கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தில்லியில் உள்ள புகழ்பெற்ற சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் ஆய்வு மாணவராக இருந்த, சேலம் அரசிப்பாளையத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 27 அகவை யினரான முத்துக்கிருட்டிணன் 13.3.2017 அன்று தற் கொலை செய்துகொண்டார். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அவர், பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள முனிர்கா பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டது.

2016 அக்டோபர் மாதம் தான் பெருங்கனவுகளோடு சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு.) ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். முதுகலைப் படிப்பை அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் முடித்தவர். ஜே.என்.யு. வில் நேர்காணலில் முத்துக்கிருட்டிணன் பேசிய ஆங்கிலம் தரமற்றதாக இருக்கிறது என்ற காரணத் தால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன்பின் ஓராண்டு கடுமையாக முயன்று தன்னுடைய ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொண்டு ஜே.என்.யு.வில் இடம் பிடித்தார். தன்னுடைய ஆர்வம், முயற்சி, எதிர்காலக் கனவு பற்றி தன் முகநூலில் பதிவு செய்துள்ளார். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ரோகித் வெமுலாவின் தற்கொலை தொடர்பான போராட்டங் களில் முன்னணியில் நின்றார்.

தற்கொலை செய்துகொண்டதற்கு முதல் நாள் 12.3.2017 ஞாயிறு மாலை சேலத்தில் உள்ள தன் குடும்பத்தினருடன் முத்துக்கிருட்டிணன் தொலைப் பேசியில் மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அடுத்த கிழமை சேலத்துக்கு வரப்போவதாகவும் கூறியிருக் கிறார். முத்துக்கிருட்டிணனின் தந்தை ஜீவானந்தம் தனியார் நிறுவனத்தில் காவலர் வேலை செய்கிறார். தாய் அலமேலு கூலி வேலை செய்பவர். கலைவாணி, ஜெயந்தி, சுபா என்கிற மூன்று தங்கைகள். முத்துக் கிருட்டிணன் தற்கொலை செய்து கொண்ட செய்தி இந்த ஏழைத் தலித் குடும்பத்தின்மீது பேரிடியாய் விழுந்தது.

ஜே.என்.யு.வின் அம்பேத்கர் - புலே மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான பாலகங்காதர், “தற்கொலை செய்துகொண்ட அறையில் நான் பார்த்த போது, முத்துக்கிருட்டிணனின் கால்கள் தரையில் ஊன்றியபடி இருந்தன. எனவே, இந்த மரணத்தில் மர்மம் உள்ளது. இதை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும். முத்துக்கிருட்டிணன் தன்னுடைய அறையில் தற்கொலை செய்து கொள்ளாமல், நண்பரின் அறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுவதை என்னால் நம்ப முடியவில்லை” என்றுகூறி இருக்கிறார். முத்துக்கிருட்டிணனின் தந்தையும் தன் மகன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை; அதனால் புலனாய்வுத் துறை விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

தில்லியிலிருந்து முத்துக்கிருட்டிணன் உடல் 15.3.2017 அன்று இரவு சேலம் அரிசிப்பாளையத்துக்குக் கொண்டுவரப்பட்டது. 16.3.2017 அன்று ஜெய்பீம் முழக்கத்துடன் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் பேசிய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், முத்துக்கிருட்டிணனின் இறப்பு குறித்து மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை நடத்தப் பட வேண்டும்; அவரின் குடும்பத்துக்கு ஒரு கோடி உருபா நிதி வழங்க வேண்டும். முத்துக்கிருட்டிணனின் தங்கையர் மூவருக்கும் அரசுப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சியால், முத்துக்கிருட்டிணனைத் தற்கொலைக்குத் தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டம் 306ஆவது பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது வெறும் வழக்காகவே நின்றுவிடுமோ? குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்களா?

திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்கிற தலித் மாணவர் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (எய்ம்ஸ்) மருத்துவத்தில் முதுகலை முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தார். சரவணன் 2016 சூலை மாதம் அவருடைய அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால் அவரது உடற்கூறு ஆய்வில் அது கொலை என்று கூறப் பட்டது. கொலை வழக்காகக் காவல் துறையால் பதிவு செய்யப்பட்டது.

சேலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தலித் மாணவர். அவருடைய பெற்றோர் பன்றி வளர்க்கும் தொழில் செய்யும் பன்னியாண்டிப் பிரிவைச் சேர்ந்த வர்கள். அப்துல்கலாம் போல் அறிவியல் அறிஞராக வேண்டும் என்று செந்தில்குமார் சொல்லிக் கொண்டிருந்தார். இயற்பியல் எம்.எஸ்சி. படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முடித்தர். எம்.ஃபில். படிப்பைப் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படித்தார். முனைவர் பட்டப் படிப்பிற் காக அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இயற்பியல் துறையில் அவர் தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டார். முனைவர் பட்ட ஆய்வுக்கான தலைப்பை முடிவு செய்தல், நெறியாளரை (guide) முடிவு செய்தல் போன்றவற்றில் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் 2008 பிப்பிரவரி 24 அன்று அவருடைய அறையில் மூக்கில் குருதி வழிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். உடற்கூறு ஆய்வில் அவருடைய உடலில் நஞ்சு கலந்ததிருப்பதாகக் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் சிலர் மேற்கொண்ட முயற்சியால் அய்தரா பாத் பல்கலைக்கழகம் செந்தில்குமார் குடும்பத்துக்கு அய்ந்து இலட்சம் உருபா வழங்கியது.

2016 சனவரி 17 அன்று முனைவர்பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட போது பல்கலைக்கழகத்திலும் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்ததுபோல், செந்தில்குமார் தற்கொலை செய்துகொண்டபோது நடக்க வில்லை.

நடுவண் அரசின்கீழ் இயங்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற நிறுவனங்களிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வியில் சேரும் தலித் மாணவர்கள், உடன்பயிலும் மேல்சாதி மாணவர்களாலும், நிருவாகத்தாலும், பேராசிரியர் களாலும் தீண்டப்படாதவர்கள் என்கிற அடிப் படையில் பலவகையான அவமானங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும், துன்பங்களுக்கும் உள் ளாக்கப்படுகின்றனர்.

தலித் மாணவர்கள் தாம் பிறந்து வளர்ந்த ஊர்-சேரி என்கிற சாதிய ஆதிக்க ஒடுக்குமுறை யின் கொடுமைகளிலிருந்து விடுபட்டு, சுதந்தர மான, சமத்துவமான சூழல் பல்கலைக்கழகங் களில் நிலவும் என்கிற எதிர்பார்ப்புடன் உயர்கல்வி யில் சேருகின்றனர். ஆனால் உயர்கல்வி நிறு வனங்களிலும் தீண்டப்படாதவர் என்ற காரணத் தால் பல நிலைகளிலும் தாங்கள் பாகுபாடாக நடத்தப்படுவதையும், புறக்கணிக்கப்படுவதையும், அவமானப்படுத்தப்படுவதையும், மிரட்டப்படுவதையும் கண்டு பேரதிர்ச்சிக்குள்ளாகின்றனர். மண்டையைக் குடையும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அந்நிலையில் தலித் மாணவர்கள் தங்கள் துய ரத்தைத் தங்கள் குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இந்தச் சமூகத்தின் மீதும் அரசமைப்பு மீதும் நம்பிக்கை இழக்கின்றனர். இத்துன்பங்களைத் தாங்கும் உள்ள உரன் கொண்ட தலித் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர். முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்தியா சுதந்தரம் பெற்று எழுபது ஆண்டுகளாகும் நிலையிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் தீண்டாமையின் கொடுமையால் தலித்  மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவது மாபெரும் வெட்கக் கேடாகும்.

மேதை அம்பேத்கர் 1930, 1931 ஆகிய ஆண்டு களில் இலண்டனில் நடைபெற்ற முதலாவது, இரண் டாவது வட்டமேசை நாடுகளில் தன் ஒப்பரிய அறிவாற்ற லால் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு அரசியலில் தனி வாக்காளர் தொகுதி உரிமையைப் பெற்றுத் தந்தார். “இது இந்துக்களைப் பிளவுபடுத்துவதாகும். எனவே பிரித்தானிய அரசு இந்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து காந்தியார் 1932 செப்டம்பரில் சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை மேற்கொண்டார். அதனால் கடுமை யான நெருக்கடியான சூழலில் அம்பேத்கர் தனி ஒதுக் கீட்டுடன் கூடிய பொது வாக்காளர் தொகுதி முறையை ஏற்க நேரிட்டது.

