[பெரியார் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் பெரியாரும் தமிழ்த் தேசியமும் எனும் தலைப்பில் தோழர் தியாகு ஆற்றிய கருத்துரை]

தோழர் கொளத்தூர் மணி அவர்களே! தோழர் தமிழேந்தி அவர்களே தோழர் செந்தில் அவர்களே! அன்பிற்கினிய தோழர்களே! தமிழ் அன்பர்களே! வணக்கம்.

periyar 450 copyதந்தை பெரியாரைப் பற்றியும் தமிழ்த் தேசியத்தைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு, நாம் நம்முடைய தலைவர்களை எவ்வாறு புரிந்து கொள்வது? பெரியாரைப் போன்று நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரராய் இருந்தவரை, அவர் பல்வேறு முரண்பாடுகளின் ஊடாக வளர்ச்சி கண்டு ஒரு நிலைப்பாட்டை முன்வைத்ததை, எவ்வாறு புரிந்து கொள்வது? என வரையறை செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெரியாரைப் பற்றி அரசாங்கம் கூட நூல் வெளியிட்டுள்ளது. தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்து, உடனிருந்து வளர்ந்த மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள் இப்போது அடிக்கடி சொல்லக் கூடிய ஒரு வாசகம் பெரியாரை உலகமயமாக்க வேண்டும் என்பது.

பெரியாரை உலகமயமாக்குவது என்று சொல்வதின் மூலமாக, பெரியாரின் சிந்தனையை, கருத்துகளை, குறிப்பாக அவரது கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றை உலகு தழுவிய சிந்தனையாக மாற்றுவது, பெரியார் பெயரை உலகறியச் செய்வது என்ற முயற்சியாக அது நடந்து கொண்டுள்ளது.

இதற்கு நிகராக இன்னொரு பக்கம் ஒரு முயற்சி நடந்து கொண்டுள்ளது.... அது திருவள்ளுவரை இந்திய மயமாக்குவது. இப்போது சில தமிழ் அமைப்புகளும், தமிழ் அறிஞர்களும் திருவள்ளுவரைப் பெருமைப்படுத்துகிறோம், திருக்குறளைப் பெருமைப்படுத்துகிறோம் என்ற எண்ணத்தோடு, ‘திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக்க வேண்டும், திருவள்ளுவரை இந்தியாவின் தேசியப் புலவராக அறிவிக்க வேண்டும்’ என்று கோரி வருகின்றனர். இதையே ஒரு பாசக நாடாளுமன்ற உறுப்பினர் கூட கேட்டிருக்கிறார். இதற்காக அவரைப் பாராட்டுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.

ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்து, தன்னாட்டு மக்களுக்கு, தன் இனத்துக்குப் பாடுபட்ட ஒருவரை நாடறியச் செய்வது, கண்டமறியச் செய்வது, உலகறியச் செய்வது என்பதிலே பிழை ஒன்றும் இல்லை. ஆனால் இதற்குப் பின்னால் வேறொரு பொருள் மறைந்திருப்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வோர் அறிஞரையும், ஒவ்வொரு போராளியையும், ஒவ்வொரு தலைவரையும் அவர் வாழ்ந்து பணியாற்றிய களத்திலிருந்தும் காலத்திலிருந்தும் பிரித்தெடுத்து, வானில் உலவும் தேவர்களாக்கி விடுவது, அமரர்களாக்கி விடுவது எனும் முயற்சியாக இது அமைந்து விடக் கூடாது.  திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்கிற போதும், அது உலகிற்கே வழிகாட்டி என்று சொல்கிற போதும், திருக்குறளின் களமும் காலமும் மறைக்கப்படுகின்றன. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது உலகெங்கும் பொருந்துகின்ற உண்மைதான். ஆனால் வள்ளுவர் அந்தக் குறளை எழுதியது எந்த அமைப்புக்கு எதிராக, எந்த மெய்யியலுக்கும் கருத்தியலுக்கும் எதிராக என்பதோடு இணைத்துப் பார்க்காமல், இதை எல்லாக் காலத்துக்கும் பொதுவானதாக, எல்லா இடத்துக்கும் பொதுவானதாக மாற்றுவது குறளை வீரியமிழக்கச் செய்து விடும்.

அதனை நாம் இன்றைக்கு ஒரு போர்க் கருவியாகக் கையாள முடியாத நிலை ஏற்படும். கல்வி கற்கிற உரிமை அனைவர்க்கும் இல்லை என்று ஆணையிடுகிற ஒரு சட்டத்திற்கு எதிராகத்தான், ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்று எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது.

அது உலகப் பொதுமறை என்பதற்காக அல்ல, வருணாசிரமத்தை, மனு தர்மத்தை எதிர்த்து எழுப்பிய போர்க் குரல் என்பதற்காகவே நமக்குப் பொருத்தப்பாடு உடையதாகிறது. இதிலிருந்து நீங்கள் அதைப் பிரித்து எடுத்து விட முடியாது. எவ்வளவு காலத்திற்கு இந்த ஏற்றத்தாழ்வு, கல்வியிலான இந்தச் சிறுபான்மையினர் முற்றுரிமை புதுப்புது வடிவங்களில் புதுப்புது சாயல்களில் தொடர்கிறதோ, அவ்வளவு காலத்திற்கும் இந்தக் குறள் நமக்குத் தேவை. அவ்வளவு காலத்திற்கும் அனைவருக்குமான கல்வியுரிமையை வலியுறுத்துகிற இலக்கியம் நமக்குத் தேவை.

நாங்கள் சிறு அகவையில் ஊர்வலங்களில் முழக்கமிட்டுக் கொண்டு போயிருக்கின்றோம். பெரியாரியவாதிகளின் கூட்டங்களுக்குச் சென்ற போது - தென்னாட்டு லெனின் பெரியார், இந்நாட்டு சாக்ரடீசு பெரியார் என்றெல்லாம் முழக்கமிட்டிருக்கின்றோம். இப்போது நம் இளந்தமிழகம் இயக்கம் சார்பில் பெரியாரின் பிறந்தநாளையொட்டி ஒரு சிறு சுவரொட்டி ஒட்டியிருக்கிறீர்கள். அது யுனெசுகோவினுடைய பெரியாரைப் பற்றிய ஒரு மதிப்புரை.

அரசாங்கம் பெரியார் பற்றி வெளியிட்டிருக்கும் நூலிலும் இது இடம் பெற்றிருக்கிறது:

'புத்துலகத் தொலைநோக்காளர்;

தென்கிழக்காசியாவின் சாக்ரடீசு;

சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை;

அறியாமை, மூடநம்பிக்கைளின் கடும் எதிரி.'

இதில் ஒன்றும் பிழையில்லை. ஆனால் இந்தப் பார்வை பெரியாரைத் தூல நோக்கில் அணுக மறுத்து, அவரை அவருடைய களம், காலத்திலிருந்து பிரித்தெடுத்துப் பொதுமைப்படுத்தி விடுகின்றது. நீங்கள் இதில் உள்ள குறையை அறிய வேண்டுமென்றால் இரண்டாவது வாசகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

'தென்கிழக்காசியாவின் சாக்ரடீசு' - கிரேக்க சாக்ரடீசு பற்றி நமக்கு என்ன தெரியும்? அவர் நாத்திகர், மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதைக் கடைப்பிடித்தவர், பகுத்தறிவாளர், இளைஞர்களிடையே பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்பியவர். அதற்காக உயிரை ஈகம் செய்வதற்கும் அணியமாய் இருந்தவர், ஈகம் செய்தவர்.

