும் தமிழில்! என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இரஞ்சித்: நாம் நமக்குத் தெரிந்த மொழியில் படிக்காமல் வேறு எந்த மொழியில் படிக்க முடியும். தமிழில்தான் கல்வி இருக்க வேண்டும் என்பது சரியானது. தாய்மொழியில் இருந்துதான் உன்னுடைய உறவை உன்னால் செழுமைப்படுத்திக் கொள்ள முடியும். அப்படியானால் உனக்கான மொழி எதுவோ அதில் கல்வி கற்க வேண்டும்.

தாய்மொழி தெலுங்காக இருந்தால் தெலுங்கில் கல்வி இருக்க வேண்டும். கன்னடமாக இருந்தால் கன்னடத்தில் கல்வி, தமிழாக இருந்தால் தமிழில் கல்வி. நாம் தமிழில்தான் படிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கான அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். தமிழர்களுக்குத் தமிழில் இருப்பதுதான் சரியானது. நான் தமிழ் படித்துதான் வளர்ந்திருக்கிறேன்.

அதே நேரம் ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளையும் நாம் கற்க வேண்டும். இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. தமிழ்நாட்டைத் தாண்டினால் நமக்கு வேறு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு வளரும், ஆங்கிலம் என்பதே அறிவு என்பதை ஏற்க முடியாது.

தென்கொரியா மிகச் சிறிய நாடுதான். அவர்கள் உலக அளவிலேயே கொரியன் மொழியில்தான் பேசுகிறார்கள். பழகுகிறார்கள். அதேபோல் நம்மாலும் முடியும்.

பாரதி: சாதியமைப்பை அடிப்படையாகக் கொண்ட நம் தமிழ்ச் சூழலில் அம்பேத்கரைப் படிக்காமல், உள்-வாங்காமல் அரசியல் செய்ய முடியாது எனக் கருதுகிறோம். அம்பேத்கர் பற்றி உங்கள் புரிதல், பார்வை என்ன?

இரஞ்சித்: அவரை ஒரு மனித சமூக ஆராய்ச்சியாளர் எனலாம். அவ்வளவு ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். கணக்கிலடங்காக் கட்டுரைகள் தந்திருக்கிறார். அவ்வளவு அற்புதமான உழைப்பை அந்த மனிதர் இச்சமூகத்துக்காகச் செய்திருக்கிறார்.

வரலாற்றில் மிக முக்கியமான ஆளுமை அவர். தலித் சமூகத்திலிருந்து வந்து முதன்முதலாகக் கல்வி கற்று அடுத்த தலைமுறையினரும் கல்வி மற்றும் அரசியல் உரிமையைப் பெற வேண்டும், அவர்கள் எழுந்து நிற்க வேண்டும் எனத் தனியொரு ஆளாக நின்று போராடியவர் என்பதால் வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான ஆளுமை எனக் கருதுகிறேன். அவர் வெறும் தலித் தலைவராக மட்டும் பார்க்கப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் தொழிலாளர் நலத்துக்காக, 8 மணி நேர வேலைக்காகவும் போராடியிருக்கிறார். அது சார்ந்த சட்டங்கள் இயற்றக் காரணமாய் இருந்துள்ளார்.

மும்பையில் உள்ள ஒரு ஆலையில் தொழிலாளர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட போது, அவர் தந்த சட்டங்கள் மிக முக்கியப் பங்காற்றியது. தொழிலாளர் நலவாரியம் அமைக்கக் காரணமாயிருந்தார். பெண்களுக்கான சொத்துரிமை அம்பேத்கரால் வந்ததுதான். இதையெல்லாம் கருதிப் பார்க்கிற போது அவர் ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கான தலைவராகவும் பார்க்கப்பட வேண்டும். அவர் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான தலைவராக மட்டும் பார்க்கப்படுவது, அவரைப் பின்னுக்குத் தள்ளுகிற மோசமான முயற்சி என்றே கருதுகிறேன்.

அவரை நேசிக்கிறோம் என்றால் அவருடைய கொள்கைகளை நாம் ஓரளவாவது கடைப்பிடிக்க வேண்டும். அவர் எல்லோருக்குமான தலைவர். தான் வாழ்ந்த இனத்திற்கும் சமூகத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். அடிபட்டு, மிதிபட்டு, வலிபட்டு இருக்கிற ஒரு சமூகத்தை மேலேற்றுவதற்குத் தன்னை அர்ப்பணித்தார்.

