பெரியாருக்கு எதிரான அடுக்கடுக்கான திரிபுகள்

1943ல் கம்யூனிஸ்ட் கட்சி கீழத் தஞ்சையில் உருவாக்கிய விவசாயிகள் சங்க செயல்பாடுகளை திரித்து 1948ல் கம்யுனிஸ்ட் செயல்பாடுகள் தொடங்கின என்று வரலாற்றை புரட்டுகிறார்கள்.

தோழர் ரவிக்குமாரின் ‘சித்திரை நெருப்பு’ நூலின் 20-23ஆம் பக்கங்களில் ஒரு செய்தி காணப்படுகிறது.

ravikumar 370காட்டுமன்னார்குடி வட்டாரம் உடையூர் கிராமத்தில் ஒரு தலித் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு நியாயம் கேட்க இளையபெருமாள் அவர்கள் அந்தப் பகுதிக்கு செல்லுகிறார். அவருடன் ஏறத்தாழ ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த செய்தி அறிந்து பயம் கொண்ட நில உடையமையாளர்களும், ஆதிக்க ஜாதியினரும் “ஆயிரம் பேரைத் திரட்டிக் கொண்டு இளையபெருமாள் பணக்காரர்கள் வீடுகளில் கொள்ளையடிக்கப் போகிறான்” என்ற செய்தியை, தந்தி வழியாக மாவட்ட ஆட்சித் தலைவர் எச் எஸ் பால் அவர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி அவர்களுக்கும் தந்தி அனுப்பியதால், இளையபெருமாள் குழுவினர் அந்த இடத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்டக் கண்காணிப்பாளரும் காவல் படையோடு அங்கு சென்று விடுகிறார்கள். அதன் பின்னர் தான் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து கொள்கிறார்கள். தாக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணமும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் வேறு ஏதேனும் குறைகள் உண்டா என்று மாவட்ட ஆட்சியர் கேட்கிற போதுதான், “இப்போதுள்ள கூலியை இரண்டு மடங்காக்கித் தர வேண்டும்” என்ற கோரிக்கையை இளைய பெருமாள் முன் வைக்கிறார். மேலும் அந்தப் பகுதிகளில் முதலாளிகளும் ஆதிக்க ஜாதியினரும் பெண்கள் வேலை செய்தால் கூலி கொடுக்கிற பழக்கம் இல்லை என்று வைத்திருந்தனர். அதற்குப் பதிலாக பெண்களுக்கு சின்ன படியால் மூன்று படி நெல் கூலியாகத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தார். அவற்றை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நில உடமையாளர்களிடம் பேசி பெண்களுக்கு சின்ன படியில் மூன்று படி கூலியைக் கொடுத்தாக வேண்டும் என்பதோடு, இப்போது நிலவி வருகிற கூலியை இரண்டு மடங்காக்கித் தர வேண்டும் என்றும் ஆணையிடுகிறார். இந்த செய்திகளை தோழர் ரவிக்குமார் எழுதிய சித்திரை நெருப்பு என்ற நூல் கூறுகிறது. இது நடந்தது 1946 ஜனவரி மாதம் 18ஆம் தேதி என்றும் அந்நூல் குறிப்பிடுகிறது

கூடுதல் செய்தியாக பாலசிங்கம் ராஜேந்திரன் எழுதிய ‘இளையபெருமாள் வாழ்க்கை சரித்திரம்’ என்ற நூலும் “பறையர் சமூக மக்களுக்கு தற்போது வழங்கப்படும் கூலியை இரண்டு மடங்காக உயர்த்தித் தர வேண்டும்; கூலி உயர்வு உடையூர் கிராமத்தில் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அமல்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கை காரணமாக இரண்டு மடங்கு கூலி உயர்வு என்ற இளையபெருமாள் கோரிக்கையானது மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அன்றைக்கே ஒப்பந்தமானது என்று கூறுகிறது.

