“கோயில்களைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாக பக்திக்கும் ஒழுக்கத்திற்குமாக ஏற்படுத்தப்பட்டவை அல்லவென்றும் மக்களை மூடர்களாக்கி அடிமைப் படுத்தவும், உயர்சாதி என்கின்ற சாதி வித்தியாசத்தை நிலைநிறுத்தவும், ஒருகூட்டத்தார் பாடுபட்டாமல் இருந்துக் கொண்டே சோம்பேறித்தனமாய் வயிறு வளர்க்க வேண்டி, பொதுமக்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தைக் கொள்ளை அடிக்கவும் வசதி செய்து கொள்வதற்காகவே ஏற்பட்டவையாகும்.''

என்று தந்தை பெரியார் அவர்கள் கோயில்கள் உருவாக்கப்பட்டது எதற்காக என்பதைத் தெளிவாக விளக்கிக் கூறினார்.

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் கூடச் சம்பாதிக்க முடியாமல், வறுமைக் கோட்டுக்குக் கீழே வசித்துக் கொண்டிருக்கும் அன்னக் காவடிகள் மலிந்துள்ள நம் புண்ணிய (?) பாரதத்தில், கடவுள் நம்பிக்கை என்கிற பெயரால் மனித உழைப்பு சுரண்டப்படுவதையும், மக்கள் பணம் ஊதாரித்தனமாய்ப் பாழக்கப்படுவதையும் பார்த்து இது கொடுமை அல்லவா என்று கொதிக்கும் நெஞ்சத்தோடு வினவினார் பெரியார். கடன்பட்டு வட்டி கொடுத்த வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோயில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாதிகளை வைத்து உற்சவம் வாணவேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார் தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? என்று தந்தை பெரியார் கேட்டதில் என்ன தவறு? கூழுக்குக் கஞ்சியில்லாத பஞ்சை பராரிகள் உலவும் நாட்டில் குடிமக்களிடம் பணம் திரட்டி, ஒவ்வொரு கிராமத்திலும், வாணவேடிக்கை, ஆட்டம் பாட்டம், கூத்து இவைகளுடன் கேளிக்கைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன!

“இந்த நாட்டில் எவ்வளவு கோயில்கள்? ஒவ்வொன்றும் பார்லிமெண்ட் கட்டிடத்தைவிட 30, 40 லட்சம் அதிகம் போட்டாலும் கட்ட முடியாது. இவைகள் ஒவ்வொன்றிலும் உள்ள சாமிகளோ பார்லிமெண்ட் மெம்பர்களைவிட ஏன் வாக்காளர்களைவிட எத்தனையோ மடங்கு அதிகமாக உள்ளன. அந்தச் சாமிகளுக்கு ஆகின்ற செலவோ பார்லிமெண்ட் மெம்பர்களுக்குக் கொட்டி அழுகின்ற தண்டச் செலவைவிட ஏராளமாக ஆகிறது'' என்றும் அறிவு ஆசான் அய்யா அவர்கள் எடுத்துச் சொன்னதில் என்ன தவறு? பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகையைப் போலத்தானே முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்டதிக்குப் பாலகர்களும், சித்திவாத்யாதர்களும் பின்னால் வந்த அய்யப்பன், ஆதிபராசக்தி வகையறாக்களும் கடவுளர்களாகப் பரப்பப்படுகிறார்கள். பக்தி வியாபாரம் செழித்து கொழுத்து மக்களைப் பாழ்படுத்திக் கொண்டு தானே இன்றைக்கும் இருக்கிறது?

இந்தக் கோயில்களிலும் எவ்வளவோ வேறுபாடுகள், பிரிவுகள்? சாதிகளுக்கு ஏற்ப சாஸ்திரப்படி அமைக்கப்படும் ஆலயங்கள் எழுப்பப்படுகிறதே! இவைகளெல்லாம் அறிவுக்குப் பொருத்தம் தானா என்று சிந்திப்பவர் எவரும் இல்லை என்பது வெட்கக்கேடு அல்லவா?

