கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

போர் முனையின் முன்வரிசையில் இருப்பவர்களைப் போல, ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக வட்டத்தின் விளிம்பில் இருக்கின்றனர். வட்டத்துக்குள் எது ஊடுறுவினாலும் முதல் அடி தலித்துகளுக்கே விழுகிறது. தூக்கிவிட ஆளின்றி அவர்கள் அரற்றிக் கொண்டிருக்கும்போதே தாக்குதல் மய்யம் நோக்கி நகர்கிறது.மய்யத்தில் இருப்பவர் அடிபடும்போது வேகம் குறைந்திருக்கிறது. சொல்லப் போனால், அவர் வெறுமனே சீண்டத்தான் படுகிறார். மேலும் அங்கிருப்பவர் விழுந்தாலும் தூக்கிவிட ஆட்களிருக்கிறார்கள்.

Village Schoolவறுமை, பஞ்சம், இயற்கையழிவு, போர், அரசின் திட்டங்கள் என எல்லாமே தலித்து களைத்தான் முதலில் பதம் பார்க்கின்றன. தமிழக அரசு, ‘அனைவருக்கும் கல்வி' (SSA) திட்டத்தின் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்தி வரும் ‘செயல்வழிக் கல்வி' (ABL), ‘படைப்பாற்றல் கல்வி' (ALM) ஆகிய திட்டங்கள் அப்படித்தான் தலித் மாணவர்களைப் பதம் பார்த்து விடுமோ என்ற கவலையும் அச்சமும் இன்று பரவலாக எழுந்துள்ளது.

ஏற்றத் தாழ்வுடையதும் சமமற்றதுமான இந்தியச் சமூகத்தில் – தலித் மக்களுக்கும், சூத்திரர்களுக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. கி.பி. 1030இல் இந்தியாவுக்கு வந்து சென்ற பயணி அல்பெருனி, கல்வி பயில முயன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுந்தண்டனைகளை நேரில் பார்த்து குறித்திருக்கிறார். இந்த நிலையின் உக்கிரம் படிப்படியாய்க் குறைந்தாலும் பாகுபாடு நிலவியபடியேதான் இருந்தது. இன்றும் அதன் எச்சங்கள் மறைமுக வழியில் தொடர்கின்றன.

விடுதலைக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள், தலித்துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

கவிஞர் கம்பீரன் தனது கவிதையொன்றில் குறிப்பிடுவது போல, பொருத்தமில்லாத முயல் ஆமை ஓட்டப் பந்தையமாகவே பெரும்பாலானவை இருந்தன. தலித்துகள் ஆமைகளைப் போல நகர்ந்து கொண்டிருந்தார்கள். கல்வித் துறையில் அப்படித்தான் இன்றும் முன் நகர்ந்தபடி இருக்கிறார்கள். கல்வித் திட்டங்கள் அவர்களைக் குறித்த கரிசனையற்று இருந்தாலும் அவர் தம் முன் நகர்வு தொடர்கிறது.

கல்வியை அனைவருக்கும் தர வேண்டும் என்பது அவசியமானதுதான். ஆனால் பெறுகிறவர்களின் நிலைக்கு ஏற்ப அதை வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது. கல்வியைப் பொருத்தவரை, தலித் அல்லாத பிறருக்கு இன்று வழங்கப்படுவது மறுசோறுதான்! அவர்கள் ஏற்கனவே வரிசையில் இடம் பிடித்து தின்று கொண்டிருக்கிறார்கள். தலித்தோ இப்போதுதான் முதல் கவளத்தையே உண்கிறான்.

முதன்முறையாக, முதல் தலைமுறையாக பள்ளியில் நுழையும் தலித் மாணவரை – அடிப்படைக் கல்வியின் அடைவுத் திறன் அற்றவராக இன்றைய செயல்முறைக் கல்வியும், படைப்பாற்றல் கல்வி யும் மாற்றிவிடுமோ என்ற அய்யம் உருவாகியுள்ளது. தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் பள்ளி மாணவர்களிடையே மிகக் குறைந்த அளவிலான கற்றல் திறனே உருவாகியிருக்கிறது என்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ள இரு ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. சுமார் 29 மாவட்டங்களில், 870 கிராமங்களில் படிக்கும் 31,000 மாணவர்களை மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட’ஆண்டிறுதி கல்வி அறிக்கை' – ASER 2008 மற்றும் கல்வியாளர் வசந்தி தேவி தலைமையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஆகிய இரண்டுமே இந்த அவல நிலையைச் சொல்கின்றன.