அதன் தொடர்ச்சியாக “1948 ஆம் ஆண்டில் தான் கூலி உயர்வு கோரி தஞ்சைப் பகுதிகளில் கம்யூனிஸ்டுகள் போராட்டத்தைத் தொடங்கியதாக தகவல்கள் கிடைக்கின்றன. எனவே கம்யூனிஸ்டுகளுக்கு முன்பே இளையபெருமாள் கூலி உயர்வுக்காக போராடியதை உடையூர் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஆனால் வரலாற்றில் இளையபெருமாளின் இந்த கூலி உயர்வு போராட்டத்திற்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை. அட்டவணை சமூகத் தலைவர்களின் போராட்ட வெற்றிகளை இச் சாதிய சமூகம் புறக்கணித்து வருவது இதற்குக் காரணமாகும்” என்றும் எழுதிச் செல்கிறார்.

கம்யூனிஸ்டுகள் எப்போது தஞ்சை பகுதிகளில் விவசாய தொழிற்சங்கத்தை தொடங்கினார்கள்? நமக்கு கிடைத்த தகவல்களின்படி தஞ்சைப் பகுதியில் விவசாய சங்கங்களை தொடங்கிய தோழர் பி சீனிவாச ராவ், 1935இல் கட்சியின் சென்னைக் கிளையை அமைத்து அதன் செயலாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து 1943இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரிவு கேட்டுக் கொண்டதன் பேரில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் பணியாற்ற சென்றவர்தான் 1943 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தையும் தொடங்கியுள்ளார். 1943 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினை, 1948 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டதாக எவ்வாறோ தோழர் பாலசிங்கம் ராஜேந்திரனுக்கு எவருக்கும் தெரியாத தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

மேலும் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவரைத் திரட்டி சென்று விட்டாலே இரண்டு மடங்காக கூலியை உயர்த்திப் பெற முடியும் என்ற ஓர் ’அரிய’ முன்மாதிரியையும் எடுத்துக்காட்டியுள்ளார். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் வழியாக மக்களிடம் கருத்துக்களை எடுத்துச் செல்வது, பொதுமக்கள் ஆதரவைப் பெறுவது, அதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்தம், மறியல் போன்ற தொய்வில்லா போராட்டங்கள் நடத்தி கோரிக்கையை வலியுறுத்துவது போன்ற வழிமுறைகள் எதுவும் தேவையேயில்லை என்பதை பொது சமூகத்திற்கும், போராடும் இயக்கங்களுக்கும் வழிகாட்டி இருப்பது தான் இதில் பொதிந்துள்ள ஆகச்சிறந்த செய்தியாகும்.

சரி, அவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்! 1946 ஆம் வருஷம் ஜனவரி மாதம் 18ஆம் தேதி இரண்டு மடங்கு கூலி உயர்வு ஒப்பந்தம் நடந்ததாகவே ஏற்றுக்கொண்டு நகர்வோம்.

தோழர் ரவிக்குமாரின் சித்திரை நெருப்பு நூலின் 24 ஆம் பக்கத்தில் இதன் தொடர்ச்சியான பத்தி இவ்வாறு அமைந்துள்ளது. ‘இந்த சமயத்தில் தான் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் நாக்பூரிலே மாநாடு போட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் இனிமேல் மற்றவரை நம்ப வேண்டாம். நீங்களே ஷெட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன் என்று சேருங்கள். உங்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் சொல்லுங்கள்’ என்று பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தார். அதைப் பார்த்து தான் அவருக்குக் கடிதம் எழுதுகிற பாக்கியம் எனக்கு (இளையபெருமாள்) ஏற்பட்டது .......... என்று தொடர்கிறது அந்த பத்தி.

அதற்கு அடுத்த பத்தி, அந்த சமயத்தில் தான் ‘காந்தியோடு போட்ட பூனா ஒப்பந்தம் சரியானது இல்லை என அம்பேத்கரே கூறிவிட்டார். யார் 32ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டாரோ அவரே 46ஆம் ஆண்டில் சரியானது இல்லை என்று சொன்னார். அதைத்தான் 1950லும் 1954லும் சொன்னார்.