பாரதி: உங்கள் ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு தலித் இளைஞன் காதல் உணர்வைக் கூட கேலிக்குரியதாய் ஆக்குகிறான். அவன் காதலிக்கும் பெண்ணையும் பார்த்துக் கொண்டே அருகில் இருக்கும் ஏதோ ஒரு பெண்ணையும் சீண்டுவதாகக் காட்டுவது சரியா?

இரஞ்சித்: தலித் இளைஞன் தான் அப்படிச் செய்வான் என்பதில்லை . நான் ஒரு இடத்தில் இருந்து வந்துள்ளேன்; இயல்பாக அதுவே என் கதைக் களமாகிறது; அந்த இடத்திற்கென்று ஒரு வாழும் முறை இருக்கும்; அதிலிருந்துதான் நான் பார்க்க முடியும். அந்தப் படத்தின் நோக்கம் ஒரு தலித் இளைஞன் இப்படி இருப்பான் எனக் காட்டுவதில்லை .

ஆனால் மெட்ராஸ் திரைப்படம் அப்படிக் கிடையாது. மெட்ராஸ் தலித் இளைஞர்களுக்கான பிரச்சனையைப் பேசுகிற படம். தலித் இளைஞன் இப்படித்தான் இருப்பான் என்று சாதி அடிப்படையில் நான் முன்னிறுத்தவே இல்லை. குறிப்பிட்ட இடத்தின் வாழ்முறையில் வசிக்கிற இளைஞனைப் பற்றிய படம். அவ்வளவுதான்.

ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு வகை இயல்பு--களோடு இருப்பான். இதில் சாதி என்ற கண்ணோட்டம் என் பார்வையில் இல்லை. இளம் பருவத்தில் இளைஞர்கள் பொதுவாக அப்படி இருப்பார்கள். இதை ஒரு சாதியின் இளைஞர்கள் படமாக, அவர்கள் மட்டும்தான் அப்படி இருப்பார்கள் எனச் சொல்வதாகக் கருதக் கூடாது.

ஒரு கதை என்று வந்தால் அதில் ஊர், காலனி என்று வரலாம். அதற்கென்று ஒரு புவியியல் அமைப்பிருக்கும். ஒரு இளைஞனைக் காட்டுகிறோம் என்றால் அவன் எங்கிருந்து வருகிறான், அந்த சுற்றுப்புறத்தின் வாழ்நிலை, நடைமுறைப் பழக்கவழக்கம், அந்தக் குடும்பத்தின் தனித்த இயல்புகள் இவற்றைக் காட்டுவதுதான் என் பொதுவான நோக்கமே தவிர , தலித் இளைஞர்கள் எல்லாரும் அப்படித்தான் இருப்பார்கள் எனக் காட்டுவது கிடையாது.

பொதுவாகவே காதல் என்பது இளைஞர்களுக்கு ஒரு கொண்டாட்டமாகவும் இருக்கிறது. காதல் என்றாலே புனிதம், மனதில் நினைத்து விட்டு பிறகு விலகுவது துரோகம் என்றெல்லாம் காட்டப்படுகிறது. பொதுவாகக் காதல் படங்களின் இறுதிக் காட்சிகளில் காதலுக்காகச் சாவது, தற்கொலை செய்து கொள்வது என்று காட்டுவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது.

உண்மையிலேயே இளைஞர்கள் காதலை எப்படிப் பார்க்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்கிற இன்னொரு கோணத்தையும் காட்ட வேண்டும் என்று தோன்றியதின் விளைவுதான் அந்தப் படமே தவிர நீங்கள் சொல்லும் நோக்கம் துளியும் இல்லை.

பாரதி: தர்மபுரி இளவரசன் திவ்யா சிக்கலில் அதற்கெதிராகச் செய்யப்பட்ட அரசியல் என்ற கண்ணோட்டத்திலிருந்து இதைக் கவலையோடு பார்க்க வேண்டியுள்ளதே? உங்கள் படத்தின் விளைவு நமக்கு எதிராக அமைந்து விடுகிறதே?

