உலகில் வாழ்கின்ற உயிரினங்களும் மனித இனத்தைதத் தவிர அனைத்து உயிரினங்களும் விடுதலை பெற்றதாக தம் வாழ்வை வாழ்ந்துமுடிக்கின்றன. ஆனால் மனித இனத்தில் விடுதலை பெற்ற மனிதன் விடுதலை பெற்ற மனித இனம் என்பதை எங்கும் காண முடியாது.
மேம்பாடுடைய மூளைச் செல்களைப் பெற்ற மனித இனம் மட்டும்தான் தங்களுக்குள் தங்களைத் தாழ்த்தி அருவருக்கத் தக்கதான வாழ்வை வாழ் கின்றன. விடுதலை பெற்ற தன் சுயத்துடன் வாழ்கின்ற ஒரு மனித இனத்தை எங்குமே காண முடியாது ஒருவரை ஒருவர் அடிமை களாக்கி வாழ்கின்ற விடுபடமுடியாத கண்ணிகளால் பிணைக்கப்பட்டவர்களாக மாறிவிட்டது மனித இனம்.
சாதியில் ஆதிக்கச் சாதி, அடிமைச் சாதி என்பது மட்டுமின்றி மனித இனத் தின் மொத்த அடிமைப் பெண் என்பது விதியாக் கப்பட்டு ஒட்டுமொத்த சமுதாயமும் பெண்களின் குரல் வளையின் மேல் நின்று வாழ்கிறது. பெண் களிலும் ஒடுக்கப்பட்ட தலித் பெண்களின் வாழ்க்கை யானது கிஞ்சிற்றும் பயனற்ற தாகவும், துன்பங்களும், துயரங்களும் நிறைந்ததாக மட்டுமே ஆக்கப்பட்டு விட்டது.
ஒரு தலித் பெண்ணின் வாழ்க்கையைப் பதிவாவது அவருடன் அவர் குடும்பத்துடனேயே புதைக்கப்பட்டு விடும். அவள் வாழ்வின் இருத்தலோ அவரின் வாழ்க்கைச் சுவடுகளோ எதற்கும் பயனற்றதாய் எண்ணற்ற உயிர்களும் அதுவும் மிகச் சாதாரணமான தால் மறைக்கப்பட்டு விடும். இத்தகைய தொடர்ச்சியான சமூகத் தாக்குதல்களில் பெண்ணுக்கான மனித வாழ்வானது பொய்யாக்கப்பட்டு அவளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி விட்டு தூக்கியெறிந்து விடுகிறது.
இச்சமூகம் இவ்வளவு நெடிய மனித குல வரலாற்றில் சரிபாதியாய் பெண்களைக் கொண்ட இச்சமூகத்தில் சமுதாயப் பயனுள்ளவளாக பெண் வளர்க்கப்படவில்லை. அவள் குடும்பங்களுக்கு சுகபோகங்களைத் தருகிற கருவியாகவே வளர்க்கப் பட்டாள். இத்தகைய சமூக அடக்கு முறையை மீறி சமுதாய உணர்வுடன் வெளிப்பட்ட பெண் பேபி காம்ப்ளி. தன் சுய வாழ்வுடன், தன் குடும்பத்துடன் நிறைவு கொண்டு விடாமல் தன் வாழ்வை தலித் சமுதாயத்திற்கானதாக மாற்றி வாழ்ந்த பெண் "பேபி காம்ப்ளி.'
பொதுவாக சுயசரிதைகளில் தனி மனித வரலாறு கள்தான் பதிவு பெறும். ஆனால் ஒடுக்கப் பட்ட இனத்திலிருந்து எழுகின்ற சுயசரிதைகள் ஒரு குறிப் பிட்ட மனிதரின் வரலாறாக அல்லாது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இனம் அனுபவித்த வேதனை களை இன்னல்களைப் பதிவு செய்யும் காலக் கண்ணாடி யாகத்தான் நாம் அதனைப் பதிவு செய்ய வேண்டும். உச்சாலியா, உபாரா, அனாக் என்ற தலித் சுயசரிதை நூல்களின் வரிசையில் பேபி காம்ப்ளியின் சுயசரிதை நூலும் படித்தறிய வேண்டிய ஒரு நூலாகும்.
பேபி காம்ப்ளி தலித் பெண்ணின் சுயசரிதையாக வெளிவரும் முதல் நூல் எனும் முன்னுரையோடு தொடங்குகிறது தலித் பெண்ணுக்கு என்று தனித்த வரலாறு என்று ஒன்று இருக் குமா? தலித் பெண்ணுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறதா?
பேபி காம்ப்ளியின் வரலாறாக அணுகாமல் தலித் பெண்கள் அத்தனை பேரின் வரலாறாகத்தான் நாம் இதை படிக்க முடியும். தலித் பெண்ணினுடைய வாழ்க்கை என்றுமே அவளுக்கானதாக இருந்ததில்லை அடிமைகளினினும் அடிமையின் வரலாறாக அவளது வாழ்க்கை அமைகிறது.