இப்படிப் பல கிரேக்க அறிஞர்கள் அவர் காலத்திலும், அவருக்குப் பிறகும் வந்தார்கள் - சாக்ரடீசு, பிளேட்டோ, அரிசுட்டாட்டில். இதில் பிளேட்டோ பெரிய அரசியல் அறிஞராகவும் இருந்தார், குடியரசு படைத்தார். அரிசுட்டாட்டில் பெரிய அறிவியல் அறிஞராகவும் இருந்தார்.

எப்படியிருந்தாலும் சரி, இந்த அறிஞர்கள் யாரும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கருத்தை முன்மொழிந்தவர்கள் இல்லை. இதுதான் முதன்மையான செய்தி. இவர்கள் எல்லோரும் அடிமையுடைமைச் சமூகத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல, அந்த அடிமையுடைமைச் சமூகத்தை நியாயப்படுத்தியவர்கள். அதை எதிர்த்தவர்கள் அல்ல. பிளேட்டோவின் குடியரசு அனைத்து மக்களுக்குமான குடியரசு அல்ல, அடிமைகளின் குடியரசு அல்ல. அது மேட்டுக்குடிகளின் குடியரசு, அவர்களுக்கு மட்டும் வாக்குரிமையும் மக்களாட்சியும் வழங்கும் குடியரசு.

ஒரு வாய்ப்பு வேண்டுமானால் அங்கு இருந்தது. அடிமைகள் அடிமைமுறையிலிருந்து சில கட்டுப்பாடுகள் அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுபடலாம், அடிமையல்லாத மேட்டுக்குடிகள் சில காரணங்களால் அடிமைகளாக மாற்றப்படலாம். நமது சாதியத்திற்கும் அதற்கும் உள்ள வேறுபாடு இதுதான். இங்கே சாதியை மாற்றிக் கொள்ளவே முடியாது, அங்கே சமூகநிலை மாறலாம். இந்த அடிமைமுறையை நியாயப்படுத்திய அறிஞர்கள் அவர்கள்.

மார்க்சியம் பற்றிய 'இயங்கியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்' நூலில், ஸ்டாலின் எழுதுகிறார் - அடிமை முறை என்பது, ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமைப்படுத்துவது என்பது, அவனை ஒரு விலங்காக நடத்துவது, வேலை வாங்குவது, விலைக்கு விற்பது - வாங்குவது, அடிப்பது, உதைப்பது, சாகடிப்பது என்பதையெல்லாம் இன்றைக்கு நாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது அருவருப்பானதாகத் தோன்றலாம், கசப்பாக இருக்கலாம். ஆனால் மனிதச் சமூக வரலாற்றில் அடிமைச் சமூகம் என்பது ஒரு பெரிய முன்னோக்கியப் பாய்ச்சலைக் குறித்தது.

ஏனென்றால் ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தில் ஏடும் எழுத்தும் கல்வியும் இலக்கியமும் கலைகளும் இல்லை. மொத்தத்தில் இல்லை. வானியல், கணிதவியல், மெய்யியல் போன்றவை தோன்றி வளர்வதற்கான புறச்சூழலை அடிமைச் சமூகம்தான் தோற்றுவித்தது. ஏனென்றால் அடிமைகள் கடும் உடலுழைப்பில் ஈடுபட்டதால், சமூகத்தில் ஒரு பிரிவினர் உடல் உழைப்பிலிருந்து விடுபட்டு, அறிவுசார்ந்த பணிகளில் ஈடுபடுகிற வாய்ப்பு கிடைத்தது.

அதனால்தான், வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று முதலில் எழுதியதைத் திருத்தி, ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று மார்க்ஸ்-, எங்கெல்ஸ் எழுதினார்கள்.

எழுதப்பட்ட வரலாறு எப்போது தொடங்குகின்றது என்றால் அடிமைச் சமூகத்திலிருந்துதான் தொடங்குகின்றது. எழுதுவது, இலக்கியம் படைப்பது, கலைகள், அறிவியல் ஆய்வு எல்லாமே இப்படித்தான். இந்தியத் துணைக்கண்டத்தை எடுத்துக்கொண்டாலும், உலகின் எந்தப் பகுதியை எடுத்துப் பார்த்தாலும், கிரேக்கமானாலும், உரோமாபுரியானாலும், அடிமைச் சமூகம்தான் மெய்யியலின் தொடக்கம். அந்த மெய்யியல் சரியோ தவறோ, அதுதான் தொடக்கம். அந்த மெய்யியலர்கள், தாங்கள் மெய்யியலர்களாக விளங்குவதற்கு, அப்படித் தம் வாழ்க்கையை நடத்துவதற்கு என்ன தேவைப்பட்டது என்றால், அடிமைச் சமூகம் தேவைப்பட்டது. எனவேதான் அவர்கள் அதனை நியாயப்படுத்தினார்கள்.

கிட்டத்தட்ட அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த போதிலும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று மானிடச் சமத்துவத்தை வலியுறுத்திய ஒரே அறிஞர் இந்த உலகத்திலேயே திருவள்ளுவர் மட்டுந்தான்.

இந்த இடத்தில், திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து எழுதியவர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் விருப்பம்போல் அவர் கருத்தை நாத்திகவாதம் என்று வாதிட்டுப் பார்க்கலாம், சைவர்கள் சைவம் என்று வாதிட்டுப் பார்க்கலாம், சமணர்கள் சமணம் என்று வாதிட்டுப் பார்க்கலாம் ஆனால் அதல்ல முதன்மையானது. வேறு எது முதன்மையானது என்றால், திருக்குறள் முழுவதிலும் இழையோடி நிற்கும் அறக் கோட்பாடு, சமூகநீதிக் கோட்பாடு, மனுதர்ம எதிர்ப்புக் கொள்கை, - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் கருத்து - இதுவே முதன்மையாகிறது.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் என்றார் வள்ளுவப் பெருந்தகை. உண்மையில் இதன் தொடர்ச்சியாகத்தான், வடக்கே பௌத்தம், தெற்கே வள்ளுவம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகத்தான், இடையிலே வந்த வருணாசிரம, மனுதர்மக் கோட்பாடுகளுக்கு எதிராக மீண்டும் நம் காலத்தில் எழுந்த கலக எழுச்சியின் பேராளராகத்தான் நீங்கள் பெரியாரைப் பார்க்க வேண்டும். நீங்கள் பெரியாரை சாக்ரடீசு ஆக்குகிற பொழுது, இந்தச் சாறமான கூறு அடிபட்டுப் போய் விடும்.

இதேபோலத்தான், பெரியாரைப் பற்றிப் பாவேந்தர் பாடியதைத் தோழர் தமிழேந்தி சொன்னார். பெரியாரைப் பற்றி ஒரு நான்கு வரி எழுதி இவர்தான் பெரியார் என்றார் பாவேந்தர்:

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக் குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார்.