தீண்டப்படாத வகுப்பு மக்கள் அம்பேத்கரின் பின்னால் அணிதிரண்டு இருக்கும் நிலையை உடைக்கும் நோக்கு டன் தீண்டப்படாதவர்கள் “கடவுளின் பிள்ளைகள்” என்ற பொருள்படும் ‘அரிஜன்’ என்ற பெயரில் அழைக் கப்பட வேண்டும் என்றார், காந்தியார். ‘அரிஜன்’ என்ற பெயரில் ஒரு ஏட்டைத் தொடங்கினார். சாதி இந்துக்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று கூறி ஓராண்டுக் காலம் இந்தியா முழுவதும் பரப்புரை செய்தார்.

இந்தப் பின்னணியில், பத்து ஆண்டுகள் கழித்துக் காங்கிரசுக்காரர்கள் காந்தியாரின் முயற்சியால் தீண்டாமை மறைந்து வருகிறது; இனியும் தீண்டப்படாதவர்களை ஒரு தனி பிரிவினராகக் கருத வேண்டுமா? என்ற வினாவை எழுப்பினர். இந்த வினாவுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மேல்சாதி ஆதிக்கத்தை உணர்ந்த மேதை அம்பேத்கர் அவர்களுக்குப் பின்வருமாறு பதிலடி கொடுத்தார் :

“இந்த வாதத்தை எழுப்புகிறவர்கள் “என்னைத் தொடாதே” என்ற முறையிலான தீண்டாமைக்கும் சமூகப் பாகுபாட்டில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மனப்போக்கு என்ற முறையிலான தீண்டாமைக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்ப்பதாகத் தெரியவில்லை. இரண்டும் அறவே வெவ்வேறானவை. “என்னைத் தொடாதே” என்ற முறையிலான தீண்டாமை நகரங் களில் பையப்பைய மறைந்து கொண்டிருக்கலாம்; என்றாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இது நடை பெற்றுக் கொண்டிருக்கிறதா என்பது எனக்கு அய்யமே! ஆனால் தீண்டப்படாத மக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்ட வேண்டும் என்ற அளவில் இந்துக்களிடம் ஒரு மனப்போக்காக இருக்கின்ற தீண்டாமையானது கற் பனைக் கெட்டக்கூடிய காலத்திற்குள் நகரங்களிலோ கிராமங்களிலோ மறைந்து போகாது என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.” (காங்கிரசும் காந்தியும் தீண்டப் படாத மக்களுக்குச் செய்தது என்ன? - நூல் 1945).

“தீண்டாமையைக் கடைப்பிடிப்பது பாவம்” என்கிற காந்தியாரின் கூற்று பள்ளிப்பாட நூல்களில் தனியாக அச்சிடப்படுகிறது. “தீண்டாமையைக் கடைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம்” என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அம்பேத்கர் 1945இல் கூறிய, தீண்டப்படாதவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டும் சாதி இந்துக்களின் மனப்போக்கு 2017ஆம் ஆண்டிலும் நீடிக்கிறதே! தீண்டாமையின் வடிவங்களில்-வெளிப்பாடுகளில் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மனுஸ்மிருதி உள்ளிட்ட இந்துமத சாத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை யும், கற்பிக்கும் உரிமையும் உண்டு; சத்திரியர், வைசியருக்குக் கற்கும் உரிமை மட்டும் உண்டு; சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கல்வி உரிமை இல்லை என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதியை மீறி, சூத்திரன் வேதம் ஓதினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்; வேதம் ஓதுவதைக் காதால் கேட்டால், காதில் காய்ச்சிய ஈயத்தை ஊற்ற வேண்டும். இந்தியத் துணைக்கண்டத்தில் 1500 ஆண்டுகளுக்கு மேலாக இதுவே சமூக வழக்க மாக - ஆட்சியின் சட்டமாக இருந்தது.

பிரித்தானிய ஆட்சியில் 1835இல் மெக்காலே, கல்வித் திட்டத்தின்படி பொதுப் பள்ளிகளும், கல்லூரி களும் தொடங்கப்பட்டன. கல்வியைப் பார்ப்பனர்களே பெரிதும் கைப்பற்றிக் கொண்டனர். பிறகு பிற மேல் சாதியினரும் உயர்கல்வியில் நுழைந்தனர். சுதந்தர இந்தியாவில் தொடங்கப்பட்ட மத்தியப் பல்கலைக் கழகங்கள், பிற உயர் கல்வி நிறுவனங்கள் பார்ப்பனர் - பிற மேல்சாதியினரின் கோட்டையாகவே இருந்தன.