“காசி ஜெகந்நாதரும், பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகளும் யார் தொட்டாலும் தீட்டாவதில்லை. அங்குக் கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லாம் தாங்களே நேரில் சாமியைத் தொட்டுத் தலையில் தண்ணீர் விட்டுப் பூக்களைப் போட்டுக் கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சாமி நமது நாட்டில் நாம் தொட்டால் செத்து விடுகிறதாம்! சிறீ ரங்கம், கரூர் முதலிய முக்கிய இடங்களில் உள்ள சாமிகளை நாடார்கள் போய்க் கும்பிட்டால் அக்கோவில்களும், சாமிகளும் சாவதில்லை! மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சாமிகள் மாத்திரம், நாடார்கள் கும்பிட்டால் செத்துவிடுகின்றன. இப்படி சாமிகளின் சக்தியும், உயிரும் கோயில்களின் யோக்கியதையும் ஊருக்கு ஒருவிதமாக இருப்பானேன்? பிறகு பார்ப்பனர்களுக்கு மாத்திரம் அந்த சாமியை உயிர்ப்பிக்கும் சக்தி இருப்பானேன்'' என்று சமத்துவ வேட்கையோடு ஈரோட்டுச் சிங்கம் முழங்கியதற்கேற்பத்தானே நாட்டுநிலைமைகளும் உள்ளன. இதனைத் தவறு என்று எவராலும் மறுத்துக் கூற முடியாதே!

“கோயிலுக்குள்ளே போய் சாமியைத் தொட்டால் சாமி தீட்டுப்பட்டுச் செத்து விடும் என்கிறானே, பார்ப்பான்! வெளியில் இருந்து கன்னத்தில் போட்டுக்கொள் என்கிறானே! நீயும் அதை ஒத்துக்கொண்டு எட்டி நின்றால் கீழ்ச்சாதி என்று ஒத்துக்கொள்வதாகத்தானே அர்த்தம்? மானமுள்ளவன் கோயிலுக்குப் போகலாமா?'' என்று அய்யா வினவியதில் என்ன தவறு? அய்யப்பன் கோயில் கட்டிப் பராமரிக்கும் செட்டி நாட்டுச்சீமான் எம்.ஏ.எம். முத்தையா செட்டியாரும், திருவரங்கம் கோபுரம் கட்டுவதற்காக கோடிக் கணக்கில் வாரிவழங்கிய இசைஞானி இளையராஜாவும் ஆஸ்திக சிகாமணிகள்தான்! மயிலை கபாலிசுவரர் கோயிலின் கருவறையின் உள்ளே இவர்கள் இன்றைக்கும் நுழைய முடியாதே! கல்வியில் சிறந்து அறிவில் வளர்ந்து அணு விஞ்ஞானிகளாக ஆட்சித்தலைவர்களாக, நீதி அரசர்களாக சகல துறைகளிலும் தமிழர்கள் சிறந்து விளங்க முடிகிறது. ஆனால் ஓட்டைக் கோயிலுக்குள்ளே (சுதந்திரம் வந்த பின்னும்!) நுழைய முடியவில்லை என்பது இன இழிவு அல்லவா? இந்தத் தீண்டாமையை நம் அரசமைப்புச் சட்டம் கைகட்டி, வாய்பொத்திப் பவ்யமாக ஏற்றுக் கொண்டுதானே இருக்கிறது? இந்தப் பின்னணியில் பார்த்தால் தான் கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகத்தான் இன்றைக்கும் இருக்கிறது என்பது புலனாகும்!.

மூட நம்பிக்கை எனும் புதைசேற்றில் சிக்கி நம் தமிழர்கள் தங்கள் உழைப்பையும், ஆற்றலையும் செல்வத்தையும் இந்தக் கோயில்களில் கொண்டு கொட்டி அழுவது கொடுமை அல்லவா? தமிழ்நாட்டுக் கோயில்களை விட அண்டை நாட்டு அண்டை மாநிலக் கோயில்களின் மீது நம்மவர்களுக்குப் பாசமும், பக்தியும் அதிகம் உண்டு.

பிறமொழிப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவதில் ஆர்வம், மேல்நாட்டு உடைகளை அணிவதில் அளவற்ற மோகம், ஆங்கிலம் கலந்து தமிழைச் சிதைத்துப் பேசுவதில் அடங்காத ஆசை, பீசா, பகோளாபாத், விரைவு உணவு என வெளிநாட்டு உணவுகளை உண்பதில் நாட்டம், விளையாட்டுகளில்கூட அயல்நாட்டு கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம், எரியும் விளக்கை அணைத்து கேக்வெட்டி "ஹேப்பி பர்த்டே' எனப் பிறந்தநாள் விழா கொண்டாடும் புதிய போக்கில் ஆர்வம் எனச் சகல துறைகளிலும் அன்னிய மோகம் நம்மவர்களைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது. எனவே வழிபாட்டு முறையிலும் அயலக ஆக்கிரமிப்புக்கு நம்மவர்கள் பலியாகிவிட்டனர்.