தமிழகத்தில் ஒன்று, இரண்டு வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களில் 54.7 சதவிகிதத்தினர் மட்டுமே எழுத்துகளைப் படிக்கும் திறன் பெற்றுள்ளனர். ஆனால் தேசிய அளவிலான சராசரியோ 75.4 சதவிகிதம் ஆகும். மூன்று முதல் அய்ந்து வகுப்பு வரையுள்ள மாணவர்களில் 45.7 சதவிகிதம் பேர்தான் தமிழில் எளிய பாடப் பகுதிகளைப் படிக்கின்றவர்களாக இருக்கின்றனர். ஆனால், இவ்வகுப்புகளின் தேசிய வாசிப்பு நிலை 66.6 சதவிகிதம் ஆகும். கணிதப் பாடத்தில் ஒன்று மற்றும் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்த 62.6 சதவிகிதத்தினர் மட்டுமே எண்களைப் புரிந்து கொள்கின்றனர். மூன்று முதல் அய்ந்து வகுப்பு களைச் சேர்ந்த 36.3 சதவிகித மாணவர்கள் மட்டும்தான் கழித்தல் போன்ற கணித செயல்பாடுகளை செய்கின்றனர் என்கிறது, ASER 2008 ஆய்வு.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வியாளர் வசந்தி தேவி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் இதே வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள்தான் எளிய தமிழ்ப் பத்தி ஒன்றை வாசிக்கும் திறன் பெற்றிருக்கின்றனர். கணிதத்திலும் இதே அவல நிலைதான். இத்தகு ஆய்வறிக்கைகளை மட்டுமே சார்ந்திராமல் ஆசிரிய நண்பர்களின் வட்டத்தில் விசாரித்தறியும் போதும், இதே வகையான அவல செய்திகள்தான் கிடைக்கின்றன. சராசரியாக இருபத்தைந்திலிருந்து எண்பது மாணவர்கள் வரையிலான எண்ணிக்கைகளைக் கொண்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் – பாதிப் பேர்தான் நன்கு வாசிக்கவும், கணித செயல்பாடுகளை மேற்கொள்ளவும் திறன் பெற்று இருக்கிறார்கள். வகுப்புக்கு ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் ஓரளவு திறன் பெறுகிறார்கள் என்று அவர்கள் தரும் செய்திகள் சொல்கின்றன.

செயல் வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற கல்வி முறைகள் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான் தமிழக அரசுப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளன. ஆந்திர மாநிலம் ரிஷிவேலியில் ஜே. கிருஷ்ணமூர்த்தி நிறுவிய பள்ளிகளில் இக்கல்வி முறை இருந்தது. அதைப் பார்த்து முன்னாள் கல்வி இயக்குநர் விஜயகுமாரால் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் 2003இல் சென்னையில் உள்ள 13 பள்ளிகளில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டில் 264 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட இது, 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்கு முன்பிருந்த மாணவர் கற்றல் அடைவு நிலை, மேற்சொன்னபடியும்கூட இருந்திருக்கலாம். அந்த நிலை நீடிக்காத வண்ணம் இவ்விரு புதிய கல்விமுறைகளும் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறைகள் கற்றல் அடைவுத் திறனைப் பின்னுக்கு இழுத்துள்ளதோடு, அந்த நிலையை மேலும் மோசமாக்கும்படி செய்திருக்கின்றன. இதற்கு இக்கல்வி முறை காரணமாக இல்லை; செயல்படுத்துவதில்தான் தொய்வு ஏற்பட்டிருகிறது என்று பல கருத்துக்கள் வருகின்றன. ஆயினும் நடப்புச் சூழலை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்.