நடுவண் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக் கான 27 விழுக்காடு ஒதுக்கீடு 1990இல்தான் அளிக்கப் பட்டது. இது 1994இல் தான் நடைமுறைக்கு வந்தது. மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீடு 2007ஆம் ஆண்டு அறிவிக் கப்பட்டது. 2008இல் நடப்புக்கு வந்தது. அதுவும் ஆண்டிற்கு 9 விழுக்காடு மேனியில் மூன்று ஆண்டு களில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டது. இது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே மேல்சாதியினரின் முற்றுரிமையாக இருந்த உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப் பட்டவர்களும் இடம்பெறுவதை இந்நிறுவனங்களின் பேராசிரியர்களும் மேல்சாதி மாணவர்களும் நிருவாக மும் பலவகையிலும் தடுக்க முயல்கின்றனர்.

மத்தியக் கல்வி நிறுவனங்களில் 1999-2004 காலத்தில் வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருந்த போது இந்துத்துவ சக்திகளின் ஆதிக்கம் வளர்ந்தது. குறிப்பாக, அகிலபாரத வித்தியார்த்தி பரிசத் (ABVP - ஏபிவிபி) எனும் ஆர்.எஸ்.எஸ்.இன் மாணவர் அமைப்பின் அடாவடித்தனம் பெருகியது. ஏபிவிபி, 1951இல் ஜன சங்கம் கட்சியை ஆர்.எஸ்.எஸ். தொடங்குவதற்கு முன்பே உருவாக்கிய மாணவர் அமைப்பாகும். 2014இல் மோடி தலைமை அமைச்சராக வந்த பிறகு மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்துத்துவத்துக்கு எதிராகச் செயல்படுவோரை ஆட்சி அதிகாரத்தின் துணையுடன் ஒடுக்குகின்றனர்.

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் செயல்பட்டு வந்தது. இது இந்துத்துவத் துக்கும் மோடியின் ஆட்சிக்கும் எதிரான கருத்துகளைக் கூறுகிறது என்ற காரணத்தால் அப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி 2015 ஏப்பிரல் 14 அன்று அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைத் தடைசெய்தார். இதில் வேடிக்கை என்ன வெனில், சென்னை ஐ.ஐ.டி.யில் வியாசர், வசிஷ்டர், தூர்வாசர் ஆகிய புராண காலத்துப் பெயர்களில் படிப்பு வட்டங்கள் இயங்கி வருகின்றன. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் தடைசெய்யப்பட்டதற்கு இந்திய அளவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அதன் மீதான தடைவிலக்கிக் கொள்ளப்பட்டது.

அடுத்து, மத்தியப் பல்கலைக்கழகமான அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவத்துக்கு எதிராகச் செயல்பட்ட அம்பேத்கர் மாணவர் அமைப்பின் முன்னணிச் செயல்வீரராக விளங்கிய ரோகித் வெமுலாவை மோடியின் அமைச்சர்களும் துணைவேந்தரும், ஏபிவிபி மாணவர் தலைவர் சுசில்குமாரும் கூட்டாகச் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளினர்.

2015 ஆகத்து மாதம் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் யாகுப் மேனன் தூக்கிலிடப்பட்ட நினைவு நாளை மரணதண்டனைக்கு எதிரான நாளாகக் கடைப் பிடித்தனர். மரண தண்டனைக்கு எதிராக உரை யாற்றினர். “இன்றும் எத்தனை யாகுப் மேனன்களைத் தூக்கிலிட வேண்டும்?” என்ற பதாகையை ஒரு மாணவர் கையில் ஏந்தியிருந்தார். அய்தராபாத் பல்கலைக் கழகத்தின் ஏபிவிபி மாணவர் சங்கத்தின் தலைவர் சுசில்குமார், அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் மரண தண்டனைக்கு எதிராக நடத்திய நிகழ்ச்சியின் புகைப் படத்தை முகநூலில் வெளியிட்டு, “குண்டர்கள் ரவுடித் தனத்தைப் பற்றிப் பேசலாமா?” என்று பதிவு செய்தார்.

இப்பதிவைப் பார்த்த அம்பேத்கர் மாணவர் சங்கத்தி னர் சுசில்குமாரிடம் மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினர். அப்போது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற் பட்டது. தன்னை அம்பேத்கர் சங்க மாணவர்கள் தாக்கியதாக மருத்துவமனையில் சேர்ந்தார். அதற்கு முன்பே அவருக்கு இருந்த குடல்வால் சிக்கலுக்காக அறுவை செய்து கொண்டார். தலித் மாணவர்கள் தாக்கியதாகக் கூறப்படுவதற்கும் குடல்வால் சிக்கல் இருப்பதற்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்.