எல்லாம் மறுப்பிற்கிடமில்லாத செய்திகள். ஆனால் இந்த வரிகள் பெரியாரைத் தூலப்படுத்தவில்லை. இவை எந்தவொரு சிந்தனையாளனுக்கும் எந்தவொரு போராளிக்கும் பொருந்தும். தூய தாடி மார்பில் விழும் என்று சொல்லும்படியான தோற்றத்தில் நிறைய பேர் நம்மிடையே இருக்கிறார்கள். நானும் தமிழேந்தியும் மழிப்பதை நிறுத்தினால் விரைவில் தூய தாடி மார்பில் விழும். ஆனால் பெரியாரை இப்படி வருணிப்பதில் ஓர் அழகிருக்கிறது. ஏனென்றால் மக்களுக்குக் கொள்கைகளைக் குருதியும் சதையுமாகக் காட்ட வேண்டியது கட்டாயம். அருவமாக இருந்தால் புரியாது.

உண்மையில் திருவள்ளுவர் எப்படியிருந்தார், யாருக்காவது தெரியுமா? ஏதோவொரு கணிப்புதான், ஊகந்தான்! ஆனால் திருக்குறளைப் பரப்ப ஒரு திருவள்ளுவர் உருவம் நமக்குத் தேவைப்படுகிறது அல்லவா?

மனக் குகையில் சிறுத்தை எழும் என்பது போர்க்குணம் வாய்ந்த ஒரு சிந்தனையாளனை நமக்குக் காட்டுகின்றது. ஆனால் அவரது வாழ்நாள் பணியின் சாறம் என்ன?

ஒரு முறை ஒரு விவாதம் எழுந்தது. நான் பாலம் ஏட்டில் கற்பூரச் சொற்கோ எனும் தலைப்பில் பாவேந்தரைப் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். முதலில் இப்பொருள் குறித்து ஆய்வுக் கோள்கள் எழுதினேன். அப்போது நான் மார்க்சியக் கட்சியில் இருந்ததால், எனக்கென்று சொல்லாமல் இதற்கொரு மறுப்பை செம்மலர் ஏட்டில் எழுதினார்கள்.

பாவேந்தர் இந்தியத் தேசியத்தைத்தான் வலியுறுத்தினாராம்! பாவேந்தர் காங்கிரசில் இருந்தார், கதர் சுமந்து விற்றார், இந்தியத் தேசியத்தைப் பற்றி இப்படியெல்லாம் பாடினார், பாரதியாருக்கு மாணவனாக இருந்தார் என்றெல்லாம் சொல்லிக் கடைசியாக இப்படி முடித்திருந்தார்கள்: இடையில் சிலகாலம் பிரிவினை மயக்கத்திற்கு ஆளாகியிருந்த போதிலும் எப்போதும் அவர் இந்தியப் பற்றுமிக்க கவிஞராகவே இருந்தார்! செம்மலரில் இப்படி எழுதியவர் தோழர் கே. முத்தையா.

இதற்கு நான் எழுதிய மறுப்பை செம்மலரில் வெளியிட மறுத்து விட்டதால் பாலத்தில் வெளியிடச் செய்தேன். அவர் தமிழ்த் தேசியத்தின் தலைக் கவிஞர் என்பதை, இடையில் சில காலம் வழுவிப் போயிருந்தாலும் இறுதி நோக்கில் அவர் தமிழ்த் தேசியப் பாவலரே என்பதை உரிய சான்றுகளோடு மெய்ப்பித்தேன். பாரதியின் தொடர்ச்சியாகப் பார்ப்பதால், பாரதி இந்தியத் தேசியக் கவிஞர், எனவே பாரதிதாசனும் இந்தியத் தேசிய கவிஞரே என்கிறார்கள். அப்படி இருக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் பாரதியின் இந்திய தேசியத்திற்குள்ளேயே தமிழ்த் தேசியத்தின் வித்துக்கள் இருந்தன.

ஒவ்வொரு தேசிய இயக்கத்திற்கும் ஒரு சனநாயக உள்ளடக்கம் உண்டு என்று லெனின் சொன்னார். சனநாயக உள்ளடக்கம் கொண்ட எந்தவோர் இயக்கமும் மக்களைச் சென்றடைவதற்கு மக்களின் மொழியில் மக்களின் பண்பாட்டோடு இணைந்து வந்தாக வேண்டும். அதனால்தான் வ. உ. சிதம்பரனார் ஆகட்டும், திரு.வி. கல்யாணசுந்தரனார் ஆகட்டும், பாரதியார் ஆகட்டும்.......

இவர்கள் ஒரு பக்கம் இந்தியத் தேசிய அரசியல் செய்து கொண்டிருந்தாலும், மறு பக்கம் தமிழ்த் தேசியத்திற்கான விதைகளைத் தூவிச் சென்றனர். ஆனால் அந்த விதையானது ஓட்டை உடைத்துக் கொண்டு முளைத்து வெளியே வந்து தமிழ்த் தேசிய விருட்சமாக வளர்ந்து நிற்கும் போதும், நீங்கள் பழையதைக் காட்டியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி? இந்தக் குஞ்சு முட்டையிலிருந்து வந்தது, எனவே அது இன்னும் முட்டைதான் என்று சொல்ல முடியாது அல்லவா?

பெரியாரே கூட காந்தி மறைந்த போது உணர்ச்சி மேலிட்டு இந்த நாட்டை காந்தி தேசமென்று அழைக்கச் சொன்னவர்தாம். காமராசரைப் பச்சைத் தமிழர் என்று ஆதரித்தவர்தாம். பெரியாரின் அரசியல் நிலைப்பாடுகளில் எத்தனையோ முரண்பாடு காணலாம். எல்லாவற்றையும் மீறி, அவரை எப்படி நாம் புரிந்து கொள்வது? நான் ஒரு முறை சுருக்கமாக நாலே வரியில் பெரியாரைப் பற்றி எழுதினேன்.

இப்படி ஒரு சுவரொட்டி கூட அச்சிட்டு ஒட்டினோம்: அவரைத் தூலப்படுத்தும் நோக்கில் நான் எழுதிய வரிகள்:

தமிழினத்தின் தன்மான அடித்தளம்

சமூகநீதிப் புத்தமைப்பின் உலைக்களம்

தந்தை பெரியார்

விடுதலைச் சிந்தையின் விளைநிலம்

இந்த வரிகளைத்தான் பெரியார் பற்றிய என் பார்வையின் சாறமாக உங்கள்முன் படைக்கிறேன்.

நீங்கள் அவரை சாக்ரடீசு என்று சொல்வதைக் காட்டிலும், மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று சொல்வதைக் காட்டிலும், நம்முடைய காலத்தின் தேவைக்கேற்ப, நம்முடைய போராட்டத்தில் அவரை ஒரு கருவியாக்குவது எப்படி என்றுதான் பார்க்க வேண்டும்.

