ambedkhar 350தமிழ்த் தேசம் 2012 புரட்டாசி (செப்டம்பர் - அக்டோபர்) இதழில் காலத்தின் தேவை  தாழ்த்தப்பட்டோருக்கான இரட்டை வாக்குரிமை என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை விவாதத்திற்கு முன்வைத்திருந்தேன். அதனை ஆதரித்தோ எதிர்த்தோ யாரும் எழுதவில்லை. மௌனம் சாதிப்பதன் மூலம் இத்தகைய கருத்துகளை இருட்டடிப்புச் செய்து விட முடியாது என நம்புகிறேன்.

இந்நிலையில் என் முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாக இரட்டை வாக்குரிமை குறித்து மேலும் விளக்கமளிக்க வேண்டிய தேவை இருப்பதாக நம்புகிறேன்.

மார்க்சியப் பேராசான் கார்ல் மார்க்ஸ் இங்கிலாந்துக்கு அடிமைப்பட்ட அயர்லாந்து மக்கள் தொடர்பாக ஓர் ஆங்கிலேயத் தொழிலாளியின் ஆதிக்கக் கண்ணோட்டத்தை உணர்ந்தது போலவே, நானும் புரட்சிகர அரசியலுக்கு ஆதிக்க சாதியிலிருந்து வந்த பலருடனும் பழகி, அவர்கள் சாதியாதிக்க மனப்போக்கைக் கைவிடாமல் இருக்கக் கண்டுள்ளேன்.

சாதி என்பது சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவக் கொள்கையை மறுப்பதாகும் என்று முன்பே எழுதினேன். ஆனால் அது மட்டுமன்று. என் சொந்தப் பட்டறிவைச் சொல்வதானால், கடந்த 15 ஆண்டுகளாக கட்டட வண்ணப் பூச்சு வேலை செய்து வருகிறேன். கட்டட வேலை தொடர்பான வெவ்வேறு பணிகளுக்காகக் கொத்தனார், ஆசாரி இன்னும் பலரும் வருவார்கள்.

அவர்களுக்கிடையிலோ எங்களுக்கிடையிலோ நாம் என்ற உணர்வே தோன்றியதில்லை. ஒருவருக்கொருவர் அன்னியர் போலத்தான் வேலை செய்து கொண்டிருப்போம். யார் சாதியும் யாருக்கும் தெரிந்து விடக் கூடாதாம்! குறிப்பிட்ட பகுதியில் பெருந்தொகையாக உள்ள ஆதிக்க சாதிக்காரராக இருந்தால் மட்டும் எப்படியாவது தன் சாதியை வெளிப்படுத்திக் கொண்டு மற்றவர் சாதியைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் செயல்படக் கண்டுள்ளேன்.

தேசிய இன உருவாக்கத்திற்கு நாம் என்ற உணர்ச்சி இன்றியமையாதது. தமிழ்த் தேசியத்துக்குத் தேவையான நாம் என்ற உணர்ச்சியை சாதி தடை செய்கிறது. இதனால் தமிழ் மக்கள் ஓரணியாகத் திரள முடியாமற் போகிறது.

ஐரோப்பாவில் ஒரு கிறித்தவர் அல்லது உலகில் ஓர் இஸ்லாமியர் மற்றவரின் மதம் தொடர்பாக மட்டும் அறிந்து கொள்ள முற்படுவார். ஆனால் இந்துவான ஒருவர் அத்துடன் நிற்பதில்லை. என்ன சாதி? அதில் என்ன பிரிவு? என அறிந்து கொள்ளும் வரை இந்து மனம் ஓய்வதில்லை. இது அம்பேத்கர் சொன்னது.

உலக விவரங்களை விரல்நுனியில் வைத்துள்ள எங்கள் தோழர் தியாகு தன்னோடு பழகுகிறவர்களின் சாதியைத் தெரிந்து கொள்வதே இல்லை. ஒருவர் என்ன வர்க்கம் என்றறிவது போலவே என்ன சாதி என்றும் அறிவதில் தவறில்லை. சாதி அறிவதன் நோக்கம் அவர்தம் சமூகப் பின்னணியைப் புரிந்து கொள்வதாக இருக்க வேண்டுமே தவிர அவரைப் பாகுபடுத்துவதாகவோ ஓரங்கட்டுவதாகவோ இருக்கலாகாது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கும் போதே அதுவாகவே எல்லாச் சாதி மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கி விடும் என்பதில்லை. சில பெருஞ்சாதிகளின் ஆதிக்கநிலை அப்போதும் நீடிக்கவே செய்யும்.