ஆயினும் சுசில்குமார் நடுவண் அரசின் தொழி லாளர் நல துணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வுக்கு, அய்தராபாத் பல்கலைக்கழகம் தேச விரோத சக்திகளின் - சாதி வெறியர்களின் கூடாரமாகிவிட்டதாக மடல் எழுதினார். ஏபிவிபி மாணவர் தலைவரிடமிருந்து அம்மடல் வந்ததால், அம்மடலை மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு அனுப்பி னார். சுமிருதி இரானி இதன்மீது நடவடிக்கை எடுக்கு மாறு துணைவேந்தருக்கு அம்மடலை அனுப்பினார்.

சாதிவெறி பிடித்த பார்ப்பனரான துணைவேந்தர் அப்பாராவ் 2015 திசம்பர் 16 அன்று ரோகித் வெமுலா உள்ளிட்ட அய்ந்து தலித் மாணவர்களை விடுதியி லிருந்து வெளியேற்றினார். வகுப்பறை தவிர பல்கலைக் கழகத்தின் எந்தவொரு இடத்திலும் புழங்குவதற்குத் தடைவிதித்தார். 2015 சூலை முதல் கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டது. ரோகித் வெமுலாவும் அவரின் நண்பர்களும் 15 நாள்கள் பல்கலைக்கழகத்தின் திறந்த வெளியில் தங்கினர். போராட்டம் நடத்தினர். மன உளைச்சலுக்குள்ளாகிய ரோகித் 17.1.2016 அன்று விடுதியில் நண்பரின் அறையில் தற்கொலை செய்து கொண்டார். நெஞ்சை உருக்கும் ஒரு மடலை எழுதி யிருந்தார்.

ரோகித் வெமுலாவின் தற்கொலை இந்திய அளவில் பெரும் எதிர்ப்பு அலைகளை எழுப்பியது. அதன் விளை வாக நடுவண் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணைவேந்தர் அப்பாராவ், ஏபிவிபி மாணவர் தலைவர் சுசில்குமார் ஆகியோர்மீது ரோகித் வெமுலாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைத்த ஆய்வுக் குழுவும் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு அய்தராபாத் பல்கலைக் கழக நிர்வாகமே காரணம் என்று கூறியது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை?

இந்துத்துவ பா.ச.க. தனக்கே உரிய சூழ்ச்சியுடன் ரோகித் வெமுலா தலித் அல்ல என்ற பிரச்சனையை எழுப்பியது. ரோகித் வெமுலாவின் கல்விச் சான்று களில் அவர் தலித் என்றுதான் இருக்கிறது. அவர் இறந்த பிறகு குண்டூர் மாவட்ட ஆட்சியர் ரோகித் தலித்தான் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினார். எனவே பா.ச.க. ரோகித்தின் தம்பி இராசா வெமுலாவின் தலித் சான்று போலி யானது என்று மெய்ப் பிக்க நடவடிக்கை எடுத்தது.

“இந்து தர்ம இரட் சக்சங்” என்கிற அமைப்பைச் சேர்ந்த தர்சனப்பு சீனிவாசு எனும் தலித் மூலம், ரோகித்தின் தம்பி இராசா, தலித் என்று போலியான சான்று வாங்கியிருப்பதை இரத்து செய்ய வேண்டு மென்று குண்டூர் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் அனுப்பினார்.

ரோகித்தின் தாய் இராதிகா தாழ்த்தப்பட்ட வகுப்பினர். இராதிகாவின் கணவர் கல்லுடைக்கும் தொழில் செய்யும் மிகப்பிற்படுத்தப்பட்ட சாதியினர். இராதிகாவின் மூன்று குழந்தைகளும் பிறந்த பின் குடிகாரரான கணவர் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். மூன்று குழந்தைகளையும் இராதிகா அரும்பாடுபட்டு வளர்த்தார்.

இந்தப் பின்னணியில் ரோகித்தும், இராசாவும் தலித் அல்லர் என்ற வாதத்தை பா.ச.க. முன்வைக்கிறது. சீனிவாசு அனுப்பிய விண்ணப்பத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழு, “குழந்தைகளாக இருக்கும் போதே உன் கணவர் பிரிந்து சென்றுவிட்ட பின் யாருடைய உதவியைக் கொண்டு உன் குழந்தை களை வளர்த்தாய்?” என்று இராதிகாவின் கற்பை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்டு அவமானப்படுத்தியது. இக்குழு இராசா வெமுலா தலித் அல்ல என்று முடிவு செய்தது.

