Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

அண்மைப் படைப்புகள்

தொடர்புடைய படைப்புகள்

"செயலலிதாவின் அரசியல் எதிரிகள் வேண்டுமானால் இந்தத் தீர்ப்பை ஏற்கலாம். ஆனால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி வழக்கறிஞர் என்ற முறையில் இந்தத் தீர்ப்பை எதிர்க்கிறேன்' இராம்செத் மலானி.

"இன்று எனக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டப்படியானது என்ற நிலையில் இருந்து தவறி எனது அரசியல் நகர்வினால் பாதிக்கப்படும் அனைத்துலக அரசியல்வாதிகளின் பின்னணியில் எழுந்த அழுத்தத்தின் காரணமாகவே வழங்கப்பட்டுள்ளது என உணர்கிறேன்' செயலலிதா.

jaya

எல்லாவற்றையும் சட்டப்படியே செய்யுங்கள் என்று மோடி சொன்னார். அதன்படியே இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது சு.சாமி (கடந்த நேர்காணலில் செயலலிதா பிராமணியத்தில் இருந்து தவறி விட்டார் என்று இதே சு.சாமி கூறியது குறிப்பிடத்தக்கது)

செயலலிதா ஆட்சியில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்குள்ள தொடர்பும், அத் தொடர்பு பல வகையில் நிறுவப்பட்டு அவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதும் பொதுப்பட வரவேற்புக்குரியதே.

அவருக்கு மட்டுமன்று, பொதுப்பட இன்றைக்கு ஊழலே அரசியலாக, வாழ்வியலாக மாறி வருகிற குமுக அமைப்புக்குள் இதுபோன்று சட்ட வழி ஓரிரு நெருக்கடிகளாவது ஏற்படுவது நல்லதுதான்.

ஆயினும் இன்னொரு கோணத் தில் இதுபோலும் ஓரிரு நெருக்கடி களை மட்டுமே காட்டி இந்திய சட்டத்துறை, நீதித் துறை நேர்மையாக இருப்பதாகக் கருதுவது மிகப் பெரும் ஏமாளித் தனமே.

அரசியல்காரர்கள் செய்கிற ஊழல்களுக் குக் கொஞ்சமும் நீதித்துறையினரும் சளைக்காதவர்கள் என்பதைப் பல சான்றுகளில் அறியலாம்.

இருப்பினும், இங்கு செயலலிதா மீதான சட்ட வழி நெருக்கடிக்கும் சரி, அச்சட்ட நெருக்கடியை இந்திய ஆட்சியாளர்கள் குறிப்பாக பாரதீய சனதா எதிர் கொள்ளும் போக்கும் சரி கவனித்து அறிய வேண்டிய நிலையிலேயே உள்ளது.

அந்த வகையில் ஒட்டு மொத்த இன எதிரிகளும் துரோகிகளும் செயலலிதா மீதான தீர்ப்பில் எல்லை யில்லா மகிழ்ச்சியில் இருப்பதை உணர முடிகிறது.

செயலலிதாவிற்குத் தண்டனை அறிவிக்கப் பட்ட தும் இது எனக்கு முன்னமே தெரியும் என்று தமிழக மக்களின் எதிரி சுப்பிரமணியசாமி சொல்கிறான்.

இரண்டரை இலக்கம் தமிழீழ மக்களால் கொன்றொழித்த சிங்கள இன வெறியன் இராசபக்சே இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவிற்கு இருந்த தடை விலகியது என்று மகிழ்ச்சி யைத் தெரிவிக்கிறான்.

இந்நிலையில் செயலலிதாவின் கடந்த கால அரசியல் அணுகுமுறை முற்றிலும் தமிழர்ப் பகை போக்கைக் கொண்டிருந்தது என்பதில் சிறிதும் ஐய மில்லை.

ஆனால் இப்போதைய அணுகுமுறை இன எதிரிகளுக்குச் சில நிலைகளில் கலக் கத்தை உண்டாக் கியது என்பதில் பொய்யும் இல்லை.

செயலலிதாவிற்கு வழங்கப்பட்டது நீதியா? இல்லை நீதியோடு கலந்த சதியா? என்ற கேள்விக்கு காலமே விடை சொல்லும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்களைச் சிறையிலிட்டது, ஆள்தூக்கிச் சட்டங்களால் தமிழக உணர்வாளர்களை அலைக் கழித்தது முதல் இன்று வரையிலும் செயலலிதா செய்த எதிர்வினைகளை மறக்க முடியாது.

