மகாத்மா : டாக்டர்! நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அம்பேத்கர் : உங்கள் கருத்துக்களைக் கூற அழைத்தீர்கள். நீங்கள் தயவு செய்து என்ன என்று சொல்லுங்கள். அல்லது கேள்விகளாக என்னைக் கேளுங்கள். அவைகளுக்கு நான் பதில் அளிக்கிறேன்.

மகாத்மா : என் மீதும், காங்கிரசின் மீதும் நீங்கள் கோபங் கொண்டிருக்கின்றீர்கள் என்ற நான் அறிய வந்தேன். நான் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நான் சிறுவனாகப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்தே தீண்டப் படாதோர் பிரச்சினையைப் பற்றி எண்ணிக்கொண்டு வருகிறேன். நீங்கள் அப்பொழுது பிறந்துகூட இருக்க மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அதாவது நான் எவ்வளவு முயற்சிகள் செய்து, எவ்வளவு கஷ்டங்கள்பட்டு காங்கிரஸ் திட்டத்தில் இந்த விஷயத்தைச் சேர்த்தேன் என்பது. காங்கிரசு தலைவர்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள் தெரியுமா? இது ஒரு சமூகப் பிரச்சினை, இது ஒரு சமயப் பிரச்சினை, இதை அரசியல் பிரச்சினையுடன் சேர்க்கவே கூடாது என்றனர். இது மட்டுமல்ல, காங்கிரசு இருபது லட்ச ரூபாய் களுக்குக் குறையாமல் தீண்டப்படாதோர்களுக்காகச் செலவு செய்துள்ளது. இவ்வாறிருக்க உங்களைப் போன்றவர்கள் என்னையும், காங்கிரசையும் எதிர்ப்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. உங்கள் நிலையை விளக்க விரும்பினால், நீங்கள் பேசலாம்.

ambedkar_388அம்பேத்கர் : மகாத்மாஜீ ! நான் பிறப்பதற்கு முன்னரே நீங்கள் தீண்டப் படாதோர் பிரச்சினைப் பற்றி நினைக்கத் தொடங்கியது உண்மையே. எல்லாப் பெரியவர்களும், வயோதிகர்களும் வயதைப் பற்றிச் சொல்வது சகஜமே. உங்களால்தான் காங்கிரஸ் இந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டுள்ளது என்பது உண்மையே. ஆனால் ஒரு விஷயத்தை நான் கூறாமலிருக்க முடியாது. காங்கிரஸ் இந்தப் பிரச்சினையை அங்கீரித்துள்ளதே ஒழிய வேறு எதுவும் செய்யவில்லை. ரூபாய் இருபது லட்சத்தைக் காங்கிரஸ் தீண்டப் படாதோர்களுக்காகச் செலவு செய்துள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள். அத்தனையும் வீண்தான் என்று நான் கூறுவேன். என்னிடம் அந்தப் பணம் இருந்திருந்தால் என் மக்கள் பொருளாதாரத்திலும், கண்ணோட்டத்திலும் பெரியதோர் மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பேன். அந்நிலையில் என்னை நீங்கள் வெகு நாட்களுக்கு முன்னரே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நான் உங்களுக்குச் சொல்லாமலிருக்க முடியாது. அதாவது காங்கிரசு உண்மையில் மனமார்ந்த நிலையில் தாழ்த்தப்பட்டோர் அவல நிலையைப் போக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. அதன் சொல்லுக்கும் செயலுக்கும் பெரியதோர் இடைவெளி இருக்கிறது.

உண்மையில் நல்லெண்ணம் இருந்தால், எப்படி கதர் ஆடை அணிவது இன்றியமையாதது என்று வைத்துள்ளதோ, அவ்வாறே தீண்டாமை ஒழிப்பும் இன்றியமையாதது என்று வைத்திருக்கும். வீட்டு வேலைக்காகத் தீண்டப்படாதவர்களை வைத்துக் கொள்வதோ, அல்லது ஒரு தீண்டப்படாத மாணவனுடன் வாரத்தில் ஒரு நாளாவது தன் வீட்டில் உடன் உடகார்ந்து சாப்பிடுவதோ, இவற்றில் ஏதாவது ஒன்று செய்பவர்களைத்தான் காங்கிரசில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ள முடியும் என்று ஒரு நிபந்தனை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு ஒரு நிபந்தனை இருந்திருந்தால் ஜில்லா காங்கிரசு கமிட்டித் தலைவர் ஒருவர் தீண்டப்படாதோர் தெய்வாலயத்தில் புகக்கூடாது என்று கருதும் அவலநிலை ஏற்பட்டிராது. “காங்கிரசு பலமானதோர் ஸ்தாபனமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் இவ்வாறு எந்த நிபந்தனையும் போடவில்லை என்று நீங்கள் கூறலாம். அப்படியானால் காங்கிரசு பலத்தைத்தான் நாடுகிறதே தவிர ஒரு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்பது அதன் நோக்கமில்லை என்று நான் கூறுவேன். காங்கிரசு மீதும், உங்கள் மீதும் நான் சுமத்தும்