இந்த மூடர்களின் முடிவு நீதிமன்றத்தில் நிற்காது. ஏனெனில் 2012இல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஃப்தப் ஆலம், ஆர்.பி. தேசாய் ஆகி யோர் இதுகுறித்துத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஒரு பழங்குடி இனப்பெண் சத்திரிய வகுப்பு ஆணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குக் குழந்தை பிறந்த பின் கணவன் பிரிந்து சென்றுவிட்டார். அவர்களின் குழந்தை எந்தச் சாதி என்பதே வழக்காகும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “ஒரு தாழ்த்தப் பட்ட அல்லது பழங்குடி இனப்பெண் வேறு சாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டபின், கணவன் இறந்தாலோ அல்லது அவன் தன் மனைவியைக் கைவிட்டுப் பிரிந்து சென்றாலோ, அதன்பின் அப் பெண் தான் பிறந்த சாதியினர் வாழும் சூழலில், அக்குழந்தையை வளர்க்கும்போது, அக்குழந்தை, தாயின் சாதியைச் சார்ந்ததாகவே கருதப்பட வேண்டும்” என்று கூறியுள்ளனர். இராதிகாவின் மகன்களான ரோகித்தும், இராசாவும் தலித் சூழலில் தலித்தாகவே வளர்ந்தார்கள் என்பதால், பா.ச.க.வின் தீயநோக்கம் நிறைவேறாது. ரோகித் வெமுலாவின் தற்கொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிப்ப தற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, குற்றவாளிகளைக் காப்பாற்ற ரோகித் வெமுலாவின் குடும்பத்தினரை இழிவுபடுத்த முனைவது கடைந் தெடுத்த கயமை ஆகும்.

ரோகித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட அடுத்த மாதம் சவகர்லால்  நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு.) ஏபிவிபி தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றது. ஜே.என்.யு.வின் மாணவர் சங்கத் தலை வராக இருந்த கண்ணைய குமார் பீகார் மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவரு டைய தாய் அங்கன்வாடியில் வேலை செய்பவர். கண் ணைய குமார் 12.2.2016 அன்று கைது செய்யப் பட்டார். கருத்துரிமையை நசுக்கும் இக்கைதைக் கண்டித்து உலக அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தன. கண்ணைய குமார் விடுதலையான பிறகும் இந்தியா வின் பல பகுதிகளில் கல்வி நிறுவனங்களில் இந்துத் துவப் பாசிசத்துக்கு எதிராக முழக்கம் செய்தார்.

ஆயினும் மோடியின் இந்துத்துவ ஆட்சியில் ஏபிவிபியினரின் அட்டூழியங்கள் தொடர்கின்றன. தில்லியில் ராம்ஜாஸ் கல்லூரியில் கருத்துச் சுதந்தரம் பற்றிய கருத்தரங்கில் 22.2.2017 அன்று ஜே.என்.யு. வின் மாணவத் தலைவர்கள் ஷீலா ரஹீத், உமர்காலித் ஆகியோர் பேசவிருந்த கூட்டத்தைக் காலித்தனம் செய்து நடத்தவிடாமல் செய்தனர்.

நாக்பூரில் ஒரு பல்கலைக்கழகத்தில் “சனநாயகமும் அதன் விழுமியங்களும்” என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் சிறந்த படிப்பாளியுமான சீதாராம்யெச்சூரி பேசுவதாக இருந்த நிகழ்ச்சியை ஏபிவிபி குண்டர்கள் துணைவேந்தரை மிரட்டி இரத்துச் செய்யுமாறு செய்தனர். இந்த நிகழ்ச் சியை அம்பேத்கர் சிந்தனைகள் துறை ஏற்பாடு செய் திருந்தது.

நரேந்திர மோடி ஆட்சியில் இந்துத்துவ சக்தி களின் பாசிசப் போக்கை எதிர்த்து, தாழ்த்தப்பட்ட வர்களும் ஒடுக்கப்பட்ட பிற வகுப்பினரும் ஒன்று பட்டுப் போராடாவிடில் உயர்கல்வி நிறுவனங் களில் தலித் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க முடியாது.