இரஞ்சித்: நான் என் படத்தில் வேறு மாதிரி அணுகுகிறேன், தர்மபுரி என்றால் அதை வேறு மாதிரிதான் அணுக முடியும். குறிப்பிட்ட பிரச்சனைகளைப் பற்றி படம் எடுக்கிற போது அதற்குரிய பொறுப்போடு அணுக வேண்டும். அப்படிப்பட்ட படங்கள் வருவதற்கும் இனி வாய்ப்பிருக்கிறது. மேற்சொன்ன வாழ்முறையோடு படம் எடுத்தாலும் கூட, இளவரசன் காதலை எடுத்துக்கொண்டு பேசும் போது அதைக் கொச்சைப்படுத்தவே முடியாது. அவன் தன் காதலைத் தூய்மையாகப் பார்த்தவன்.

நல்ல வேளையாக அந்தப் பிரச்சனை நடப்பதற்கு முன்னால் இந்தப் படம் வந்து விட்டது. பின்னால் வந்திருந்தால் அது இன்னும் மோசமாக இருந்திருக்கும். இவனுக ஜீன்ஸ் பாண்ட்டு, கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு வந்து நம்ம பொண்ணுங்கள ஏமாத்தறாங்க என்ற அடைமொழிக்கு ஏற்ற மாதிரி இருந்திருக்கும். ஆனால் அட்டகத்தியைப் பொறுத்த வரை மேற்சொன்ன கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட எதார்த்தமான படம். அந்த வாழ்-நிலையைச் சொல்வதாலேயே நம் இளைஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள் எனக் காட்டியதாய்ப் பொருள் கொள்ளக் கூடாது.

பாரதி: மெட்ராஸ் படத்தில் ஜானி என்ற கதாப்பாத்திரம் மிகச் சிறப்பு. அப்படி ஒருவரை படம் முழுதும் உலவ விட்டதற்கு ஏதேனும் தனித்தக் காரணங்கள் உண்டா?

இரஞ்சித்: ஜானி போன்ற கதாபாத்திரத்தை நான் வாழ்ந்த பகுதியில் நிறைய பார்த்துள்ளேன். அது மாதிரியான மனிதர்கள் ரொம்பவும் உண்மையாக இருப்பார்கள். தான் வாழும் பகுதி மக்களின் ஆன்மாவாகவே இருக்கிற முக்கியமானவர்கள் அவர்கள். அந்த இடத்தில் நடக்கும் அனைத்து விசயங்களும் அவர்களுக்குத் தெரியும். அந்தப் பகுதியில் உள்ள எல்லாப் பொருட்களும் தமக்குச் சொந்தமானதாகவும் ஏன், அந்தப் பகுதியே தமக்குச் சொந்தமானதாகவும் அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

அந்த அளவுக்கு அவர்கள் தூய்மையானவர்கள். நாம் ஒரு வேலை சொன்னால் அதை செய்துவிட்டுதான் நம்மிடம் காசு கேட்பார்கள், வாங்குவார்கள், அதற்கு முன்னால் கேட்கவும் மாட்டார்கள், வாங்கவும் மாட்டார்கள். இப்படிப்பட்ட சிலரை நான் நேரில் சந்தித்துள்ளேன். அப்படி ஒருவரை திரையில் கொண்டுவர நினைத்தேன்.

அவர்களை பைத்தியக்காரர்களாகக் கருதினால் இந்தச் சமூகத்தில்தான் பிழை உள்ளதாகப் பொருள். அவர்களை நாம் அழுக்கானவர்களாகக் கருதுவோமானால் நம்மிடம் அழுக்குள்ளதாகப் பொருள். ஒருவரின் பலம் பலவீனம் என்பது அந்த மனிதரை நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. நான் அப்படி ஒருவரை எப்படிப் பார்க்கிறேன் என்பதைப் பொறுத்து அந்தப் பாத்திரத்தை படைத்தேன்.