ஆனால் 1942 ஜூலை மாதம் 18 முதல் 20 ஆம் நாள் வரை நாக்பூரில் மாநாடு ஒன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்றது. அம்மாநாட்டின் இரண்டாம் நாளில் தான் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு (All India Scheduled Caste Federation) தொடங்கப்பட்டது

அம்மாநாட்டின் ஐந்தாவது தீர்மானமாக, ‘அகில இந்திய தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான கூட்டமைப்பு’ மத்திய அரசியல் அமைப்பாக நிறுவுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூன்றாம் தீர்மானமாக, புதிய அரசியல் சட்டத்தில் சிறப்பு சட்டப்பிரிவுகள் என்ற தீர்மானத்தின், ஐந்தாவது உட்பிரிவாக தனி வாக்காளர் தொகுதி என்ற தலைப்பில் இயற்றப்பட்ட தீர்மானம்:

‘அனைத்து சட்டமன்றங்களிலும், உள்ளாட்சி மன்றங்களிலும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு தனி வாக்காளர் தொகுதி மூலம் பிரதிநிதித்துவம் பெறச் செய்ய சட்ட வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட நூலின் இரண்டு பத்திகளில் கூறிய செய்திகளை வைத்துப் பார்க்கும்போது இளையபெருமாள் அவர்களுக்கு தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை பற்றியும், அந்த கோரிக்கை எப்போது நிறைவேற்றப்பட்டது, எப்படி அது பூனா ஒப்பந்தமாக மாறியது என்ற செய்திகளும், நாக்பூர் மாநாடு எந்த ஆண்டில் நடைபெற்றது என்ற விவரமும் தெரிந்திருக்கவில்லை என்பதைத்தான் அது வெளிப்படுத்துகிறது.

உண்மையில் நீண்ட காலமாக அறிவர் அம்பேத்கர் மனதில் தீண்டாதார் நலம் காக்கப்பட சட்டமன்றம், நாடாளுமன்றம், நிர்வாகம், கல்வி நிலையம் எல்லாவற்றிலும் வகுப்புரிமை அத்தியாவசியமான து என்ற கருத்து நிலைகொண்டிருந்தது. குறிப்பாக 1931 ஆம் ஆண்டு இறுதியில் லண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டின் போது தனி வாக்காளர் தொகுதி, இரட்டை வாக்குரிமை என்ற கோரிக்கைகளைத் தீவிரமாக வலியுறுத்தினார். குறிப்பாக இந்தியாவுக்கு புதிய அரசியல் அமைப்பு (1935) உருவாக இருந்த அரசியல் சூழலில் அரசியல் பிரதிநிதித்துவங்களுக்காக மாகாண சட்ட மன்றம், மத்திய சட்டமன்றம் (அப்போது நாடாளுமன்றம் என்ற பெயர் இல்லை) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்படும் தீண்டத்தகாத மக்களின் பிரதிநிதிகள் தீண்டத்தகாத மக்களின் நம்பிக்கைக்குரியவராய் இருக்க வேண்டும் எனில், அந்த மக்கள் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் நபராக இருப்பதே அம்மக்களுக்குப் பயன்படும் என்பதில் உறுதியாக இருந்தார்.

வட்டமேசை மாநாட்டில் இதுகுறித்து தீர்வேதும் காண முடியாததால் பிரிட்டன் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் அவர்கள் முடிவுக்கு விட்டு விட்டு மாநாடு கலைந்தது. முடிவெடுக்கப்படாமல் மாநாடு கலைந்தது என்றாலும் நேர்மையான முடிவு எடுக்கப்பட்டால் அது இரட்டை வாக்குரிமை, தனித் தொகுதிக்கு ஆதரவாகத் தான் இருக்கும் என்பதை காந்தியார் போன்ற கோரிக்கைக்கு எதிரானவர்கள் முன்னுணர்ந்திருந்தனர். அதனால்தான் இப்போது பாஜக ஆட்சியாளர்கள் இஸ்லாமியார்களை வைத்து பாஜகவை ஆதரிக்கச் செய்வதை போல தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைக் காக்கும் கோரிக்கைகளுக்கு எதிராக இயங்க தாழ்த்தப்பட்டோரின் தலைவர்களைத் தேடத் தொடங்கினர். அறிவர் அம்பேத்கருக்கும் மூத்த தாழ்த்தப்பட்டோர் இயக்கத் தலைவராக விளங்கிய நமது எம்.சி.ராஜா அவர்களுக்குக் கிடைத்தார். காங்கிரஸ் எதிர்ப்பிலும் தாழ்த்தப்பட்டோர் நலனிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த எம்.சி.ராஜாவே தனித்தொகுதியை கைவிட்டு விட்டு பொதுத்தொகுதி முறையினை ஏற்றுக்கொண்டு, இந்து மகா சபை தலைவர் பி.எஸ்.மூஞ்சேவுடன் 29.3.1932லேயே ஒரு துரோகம் ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் காந்தி ஆதரவாளராக மாறிவிட்டார்; மாற்றப்பட்டுவிட்டார். எம்.சி.ராஜாவோடு பம்பாய் பாலு போன்ற தலைவர்களும் துணையாக இருந்தனர்.