இந்தியாவில் சாதிய முறை நிலைப்பெற்ற பின்னர் அனைவருக்கும் கல்வி மறுக் கப்பட்டது. சம்புகனின் கதையும், ஏகலைவனின் கதையும், கர்ணனின் கதையும் அக்காலச் சூழலை கண் முன் நிறுத்துகின்றன. பவுத்தமும், சமணமும் கோலோச்சிய காலத்தில் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பு ஓரளவு இருந்தது. அம்மதங்கள் பார்ப்பனியத்தால் அழிக்கப்பட்டதும் அவ்வாய்ப்புகள் பறிபோயின. ஆனால் எச்சூழலிலும் பார்ப்பனரும், சத்திரியரும் படித்தே வந்தனர். முகலாயர்களின் வருகைக்குப் பிறகு இங்கே மக்தாபாஸ், மதராசா ஆகிய மத மற்றும் பொதுப்

பள்ளிகள் வந்தன. பார்ப்பன குருகுலப் பள்ளிகளோடும், இடைச் சாதி திண்ணைப் பள்ளிக் கூடங்களோடும் இவ்விரு பள்ளிகள் சேர்ந்ததும் கல்வி பரவலானது. வெள்ளையர்கள் வருகைக்குப் பிறகு கல்வியைச் சுற்றியிருந்த சாதி, மத வேலிகள் அகற்றப்பட்டன. 1813இல் வெளியிடப்பட்ட ‘சார்டட்' அறிக்கை தொடங்கி, 1986இல் வெளியான தேசிய கல்விக் கொள்கை வரை எண்ணற்ற மாற்றங்கள் உருவாயின.

‘‘தொடக்கக் கல்விக்குப் பிறகு தீண்டத்தகாதவர்கள் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம். அவர்கள் தமது சாதிக்கு ஏற்ற கைவினைத் தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும். உயர் கல்வியை அவர்களுக்கு அளிக்காததன் மூலம் தீண்டத்தகாதவர்கள் தமது தொழிலைத் தொடர்வார்கள்'' என்று பேசிய பாலகங்காதர திலகரைப் போன்ற பார்ப்பனர்கள்தான் 2000இல் அனைவருக்கும் கல்வித் திட்டத்தை பெருமிதத்தோடு அறிமுகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் இதை ‘பிராயச்சித்தம்' என்று நினைத்திருக்கலாம். ஆனால் அது புலே, அம்பேத்கர் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட காலத்தின் பக்குவம்; காலத்தின் நெருக்கடி!

தமிழகத்தில் இன்று 63 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. 1,75,000 ஆசிரியர்கள் அவற்றில் பணி புரிந்து வருகிறார்கள். 51,807 உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. 35,000 சுயநிதிப் பள்ளிகள் இருக்கின்றன. கல்வி இன்று பரவலாகி இருக்கிறது. தலித் மக்களுக்கு கல்வி பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகள் அரசுப் பள்ளிகளில் பெருகியுள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டம், ஓர் ஆண்டுக்கு 11,000 கோடியை கல்விக்கென செலவழிக்கிறது. மாணவர் சேர்க்கை குறைவு என்ற புகார்களும் இன்று இல்லை. தமிழகத்தில் 6 முதல் 14 வரையிலான வயதுடைய குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை விகிதம் 99.4 சதவிகிதமாகும். இவ்வளவு இருந்தும் கற்றல் அடைவு பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆய்வறிக்கையில் சுட்டப்படும் கிராமப்புற ஏழை மாணவர்களில், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களே அதிகம். அவர்கள்தான் பெருவாரியாக அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். பிற மாணவர்களும் வசதியுள்ளோரும் தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். வேலூர் மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் உள்ள கம்மபாளையம் தொடக்கப் பள்ளியைப் பற்றிய செய்தியொன்று அண்மையில் நாளேடுகளில் வெளியாகி இருந்தது. காமராசர் அவர்களால் 100 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அப்பள்ளியில், இன்று மூன்று மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். ஊரில் உள்ள பிற மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளிலே படிக்கின்றனர். இந்த அவல நிலை தமிழகத்தின் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளுக்கு வந்தால் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