இதன் விளைவுதான் காவி உடுத்தி மணிமாலைகளை அணிந்து நரிக்குறவர்போல அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் புதிய கலாச்சாரம் காலரா நோயாய் நம்மவர்களைத் தொற்றிக் கொண்டது. செட்டி நாட்டரசர் எம்.ஏ.எம். முத்தையா செட்டியார் அவர்கள் சபரிமலை அய்யப்பன்கோயிலைப் போலவே 18 படிகளுடன் புதிதாகச் சென்னையில் ஒரு கோயிலைக் கட்டி குடமுழுக்கும் செய்து பார்த்தார். இதனைப் போன்ற அய்யப்பன் கோயில்கள் பல ஊர்களில் கட்டப்பட்டன. ஆனாலும் கூட, கேரளாவுக்குச் செல்லும் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு குறையவே இல்லை.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தை எதிரி மாநிலமாகவே மலையாளிகள் பார்க்கிறார்கள். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூடச் சொட்டுத் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். நியாயமான உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தமிழர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்துகிறார்கள். கேரளாவின் உள்ளே நுழையும் தமிழர்கள் மீது நாயர்கடை நடத்தும் சேட்டான்கள் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி விரட்டி அடிக்கிறார்கள். ஆனாலும் தமிழர் கூட்டம் இருமுடிகட்டி அரிசியையும் தேங்காயையும் பணத்தையும் ஆண்டுதோறும் அய்யப்பன் கோயிலில் கொட்டிக் கொண்டு தான் இருக்கின்றன. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டபோது தமிழர் இழந்ததுதான் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதி என்பது பற்றி மூடத் தமிழர்களுக்கு எப்படித் தெரியும்? மகரஜோதியைப் பார்த்து மோட்ச உலகத்துக்குச் செல்ல முன் இருக்கையில் பதிவு செய்யவேண்டும் என்பதுதானே அவர்கள் கவலை!

"மகரஜோதி' என்பதிலும் உண்மை இல்லையே! 14.01.2011 அன்று புள்ளுமேடு என்ற மலைப்பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக 110 அய்யப்ப பக்தர்கள் உயிரிழந்தார்கள். இத தொடர்பான வழக்கு, கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. மகரஜோதி என்பது மனிதர்களால் ஏற்றப்படுகிறதா அல்லது விண்ணில் தானாகவே தோன்றும் நட்சத்திர ஒளியா என்பதைத் தெளிவு செய்யுமாறு அந்தக் கடிதத்தில் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதனைப் பற்றி விவாதத்து முடிவெடுக்கும் கூட்டத்தை 30.01.2011 அன்று திருவாங்கூர் தேவசம் போர்டு கூட்டியது. தேவசம் போர்டு தலைவர் எம். ராஜகோபாலன் நாயர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசவம் போர்டு உறுப்பினர்களும், பந்தளம் அரச குடும்பத்தினர்களும் கோயில் குளம் சாந்தி கண்டாரு ராஜீவ்ரகு, கன்னிபையூர் நாராயணன் நம்பூதிரி ஆகியோரும் உயர் பூசாரிகளும் கலந்து கொண்டனர்.

மனிதர்களால் தான் ஜோதி ஏற்றப்படுகிறது என்ற உண்மையை அந்தக் கூட்டம் முடிவெடுத்து முறைப்படி நீதிமன்றத்திற்கும் தெரிவித்து, கேரள மின்வாரிய ஊழியர்கள் சூடம் கொளுத்துவதுதான் மகரஜோதி வெளிச்சம் என்ற உண்மையை அப்போதைய அறநிலையத்துறை அமைச்சரும் முதல்வரும் அறக்கட்டளைத் தலைவரும் அறிக்கையாகவே வெளியிட்டார்கள். மனிதர்கள் மகரஜோதி ஏற்றினாலும் கூட இந்துக்களின் நம்பிக்கையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று நீதிமன்றம் அப்போது அறிக்கை தந்தது. இவைகளைப் பற்றி எல்லாம் எள்ளளவும் கவலைப்படாமல் நம்மக்கள் ஆண்டுதோறும் அய்யப்பனைத் தரிசிக்க ஆட்டுமந்தைகளாய் ஓடிக் கொண்டிருப்பது கேவலம் அல்லவா?