ராஜா- மூஞ்சே ஒப்பந்தத்தை விளக்கி அறிவர் அம்பேத்கர், 1931 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கூட தனித்தொகுதி முறையை ஆதரித்து வந்த எம் சி ராஜா, ஏன் இந்த துரோகச் செயலுக்குப் பலியானார் என்பதை விளக்கி ஓர் அறிக்கையை வெளியிட்டார். 10.4.1932 நாளிட்ட குடிஅரசு ஏடு அவர் அறிக்கையை முழுமையாக வெளியிட்டது.

இனப்பிரதித்துவ தீர்ப்பினை விரைவில் பிரிட்டன் பிரதமரால் வெளியிடப்படும் சூழல் உருவானது. அந்நிலையில் பம்பாயில் காந்தியார் / காங்கிரஸ் ஆதரவான, அதாவது தனித் தொகுதி, தாழ்த்தப்பட்டோர் மட்டும் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தனித்தொகுதி முறைக்குப் பதிலாக - அனைத்து வாக்காளர்களிடமும் வாக்கினைப் பெற்று தாழ்த்தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் முடிவுக்கு ஆதரவான தாழ்த்தப்பட்டோர் மாநாட்டினை எம்.சி.ராஜா தரப்பினர் 10.7.1932 இல் பம்பாயில் கூட்டினர். மாநாட்டிலேயே தனித்தொகுதி ஆதரவாளர்கள் / எதிர்ப்பாளர்கள் என்ற இருதரப்பாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் சாகிறார்; 50க்கும் மேற்பட்டோர் காயப்படுகிறார்கள். தீர்மானம் எதுவும் நிறைவேற்றாமலே மாநாடு குழப்பத்தில் முடிகிறது.

இந்த மாநாடு நடப்பதற்கு முன்னதாகவே பிரிட்டன் பிரதமரின் தீர்ப்பு அறிவிப்பை விரைவு படுத்த அம்பேத்கர் லண்டனுக்கு மீண்டும் சென்று விட்டார் என்று அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றில் ஆசிரியர் தனஞ்செய்கீர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் 17.8.1932 அன்று பிரிட்டன் பிரதமர் வட்டமேசை மாநாட்டின் முடிவாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமையை உள்ளடக்கிய ‘இன பிரதிநிதித்துவ தீர்ப்பு’ (Communal Award) அறிவித்தார்.