இங்கு பல வகையான பாடத் திட்ட முறைகள், பல வகையான நிர்வாக முறைகள், பல வகையான கற்பித்தல் முறை என்று கல்வியின் நிலை சின்னா பின்னமாகிக் கிடக்கிறது. புற்றீசல் போல பெருகி பணம் பிடுங்கும் ஆங்கிலப் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தவில்லை. எது எப்படி இருந்தும் கிராமப்புற தலித் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர். ஏனெனில், அவர்களுக்கு வேறு போக்கிடமில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி தரமாக இருப்பது மிகமிக முக்கியம். தரமும், அடிப்படையும் அற்ற கல்வி அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி விடும். சமூக மாற்றம் ஏற்படாதபடி செய்துவிடும்.

கல்வியைப் பரவலாக்கும் நடைமுறைகளும் அதை வழங்கும் நடைமுறைகளும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல கல்வித் துறைக்கு விளங்குகின்றன. இவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. கல்வியைப் பரவலாக்கும் நடைமுறைகள் இன்று சிறப்பான நிலையை எட்டியுள்ளன. வழங்கு முறைகளில் தொய்வுகளும், இடற்பாடுகளும் இருந்தபடியே உள்ளன. கல்வியை மதத்தோடும் சாதியோடும் பிணைத்து இங்கே சிந்தித்துக் கொண்டிருந்தபோது, மேலை நாட்டு அறிஞர்கள் கல்வி வழங்கும் முறைகளை – குழந்தைகளையும் அவர் தம் உளவியலையும் மய்யப்படுத்தி சிந்தித்தனர். ரூசோ, மாண்டிசோரி, புரோபல், ஜான் டுவே என்று அச்சிந்தனையாளர்களின் வரிசை நீள்கிறது.

பிரம்படிப் பாடமும், பாராயணமும் இங்கு நிலவியபோது அங்கே குழந்தைகளை மய்யப்படுத்திய கற்றல் முறைகள் உருபெற்றன. மாண்டிசோரி பள்ளிகள், மழலையர் பூங்காக்கள் போன்றவையெல்லாம் அப்படி உருவானவைதான். இன்று கற்றல் கற்பித்தல் முறையில் பல்வேறு கருத்தாக்கங்கள் வந்துவிட்டன. 12–க்கும் மேற்பட்ட கற்றல் கற்பித்தல் முறைகள் உள்ளன. ஆசிரியர் நூலில் இருந்து ஒரு எழுத்தையும் மீறாமல் மாணவர்களை பொம்மைகளாய்ப் பாவித்து, அடித்து உதைத்து கற்றுத் தந்தது எல்லாம் மலையேறி விட்டது. மாணவர்களை அவர் தம் மனநிலை மற்றும் விருப்பமறிந்து கற்கச் செய்வதுடன், அவர்களுக்கு வழி காட்டுநராக மட்டுமே செயல்பட்டால் போதும் என்ற நிலை இன்று வந்துள்ளது.

செயல் வழிக்கற்றல் என்பதும் படைப்பாற்றல் கல்விமுறை என்பதும் இவ்வகையான நவீன கற்றல் கற்பித்தல் முறைகள்தான். இவ்விரு முறைகளும் நவீன கல்வியியல் மற்றும் கல்வி உளவியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட கூட்டு கற்பித்தல் முறையாகும். இவற்றில் பல கற்றல் செயல்பாடுகள் உள்ளன. செயல்வழிக் கற்றல், ஒன்று முதல் நான்கு வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. படைப்பாற்றல் கல்வி அய்ந்து முதல் எட்டு வகுப்பு களில் செயல்படுத்தப்படுகிறது. செயல்வழிக் கற்றலில் மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடும், பிற மாணவர்களின் உதவியோடும் பல வகையான அட்டைகளைக் கொண்டு தானே கற்கிறார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை யுடைய படிநிலைகள் உண்டு. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்திலான அட்டைகள் உண்டு. பாடவாரியாக கற்றலுக்கு உதவும் படங்கள் உண்டு. வருகைப் பதிவேட்டைக் குறிப்பது, காலநிலையைக் குறிப்பது, கற்றல் அட்டைகளில் இருக்கும் செயல்பாடுகளை செய்வது என மாணவர்கள் தாமே கற்கின்றனர்.