திராவிட இயக்க வரலாறு பற்றிய கருத்தில் ஒரு சின்ன மாறுபாடு. நீதிக் கட்சியை அல்லது தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தை திராவிட இயக்கத்தின் தொடக்கமாகக் கருதுவதில் நான் மாறுபடுகிறேன். உண்மையில் 1925ஆம் ஆண்டில் பெரியார் குடியரசு ஏடு தொடங்கியதைத்தான் திராவிட இயக்கத்தின் தொடக்கமாகக் கருத வேண்டும். அப்படிக் கருதும் போதுதான் திராவிட இயக்கம் பெரியாரால் நிறுவப்பட்டது என்று நாம் சொல்ல முடியம்.

திராவிட இயக்கத்தை நிறுவியவர்கள் பெரியாருக்கு முந்தைய நீதிக் கட்சித் தலைவர்கள் அல்ல. அவர்களைப் பற்றி அறிஞர் அண்ணா 1946ஆம் ஆண்டில் தெட்டத் தெளிவாகச் சொல்கிறார். பெரியாரும் அம்பேத்கரும் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளில் பிரித்தானிய ஆட்சியாளர்களை ஆதரித்த தருணங்கள் உண்டு. ஆனால் அவர்கள் இதற்காக ராவ்பகதூர் பட்டமும் சர் பட்டமும் வாங்கிக்கொண்டவர்கள் அல்ல. ஆனால் அண்ணாவின் சொற்களில் இந்த நீதிக்கட்சித் தலைவர்கள் ராவ்பகதூர் சர் பட்டந்தாங்கிய சரிகைக் குல்லாய்க்காரர்கள், அரண்மணை அரசியல்வாதிகள்! நீதிக்கட்சியினர் மக்களிடம் செல்வாக்கிழந்த போது, அவர்கள் அடியோடு ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒரு நேரத்தில், புகழ்மிக்க தலைவராக வேறு காரணங்களுக்காகக் காங்கிரசை எதிர்த்துக் கொண்டிருந்த பெரியாரைத் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டு அவரிடம் நீதிக் கட்சியை ஒப்படைத்து விட்டார்கள்.

எனவே குடியரசு ஏட்டின் தொடக்கம்தான் சுயமரியாதை இயக்கத்தின், அதாவது திராவிட இயக்கத்தின் தொடக்கம். இந்தத் தொடக்கம் எதைக் குறிக்கிறது? மார்க்ஸ் 17 வயதுப் பள்ளி மாணவனாக இருந்தபோது எழுதிய கட்டுரையில் சொன்னார் - நீ யார் என்பது நீ உன்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்பதைப் பொறுத்ததன்று. நீ யாராக அல்லது எதுவாக இருக்கிறாய் என்பதை நீ வாழும் புறச் சூழல்தான் தீர்மானிக்கிறது.

வரலாற்று நோக்கில் சமூக ஆற்றல்களுக்கிடையே நடைபெறுகிற, நீதிக்கும் அநீதிக்குமான போராட்டத்தின் அன்றைய கட்டத்தில் எந்தச் சமூக ஆற்றல்களின் பக்கம் குடியரசு நிற்கிறது, பெரியார் நிற்கிறார் என்பதை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். குடியரசு ஏட்டின் தொடக்கம் என்பது தமிழ்த் தேசிய இனம் தன்னைத்தானே இனங்கண்டு கொள்ளும் போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது என்கிறார் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.

1937ஆம் ஆண்டிற்குப் பிறகு, 1938ஆம் ஆண்டு மொழிப் போராட்டக் காலத்தில் பெரியார் மொழியை முன்னெடுக்கிறார். எல்லோரும் சேர்ந்து அவரைத் தமிழர் தலைவர் என்று அழைக்கிறார்கள். அப்படித் தமிழர் தலைவர் என்று அவரை அழைத்தவர்களில் கி.ஆ.பெ. விசுவநாதமும் மறைமலையடிகளும் சோமசுந்தர பாரதியாரும் தியாகராயரும் இருந்தார்கள். அந்த முதல் மொழிப் போரில் களம் கண்டவர்களில் அனைத்துப் பிரிவுத் தமிழர்களும் இருந்தார்கள். தமிழறிஞர்கள் இருந்தார்கள். நம் தெய்வநாயகம் இருந்தார். நீதிக் கட்சியினர் மட்டுமல்ல, காங்கிரசாரும் இருந்தார்கள். சுயமரியாதைக்காரர்கள் மட்டுமல்ல, இறையன்பர்களும் இருந்தார்கள். இசுலாமியர்கள் இருந்தார்கள். பார்ப்பனர்களும்கூட இருந்தார்கள். பழைய நீதிக் கட்சிக்காரர்கள் இருந்தார்கள், நீதிக்கட்சியை எதிர்த்த காங்கிரசுக்காரர்களும் இருந்தார்கள்.

சென்னை மாகாணச் சட்ட மன்றத்தில் விவாதம் நடக்கிறது, ஏ. டி. பன்னீர்செல்வம் அவர்கள் இராசாசியின் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசுகிறார். அதற்கு இராசாசி சொல்கிறார் - இந்தியை யார் எதிர்க்கிறார்கள்? இது நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று. நீங்கள் இங்கே உள்ளே இருந்து எதிர்க்கின்றீர்கள். வெளியே இருந்து சோமசுந்தர பாரதியார் எதிர்க்கிறார். வேறு யார் எதிர்க்கிறார்கள்? அப்போது பன்னீர்செல்வம் சொல்கிறார் - நீங்கள் ஒருவர் ஆதரிக்கிறீர்கள், நாங்கள் இரண்டு பேர் எதிர்க்கிறோம்; எனவே நாங்கள்தான் பெரும்பான்மை, நீங்கள் சிறுபான்மை.

இங்கே தோழர் கொளத்தூர் மணி எடுத்துக் காட்டியதைப் போல, 1956 மொழிவழி மாநில அமைப்புக்குப் பிறகு திராவிடம் என்ற சொல் எதைக் குறிக்கும்? இந்தச் சொல் இல்லாமல் வேறு சொல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றால், நன்றாகத்தான் இருந்திருக்கும். இன்றைக்கும் அதே சொல்லைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதே சொல்லைப் பிடிவாதமாகப் பயன்படுத்திய ஒரு காரணத்தினாலேயே உள்ளடக்கம் திரிந்து போகாது.

பல சொற்கள் காலத்திற்கேற்பப் பொருள் மாற்றம் பெறுகின்றன. குடிகள் என்றால் என்ன? 'நாமார்க்கும் குடியல்லோம்' என்பது அப்பர் வாக்கு. குடியல்லோம் என்றால் அடிமையில்லை என்று பொருள். இப்போது நாம் குடியுரிமை கேட்கிறோமே, குடியியல் உரிமை பற்றிப் பேசுகிறோமே, நல்ல குடிமகனாக இருக்க விரும்புகிறோமே, என்ன பொருள்? இந்தக் குடிக்கு அடிமை என்று பொருளில்லை, வேறு நல்ல பொருளில்தான் இந்தச் சொல்லை ஆள்கிறோம்.