ஆனாலும், அண்மைக் காலமாகச் செயலலிதாவின் இந்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்திய அடிவருடிகளை ஆட்டம் காணச் செய்துள்ளன. ஆனால் இந்த உண்மைகளை மறைத்து செயலலிதா மட்டும் ஊழல் செய்து விட்டது போலவும் இதனால் இந்தியப் பூணூல் புனிதம் கெட்டு விட்டது போலவும் பல ஊடகங்களும் கூப்பாடு போட்டு இந்திய விசுவாசத்தைக் காட்டுகின்றன.

நீதி தவறாத இந்திய அரசின் நீதிமன்றங்கள் நீதியை வழங்கியுள்ளதாகச் சில தமிழ் அமைப்புகளும் இந்திய விசுவாசத்தைக் காட்டுகின்றன.

அப்படியானால் இந்த 18 ஆண்டுக் காலமாக பாரதிய சனதாவும் காங்கிரசுக் கட்சியும் சாதிவெறிக் கட்சியான பாமகவும், விசயகாந்து கட்சியும் செயல லிதாவின் உறவே வேண்டாம் என்று இருந்தார்களா?

நேற்றுவரை தேர்தலில் போட்டியிட போயசு தோட்டத்தில் காவல் கிடந்தவர்கள்தாமே இவர்கள் எல்லாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் படைக்கருவிகள் வாங்கியதில் பல நூறு கோடிகள் போபர்சு ஊழல் செய்த இராசீவ் காந்தி தண்டிக் கப்படவில்லை.

1987 ஆண்டுகளில் இந்திய அமைதிப்படை பெயரில் பல நூறு ஈழத் தமிழர்களைக் கொலை செய்து சிங்களப் படை வீரனால் தண்டிக்கப்பட்டபோதும், போபால் நச்சுவளிக் கசிவினால் 20000 மக்கள் இறந்த போதும் தனி வானூர்தியில் ஆண்டர்சனைக் கடத்தி அனுப்பி வைத்தவனை இந்த உச்சிக் குடுமிகள் மன்றம் தண்டித்தனவா?

கார்கில் போரில் இறந்த படை வீரர்கள் உடலை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கியதில் பாசக செய்த முறைகேடு,

நிலக்கரிச் சுரங்கம் அமைக்க பல இலக்கம் கோடிகள் ஊழல், அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் பல இலக்கம் கோடிகள் ஊழல்.. என இந்தியப் "புனிதம்' இப்படி இருக்க செயலலிதாவின் மீதான தீர்ப்பை வரவேற்பவர்கள் இந்தத் தீர்ப்பின் மூலம் இந்திய "புனிதம்' காக்கப்பட்டது என்பதற்காகவா வரவேற்கிறார்கள்?

தமிழ்நாட்டில் சாதி, மத மோதல்களை உருவாக்கி அதன் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றவே காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன.

ஈழத் தமிழர்களைக் கொன்று தமிழகத் தமிழர் களையும் அழித்துவரும் இந்தியப் பகையரசை திமுக போல் அமைந்திராமல் பேச்சுக்காகவாவது தட்டிக் கேட்டவர் என்பதனால் சிங்களவர்களுக்குப் பகையானார் செயலலிதா.

முல்லைப் பெரியாற்று உரிமையை மறுக்கும் கேரளாவிற்கு எதிராகவும்,

தமிழகத்திற்குத் தண்ணீர் விடுக்கத் தடையாக இருப்பதும்,

காவிரி உரிமையை மறுப்பதன் மூலமும்,

வடகிழக்குத் தேச விடுதலை போராட்டங்களை ஒடுக்குவதும்,

காலிசுதான் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதும்,

காசுமீர் விடுதலை போராட்டங்களை ஒடுக்குவதும் சென்னை "ரெச்சிமெண்டை'ப் பயன்படுத்துவதும் அதன் மூலம் பிற தேச மக்களுடன் பகையைத் தூண்டுவதும் போன்ற அனைத்துக் கொடுமை களுக்கும் காரணம் இந்திய அரசே.

இன்றுவரை ஈழத் தமிழர் படுகொலைக்கு நீதி கிடைக்கத் தடையாக இருப்பதும் இந்திய அரசுதான்.