அப்படிப்பட்டவர்களின் பேச்சு அனுபவப்பூர்வமாகவும் கூர்மையான பொருள் உடையதாகவும் இருக்கும். அப்படி நான் அதிகம் பேரை சந்தித்துள்ளேன். நாங்கள் கல்லூரி செல்கிற போது ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டு எப்போதும் ஓர் இடத்தில் நின்று கொண்டிருப்பார். என்னிடம் காசு கேட்பதோடு சரி. கொடுத்தால் வாங்கிக் கொள்வார். ஆனால், ஒருபோதும் தொல்லை செய்ய மாட்டார்.

சில நாட்கள் கழித்து அவர் என்னிடம் வந்து ஒரு பைபிள் வாங்கித் தரச் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து வாங்கிக் கொடுத்தேன். நீ நேத்தே வாங்கிட்டு வருவேன்னு நெனச்சேன் என்று சொன்னார். ஊரைப் பொறுத்த வரை அவர் பைத்தியக்காரன். ஆனால், அவர் அவ்வளவு கூர்மையாக உள்ளார். இப்படிப்-பட்ட பல மனிதர்களை நான் சந்தித்ததுதான் அப்படி ஒரு கதாபாத்திரம் ஆனது.

பாரதி: ஒரு சுவரை மையமாக வைத்து படம் நகர்கிறது. எல்லோரும் சேர்ந்து அந்தச் சுவர் ஓவியத்தை அழிக்கிற அந்தக் காட்சி எந்த வசனமும் இல்லாமலேயே பல அர்த்தங்களை, உணர்வுகளை நமக்குள் கடத்துகிறது. படத்தின் தனித்த அடையாளமாக அது நமக்குள் விரிகிறது. அதைத் தொடர்ந்து வரும் இறுதிக் காட்சிச் சண்டை வழக்கமான படங்களுக்குரிய வகையில் வந்தது அதன் தனித்த அடையாளத்தைக் கெடுப்பதாக இல்லையா?
இரஞ்சித்: இந்தப் படத்தின் திரைக்கதையை வித்தியாசமாக அமைக்க வேண்டும் என்றெல்லாம் கருதவில்லை.

பெரிய திருப்பங்கள், திகில் நிகழ்ச்சிகள் என்று இல்லாமல் வாழ்கையை அதன் இயல்போடு பதிவு செய்வதுதான் என் நோக்கம். வாழ்வின் எதார்த்தங்களை மையப்படுத்தித்தான் காட்சிகளை அமைக்க விரும்பினேன். அந்தச் சண்டை வணிகரீதியான படங்களில் உள்ளது போல் அமைந்திருக்கலாம். அதையும் எந்த அளவில் வித்தியாசமாக அமைக்க முடியுமோ அதைச் செய்துள்ளோம்.

படம் வழக்கமானதுதான். இரண்டு நண்பர்கள். ஒருவர் கொலை செய்யப்படுகிறார், மற்றவர் பலி வாங்குகிறார். இதன் கதை எல்லோரும் எடுத்து முடித்து விட்ட கதைதான். கதையில் எந்தப் புதுமையும் கிடையாது. ஆனால், நான் இந்தக் கதையின் வழி ஒரு வாழ்வியலை, அதன் பல்வேறு கோணங்களை அதன் இயல்போடு பதிவு செய்ய நினைத்தேன். அதையே செய்தேன்.

பாரதி: தாங்கள் நேசித்த இளைஞன், தங்களுக்காக உழைத்தவன் அந்தப் பகுதி மக்கள் ஆதரிக்காத கட்சியின் தலைமையால் கொல்லப்படுகிறான். கடைசியில் பார்த்தால் அவர்கள் ஆதரித்து வந்த கட்சியின் தலைமையும் சேர்ந்துதான் அந்த இளைஞனைக் கொலை செய்தார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்கிறார்கள். இதுவரை நம்பி ஆதரித்த கட்சியும் எதிர்த்து வந்த கட்சியும் கள்ளக் கூட்டு வைத்துள்ளதை தெரிந்துகொள்ளும் தருணம் படத்தில் மிக முக்கியமானது.

நம் மக்கள் கட்சிகளாய் பிரிந்து கிடக்கிறார்கள். மெட்ராஸ் படத்தில் அந்த மக்கள் எந்தக் கட்சியும் சாராது கட்சிகளின் உண்மை முகத்தை அறிந்து வெறுத்து மக்களாக மட்டும் நிற்க வைக்கப்படுகிறார்கள். இதுதான் இப்படத்தின் சிறப்பு எனக் கருதுகிறேன். அப்படி நிற்கிற மக்களுக்கு நீங்கள் காட்டும் மாற்றுப் பாதை, மாற்று அரசியல் என்ன?