உருசியாவில் போல்சுவிக் என்ற பெயர் எப்படி வந்தது? 1903ஆம் ஆண்டு கட்சி மாநாட்டில் உறுப்பினர் தகைமை குறித்துத் தீர்மானம் கொண்டுவந்த போது, ஆதரித்த பெரும்பான்மையினர் போல்சுவிக்குகள் ஆனார்கள். எதிர்த்து வாக்களித்த சிறுபான்மையினர் மென்சுவிக்குகள் ஆனார்கள். ஏனென்--றால் உருசிய மொழியில் போல்சுவிக் என்றால் பெரும்பான்மை, மென்சுவிக் என்றால் சிறுபான்மை.

இப்போது போல்சுவிசம் என்கிறோம், இது வேறு பொருளில். விட்டுக்கொடுக்காமல் உறுதியாகப் புரட்சியை முன்னெடுக்கிற கொள்கைக்கு போல்சுவிசம் என்ற பெயர் வந்து விட்டது. உருசிய பொதுவுடைமைக் கட்சி - போல்சுவிக் என்று இருந்தது. இங்கு தமிழ்நாட்டில் கூட ஒரு கட்சியின் பெயரில் போல்சுவிக் உள்ளது. இப்படிப் பெயர் வைத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. இதற்காக, நீங்கள் போல்சுவிக் என்றால் பெரும்பான்மை எங்கே என்று கேட்கக் கூடாது. நாம் சொற்களைப் பிடித்துக் கொண்டு வாதிடக் கூடாது.

தொடக்கத்திலேயே திராவிடம் என்று சொல்லாமல் தமிழ், தமிழம் என்றே சொல்லியிருந்தால், அல்லது பிறகாவது அப்படி மாற்றியிருந்தால், நன்றாகத்தான் இருந்திருக்கும். அப்படி நடக்கவில்லை, அதற்காக இப்போது என்ன செய்வது? நாளை மாற்றிக் கொண்டாலும் வரவேற்போம். ஆனால் அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்காகவே, உள்ளடக்கத்தைப் பார்க்காமல் ஒதுக்கித் தள்ளி விடப் போகிறோமா?

“எங்கள் திராவிடப் பொன்னாடே” என்கிற பாட்டில், தமிழ்நாட்டிற்கு வெளியே ஏதாவது அடையாளம் காட்டப்படுகிறதா? இல்லை. தமிழ்த் தேசியப் பண் அது. எங்கள் தமிழகப் பொன்னாடே என்று பாடியிருந்தால் நாங்கள் கூடுதலாக மகிழ்ந்திருப்போம். ஆனால் அந்தப் பாட்டை இப்போது நாம் திருத்த முடியாது.

திராவிடம் என்பது தமிழியத்தின் உருத்திரிந்த வடிவம். உள்ளடக்கம் தமிழியம்தான். இந்த உள்ளடக்கத்தைச் சரியாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தடை இல்லை என்கிற வரைக்கும், உருத்திரிபுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தடையாக வரும் போது உடைத்துக் கொண்டு முன்செல்வோம்.
பெரியாரைப் பொறுத்த வரை முக்கியமாகச் சொல்ல வேண்டிய ஒரு செய்தி உள்ளது: 1938ஆம் ஆண்டில் தமிழுக்காகப் போராடினார், தமிழர் தலைவர் என்று பெயர் பெற்றார். ஆனால் 1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்திற்கு எதிராக இருந்தார் என்பது பெரியாரின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய சறுக்கல் என்பதில் ஐயமில்லை. இதை மூடிமறைத்துப் பேசத் தேவை இல்லை.

நான் அப்போதெல்லாம் மாணவன். நேரிலேயே பார்த்தேன், என்ன நடந்தது என்று. பெரியார் எந்த அளவுக்குப் போனார் என்றால், பக்தவத்சலத்தின் காட்டாட்சியை நியாயப்படுத்தித் துப்பாக்கிச் சூடுகளை ஆதரிக்கும் அளவிற்குப் போனார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்து எழுதுகிற ஏடுகளுக்குத் தீவைக்கச் சொன்னார். சட்டத்திற்குட்பட்ட கத்தியும் பெட்ரோல் கலனும் வைத்துக் கொள்ளச் சொன்னார். காவல் துறையின் அடக்குமுறை மிகுந்து போய் அதற்கு எதிரடியாக நடந்த சில வருந்தத்தக்க நிகழ்வுகளில் காவல் துறையினர் ஓரிருவர் கொல்லப்பட்ட போது அதை வன்மையாகக் கண்டித்து, காலித்தனம் என்று சாடினார். ஆனால் அரசுப் படைகள் நிகழ்த்திய படுகொலைகளைக் கண்டித்தாரில்லை.

தந்தை என்று நாம் போற்றுகிற ஒரு தலைவர், தமிழ்த் தேச வரலாற்றிலேயே மிகப் பெரிய எழுச்சியாகிய 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அதற்கு எதிராக நின்றார் என்பது வருந்தத்தக்க உண்மை. அவரது மொழிக் கொள்கை தவறானது, ஆங்கிலம் படிக்கச்சொன்னார், பேசச் சொன்னார், உன்னிடம் யார் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று கேட்டார் என்பதெல்லாம் தனிச் செய்தி. 1938ஆம் ஆண்டில் காட்டிய தெளிவு இப்போது இல்லை. பெரியாரின் இந்த நிலைப்பாட்டிற்குப் பல காரணங்கள் சொல்லி விளக்கமளிக்கலாம். ஆனால் நியாயப்படுத்த முடியாது. திமுக மீதான எதிர்ப்பு, காமராசர் மீதான பற்றுதல் எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இங்கே முதன்மையானது - மொழிக் கொள்கையின் அடிப்படையில் அவரை நாம் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்பவராகக் காட்ட முற்பட வேண்டிய தேவையில்லை.

தேசியம் என்ற சொல்லை அதற்குரிய வரலாற்றுச் சமூகவியல் பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அல்லது தேசிய இனத்தினுடைய ஆக்கக்கூறுகளாக இருப்பவற்றைச் சுருக்கமாக சொன்னால் - "மொழி, பண்பாடு, நிலம், பொருள், வரலாறு". பண்பாடு என்பது 'நாம்' என்கிற மனநிலை, அது வெளிப்படுகிற கருத்தியலைச் சொல்கிறது. இதுதான் தேசியத்தின் அடிப்பொருள். அதன் வளர்ச்சி பெற்ற அறிவியல் பார்வை என்பதெல்லாம் பிறகு. அது தனித் தமிழ்நாடா, தன்னாட்சியா, தன்தீர்வுரிமையா (சுயநிர்ணய உரிமையா) என்பதெல்லாம் பிறகு.

தேசியம் என்பதன் அடிப்பொருளை எடுத்துக் கொண்டால் அது மொழிவழிப்பட்ட தேசியமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மொழிவழிப்பட்ட தேசியம் எல்லாமும் முற்போக்கானதாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. சிங்களப் பேரினவாதம் கூட ஒரு தேசியம்தான். அது ஆதிக்கத் தேசியம். ஒரு கட்டத்தில் முற்போக்கான பங்கு வகிக்கும் ஒரு தேசியம் பிறிதொரு கட்டத்தில் பிற்போக்கானதாக மாறலாம்.