அய்யப்பன் கோவிலுக்குப் போய்வந்த தமிழன், அடுத்தரவுண்டு திருப்பதிக்குச் செல்ல அணியமாகின்றான். மொழிவழி மாநிலப் பிரிவினையின் போது தமிழன் இழந்த சித்தூரையும் திருப்பதியும் நாம் இழந்தோம். திருப்பதிசென்று திரும்பிவந்தால் திருப்பம் நேருமடா உன் விருப்பம் கூடுமடா என்று நாம் பாட்டுப்படலாமேதவிர , திருப்பம் வளர்ச்சி எல்லாம் ஆந்திர மாநிலத்திற்குத்தான்! ஆந்திர அரசு தருவதாகச் சொன்ன கிருஷ்ண நதிநீர் கானல் நீராகிவிட்டது. பாலாற்றங்கரையில் புதிய அணைகட்டித் தமிழகத்தைப் பாழாக்கவும் ஆந்திரத்தைச் செழிக்கச் செய்யும் அவர்கள் இனஉணர்வோடு ஓரணியில் நிற்கிறார்கள். திருப்பதிக்குப் போகப் போறேன் நாராயணா, திருமொட்டை அடிக்கப் போறேன் நாராயணனா எனப் பாடிக்கொண்டும் நாராயண கோப்பாளம் எனப் பிச்சை எடுத்துக் கொண்டும் மான உணர்ச்சிக்கு விடை கொடுத்த தமிழ் பக்தர்கள் கூட்டம் திருமலையில் ஏழுமலையானை வழிபட நிரம்பி வழிகிறது.

ஆண்டு தோறும் அங்குக் குவியும் காணிக்கையின் மதிப்பு மட்டும் 600 கோடி ரூபாயாம். அந்தக் கோயிலின் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் கோடி மதிப்புள்ளதாம். 12,000 கிலோ தங்கம், 11,000 கிலோ வெள்ளி என 50,000 கோடி ரூபாய் தனியாக ஏழுமலையானிடம் உள்ளனவாம். 33,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 4,200 ஏக்கர் நிலம் திருப்பதி கோயிலுக்கு இருக்கிறதாம். திருப்பதி கோயில் நிர்வாகத்தின் கீழ் மேலும் 40 கோயில்கள் இருப்பதாகவும் அவைகளும் செல்வளத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முடிக்காணிக்கை மூலம் ரூ.300 கோடி என எல்லா நிலைகளிலும் வருமானம் குவிந்து கொண்டுதான் இருக்கின்றன. அமிதாபச்சன், நயன்தாரா, தமன்னா திரைப்பட நடிகர் நடிகைகளும் தங்கத்தையும் வைரத்தையும் உண்டியலில் கொட்ட வருகிறார்கள். அவர்களைத் தரிசனம் செய்யவும் ரசிகர்கள் கூட்டம் அங்கு முகாம் அடிக்கிறது. எவ்வளவு நிதியை அள்ளி அள்ளித் தந்தாலும் ஜரிகண்டி ஜரிகண்டி என விரட்டி அடிப்பார்களே தவிர, அங்கும் நம் இளித்தவாய்த் தமிழன் பார்ப்பனர்களுக்குச் சமமாக வழிபடவோ, அர்ச்சனை செய்யவோ முடியவே முடியாது.

இதனை உணராமல் விட்டில் பூச்சிகளாக வீணாக அழியும் தமிழர்களே! மலையாளிகளை, கன்னடர்களை, ஆந்திரர்களை, மராட்டியர்களை, பார்ப்பனர்களைப் பார்த்து அவர்களின் இன உணர்வை அறிந்து தெளிவுபெறுங்கள். ஆலயம், அரசியல், அறிவியல், வணிகம் என அனைத்துத் துறைகளிலும் தமிழரின் ஆளுமை கொடிகட்டிப் பறக்க இனியாவது களத்தில் இறங்குவோம், வாருங்கள்!

Pin It