சாதியப் பிரதிநிதித்துவம் என்பது உண்மையில் பணம் படைத்தவர்களுக்கானதே என்பதை மறக்கலாகாது. ஏனெனில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் அதனளவில் வர்க்க முரண்பாடுகளை உடனே ஒழித்து விடுவதில்லை. இப்போராட்டம் தமிழ்த் தேசியத்தின் வெளிப்பகையான இந்திய, பன்னாட்டு ஆதிக்கத்தை உடனடியாக ஒழிக்கும் போதே, உட்பகையான சாதி, வர்க்க ஆதிக்கங்கள் நீடிக்கவே செய்யும்.

ருஷ்யாவில் சோசலிசப் புரட்சியில் நிலவுடைமை விவசாய வர்க்கம் புரட்சிக்கு எதிராக, அதாவது தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கப் போவதை லெனின் முன்கூட்டியே குறிப்பிட்டுச் சொன்னதை மறக்க வேண்டாம். இதே போல் சாதி ஒழிப்பிற்கான போராட்டத்தில் பெரும் ஆதிக்கச் சாதி மக்கள் தடை ஏற்படுத்துவார்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலூட்டி சீராட்டி வளர்த்த அன்பு மகளோ மகனோ வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை அல்லது தாழ்த்தப்பட்டவரைக் காதலித்து மணம்புரிந்ததை அறிந்து தந்தை தற்கொலை செய்து கொள்கிறார் அல்லது அந்த மகளோ மகனோ கௌரவக் கொலை செய்யப்படுகிறார் என்றால், சாதி அரக்கன் சாதாரணமானவனா? இது குறித்து நாம் கவலையோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தப் பின்னணியில்தான், நாடாளுமன்ற ஆட்சிமுறையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யத் தனி வாக்காளர் தொகுதி - இரட்டை வாக்குரிமை தவிர வேறு வழியில்லை எனத் தோன்றுகிறது.

நாடாளுமன்ற ஆட்சிமுறை தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் கொண்டது. ஒவ்வொரு தொகுதியும் பல்வேறுபட்ட வர்க்கங்களை உள்ளடக்கியது. இதில் சட்டமியற்றும் அமைப்பை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இவ்வகைச் சனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் திருப்பியழைக்க வாய்ப்பளிப்பதும் உண்டு.

இந்தியாவில் தொகுதிவாரியாக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். பெரும்பாலும் அரசியல் கட்சி சார்பானவர்களுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. இலங்கையில் தொகுதி வாரியாகத் தேர்தல் நடைபெற்ற போதும் கட்சிகளுக்கென்றும் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது. அமெரிக்க செனட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் (நாடுகளுக்கும் என்றே சொல்லலாம்) சமமான பிரதிநிதித்துவம் உள்ளது. இந்தியாவில் மாநிலங்களவை இப்படியா உள்ளது? இல்லையே!

