மாதங்களில் சிறந்தது தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும், அல்லவை கழிந்து நல்லவை மலரும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. காரணம் தை மாதமே அறுவடை மாதமாகும். வழி பிறத்தல் என்பது ஒரு புதிய ஆண்டின் தொடக்கத்தையே குறிக்கிறது.

களனி திருத்தி, வயல் உழுது, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து, விளைந்த நெல்மணிகளின் பாரம் தாங்க முடியாமல் தலை சாய்ந்து படுத்த கதிர்களை நல்ல நாள் பார்த்து ஒரு கைப்பிடி அரிந்து  தாம்பாளத்தில் வைத்து எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டி விடுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர்.

அதில் கொஞ்ச நெல்மணிகளை எடுத்துக் குத்தி அரிசியாக்கி அந்தப் புத்தரிசியைப் பழைய அரிசியோடு கலந்து மஞ்சளும், இஞ்சியும் கட்டிய புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி இயற்கைத் தெய்வமான ஞாயிறுக்குப் படைத்து வீட்டுத் தலைவனும் துணைவியும் பிள்ளைகளும் கொண்டாடி மகிழும் விழாவே பொங்கல் நாள்!

ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி பூமியின் கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப் பட்ட பகுதியில் விழுகிறது. நமது பூமியானது அதன் அச்சில் இருந்து 23.5 சாய்வுக் கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் செங்குத்தாய் விழும் சூரியனின் ஓளி பூமியின் மீது ஒரேமாதிரி விழுவதில்லை. இதன் அடிப்படையில்தான் மூன்று மாதத்திற்கு ஒரு பருவமாய், நான்கு பருவ காலங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

பூமி சூரியனைச் சுற்றும் நீள் வட்டப்பாதையில் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி மீண்டும் அதே புள்ளிக்கு வருவதையே ஓர் ஆண்டாகக் கணக்கிடுகிறோம். <http://journeytothestars.files.wordpress.com/2011/06/solstice.gif>

தொல்காப்பியர் காலத்தில் ஓராண்டுக் காலத்தைத் தட்ப வெட்ப மாறுபாடுகளுக்கு ஏற்ப கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறு பெரும் பொழுதுகளாக வகுத்தார்கள். ஓர் ஆண்டு ஆவணியில் தொடங்கி ஒரு பொழுதுக்கு இரு மாதங்கள் என்ற விழுக்காட்டில் ஆடியில் முடிவடைந்தது.

இதே போல் ஒரு நாளை (1) வைகறை (2) காலை (3) நண்பகல் (4) ஏற்பாடு (5) மாலை (யாமம் ) என வகுத்தார்கள். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 மணித்துளிகளைக் கொண்டதாகும். அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாள் அறுபது நாழிகை தற்போதைய கணக்கீடான 1440 மணித்துளிகளோடு, அதாவது 24 மணி நேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

ஆனால் இந்தக் கால அளவை பூமியின் பின்னேகல் (precession of the equinoxes) காரணமாக மாறிவிட்டது. தமிழ்நாட்டையும் ஈழத்தையும் பொறுத்தளவில் ஆவணி புரட்டாதி இப்போது கார் (மழை) காலமாக இல்லை. ஆவணி, புரட்டாதி இப்போது முதுவேனில் காலமாக மாறிவிட்டது.

ஆவணி புரட்டாதி மாதங்களில் நல்ல நாள் பார்த்து விதைப்பு இடம்பெறுகிறது. சில சமயம் முதல் மழை பெய்த பின்னர் விதைக்-கிறார்கள். மழை பெய்யுமுன் ஆவணியில் விதைப்பு விதைப்பதும் உண்டு. இதற்குப் புழுதி விதைப்பு என்று பெயர்.

புரட்டாசியில் சிறிதாகப் பெய்யத் தொடங்கி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பருவ மழை உரக்கப் பெய்வது காரணமாக வயல்கள் குளங்கள் நிரம்புகின்றன. தண்ணீரின் மட்டம் கூடக் கூடப் பயிரும் ஓங்கி வளரும். சில சமயம் பயிர் சிறிதாக இருக்கும்போது மழை இல்லாமல் கருகுவதும் உண்டு. அல்லது பெருமழை பெய்து வெள்ளத்தினால் அழுகிப் போவதும் உண்டு.

நெல்லை விதைத்தால் நெல்லு மாத்திரம் முளைப்பதில்லை. எருவில் கலந்துள்ள புல்லு மற்றும் கிடைச்சிக் கொட்டைகளும் முளைக்கும். அவற்றைப் புடுங்குவதில் கமக்காரர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதோடு வெட்டுக்கிளிகள், பூச்சி புழுக்கள் நெற்பயிரைத் தாக்கும். இவற்றை ஒழிப்பதற்கு இப்போது கிருமிக் கொல்லி பயன்படுத்தப்படுகிறது.