அதற்கு முன்னரே 11.3.1932 முதல் தனித் தொகுதி, இரட்டை வாக்குரிமை என்பது இந்து மக்களை பிளப்பதாகவே அமையும். (இப்போது ஏதோ இந்துக்களும் தீண்டத்தகாத மக்களும் கட்டிப்பிடித்துக் கொண்டு ஒற்றுமையாய் இருக்கிறார்களாம்) எனவே அவ்வாறான முடிவு எடுக்கப்படுமேயானால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என்று காந்தியார் மிரட்டி வந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி இரட்டை வாக்குரிமை என்ற முடிவை மாற்றாவிட்டால் உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்குவேன் என்று பிரிட்டன் பிரதமருக்கு காந்தியார் எழுதினார். 10.8.1932 அன்று அதற்குப் பதில் எழுதிய பிரிட்டன் பிரதமர் “பயங்கரமான குறைபாடுகளினால் துன்புற்றுக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வருங்காலத்தில் அவரது நலனில் மிகுந்த அக்கறையுடன் சட்டமன்றங்களில் அவர் சார்பாக பேசுவதற்கு அவர்களாலேயே பிரதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பினை தடுப்பதற்காகவே இத்தகைய போராட்டத்தை நீங்கள் மேற்கொள்கிறீர்கள்” என்று தடித்த தோல் எருமைக்கு தார் குச்சியால் குத்துவதைப் போல காந்தியாருக்கு அவர் செயலின் கேவலத்தை எடுத்துக்காட்டினார் பிரிட்டன் பிரதமர். ஆனாலும் காந்தியின் பிடிவாதம் தளரவில்லை. 20.9.1932 முதல், தான் சிறை வைக்கப்பட்டிருந்த எரவாடா சிறையிலேயே உண்ணா நிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இந்த காலகட்டத்தில் பெரியாரும், சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவருமான எஸ் ராமநாதனும் உலக நாடுகள் சுற்றுப்பயணத்தில் இருந்தனர். சோசியலிச நாடுகளையும், மற்ற நாடுகளில் சோசியலிச சிந்தனையாளர்களை, அமைப்புகளை சந்திக்கும் முதன்மை நோக்கோடு மேற்கொண்டிருந்த 11 மாத பயணத்தில், இந்த காலகட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் 1932 ஜூலை 7 முதல் அக்டோபர் 10வரை தங்கி இருந்தார். அங்கிருந்துதான் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் பயணமும் மேற்கொண்டனர்

அப்போது பாரிசில் இருந்து கேபிள் தந்தி ஒன்றை பெரியார் அம்பேத்கருக்கு அனுப்பினார். அதில் “6,7 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது ஒரு காந்தியாரின் உயிரை விட கேவலமானது அல்ல. காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகளுக்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்து விடாதீர்கள்” என்பதே அந்த கேபிள் செய்தி. (குடிஅரசு : 10.2.1935)

அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டின் நிலவரங்களையும் பார்ப்போம். தமிழ்நாட்டு இந்திய தேசியக் கவிஞர்களான நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையும் தேசிக விநாயகம் பிள்ளையும் தாழ்த்தப்பட்டோருக்குத் தனித் தொகுதி வேண்டாம்; பொதுத் தொகுதியே போதும் என்று கவிதைகள் எழுதினர். அதே நேரத்தில் காந்தியாருடைய நடவடிக்கைகளை மறுத்தும், தமிழ்நாட்டில் பல குரல்கள் எழுந்தன. ‘ காந்தி கண்டன கீதம்’ என்ற பெயரில் ஒரு கவிதை நூலொன்று குடிஅரசு ஏட்டின் ஈரோடு உண்மை விளக்கம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது

அந்நூலில்

சாற்றிடும் அரிசனப் பெயர் எதற்கு உதவும் - அது

தாழ்ந்த வரை கை தூக்குமா?

என்று காந்தியடிகள் பயன்படுத்தி அரிசன் என்று சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பாம்புக்கு வால் காட்டி மீனுக்குத் தலை காட்டும்

பார்ப்பனதாசர் காந்தி

என்றும் கவிதைகள் எழுந்தன.

காந்தியாரின் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியவுடன் தமிழ்நாட்டில் அதற்கு எதிரான கண்டனக் கூட்டங்கள் ஏராளம் நடைபெற்றன. சுயமரியாதை இயக்கமும் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் ஏறத்தாழ முழுவதும் காந்தியாரைக் கண்டித்தும், அம்பேத்கர் நிலைப்பாட்டை ஆதரித்தும் கண்டனக் கூட்டங்கள் நடத்தினார். இரண்டு நாட்களுக்குள் நாடே பரபரப்பானது. அம்பேத்கருக்கு எதிரான வசை மொழிகள் எங்கும் ஒலித்தன. அம்பேத்கரின் பிடிவாதம் காந்தியாரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துள்ளது. காந்தியாருக்கு ஏதேனும் நிகழுமேயானால் அதற்கு அம்பேத்கர் தான் காரணம் என்றெல்லாம் பேசப்பட்டன; பேச வைக்கப்பட்டனர்.

கொளத்தூர் மணி

Pin It