இந்தியாவில் மாநிலங்களவையாக இருந்தாலும், மக்களவையாக இருந்தாலும், மாநிலச் சட்ட மன்றமாக இருந்தாலும் மக்களுக்கோ தேசிய இனங்களுக்கோ அதிகாரம் வழங்காத பம்மாத்து அமைப்புகளாகவே உள்ளன. நாடாளுமன்ற ஆட்சிமுறையில் மக்கள் பிரதிநிதிகள் சட்டம் இயற்றுவதாகச் சொல்லப்பட்டாலும், எந்தவொரு சட்டமும் அதிகார வர்க்கத்தைக் கொண்டுதான் நடைமுறைக்கு வருகிறது. இந்த அதிகாரவர்க்கம் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பற்றது, மக்களுக்குக் கட்டுப்படாதது.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் மக்கள் தயவை நாடி வர வேண்டிய தேவை உள்ளது. எனவே ஒப்பளவில் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. காவிரித் தீரத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதி கொடுத்தது திமுக அரசு என்றாலும், தேர்தல் வந்தவுடன், மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் புரியாமல் செய்து விட்டோம் என்று தோல்வி பயத்தில் தோப்புக்கரணம் போடும் நிலை திமுகவுக்கு ஏற்பட்டது. அதிகார வர்க்கத்திற்கு இவ்வாறான சங்கடம் ஏதுமில்லை.
பாரிஸ் கம்யூன் படிப்பினைகளைத் தொகுத்த கார்ல் மார்க்ஸ் அதிகார வர்க்க அரசு இயந்திரத்தை அடித்து நொறுக்க வேண்டிய தேவையை உணர்ந்தார். ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்கப் பிரதிநிதிகள் முதலாளிய நாடாளுமன்றத்தில் பங்கேற்று அதன் போலித்தனத்தை வெளிப்படுத்தி சோவியத்து ஆட்சிமுறையின் சிறப்பைப் பரப்ப வேண்டும் என்றார் லெனின் (இடதுசாரிக் கம்யூனிசம் ஓர் இளம்பிராயக் கோளாறு).

முதலாளியத்தில் நாடாளுமன்ற ஆட்சிமுறை முதலாளி வர்க்கத்துக்கு அதிகாரம் அளிப்பதாகவும், பெரும்பான்மை மக்களான உழவர்கள், தொழிலாளர்கள், மற்றுமுள்ள வர்க்கங்களுக்குப் பெயரளவுக்கே சனநாயகம் ஆவதாலும் அதனை உண்மைக் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் விரும்புவது சோவியத்து ஆட்சிமுறையைத்தான். சோவியத்து ஆட்சி முறையில் சட்டமியற்றும் நாடாளுமன்றம் மட்டுமல்லாது நடைமுறைப்படுத்தும் அதிகார அமைப்பும் மக்களுக்குக் கட்டுப்பட்டதாகிறது.

நாடாளுமன்ற ஆட்சிமுறை ஆனாலும், சோவியத்து ஆட்சிமுறை ஆனாலும் இரட்டை வாக்குரிமை இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழி இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள தனித் தொகுதி (ரிசர்வ் தொகுதி) ஏற்பாட்டில் அம்மக்களின் உண்மையான பிரதிநிதிகள் தேர்வு பெறப் போதிய வாய்ப்பில்லை. ஏனென்றால், தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டால், மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் 20 விழுக்காடு இருக்கலாம். மற்றவர்கள் 80 விழுக்காடு. தனித் தொகுதியில் அனைத்து சாதி மக்களும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதால் சாதியாதிக்கத்தை எதிர்க்கும் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவே இருந்தாலும் ஆதிக்கச் சாதியினருடன் ஒத்துப் போகிறவராக இருந்தால்தான் பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற முடியும்.

தொடக்கத்தில் சாதியாதிக்க எதிர்ப்பாளர்களாக அரசியலில் நுழைந்த தலித்துப் போராளிகள் சிலர் பிறகு சாதியாதிக்கக் கங்காணிகள் ஆகிப் போனதைப் பார்த்துள்ளோம், இப்போதும் பார்த்து வருகிறோம். நாம் சரியான அரசியல் திசைவழியில் செல்லத் தவறினால் இந்தச் சமூக-அரசியல் நிறுவனங்கள் நம்மைச் சிதைத்து விடும்.

சாதிகள் தனித் தனிக் குழுக்களாகச் செயல்படுகின்றன. ஒரு சாதிக்குழு மற்றொரு சாதிக்குழுவை வெறுக்கிறது அல்லது தாழ்வாகக் கருதுகிறது. மக்கள் பிற நாடுகளில் வர்க்க உணர்வு பெற்றிருப்பது போல் இந்தியாவில் சாதி உணர்வு பெற்றுள்ளனர். தன்னலச் சக்திகள் இந்த சாதி உணர்வைத் தங்கள் தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒருவர் தப்புச் செய்து தண்டிக்கப்பட்டால், எவன் எவனோ ஏதோதோ செய்யும் போது நம்ம சாதிக்காரன் செய்தால் என்ன? என்று அவர் சாதியினர் அலட்சியமாக நினைக்கின்றனர். நீதிக்கான போராட்டத்துக்கு சாதி பெருந்தடையாக உள்ளது.