இந்தியத் தேசியம், நாம் இந்தியர் என்கிற உணர்ச்சி ஒரு பொதுப் பகைவனுக்கு எதிராக, வெவ்வேறு தேசிய இன மக்களை ஒன்றுபடுத்திய அளவில், வெவ்வேறு மதத்தவரை ஒன்றுபடுத்திய அளவில் வரலாற்றில் ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்தது. இந்தியத் தேசியம் எதிர்வகைத் தேசியமே தவிர, பொய்த் தேசியம் அன்று. ஒரு கருத்தியல் பொய்யா மெய்யா என்பதற்கு எந்தப் பெரிய ஆய்வுக் கூடத்தை விடவும், எந்தப் பெரிய ஆய்வு நூல்களை விடவும் வெகுமக்கள் இயக்கங்கள்தான் இறுதியான சான்று.

periyar and ghandhi 600

ஒரு பொய்த் தேசியத்தால் கோடிக்கணக்கான மக்களைத் தெருக்களில் இறக்கியிருக்க முடியாது. காந்தியாரின் மிகப் பெரிய வரலாற்றுப் பங்கே பெருந்திரளான மக்களைக் களத்தில் இறக்கியதுதான். திலகரால் முடியாதது, லாலா லசபதிராயால் முடியாதது... காந்தியால் முடிந்தது. என்ன காரணம்? தென்னாப்பிரிக்கப் போராட்டத்தின் பட்டறிவு கற்றுத் தந்த கொள்கைகளும் அணுகுமுறைகளுமே காரணம் எனலாம். இது குறித்துத் தனியாகப் பேச வேண்டும், இப்போது நேரமில்லை.

காந்தியாரைச் சுட்டுக்கொன்றதை நியாயப்படுத்துகிற கோபால் விநாயக் கோட்சே [நாதூராம் விநாயக் கோட்சேவின் தம்பி] காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலை ஆனவர், 1976ஆம் ஆண்டு தன் கடைசிப் பேட்டியில், இந்திய மக்களின் சிறை அச்சத்தைப் போக்கிய தலைவர் காந்தி என்கிறார். கோபால் கோட்சேயின் வாசகம் இது. இந்திய மக்களின் சிறை அச்சத்தைப் போக்கியவர் காந்தி. கனம் நீதிபதி அவர்களே, இந்தச் சட்டத்தின்படி எனக்கு அதிகபட்சத் தண்டனை விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நின்று கேட்டவர்கள் காந்தியாரும் பெரியாரும். 1918இல் காந்தி, 1938இல் பெரியார். சிறைக்கஞ்சாத மனவுறுதியை அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

பெரியார் பற்றிய விவாதத்தில் அவரின் அறிவு நாணயம், நேர்மை, ஈகம், உழைப்பு இவற்றையும் கூட சில நண்பர்கள் வினாவிற்குட்படுத்தக் காண்கிறோம். இது வீண் வேலை. அவருடைய கருத்து என்ன, நடைமுறை என்ன, அவற்றின் சரி தவறுகள், நிறைகுறைகள் பற்றிப் பேசுவோம். உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது பொருளற்றது.

இர்பான் அபீப் ஒருமுறை சொன்னார் - பிரித்தானிய வல்லாதிக்கத்தின் பொருளியல் சுரண்டலைப் பற்றி அந்தக் காலத்திலேயே ஒரு பெரிய ஆய்வுநூலை எழுதிய தாதாபாய் நவ்ரோஜியைக் குறைகூறும் உரிமை நான் எவ்வளவு பெரிய பேராசிரியராக இருந்தாலும் எனக்குக் கிடையாது. காந்தி, அம்பேத்கர், பெரியார் என்று யாரையும் திறனாய்வு செய்யலாம். யாரும் கடவுள் கிடையாது. இவர்களைக் கடவுளராக்குவது அவர்தம் சிலைகளை அவரவர் கொள்கைகளின் கல்லறைகளாக மாற்றி விடுவதாகும், அவர்களை உயிர்ச் சாறமற்ற பொம்மைகள் ஆக்குவதாகும். இராசபக்சேவிடமும் புத்தரின் பல் இருக்கிறது, கொள்கை இல்லை என்பது போன்ற ஒரு நிலை ஏற்படலாகாது. நபிகளுடைய முடியைப் பேழையில் பூட்டி வைத்துக் கொண்டு, அவரின் சமத்துவ நெறியைக் காற்றிலே பறக்க விட்டால் எப்படி இருக்கும்?

எனவே, நான் இங்கு சொல்ல வருவது, பெரியாரின் சாறமான பணி, முழுதாகப் பார்த்தால் - 'குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்' என்ற வள்ளுவனின் எடைத் தட்டிலே வைத்து நிறுத்தால் - பெரியார் தமிழ் மொழியை ஆதரிக்கிறவர் என்று பார்த்து அவர் தமிழ்த் தேசியர் என்று நாம் அடையாளங்காண விரும்பவில்லை. வேறு யாரென்று பார்க்கிறோம்? பெரியார் எதற்காக நின்றார்? எதில் விட்டுக்கொடுக்காமல் நின்றார்? எதில் முன்பின் முரணற்று உறுதியாக வளர்ந்து சென்றார்? இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்ற போது நீதிக் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான பி. டி. இராசன் மதுரைத் தொகுதியில் போட்டியிட்டார்.

பி.டி. இராசனை எதிர்த்து கம்யூனிஸ்டுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட பார்ப்பனரான பி. இராமமூர்த்தியைப் பெரியார் ஆதரித்தார். தோழர் கொளத்தூர் மணி சொன்னதைப் போல, பெரியார் பிறப்புப் பார்த்து ஆதரிப்பவரோ எதிர்ப்பவரோ அல்ல என்பதற்கு வேறு பலவும் எடுத்துக்காட்டலாம். ஒருசில பார்ப்பனர்களை ஒருசில நேர்வுகளில் ஆதரித்ததுண்டே தவிர எவர்க்கும் அரசகுரு ஆனதில்லை. அந்த 1952 தேர்தலின் போது பெரியாரிடம் கேட்கிறார்கள், நீங்கள் தமிழ்நாட்டுப் பிரிவினை கேட்கிறீர்கள், ஆனால் கம்யூனிஸ்டுகள் இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளார்கள், இந்தியா முழுதும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிறார்கள், நீங்கள் போய் அவர்களை ஆதரிக்கலாமா?

பெரியார் சொன்னார் - - எனக்கு வேண்டியது என்ன? சாதி ஒழியணும். இந்தத் தமிழ்நாட்டில் சாதியை ஒழித்து விடலாம் என நினைத்தேன். ஆனால் இந்தத் தோழர்கள் சொல்கிறார்கள், தமிழ்நாட்டில் என்ன, இந்தியா முழுக்கவே சாதியை ஒழித்து விடலாம் என்று; அப்படி இந்தியா முழுதும் சாதியை ஒழித்தால் நல்லதுதானே! எனவே சாதி ஒழிப்பு என்பதில்தான் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதுவே அவர் குறி.