இரஞ்சித்: முதலில் சமூக அரசியலை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாக்குக்காக நம்மை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களை நாம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மாற்று அரசியல் என்று இங்கே எதுவுமில்லை. அம்பேத்கர் ஏற்படுத்திய விழிப்புணர்வு இன்று நம் மக்களுக்கு இல்லை.

இங்கே நிறைய தலித் இயக்கங்கள் இருக்கின்றன. தலித் மக்களுக்காக அவர்கள் உழைக்கிறார்கள், இயன்றதைச் செய்கிறார்கள். ஆனால், எத்தனை தலித் இயக்கங்களுக்கு தலித் மக்கள் வாக்களிக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் முழுக்க தலித் வாக்கு வங்கி இருந்தாலும் அங்கே தலித் இயக்கம் தனித்து வெற்றி பெற முடிவதில்லை.

மற்ற கட்சிகள் தலித் மக்களை எவ்வளவுதான் அடித்தாலும் உதைத்தாலும் ஏமாற்றினாலும் அவர்களுக்குத்தான் வாக்களிக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது. ஆரம்பக் கட்டத்தில் உணர்சிவசத்தால் ஆதரிக்கத் தொடங்கி, தங்கள் வாழ்நாள் முழுதும் அந்தக் கட்சிகளுக்காகவே உழைத்து அழிந்தவர்களை இவர்கள் பதவிக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் என் கவலை. இதைச் சொல்ல நினைத்தேன். இந்தப் படத்தில் சொல்லியுள்ளேன்.

இன்று எதிரெதிராக நின்றவர்கள் நாளை கூடிக் குலவுவார்கள். நாம் அவர்களுக்கு மாறிமாறி வாக்களித்துக் கொண்டு இருப்போம். நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு மட்டும் கிடைப்பதே இல்லை. நம்மை அவர்கள் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார்கள். அதனால் நான் நம் யோசனைகளை மக்கள் முன் குறிப்பாக அடுத்த தலைமுறை முன் வைப்போம்.

அவர்களாவது சரியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என விரும்புகிறேன். எந்த அரசியலையும் அவர்களுக்கு முன் வைப்பதை விட பகுத்தறிவுள்ள புதியதொரு கல்வி இந்தச் சமூகத்தை, அரசியலைப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று இறுதியாக நான் வலியுறுத்துகிறேன். அப்படி ஒரு கல்வியை நாம் தந்து விட்டால் அவன் தன் எதிர்காலத்தைத் தெளிவாக அமைத்துக் கொள்வான்.

rithika 350மெட்ராசில் மேரியாக நடித்த ரித்விக்கா....

பாரதி: மெட்ராஸ் திரைப்படம் வடசென்னை மக்கள் வாழ்வை, அரசியலைச் சிறப்பாகச் சொன்னது. இந்தப் படம் குறித்து உங்கள் கருத்து என்ன?

ரித்விக்கா: தமிழ் சினிமா இதுவரை வட சென்னையை இவ்வளவு அழகாகக் காட்டியதில்லை. இதுதான் முதல் படம் எனக் கருதுகிறேன். வடசென்னை என்றாலே ரௌடித்தனம், கூலிப்படை என்றுதான் காட்டியிருப்பார்கள். அந்த மக்களுக்குள் ஆழமாக இருக்கும் அரசியல், காதல், அன்பு, நட்பு பற்றியெல்லாம் சிறப்பாகப் பதிவு செய்த படம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தலித் இளைஞனைக் கதை நாயகனாகக் காட்டிய படம். பத்து வருடம் கழித்து வடசென்னை பற்றி காட்டவேண்டுமென்றால் மெட்ராஸ் படத்தைத் துணிந்து காட்டலாம்.

பாரதி: இயக்குனர் இரஞ்சித் பற்றி உங்கள் கருத்து?