பாதையைச் செப்பனிட்டுக் கொண்டே பயணத் தைத் தொடர்கிற வாழ்க்கை அவளுடையது. தலித் பெண்ணின் வாழ்க்கையை விட விலங்குகளின் வாழ்க்கை மேம்பட்டது விலங்குகளை விடவும் கொடூரமான வாழ்க்கை வாழவே படைக்கப்பட்டவர்கள்.
ஒரு தலித் பெண்ணுடைய பிரசவம் எவ்வளவு கொடூரமானது. மானுடம் இவ்வுலகில் பிரசவித்த கொடூரங்களிலேயே உச்சகட்டமானதாய் அவளது பிரசவம் நடக்கிறது. மானுடத்தை வெட்கப்பட வைக்கிறது.
"எங்கள் பெண்கள் தாய் மண்ணிற்காகத் தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர்கள். ஆனால் அவர்கள் தாயானபொழுது அவர்களுக்கு என்ன கிடைத்தது? அவர்கள் குழந்தைகளைப் பெற்றவுடன், அவர்கள் தங்கள் வயிறுகளைக் கட்டிக் கொண்டு நாதியற்றுப் படுத்துக் கிடக்க வேண்டி வந்தது.
குழந்தை வெளியுலகிற்கு வந்த பிறகு, வயிற்றுக்குள் பயங்கரமான வெற்றிடம் இருக்கும். இரைப்பைக்கு மென்மையான எளிதில் சீரணமாகக் கூடிய உணவு தேவைப்படும். ஆனால் மகர் சாதிப் பெண்ணுக்கு அது எங்கிருந்து கிடைக்கும்.
பசி,அவளுடைய உள்ளுறுப்புகளை அறுத்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தப் பாவப்பட்ட பெண் தன் வயிற்றை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு கந்தல் மீது படுத்துக் கொள்வாள். மகர் சாதிப் பெண்கள் அனைவருக்கும் சிறு வயதிலேயே திருமணமாகி விடும். முதல் பிரசவத்தின் போது உடல் முழு வளர்ச்சியடைந்திருக்காது. பிரசவத்தின் போது படிப்பறிவில்லாத மருத்துவச்சிகள் ஒரு தலித் பெண் தன் வாழ்நாள் உழைப்பையும், வறுமையையும், பசியையும் வேறு எதையும் அனுபவித்ததேயில்லை. அவற்றை அனுபவிக்க அவள் அனுமதிக்கப்பட வில்லை. சுகங்களைப் பற்றி, வாழ்க்கையின் வளங்களைப் பற்றி அவள் கனவு கூட காண முடியாது. ஏöனில் வாழ்வின் எத்தகையதொரு வளமும் அவளுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை.
சாமி வருவதும், பேய் பிடித்தலும் இல்லாமல் ஒரு தலித் பெண்ணினுடைய வரலாறை நாம் படித்துவிட முடியாது. ஏனெனில் வாழ்க்கையில் வேறு எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையிலேயே அவர்களது வாழ்க்கையின் பெரும் பகுதி கழிந்து விடுகிறது. விதியை நம்புகிறவர்களாகவே வாழ்கிறார்கள்.
வறுமையும், பசியும், வேதனையும் அவளை வாட்டும் உச்சக் கட்டத்தில் அவள் மனநிலைப் பிறழ்ச்சி அடைகிறாள். மனவெழுச்சியின் உச்சத்தில் அவள் மீது சாமி வந்து ஆட்டுவிக்கிறது. பேய் பிடித்து ஆட்டுகிறது. உண்மையில் இவ்வுலகில் அவள் வாழவே முடியாததொரு நிலையில் தான் இத்தகு மனநிலைப் பிறழ்வுகளுக்கு ஆளாகிறாள்.
பெண்களின் நிலை இன்று ஓரளவு மேம்பட் டிருக்கிறது என்றாலும் வழவுக்குச் செல்லும் பெண்களை இன்றளவும் ஒவ்வொரு ஊரிலும் நாம் காண முடிகிறதே. ("வழவு'க்குச் செல்லுதல் என்பது ஆதிக்க சாதியினர் வீடுகளுக்குச் சென்று கூட்டிப் பெருக்கி அடிமை வேலை செய்யச் செல்வது. ஊதியமாய் அவர்கள் கொடுக்கும் பழைய உணவை வாங்கி வருவது) இந்நாட்களில், கரு உருவானதாகத் தெரிந்த நாளிலிருந்து குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பெண்கள் மருத்துவ சோதனை செய்து கொள்கிறார்கள். கருவின் நிலையை அறிய ஒளிப்படம் (ஸ்கேன்) எடுக்கிறார்கள். ஆடு, மாடுகள் புண்ணாக்கு தின்பதைப் போல மருத்துவர்கள் எழுதித் தள்ளும் மருந்துகளை விழுங்கி வைக்கிறார்கள். இத்தனை வசதிகள் செய்தும் எத்தனை பேருக்கு பிரசவம் சுகமாய் நடக்கிறது? அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்துதானே குழந்தையை பெற்றெடுக்கிறார்கள்.