இன்னுமொரு சான்று சொல்கிறேன் - இராசாசி 1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்ற போது, மாகாண அரசைக் கொண்டு காங்கிரசின் ஒவ்வொரு கொள்கையாகச் செயல்படுத்தப் பார்த்தார். ஒன்று இந்தித் திணிப்பு, மற்றொன்று மதுவிலக்கு. மதுவிலக்குக் கொள்கையில் கூட மற்றவர்களின் அணுகுமுறைக்கும் பெரியாரின் அணுகுமுறைக்கும் வேறுபாடு இருந்தது. பெரியார் சொன்னார், மதுவிலக்கைக் கொண்டுவந்து, அரசிற்கு வருமான இழப்பு என்று கூறி, நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தை மூடி விடுவார்கள், நம் குழந்தைகள் கல்வி கெட்டுப் போய் விடும். எனவே பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் கல்வியைக் கெடுப்பதற்காகவே இந்த மதுவிலக்கைக் கொண்டுவருகிறார்கள் என்றார். எல்லா இடத்திலும் அவருடைய அளவுகோல் இதுதான்.

கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின் போது, தனக்குச் சொந்தமாக இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்த பெரியார், அவர் ஒன்றும் மதுவிலக்கின் எதிரி அல்ல. கள்ளுக்கடை மறியலைக் கைவிடுமாறு காந்தியைக் கேட்ட போது, இதை முடிவு செய்ய வேண்டியது நான் அல்ல, ஈரோட்டிலிருக்கும் இரண்டு பெண்களே என்றார். பெரியாரின் மனைவி நாகம்மையும் தங்கை கண்ணம்மையும்தான் அந்தப் பெண்கள். அதே பெரியார் இராசாசியின் மதுவிலக்கை வேறு கோணத்தில் அணுகுவதைப் பாருங்கள்.

எமது தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தமிழ்த் தேசம் திங்களேட்டின் நடப்பு (2014 செப்டெம்பர்) இதழில் மொழிச் சிக்கல் குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளது. செம்மொழித் தமிழே எப்போதும் வேண்டும் என்ற தலைப்பில் தோழர் நலங்கிள்ளி எழுதியுள்ளார். பெரியார், இராசாசி இருவரும் சேர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்தார்கள். ஆங்கிலத்திற்காக வாதிட்டார்கள். நேரு ஆங்கிலம் நீடிப்பதற்கு வாக்குறுதி கொடுத்ததன் உள்நோக்கம் தேசிய மொழிகளை மறுத்துக் கொஞ்சம் கொஞ்சமாய் இந்தியைத் திணிப்பதுதான் என்பதற்கான சான்றுகளைத் திரட்டிக் கொடுத்திருக்கிறார்.

பெரியாரும் இராசாசியும் இங்கெல்லாம் ஒன்றுபட்டார்கள் எனில் எங்கு அவர்கள் அடியோடு வேறுபட்டு நின்றார்கள் என்றால், இட ஒதுக்கீடா? சாதி ஒழிப்பா? சமூக நீதியா? அங்குதான் இருவரும் வேறுபடுகின்றார்கள். காமராசரை ஏன் ஆதரிக்கிறார் என்றால் அதற்கும் இதுதான் அளவுகோல். கல்வித் துறையில் சமூக நீதி என்று பார்க்கிறார். எங்குமே இதுதான் அளவுகோல்.

பெரியார் 1952ஆம் ஆண்டுக்கும் 1973ஆம் ஆண்டுக்கும் இடையில் வேறுபடுகிறார். ஏனெனில் வயது கூடுகிற போது பட்டறிவு கூடுகிறது. அந்தப் பட்டறிவை உள்வாங்கித் தனது கருத்துகளைச் செழுமைப்படுத்திக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் அவர் அணியமாக இருந்த காரணத்தினாலேதான், தாம் கொடுத்த அந்த ‘தமிழ்நாடு தமிழர்க்கே!’ என்ற முழக்கத்தை உயிர்ப்பித்தெடுத்து இறுதி முழக்கமாக எழுப்பிப் பேசும் போது என்ன சொல்கிறார், கேளுங்கள்.

1952இல் சொன்னார் அல்லவா, இந்தியா முழுதும் சாதி ஒழிந்தால் நல்லதுதானே என்று, இப்பொழுது சொல்கிறார் - இந்தியா இருக்கும் வரைக்கும் சாதியை ஒழிக்க முடியாது; இந்தியா ஒழிய வேண்டும்; தனித் தமிழ்நாடு வந்தால்தான் பார்ப்பான், பணக்காரன், பதவிக்காரன், படிப்புக்காரன் அனைவரையும் ஒழிக்க முடியும். இதுதான் பெரியாரின் இறுதியும் உறுதியுமான நிலைப்பாடு. இதற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் என்ன தொடர்பு? தமிழ்த் தேசியம் என்பது 'நாம் தமிழர்' என்ற மனப்பாங்கை, அதனடிப்படையில் எழும் பண்பாட்டை ஓர் அடிகூறாகக் கொண்டது.

தமிழ்த் தேசியம் ஒரு சனநாயகக் கருத்தோட்டம் என்ற முறையில் சமூகநீதிக்கு அடிப்படையானது, இன்றியமையாதது. இந்தச் சமூகநீதிக்கும் சமத்துவத்திற்கும் உள்ள தொடர்பை இப்படிச் சொல்லலாம். எவ்வளவு உயர்ந்த சனநாயகக் குடியரசாய் இருந்தாலும் முதலாளியச் சனநாயகம் வடிவ அளவிலான சன-நாயகமே என்றார் லெனின்.

ஏனென்றால் அது தனியுடைமைச் சமூகத்தையே அடித்தளமாகக் கொண்டு நிற்கிறது. சான்றாக, இந்து நாளேட்டை எடுத்துக் கொண்டால், இலட்சக்கணக்கில் விற்பனையாகும், விளம்பர வருமானமே போதும், இலவசமாகக் கொடுத்தாலும் இழப்பில்லை. மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு இங்கிலீஷ் பேசுவார், தமிழும் பேசுவார். அவருக்குள்ள ஏட்டுரிமை சட்டப்படி நமக்கும் உள்ளது. ஆனால் நம்மால் அவருக்கு ஈடுகொடுக்க முடியாது. புரட்சிப் பெரியார் முழக்கம், தமிழ்த் தேசம் போன்ற ஏடுகளை சில ஆயிரம் படிகள் அச்சிட்டு விற்பதற்குள் முட்டி தேய்ந்து போகிறது. எங்கே போவது முதலீட்டிற்கு? எங்கே போவது விளம்பரத்துக்கு? வேறுவிதமான அடக்குமுறையும் பாகுபாடுகளும் இல்லை எனக் கொண்டாலும், தனிச் சொத்துடைமைக்கு உட்பட்ட சனநாயகம் தன்னளவிலேயே வரம்புகளுக்குட்பட்டதுதான்.

அப்படியானால் சனநாயகம் முழுமையடைவது எப்போது? தனிச் சொத்துடைமை ஒழியும் போதுதான், சமூகவுடைமை மலரும் போதுதான்! அதாவது உண்மையான சோசலிச அமைப்பில்தான் சனநாயகம் முழுமையடைகிறது. சோசலிசத்தை நிகரமை என்றோ நிகரியம் என்றோ வைத்துக் கொள்வோம். சனநாயகமும் சோசலிசமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. சனநாயகத்தின் நிறைவாக்கமே சோசலிசம் (Socialism is the consummation of democracy). சனநாயகமற்ற சோசலிசம் சோசலிசமே ஆகாது.