படைப்பாற்றல் கல்வியிலும் இதே வகையான செயல்பாடுகளே உள்ளன. ஆனால் புத்தகங்களே இங்கு அட்டைக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையில் மாணவர்கள் குறிப்பிட்ட பாடப் பகுதியை தாமே படித்து புரிந்து கொள்வதோடு, அப்பாடப் பகுதி தரும் செய்திகளை தொகுத்தெழுத வேண்டும், கடின சொற்களை இனங் காண வேண்டும். அப்பாடப் பகுதியை எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் ஒரு மன வரைபடத்தையும் வரைய வேண்டும்.

மாணவர்களுக்கு அதிக சுதந்திரத்தை தருவதாகவும், அவர் தம் படைப்புத் திறனை தூண்டி விடுவதாகவும் இம்முறை உள்ளது. குழந்தை மய்யக் கல்வியான இம்முறையில் ஆசிரியர், பாடம், தேர்வு ஆகிய மூன்று ‘பூதங்க'ளின் பயத்திலிருந்து ஒரு மாணவன் விடுதலை பெறுகிறான். ஆனால் இங்குதான் சிக்கல் தொடங்குகிறது. செயல்வழிக்கற்றல் முறையில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் அட்டைகளை எடுத்து வருவது, அடுக்குவது, கையாளுவது போன்றவற்றிலேயே அதிகமான நேரம் கழிகிறது. கற்றல் செயல்பாட்டில் அட்டைகள் முக்கியம் என்பதால், ஒரு அட்டை தொலைந்தாலும் எல்லாமே நின்றுவிடுகிறது. ஆசிரியரும் மாணவரும் அட்டைகளை அடுக்குவதிலேயே நாட்களைக் கழிக்கின்றனர்.

மாணவர்கள் ஒவ்வொரு படிநிலைக்கும் உரிய அட்டைகளில் இருக்கும் கற்றல் செயல்பாடுகளை முடித்த பின்னர்தான் அடுத்த நிலைக்குப் போக முடியும். இதனால் ஒரு வகுப்பறையில் பல நிலைகளில் நிற்கும் மாணவர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருக்கும் கவனம் செலுத்துவது ஆசிரியர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. இவ்வாறான காரணங்களால், கற்றல் செயல்பாடு தொய்வடைந்து வருகிறது. மீதிறன் பெற்ற மாணவர்கள் ஒரு நிலைக்குமேல் போய் தடுத்து நிறுத்தப்பட்டு பிற மாணவர்களுக்கு கற்றுத்தரும்படி பணிக்கப்படுகிறார்கள். இதனால், அவர்கள் படிப்பும் தடைபடுகிறது. தமிழ் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள், எண்ணுருக்கள் ஆகியவற்றை ஒரு மாணவர் தெளிவாக கற்றுக் கொள்ளும்போதுதான் இவ்விரு முறைகளில் சிறப்பாக செயல்பட முடியும். ஆய்வுகள் சொல்வது போல வாசிப்புக் குறைபாடு இருக்கும்போது, இம்முறைகள் மாணவர்களை மேலும் பாழாக்கி விடுகின்றன.

செயல்வழிக் கல்வியை முடித்து, படைப்பாற்றல் கல்விக்கு வரும் மாணவருக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது மிகமிக அடிப்படையான முன் நிபந்தனையாகிறது. ஆனால் இங்கிருக்கும் நிலையில் நிலைமை அப்படி இல்லை என்பதால், கிராமப்புற மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தங்கள் குழு மாணவர்களோடு பெரும்பாலான பொழுதுகளை வெட்டிக் கதை பேசி கழிக்கிறார்கள்.