குற்றச்சாட்டு இதுதான். பிரிட்டிஷ் சர்க்கார் எந்தவித மனமாற்றத்தையும் காட்டவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். இந்துக்களும் எங்கள் பிரச்சினையில் எந்தவித மனமாற்றத்தையும் காட்டவில்லை என்று நான் கூறுவேன். மனமாற்றம் ஏற்படாத வரையில் இந்துக்களையும் சரி, காங்கிரசையும் சரி நாங்கள் நம்ப மாட்டோம். நாங்கள் சுயஉதவியிலும், சுயமரியாதையிலும் நம்பிக்கையுடையவர்கள். பெரிய தலைவர்களிலோ, மகாத்மாக் களிலோ நாங்கள் நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை. நான் மிகக் கொச்சையாகக் கூறுவதை மன்னிக்கவும். மகாத்மாக்கள் இன்று வந்து நாளை போவதுபோல், வருவார்கள் போவார்கள். ஆனால், எங்கள் நிலையில் கடுகளவும் மாற்றமும் ஏற்படாது. காங்கிரசுகாரர்கள் ஏன் எங்கள் இயக்கத்தை எதிர்க்கவேண்டும், என்னை ஏன் துரோகி என்று அழைக்க வேண்டும்? “காந்திஜீ! எனக்குத் தாயகம் என்பதில்லை.''

மகாத்மா : (திடுக்கிட்டு) “உங்களுக்குத் தாயகம் உண்டு. எனக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து வட்ட மேஜை மாநாட்டில் நீங்கள் நடந்து கொண்டது நீங்கள் மிகச் சிறந்த தேசபக்தர் என்பதைப் புலனாக்கி விட்டது.''

அம்பேத்கர் : எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நான் மீண்டும் கூற விரும்புகிறேன். எனக்கு அது இல்லை. எவ்வாறு இந்த நாட்டை என் தாயகமாகக் கருத முடியும்? எவ்வாறு இந்து மதத்தை என் மதமாகக் கருத முடியும்? நாய்கள் பூனைகளை விட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், நாங்கள் குடி தண்ணீர் பெற உரிமையும் இல்லை என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், சுய மரியாதையுள்ள எந்தத் தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும், அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதேயாகும். ஆகவே, தெரிந்தோ, தெரியாமலோ நாட்டுப்பற்று எங்களுக்கு இல்லைஎன்றால், அதற்கு நாங்கள் அல்ல பொறுப்பு இந்த நாடேயாகும். என்னைத் துரோகி என்றால் அதற்கு நான் அல்ல பொறுப்பு இந்த நாடேயாகும். நீங்கள் கூறுவதுபோல் நான் இந்நாட்டிற்கு ஏதாவது தேசியத் தொண்டு செய்திருப்பேனாகில், அது தேசப்பக்தியினால் அல்ல. என் மனச்சாட்சிதான் அதற்குக் காரணமாகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளில், இந்த நாட்டுக்கு உதவி புரியவில்லை என்றால் அது பாபமாகாது... எந்தத் தீங்கும் இந்த மனச்சாட்சிதான் காரணம். என் மனச்சாட்சியின் தூண்டுதலின் பேரில் என் மக்களுக்கு மனித உரிமைகள் பெற நான் எடுக்கும் முயற்சிகள் இந்நாட்டிற்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல.

மகாத்மா காந்தி சலசலப்படைந்தார். ஆனால் அம்பேத்கர் தளரவில்லை.

அம்பேத்கர் : “முஸ்லீம்கள், சீக்கியர்கள், தீண்டப்படாதவர்களை விடப் பொருளாதாரத் துறையில் எவ்வளவோ முன்னேற்றமடைந்து உள்ளனர். வட்டமேஜை மாநாட்டின் முதல் கூட்டத்தில், முஸ்லீம்கள் கோரிக்கைகளுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு அரசியல் பாதுகாப்புகள் அளிக்கப்பட்டன. காங்கிரசு அவர்களை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு உள்ளது. வட்ட மேஜை மாநாட்டின் முதல் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் உரிமைகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டு அரசியல் பாதுகாப்பு, போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சிபார்சு செய்திருக்கிறது. எங்கள் அபிப்பிராயத்தில் இந்தச் சிபாரிசுகள் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். உங்களுடைய அபிப்பிராயம் என்ன?''

மகாத்மா : தீண்டப்படாதவர்கள் என்பவர்களை இந்துக்களிலிருந்து அரசியல் முறையில் பிரிப்பதை நான் எதிர்க்கின்றேன். அது தற்கொலைக்கு ஒப்பாகும்.

அம்பேத்கர் : “உங்கள் பதிலுக்கு என் இதயம் கனிந்த நன்றி. இந்தப் பிரச்சினையில் நாம் எங்கு நிற்கிறோம் என்று தெளிவாகப் புரிந்து கொள்வது நலம். விடைபெற்றுக் கொள்கிறேன் வணக்கம்.''

அம்பேத்கர் உள்ளம் கொதித்தது. என்ன ஆனாலும் சரி, தாழ்த்தப்பட்ட மக்கள் மனித உரிமை பெற, தம் மூச்சு உள்ளவரையில் பாடுபட்டே தீர்வதென்ற திட உறுதியுடன் காந்தியிடம் விடைபெற்றுக் கொண்டார்.

Pin It