பாமக இராமதாசு போன்றோர் தலித்து-தலித்தல்லாதோர் என்று பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளர் சாதியைச் சேர்ந்த சிலர் தங்கள் மீதான ஒடுக்குமுறை-அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதை விடுத்து, தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கோரி வருகின்றனர். சாதியைப் பொறுத்து சமூக மதிப்பளித்தல் அமைகிறது.

சமுதாயப் படிக்கட்டில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மதிப்பு உள்ளது. ஒரு சாதிக்காரர் தன் சாதிப் பெருமைகளைப் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் பிற சாதிகளை இழித்தும் பழித்தும் பேசுவதுதான் சிக்கலாகி விடுகிறது. இவ்விதமான சாதிய மனச் சிறையில் சிக்காமல் விடுபட்டு நிற்பவர்கள் ஒருசிலரே.

இதையெல்லாம் எடுத்துக்காட்டக் காரணம் சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள ஆதிக்க சாதி மக்களும் இடைச் சாதி மக்களும் சாதி மனப்போக்கு கொண்டிருப்பதை உணர்த்த வேண்டும் என்பதே. எதிர்வினையாக தாழ்த்தப்பட்ட மக்களிடமும் கூட சாதி மனப்போக்கு உள்ளது. இந்நிலையில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடும் தலித்து வேட்பாளர்கள் - நாடாளுமன்ற ஆட்சி முறை ஆனாலும் சோவியத்து ஆட்சி முறை ஆனாலும் - பெரும்பாலும் புறக்கணிக்கப்படவே செய்வர்.

இந்திய இழிவு என்னும் கட்டுரையில் (தமிழ்த் தேசம் 2014 அக்.-நவ.) எழுத்தாளர் அருந்ததி ராய் எடுத்துக்காட்டியுள்ளபடி, இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்துக்கும் ஒரு தலித்துக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றம் இழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தீண்டப்படாத பெண்கள் நால்வர் தீண்டப்-படுவோரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொலை செய்யப்படுகிறார்கள். இது தேசியக் குற்றப் பதிவுத் துறை தந்துள்ள கணக்கு. அன்றாடம் தாழ்த்தப்பட்டோர் பிற சாதி மக்களைக் காட்டிலும் துன்பத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாகின்றனர். தேசிய ஒடுக்குமுறையைக் காட்டிலும் சாதிய ஒடுக்குமுறை வன்மமிக்கது.

தமிழகத்தில் தமிழ்த் தேசியச் சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். தமிழ்த் தேசியச் சமூகநீதிக் குடியரசு நாடாளுமன்ற ஆட்சிமுறையோ சோவியத்து ஆட்சிமுறையோ கொண்டதாக இருக்கலாம். எப்படியானாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனி வாக்காளர் தொகுதியும் இரட்டை வாக்குரிமையுமே அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும். அவர்கள் விழிப்புடன் இருந்து சமூக நீதிக்கான போராட்டத்தைத் தொய்வின்றி முன்னெடுக்க உதவும்.

ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி வாக்காளர் தொகுதியும் இரட்டை வாக்குரிமையும் எதிர்காலத்துக்கான வேலைத்திட்டம் மட்டுமன்று, நிகழ்காலத்திற்கான போராட்டக் கோரிக்கையும் ஆகும்.

இறுதியாக ஒரு தோழர் எழுதியதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்: “நாங்கள் இப்போது இந்தியாவில் மலம் அள்ளிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்திலும் மலம்தான் அள்ள வேண்டும் என்றால், இந்தியத் தேசியத்திலேயே அள்ளி விட்டுப் போகிறோம்.”

இந்த உணர்வு நியாயம் என்றால் நீதி வெறும் வாய்ச் சொல்லாக இருந்தால் போதாது, தெளிவான செயல்திட்டம் வேண்டும்.

Pin It