ரித்விக்கா: ரஞ்சித் அவர்கள் எல்லோரையும் சமத்துவமாகப் பார்க்கிற பண்பை இயல்பாய்க் கொண்டவர். நல்ல சுதந்திரம் கிடைத்தது. இந்தக் காட்சியில் இப்படி நடிக்கலாம் என நாங்களே அவரிடம் கலந்து பேசலாம். உங்கள் எண்ணப்படி செய்துகாட்டுங்கள் என்பார். அவருடன் பணியாற்றுவது அவ்வளவு இயல்பாக இருந்தது. அன்பு நிறைந்த மனிதர் அவர். அட்டகத்தி, மெட்ராசில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுத்து மேலேற்றுபவர்.

சென்னை மொழி எனக்குக் கைவரவில்லை. நீ சென்னை பெண்தானே, இயல்பாகப் பேசு என்று ஊக்கம் தந்து பேசவைத்தார். என் நடிப்பை இயல்பானதாக்கியதில் அவருக்கே பெரும்பங்கு உண்டு.

kaliarasan 350மெட்ராசில் அன்புவாக நடித்த கலையரசன்......

பாரதி: அன்புவாக நீங்கள் நடித்த விதத்தை நாங்கள் மிகவும் ரசித்தோம். அவ்வளவு இயல்பான நடிப்பைத் தந்துள்ளீர்கள். ஒரு மக்கள் தொண்டனாக, அரசியலாளனாக எப்படி உணர்ந்து நடிக்க முடிந்தது?

கலையரசன்: உரிமையை பெறுவதில் நீ உறுதியானவன். நீ பேசும் வசனங்களை ஒருவித உணர்ச்சியோடு பேச வேண்டும். அதைக் கேட்கிற யாரும் உன் பின்னால் திரண்டு வர வேண்டும் என்று இரஞ்சித் சொல்வார். அதை உள்வாங்கிக் கொண்டேன்.

தன் மக்களுக்காக உறுதியோடு போராடுபவன், தன் தலைவனுக்கு உண்மையாக இருப்பவன், தன் ஏரியாவுக்கு நல்லது செய்யத் துடிப்பவன் என என் கதைப்பாத்திரத்தை விவரிக்கும்போதே அது என்னுள் ஆழப் பதிந்துகொண்டது. நான் திருவொற்றியூர்தான். இதுபோல் நிறைய பேரைப் பார்த்திருந்தது எனக்குத் துணை செய்தது.

பாரதி: இயக்குனர் இரஞ்சித் அவர்கள் பற்றி?

கலையரசன்: எந்த மனிதருக்கும் அண்ணன் இரஞ்சித் அவர்கள் உரிய மதிப்பளிப்பார். அது வெற்றி பெற்ற மனிதரானாலும் சரி, வாய்ப்புக் கேட்டு வருகிறவர்கள் ஆனாலும் சரி, அவர் அன்பு ஒன்று போலவே இருக்கும். எல்லா மனிதர்களையும் சமத்துவமாக நடத்துவார்.

அட்டகத்தி படத்தில் என்னை நடிக்க வைத்தார். இந்தப் படத்துக்கும் என்னை அழைத்து இப்படி ஒரு அரும் வாய்ப்பளித்தார். இதுவரை நந்தலாலா, அட்டகத்தி, முகமூடி, மதயானைக் கூட்டம், மெட்ராஸ் என ஐந்து படங்கள் நடித்துள்ளேன். இன்று எனக்குக் கிடைத்தப் பாராட்டுக்கள், கிடைக்கிற வாய்ப்புகள் அனைத்தும் மெட்ராஸ் படத்தால்தான் கிடைத்தது.

என் நடிப்பை அடுத்த உயரத்துக்குக் கொண்டு போனவர் அவர்தான். நான் நடித்த படங்களிலேயே இதுதான் என் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. என் நடிப்பைப் பார்த்து இந்த வாய்ப்பை அவர் எனக்கு வழங்கவில்லை.

அவரோடு அறிமுகம் கொண்டதும் என் மீது அவர் வைத்த நம்பிக்கையும்தான் இந்த வாய்ப்புக்குக் காரணம். மெட்ராஸ் எனக்குப் புதிய கதவுகளை திறந்துள்ளது. அண்ணன் இரஞ்சித் என்றென்றும் என்னால் மறக்க முடியாத மனிதர்.

Pin It