Dalit Childrenகற்றல் அடைவுத் திறனில் குறைவுடைய மாணவர்களிடையே ஒன்றிரண்டு ஆண்டு இடைவெளியிலேயே அடுத்தடுத்த கல்வி முறையை அறிமுகப்படுத்தியதால், கிராமப் புற மாணவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். சொந்தமாகப் படிக்க முடியாத மாணவரால் பாடத்தில் தெளிவு பெற முடியவில்லை. பாடம் நடத்தும்படி இருந்த முந்தைய கற்பித்தல் முறையிலாவது சுமை ஆசிரியர் மேல் விழுந்திருந்தது. இப்போது பாடத்தை கற்கும் சுமை மாணவர்கள் மீதே விழுகிறது. கிராமப்புற கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு இது பெரும் சவால். முழுமையான கற்றல் திறன் கொண்டவர்களாக உருவாகாத சூழல் அவர்களை மந்தமாக்கி விடுகிறது. ஆனால் தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், தனிப் பயிற்சி பெறும் மாணவர்களும் அதிக கற்றல் திறன் பெற்றவர்களாக உருவாகின்றனர். இந்த வேறுபாடு சமூகத்தில் ஏற்றத்தாழ்வையும் இடைவெளியையும் உருவாக்கி விடுகிறது.

கிராமப்புற ஏழை மாணவர்களிடையே கற்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல் ஆசிரியர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழலாம். உண்மைதான். அர்ப்பணிப்பும், கடமையுணர்வும் கொண்ட ஆசிரியர்களாலேயே இன்று இருக்கும் சிறந்த நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் கிராமப்புறங்களிலும், தலித் மக்கள் பகுதியிலும் உள்ள பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு அதிகபட்ச பொறுப்புணர்வும் அக்கறையும் தேவைப்படுகிறது. பெரும்பாலான பொது மக்கள் அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை இழந்திருப்பது இதனால்தான்.

ஒடுக்கப்பட்ட மக்களிடம் கல்வி வந்து சேர்ந்ததைப் பற்றிய புரிதல் இந்த ஆசிரியர்களில் பலருக்கும் இல்லை. எஸ்.எஸ்.ஏ. மூலம் மாதத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் வீணாகக் கழிகின்றன. அங்கு பாடத்தை கற்பிப்பதில் உள்ள சவால்கள் பற்றியோ, சமூக நிலை பற்றியோ, கலை இலக்கியம் பற்றியோ எதுவுமே பேசப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கு இப்போது கூடுதல் நெருக்கடியும், அதிகார கெடுபிடிகளும் சேர்ந்துள்ளதால் அவர்களால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியவில்லை என்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஆசிரிய நண்பர் ஒருவர் ஒரு சம்பவத்தை விவரித்தார். ஒரு நாள் பள்ளியைப் பார்வையிட வந்த அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட அலுவலர் அவரை பள்ளி மைதானத்தில் நின்றபடி அழைத்துள்ளார். ‘என்னை ஏன் பார்க்க வரவில்லை? ABL, ALM ஆகியவற்றை ஒழுங்காக நடத்துகிறாயா?' என்றெல்லாம் கேள்விகள் கேட்டு மிரட்டியுள்ளார். வகுப்பறைகளுக்குள் வந்து பார்வையிடாமல், குறிப்பேடுகளைப் பார்வையிடாமல் இப்படி சத்தம் போட்டு விட்டு சென்றிருக்கிறார். அவர் ஓர் எசமான்; ஆசிரியர் ஓர் அடிமை என்ற கருத்து அந்த அதிகாரியிடம் இருந்திருக்கிறது. இது பல அதிகாரிகளிடம் இருக்கும் மனநிலை. மனித நேயத்துடனான உறவு அதிகாரிகள் – ஆசிரியரிடையே இல்லை. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் பல அம்சங்கள் புள்ளிவிவரத்தைப் பெறுவதிலும், வழங்குவதிலும் மட்டுமே இயங்குவதால், அத்திட்டத்தின் பலன்கள் பிஞ்சிலேயே கருகி விடுகின்றன. வேறு சில சிக்கல்களும் உண்டு. ஒன்று முதல் அய்ந்து வகுப்புகளைக் கொண்ட பல தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர் என்ற நிலையே நீடிப்பதால், அவர்களால் மாணவர்களுக்குப் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. 60 சதவிகிதம் தொடக்கப் பள்ளிகளில் ஈராசிரியர் என்ற நிலைதான் இன்றும் உள்ளது. ஓர் ஆசிரியருக்கு நாற்பது மாணவர் விகிதம் என்ற நிலையையே இங்கு வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மேற்கு நாடுகளில் அது 1 : 20 என்று வந்துவிட்டது. ஆசிரியர் மாணவர் விகிதத்தை ஒன்றுக்கு இருபது என குறைத்து அதிகப்படியான ஆசிரியர்களைப் பணியமர்த்தினால் நிலைமை வெகுவாக மாறிவிடும்.