தை மாசி மாதங்களில் வயல்களில் தண்ணீர் வற்றிக் கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருக்கும். வயல்களை உழுது விதைத்துக் களை பிடுங்கக் கட்டிக் காத்து உழைத்துப் பாடுபட்டதன் பயனை உழவர்கள் அறுவடை செய்யும் காலம் இதுவாகும்.

ஆன காரணத்தினாலேயே தை மாதப் பிறப்பை உழவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தை பிறந்தால் தங்கள் துன்பங்கள் தீரும் வழி பிறக்கும் என நினைக்கிறார்கள்.

பொங்கல் விழாவிற்குச் சில வாரங்கள் கழித்தே அரிவு வெட்டு இடம்பெறும். வெட்டிய கதிர்களைக் குவித்து வயலின் நடுவே சூடு வைப்பார்கள். பின்னர் மாடுகளைக் கொண்டு சூடு மிதிப்பு இடம்பெறும். இப்போது காலமாறுதலுக்கு ஏற்ப இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கி, சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் அயலும் சூழ இருந்து உண்டு மகிழ்வர்.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். உழவர்கள் தமது கமச் செய்கைக்குத் துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.

வயல் உழவும், வண்டி இழுக்கவும், சூடு மிதிக்கவும், பால், தயிர், நெய் கொடுக்கவும், வயலுக்கு எரு தரவும் காரணமாக இருந்த எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குடிக்கப் பச்சை-யரிசிக் கஞ்சி கொடுப்பர்.

மாலையில் பட்டிப் பொங்கல் பொங்கிப் படைக்கப்படும். மாடுகளுக்கு அப்பொங்கலில் ஒரு கவளம் உண்பதற்குக் கொடுக்கப்படும். பின்னர் மாடுகளின் கொம்புக்கும் நெற்றிக்கும் குங்குமம், சந்தனம் பூசி கழுத்தில் மலர் மாலை, வடை மாலை போன்றவற்றால் அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம் விடுவார்கள்.

அண்மைக் காலமாக இந்த வழக்கம் அருகி-வருகிறது. போர் காரணமாகத் தாயக மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றாக இழந்து விட்டார்கள். இடம்பெயர்ந்த மக்களில் ஒரு சாரார் அவர்களது சொந்த வீடுவாசல்களில் மீண்டும் குடியமர்த்தப்படவில்லை. அவர்களது காணிகள் படை முகாம்கள், படைவீடுகள், உல்லாச விடுதிகள் நிறுவப் பறிக்கப்பட்டு விட்டன.

நெற்கழஞ்சியமாக விளங்கிய வன்னி இன்று அதன் களை இழந்து விட்டது.

தைப்பொங்கல் திருநாளுக்கு வானியல் அடிப்படை இருக்கிறது. தென்திசை நோக்கிப் பயணம் செய்யும் ஞாயிறு (பூமியில் இருந்து பார்க்கும் போது) இந்நாளில் வடதிசை நோக்கிப் பன்னிரண்டு இராசிகளில் ஒன்றான தனு இராசியில் இருந்து மகர இராசியில் புகுகின்றான். ஒரு இராசியில் இருந்து இன்-னொரு இராசிக்குப் போக எடுக்கும் காலம் ஒரு மாதமாகும்.

பொங்கல் நாளை "மகர சங்கராந்தி"யாகப் புராணிகர்கள் மாற்ற எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அடிப்படையில் பொங்கல் உழவர் விழாவாகவும் சமயத்தைக் கடந்தும் நிற்கிறது.

தை மாதத்துக்கு மேலும் சிறப்புகள் உண்டு. தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு திருவள்ளுவர் பிறந்த நாளில் தொடங்குகிறது. இந்த ஆண்டு (2015) திருவள்ளுவர் ஆண்டு 2046 எனக் குறிப்பிடப்படுகிறது.

இப்போது வழக்கில் இருக்கும் "பிரபவ" முதல் "அட்சய" 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்ற அரசனால் கி.பி. 78இல் அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும். இவை வடபுல அரசனால் அறிமுகப்படுத்தப்பட்டதால் வடமொழிப் பெயர்களால் வழங்கப்படலாயின.