தேசியப் போராட்டத்தை சனநாயக உரிமைப் போராட்டமாக வரையறுத்த லெனின், சோசலிசக் கட்டத்தில் அது பொருந்தாது என்ற கருத்தை மறுதலித்தார். பாட்டாளி வர்க்கம் ஆளுமை செலுத்தும் சோசலிச அமைப்பிலும் தேசியத் தன்தீர்வுரிமையின் தேவையை வலியுறுத்தினார். பிற்காலத்தில் சோவியத்து ஒன்றியம் இந்தக் கொள்கையை மீறியதால் சிதறிப் போனது.

சனநாயகத்தின் தமிழ் வடிவமே சமூகநீதி. அது சோசலிசச் சமூகத்தின் முதற்படி. தேசியத்துக்கு நாம் என்ற மனப்பாங்கு இன்றியமையாதது. ஏற்றத் தாழ்வானவர்கள் தம்மை எப்படி நாம் என்று உணர முடியும்? ஒன்று, சமமானவர்களாய் இருக்க வேண்டும், அல்லது சமத்துவம் நோக்கிய போராட்டத்தில் ஒன்றுபட்டவர்களாய் இருக்க வேண்டும். இப்படித்தான் தமிழ்த் தேசியத்துக்கும் சமூக-நீதிக்குமான போராட்டங்கள் ஒன்றையொன்று சார்ந்து இடையுறவு கொண்டு நிற்கின்றன. எனவேதான் நாங்கள் ‘தமிழர் விடுதலைப் போர்முழக்கம் சமூகநீதித் தமிழ்த் தேசம்’ என்று முழங்குகிறோம்.

சுருக்கமாக முடிப்பதென்றால், இறுதி நோக்கில், பெரியாருக்கு உயிர் சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியத்திற்கு உயிரும் சாதி ஒழிப்பு. இந்தப் பொருளில்தான் பெரியாரையும் தமிழ்த் தேசியத்தையும் உறவுபடுத்திப் புரிந்து கொள்கிறோம். பெரியாருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் நேர் முடிச்சுப் போட இயலாது. இவ்விரு கண்ணிகளுக்கும் நடுவில் இடைக் கண்ணியாக இடம்பெறுவது சாதியொழிப்பு, அதாவது இவ்வொழிப்புக்கு அடிப்படையான சமூகநீதி. அதிலே அவர் உறுதியாக நின்ற காரணத்தினால், அதற்கான முழக்கமாகத்தான் தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தை எழுப்பினார்.

அவர் திராவிட நாடு கேட்ட போதும், தமிழ்நாடு கேட்ட போதும், அதில் முரண்பாடுகள் கண்ட போதும், அண்ணாவின் வளர்ச்சியைக் கடுமையாக எதிர்த்து, கண்ணீர்த் துளிப் பசங்கள் என்று திட்டி விட்டுக் கடைசி-யாக அண்ணா வந்தவுடனே இன்றைக்குத்தான் திராவிட ஆட்சி மலர்ந்தது என்று மகிழ்ந்த போதும், கருணாநிதிக்குச் சிலை வைக்கச் சொன்ன போதும், எல்லோரும் அர்ச்சகராகச் சட்டம் வந்தால் என் நெஞ்சில் தைத்த முள் அகன்று போகும் என்று சொன்ன போதும், உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதியரசர்களுக்கான இடம் காலியாக இருந்தால்கூட ஆட்சியாளர்களை அழைத்து அந்த இரண்டு இடத்திலேயும் பார்ப்பனரைப் போட்டு விடாதீர்கள் என்று கேட்கிற அளவுக்கு அக்கறை காட்டிய போதும், கல்லூரியில் முதல்வர் பதவி காலியாக இருப்பது தெரிந்தால் கூட பெரியார் உடனே சொல்வார், அந்த இடத்தில் பிற்படுத்தப்-பட்டவரைப் போடு, தாழ்த்தப்பட்டவரைப் போடு என்பார்... இவை எல்லாம் செய்த போதும், இதெல்லாம் சின்னச் சின்னச் சீர்திருத்தங்கள், இவை போதும் என்று அவர் கருதவேயில்லை.

தன் வாழ்நாளில் ஒருசிலவற்றைச் சாதிக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பியது போல அவரும் விரும்பியிருக்கிறார். ஆனால் அந்த உடனடி விருப்பங்கள்தாம் அம்பேத்கரும் பெரியாரும் என்ற முடிவுக்கு வருவீர்களானால், அவர்களின் பெயர் சொல்லிப் பிழைப்பவர்களுக்கும், பதவி வேட்டையாடுகிறவர்களுக்கும் அவர்கள் பயன்படுவார்களே தவிர, விடுதலையைக் குறியிலக்காகக் கொண்டு போராடுகிறவர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக மாட்டார்கள்.

இருவருக்கும் அந்த உடனடிக் கோரிக்கைகளைக் கடந்த ஒரு நிலை இருக்கிறது. இந்துச் சமூகக் கட்டமைப்பை உடைத்து நொறுக்குவதற்கான கொள்கைக் கருவி அம்பேத்கரின் கருத்தியல். சாதியொழிப்புக்கு அடிப்படையான சமூகநீதி வழிப்பட்ட தமிழ்த் தேசிய ஓர்மைக்குப் பெரியார் தேவை. காலத்திற்கேற்ப அதில் கொஞ்சம் பட்டை தீட்ட வேண்டும், நீங்கள் தீட்டிக் கொள்ளுங்கள். யாரும் வருத்தப்பட மாட்டார்கள். பெரியார் வருத்தப்பட மாட்டார். வருத்தப்படுகிறவர்கள் பெரியார் கொள்கையாளர்களாகவும் இருக்க முடியாது.

நான் ஒன்று கேட்கிறேன் - 50 அகவைப் பெரியாருக்கும் 93 அகவைப் பெரியாருக்கும் வேறுபாடு இருந்ததா, இல்லையா? 93 அகவைப் பெரியாருக்கும் 140 அகவைப் பெரியாருக்கும் வேறுபாடு இருக்க வேண்டுமா, வேண்டாமா? யார் அவரை 140 அகவைக்கு வளர்த்துக் கொண்டு போவது, நாம்! நாமேதான்! வளராத பயிர் வாடி அழிந்து போகும், வளராத தத்துவம் காலத்துக்கு ஒவ்வாமல் மலடாகிப் போகும்.

வளரும் தத்துவமாக நீங்கள் கருதினால், காலத்திற்கேற்ப, கழிவன கழித்து, கொள்வன கொண்டு அதை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரைக் காப்பது மட்டுமல்ல, வளர்த்தெடுக்கவும் வேண்டும். அப்போதுதான் அவரைத் தமிழ்த் தேசியம் சொந்தம் கொண்டாடவும், தன் வளர்ச்சிக்கு அவரை உரமாக்கிக் கொள்ளவும் கூடும். இப்படித்தான் பெரியாருக்கும் தமிழ்த் தேசியத்திற்குமான உறவைப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன்.

நன்றி!

வணக்கம்!

 

Pin It