இந்த ஆய்வுகளில் ஒன்று, வசந்தி தேவி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்கவே அவர்கள் அந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆனால் அரசு அதை வெளியிடவில்லை. குறைகளை சுட்டிக்காட்டும் போது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அதனிடம் இல்லை. கல்வி அதிகாரிகளும் அப்படித்தான் நடந்துக் கொள்கின்றனர். SSA, ABL, ALM திட்டங்களை விமர்சிக்காமல் புகழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு சமூகத்தில் தலைமுறை அறிவினை, எதிர்காலத்தை தீர்மானிக்கும் விசயம் இது என்பதால் அரசு இதை செவிமடுத்தே ஆக வேண்டும்.

செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி முறைகளை சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும்படி நெகிழ்வுத் தன்மை கொண்டதாக மாற்றுவது மிகவும் அவசியம். ஆசிரியர்கள், வல்லுநர்கள் குழு அமர்ந்து அதை செய்வது நல்லது. மொழிப்பாடங்களுக்கும், கணிதப் பாடத்திற்கும் இம்முறையிலிருந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விலக்கு அளிக்கலாம். கிராமப்புறம் மற்றும் கற்றல் அடைவு குறைந்த பள்ளிகளில் இம்முறையை காலையிலோ அல்லது மாலையிலோ ஏதாவது ஒரு வேளைக்கு மட்டும் நடைமுறைப் படுத்தும்படி செய்ய வேண்டும். பிற வேளைகளில் கற்றல் அடைவுத் திறன் மேம்பாட்டுப் பணிகளை பிழையின்றி எழுதுதல், சரளமாகப் படித்தல், கணக்கு ஆங்கிலப் பாடங்களில் பயிற்சிகளை செய்தல் போன்றவற்றை கவனிக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கும் ABL, ALM முறைகளை அறிமுகம் செய்வது உடனடி தேவையாகும். இது, கல்வியில் தொடரும் ஏற்றத்தாழ்வை சீராக்கும்.

கல்வியின் கட்டமைப்பு வசதிகளிலும், பள்ளிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியர் மற்றும் சேர்க்கை நிலையிலும், தமிழ் நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. ஆனால் அடிப்படைக் கல்வியைப் பெறுவதிலோ தமிழக குழந்தைகளுக்கு சிக்கல் இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் அவர்கள் எவ்வாறு முன்னகர முடியும் என்று கேட்கிறது இவ்வறிக்கைகளிலே ஒன்று. இக்கேள்வியை ஒவ்வொருவரும் கவலையோடு எதிர்கொண்டு செயலாற்ற வேண்டும். குறிப்பாக அரசுக்கு இப்பொறுப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில், அரசை நடத்துகிறவர்களின் பிள்ளைகளோ, அரசு அதிகார வர்க்கத்தின் பிள்ளைகளோ இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. அவர்களின் பிள்ளைகள் யாரும் அரசுப் பள்ளிகளில் படிப்பதில்லை. ஏழை தலித்துகளின் பிள்ளைகளே அங்கு பெருவாரியாகப் படிக்கிறார்கள். அவர்களே விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலை தொடர்ந்தால், அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறும் தலித் மாணவர்கள் மீண்டும் அடிமை வேலைகளை செய்யவும், மாடு மேய்க்கவும், கழிவு அகற்றவும்தான் போக வேண்டியிருக்கும். இதைப் பார்த்துக் கொண்டிருப்பது அரசுக்கு நல்லதல்ல.