இந்த ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பாடு, வாழ்வு முதலியவற்றிற்கு இழிவும் அழிவும் ஏற்பட்டன. அவற்றை எண்ணிப் பார்த்த தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி தமிழர்களுக்கு உரிய தொடர் ஆண்டு ஒன்றினை உருவாக்குவது பற்றி ஆராய்ந்தார்கள்.

திருவள்ளுவர் கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்று கணிக்கப்பட்டு அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவதெனவும் அதுவே தமிழ் ஆண்டாகக் கொள்வ-தெனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆங்கில ஆண்டுடன் 31ஐக் கூட்டினால் வள்ளுவராண்டு வரும். இப்போது ஆங்கில ஆண்டு 2015. எனவே வள்ளுவராண்டு 2046 (2015 சக 31).

எனவே திருவள்ளுவர் ஆண்டு தைப் பொங்கல் திருநாளான தை முதல் நாள் தொடங்கி மார்கழிக் கடைசியில் முடிவுறும்.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரச நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்கள்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சி ஆகியவற்றில் மட்டுமே 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம்.

எல்லாத் திங்கள் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். இதிலிருந்து அவர் காலந்தொட்டே இன்று இருக்கும் திங்கட் பெயர்கள் வழங்கி வருகின்றன எனக் கொள்ளலாம்.

பண்டைய காலத்தில் திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே பெரும்பொழுதைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தைத் திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணிகள், 43 மணித்துளிகள்.

'உவவுமதி' (முழுமதி) நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் பழந்தமிழர் அறிந்திருந்-தார்கள். (புறநானூற்றுப் பாடல - 65).

ஞாயிற்றைக் கொண்டு ஆண்டைக் கணக்கிடும் முறை கிபி 7ஆம் நூற்றாண்டில் வராகமிகிரரால் கொண்டுவரப்பட்டது. ஞாயிறு வணக்கம் இயற்கை வழிபாட்டைச் சேர்ந்தது. உலக நாகரிகங்கள் எல்லாவற்றிலும் ஞாயிறு வணக்கம் இருந்ததற்குச் சான்றுகள் இருக்கின்றன. உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக ஞாயிறு இருப்பதால் ஆதி மனிதன் ஞாயிற்றைத் தெய்வமாக உருவகப்படுத்தி வணங்கிப் போற்றி வந்ததில் வியப்பில்லை.

வேதக் காலத்தில் இந்திரன், வருணன், அக்கினி இவற்றுக்கு ஒப்ப ஞாயிறு தெய்வமாக வழிபடப்பட்டது. இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான சௌரம் ஞாயிறை முழுமுதற் தெய்வ-மாக வழிபடும் மதமாகும். பிற்காலச் சோழர் ஆட்சியில் சூரியனுக்குத் தனிக் கோவில்கள் எழுப்பப்பட்டன.

முத்தமிழ்க் காப்பியங்களில் முதல் காப்பிய-மான சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள்,

"ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு

மேருவலம் திரிதலான்" (சிலம்பு 1, 4-6)

என ஞாயிற்றை வாழ்த்திப் போற்றுகிறார். 'காவிரி ஆற்றையுடைய நாடனாகிய சோழனது ஆணைச் சக்கரம் போன்று பொன் உச்சியை உடைய இமயமலையை வலம் வருதலால் ஞாயிற்றை வணங்குவோம்! ஞாயிற்றை வணங்குவோம்!'

மேலே கூறியவாறு தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில், சமயச்சார்பற்ற எல்லோருக்கும் பொதுவான விழா பொங்கல் திருநாளாகும். பொங்கல் விழாவில் கற்பனைக்கோ, புனைவு-களுக்கோ, அருவருக்கத்தக்க, பகுத்தறிவுக்குப் பொருந்தாத கட்டுக் கதைக்கோ இடமில்லாத விழாவாகும்.

தமிழர்கள் கொண்டாடும் தீபாவளி தமிழ் அரசன் ஒருவனைக் கடவுள் அவதாரம் சூழ்ச்சியால் கொன்ற நாளாகும்.

தைத் திருநாளான பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் பிறந்த நாள் என்பன வெறும் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் உண்டு மகிழும் நாள்களாக இருந்துவிடக் கூடாது. அது எங்கள் உணர்வுகளைப் புதுப்பிக்கும் நாளாகட்டும்! கலை, பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றைப் போற்றிப் பாதுகாப்பதற்கும், நாம் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் எமது தாயக மண்ணில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தன்மானத்தோடும் மகிழ்ச்சியோடும் உரிமைபெற்ற மக்களாக வாழ்வதற்கும் இப்புத்தாண்டு வழிகோலட்டும்.

- கனடாவிலிருந்து நக்கீரன்

Pin It