தாழ்த்தப்பட்ட மக்கள், இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதை விளக்கி, அவர்கள் முன்வைத்துள்ள விவாதங்கள் புரிந்து கொள்ளச் சிரமமானவை அல்ல. அவற்றை இன்னும் விளக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் தரப்பு வாதங்கள் முழுவதையும் – ஒரே ஒரு சாதாரண கேள்வியைக் கேட்டுச் சுருக்கிவிட முடியும். அந்தக் கேள்வி இதுதான். எந்த வகையில் அவர்கள் இந்துக்கள்?

"இந்து' என்கிற சொல் பலபொருளில் பயன்படுத்தப்படுகின்றது. அது முதலில் நில எல்லை என்கிற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது, "இந்துஸ்தானம்' என்னும் நிலப் பரப்பில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் இந்துக்கள்.

இந்த அடிப்படையில் பார்த்தால், தாழ்த்தப்பட்ட மக்களும் இந்துக்கள் என்றே அழைக்கப்படலாம். ஆனால், அதே வேளை இசுலாமியர்களும், கிறித்துவர்களும், சீக்கியர்களும், யூதர்களும், பார்சிகளும் இன்னும் பல தரப்பினரும்கூட – இந்துக்கள் என்றே அழைக்கப்பட்டாக வேண்டும்.

இரண்டாவதாக, "இந்து' என்கிற சொல் மதம் சார்ந்த பொருளில் பயன்படுத்தப்படுகின்றது. சாதி ரீதியான கோட்பாடுகளின் அடிப்படையிலும், தீண்டாமையின் அடிப்படையிலும் ஆய்வு செய்தால் – ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவரும் இந்து மதத்தையும், தங்களை இந்துவாகக் கருதிக்கொண்டிருப்பதையும் மறுதலித்து விடுவர்.

இந்து மதத்தின் அடிப்படையே பிரித்து வைப்பது தான். இது, சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை. சாதியும், தீண்டாமையும் பின் எதற்காக இருக்கின்றன? பிரித்து வைப்பதற்காகத்தான் சாதி என்பது. பிரிவினைக்கு மற்றொரு பெயர் தீண்டாமை. தீண்டாமை என்பது, பிரிவினையின் மிக மோசமான வடிவத்தைக் கட்டமைத்து – ஒரு சமூகத்தை மற்றொன்றிலிருந்து பிரித்து வைக்கின்றது. இறப்புக்குப்பின் ஆன்மாவின் நிலைமையைப் பற்றி முன்வைக்கப்படும் கோட்பாடுகளை விட மிகவும் மோசமான கோட்பாடுகள் சாதியும், தீண்டாமையும் என்பதும்கூட, விவாதத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப்பட்ட ஒன்றுதான்.

பொதுவாகக் கூறினால், இந்து மதமும் சமூக ஒற்றுமையும் – ஒன்றுடன் ஒன்று சேரமுடியாதவை. அடிப்படையிலேயே இந்து மதம் பிரிவினையை அதாவது சமூக ரீதியான ஒற்றுமையின்மையை நம்புகின்றது. இன்னும் சொல்லப்போனால், சமூகப் பிரிவினையை ஏற்படுத்துகின்றது.

இந்துக்கள் ஒற்றுமையாக வாழ விரும்பினால்,அவர்கள் இந்து மதத்தைத்தூக்கி எறிய வேண்டும். அவர்கள் இந்து மத நியதிகளை மீறாமல் ஒன்றுபடுவது சாத்தியமே இல்லை. இந்துக்களின் ஒற்றுமைக்கு எதிரான மிகப்பெரிய தடை – இந்து மதம்தான். சமூக ஒற்றுமைக்கான உணர்வை இந்து மதம் ஏற்படுத்தவே முடியாது. மாறாக அது பிரிவினைக்கான விருப்பத்தையே தூண்டுகிறது.

இந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையில் பிரிவினை இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகளை – இந்துக்கள் செய்து வருகின்றனர். எனவே, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான அரசியல் ரீதியான அங்கீகாரம் பெற்று அதன்மூலம் இந்துக்களின் அடக்குமுறையிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்ற காரணத்தைக் கூறி, நிகழ்காலக் கொடுங்கோன்மைக்கு எதிராகத் திரண்டு – தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதைத் தடுப்பதற்கு எவரும் முயற்சிக்கக் கூடாது.

Pin It