மருத்துவம் எனும் பெயரில் முதலாளித்துவம் மானுடத்தைக் காவு வாங்குகிறது, சுரண்டுகிறது. உண்மையில் வாழ்வின் அனைத்து நிலைகளுமே இப்படித்தான். சக மனிதர்களுக்காக குரல் கொடுக்காத எல்லோருடைய வாழ்வும் எவ்வளவு வளமான தாயினும் அது சுரண்டலையும், அடிமைத்தனத்தையும் நோக்கியே உழல்கிறது.
அந்தப் பெண்ணின், பெண் உறுப்பினுள் கையை வைத்து குழந்தை எங்கிருக்கிறது என்று தேடுவார்கள். அடிக்கடி அவ்வாறு செய்வதால் அவளுடைய பெண்ணுறுப்பு வீங்கி குழந்தை பிறக்கும் பாதையை அடைத்துக் கொள்ளும். சுற்றிலும் உள்ள பெண்கள் தொடர்ந்து அவள் பெண்ணுறுப்பில் கை விட்டுப் பார்த்துக் கொண்டிருப்பதால் அது வீங்கி இறுக்கமாகக் காணப்படும். அதனுள்ளே பல காயங்களும் கீறல்களும் ஏற்பட்டிருப்பதால் அவள் தாங்க முடியாத வலியால் துடிப்பாள்.
துணியோ, பஞ்சோ இல்லாததால் தொடர்ந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கும். பத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கை வாழ்வின் இந்த கட்டத்திலேயே முடிந்து விடும். இதுதான் அவர்களது ஏழ்மையின் வெளிப்படையான நிலை.'' இவ்வரிகளை படிக்கும் மானுடம் கண்ணீர் சிந்த வேண்டும். வெட்கித் தலைகுனிய வேண்டும்.
உண்மையில் ஒரு தலித் பெண்ணினுடைய வரலாற்றை எழுதும்போது அவள் அனுபவித்த (அவள் இனம் அனுபவித்த) வேதனைகளையும், இன்னல் களையும், அவர்களது அறியாமையையம் மூட நம்பிக்கையையும் அவர்கள் காலங்காலமாய் ஏமாற்றப்படுவதையும் தவிர வேறு எதைச் சிறப்பித்து எழுதிவிட முடியும்?
"தாழ்த்தப்பட்ட மக்களை மனிதர்களாக்கும் பணியைச் செய்தவர்தான் அம்பேத்கர். அம்பேத்கரின் கொள்கைகளால் கவரப்பட்ட பேபி காம்ப்ளின் தன்னைக் கரைத்துக் கொண்டு தலித் மக்களின் வாழ்க்கையை காலம் காலமாய் லட்சக் கணக்கான மக்கள் அனுபவித்து வந்த கொடுமைகளை ஐம்பது ஆண்டுகளுக்குள் துடைத்து வைத்தவர். அவர் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் ஆவார். உண்மையில் அவர் கடவுளுக்கும் மேலானவர்' என்கிறார்.
படித்த இன உணர்வற்ற தலித்துகளைப் பார்த்துக் கொந்தளிக்கிறார். அம்பேத்கர் யார் என்ற மங்கலான எண்ணம் சிறிது கூட இல்லாமல் உங்கள் குழந்தைகளை வளர்க்கிறீர்கள். குழந்தைகளுக்கு கடவுளை நம்பக் கற்றுக் கொடுக்கிறீர்கள் என்று சாடுகிறார். எங்கள் குழந்தைகள் இவ்வளவு மூடர் களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், போராட்ட குணம் அற்றவர்களாகவும் உள்ளார்கள். கடைசியில் நாங்கள் புல்லுருவிகளைப் பெற்றெடுத்துள்ளோம்'' என்று வேதனைப்படுகிறார். போலி மகாத்மாக்கள் ஆண்டாண்டு காலமாய் வழிபடக் கூடியவர்களாக நீடிப்பதும், அம்பேத்கர்
போன்ற உன்னதமான தலைவர்கள் பற்றி இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் கூட அறியாத நிலை பற்றி பேபி காம்ப்ளி வேதனைப்படுகிறார். படித்து சொகுசு வாழ்க்கை நடத்தும் தலித் பார்ப்பான்கள் மீதே அவர் கோபம் முழுதும் திரும்புகிறது.
தலித் பெண்ணினுடைய வரலாறாக மட்டமின்றி ஒடுக்கப்பட்ட இனத்தின் தலித் இனத்தின் வரலாறாகவே இதனை நாம் படித்தல் வேண்டும். இதுவே நம் விடுதலையாய் அமையும்.
நூல்: பேபி காம்ப்ளி
பதிப்பகம்: எதிர் வெளியீடு.
Jina Amucha என்னும் தலைப்பில் மராத்திய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூலை மாயா பண்டிட் The Prison We Broke எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இது "சுதந்திரக் காற்று' எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. இது, மராத்திய மெழியில் மட்டுமின்றி இந்திய மொழிகள் அனைத்திலும் தலித் பெண்ணினுடைய முதல் சுயசரிதை நூலாக கருதப்படுகிறது.