ஆனால் இவ்வளவு துரோகம் செய்யும் இந்திய அரசு, அதன் நீதிமன்றம் செயலலிதாவிற்குத் தண்டனை வழங்குவது இருக்க முடியும்?

1995ல் தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவிற்கு எதிராக நான்கு நாள்கள் உண்ணாநோன்பு இருந்து காவிரி நீரைப் பெற்றுத் தந்ததன் மூலமும், பின் 2014ல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை இந்திய அரசிதழில் வெளியிட அழுத்தம் தந்தார். அதன் வழிக் கருநாட காவில் உள்ள இனவாதிகளுக்குப் பகையானார்.

முல்லைப் பெரியாற்று உரிமையைத் தமிழகத்திற்கு மீட்டுத் தர துணை நின்றார்.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கூட்டி இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்திட வேண்டுமெனச் சட்டமன்றத் தீர்மானம் இயற்றினார்.

இராசபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கத் தீர்மானம் கொண்டு வந்தார்.

கச்சத் தீவை மீட்கச் சட்டமன்றத் தீர்மானம் போட்ட தோடு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்.

தனி ஈழக் கோரிக்கை, ஐ.நா. விசாரணை போன்ற வரலாற்றுத் தேவைமிகு தீர்மானத்தைச் சட்டசபையில் நிறைவேற்றினார்.

ராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற சிறையாளர்களை விடுவிக்க இந்திய அரசிற்கு 3 நாள் கெடு விதித்தார். சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

இனப்படுகொலை நடைபெற்ற இலங்கையில் ஐ.நா. மாநாடு நடத்த கடுமையாக எதிர்த்தார். அதன்வழி இந்திய ஆட்சி பீடத்திற்கு நெருக்கடியைக் கொடுத்தார் செயலலிதா.

இலங்கை மட்டை பந்து வீரர்கள் பங்கு பெறும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தடை விதித்து அனுமதி மறுத்தார்.

மோடி அரசின் "குரு உத்சவத்தை' எதிர்த்துப் புறக்கணித்தார். சி.பி.எசு.இ. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக அரசாணை இயற்றினார்.

இப்படியான வழிகளில் அண்மைச் செயல்பாடுகள் இந்திய ஆட்சிப் பீடத்தை எதிர்த்துத் தமிழ் நாட்டின் உரிமை களுக்காகக் குரல் கொடுத்து வந்தார்.

அவ்வாறு செயல் பட்டதன் அரசியல் உள்நோக்கங்களும், பின்புலங்களும், பலவாக இருப் பினும், இதற்கு முன்னரான கலைஞர் கருணாநிதி அரசு செய்யாத, வேறு தேர்தல் அரசியல் கட்சிகள் கொண்டிராத துணிவுடன் அவர் செயல்பட்டதை எண்ணாமல் இருக்க முடியாது.

இவ்வாறான செயல்களால் சில தமிழ்த்தேசக் கட்சிகளை விடவும் அவற்றை மிஞ்சும் அளவிற்கும் செயல்பட்டார்.

அதனால்தான் செயலலிதாவிற்குத் தண்டனை விதிக்கப்பட்டது தெரிந்ததும் பல புலம்பெயர் தமிழர்களும், அமைப்புகளும் கண்டனம் செய்தன. பல நாடுகளில் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அந்த வகையில் தமிழ்த்தேச அமைப்புகளுக்குச் செயலலிதாவின் நடவடிக்கைகள் ஊக்கமாக அமைந்து விடக் கூடாது எனும் உள்நோக்கத்திலேயே செய லலிதா தண்டிக்கப்பட்டதை மகிழ்வாக எண்ணியது பா.ச.க.

மேலும் செயலலிதாவின் மீதான இந்த நெருக்கடிகளினால், பரவலாகத் திமுக மீது வெறுப்பு உருவாகும் என்றும், அந்த இரண்டு முரண்களுக்கு இடையில் கிடைக்கும் சந்தில் நாம் சிந்து பாடிக் கொள்ளலாம் எனும் பார்ப்பனிய நரிச் சூழ்ச்சியிலேயே பா.ச.க. இயங்கிக் கொண்டிருந்ததையும் நாம் இங்கு அறிய வேண்டும்!

ஆக, இவற்றையெல்லாம் இணைத்தும் செயலலிதா மீதான வழக்குமன்ற தீர்ப்போடு சிந்தித்திட வேண்டியிருக்கிறது.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh