த.ஒ.வி.இ.யின் 15ஆவது பொதுக்குழு

கடந்த 26, 27.2.2011 அன்று தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் 15ஆவது பொதுக்குழு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் நடைபெற்றது. 62 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காலை 11 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பொதுக்குழுவில் புரட்சியாளர்களுக்கு வீர வணக்கமும், தமிழீழத் தேசியத்  தலைவர்  பிரபாகரனின் தாயார்  பார்வதி அம்மாளுக்கு நினைவேந்தலும் நிகழ்த்தப்பட்டது.

தலைவர்  அமர்த்தத்திற்குப் பிறகு பொதுக்குழு உறுப்பினர்களின் தன்னறிமுகம் நடந்தது. பின் பொதுச் செயலர் ஆண்டறிக்கை முன்வைத்து உரை நிகழ்த்தினார். தொடர்ந்து அணிச் செயலர்களின்

உரையும் செயற்குழு உறுப்பினர்களின் உரையும் நிகழ்த்தப்பட்டன.

மறுநாள் (27.02.2011) காலை 9 மணியளவில் தொடங்கிய        பொதுக்குழுவில் அரசியல் முன்வைப்புகள், அரசியல் வழியிலான கேள்விகள், அமைப்பியல் வழியிலான திறனாய்வுகள், தீர்மானங்கள் என விரிவான அரசியல் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் முன்வைப்புகளில்

1. நமது தேர்தல் நிலைப்பாடு குறித்தும்

2. அமைப்பின் முடிவின் சாதி மறுப்புத் திருமணம்

செய்யாத தோழர்கள் மீதான நடவடிக்கைகøள் குறித்த மீளாய்வும் 15ஆவது பொதுக்குழுவின் முகாமையான முன்வைப்புகளாகும்.

தேர்தல்:

1. தமிழீழ மக்களின் படுகொலைக்குக் காரணமான இந்தியாவை எதிர்த்துத் தமிழக மக்களின் போராட்டம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குறிப்பாகக் காங்கிரசை எதிர்த்துச் சில தமிழ்த் தேசிய முற்போக்கு இயக்கங்கள் பிரச்சாரம் செய்தன. மேலும் சட்டமன்றத் தேர்தலிலும் தங்கள் அமைப்புகளின் நிலைபாடுகளை முடிவு செய்துள்ளன. அதேபோல் இந்தியப் புரட்சி பேசுகின்ற ம.க.இ.க. போன்ற அமைப்புகள் இந்தியாவில் "தேர்தல்  பாதை திருடர் பாதை' என்று அறிவிக்கின்றன. அதேவேளை நேபாளத்தில் உள்ள மாவோயிஸ்டுகளின் தேர்தல் நிலைபாட்டை ஆதரிக்கிறார்கள். இப்படித் தேர்தல் பற்றிய நிலைபாடுகளில் சில மாறுபட்ட முடிவுகளுக்கு வந்துள்ளனர். இது விவாதத்திற்குரியதாகவும் இருக்கிறது. இந்நிலையில் த.ஒ.வி.இ. தனது தேர்தல் நிலைபாடு ஒரு விவாதத்தை முன்வைத்தது.

த.ஒ.வி.இ. தேர்தல் புறக்கணிப்பு நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்ற  அறிவிப்போடு, குறிப்பான எதிரிகளை வரையறுத்து எதிர்ப்பது என்ற விவாதம் முன்வைக்கப்பட்டது. அதாவது இந்தியக் கட்சிகளான காங்கிரஸ், பி.ஜே.பி., சி.பி.எம். போன்ற கட்சிகளை முதன்மை எதிரிகளாக வரையறுத்து எதிர்க்கலாம் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. இது பொதுக்குழு தோழர்களின் மத்தியில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

இறுதியில் தமிழக அரசியல் களத்தில் நாம் தீர்மானிக்கின்ற நிலை வரும்பொழுது, இதுகுறித்து முடிவு செய்யலாம் என்ற கருத்தும்,இந்தியக் கட்சிகளை எதிர்ப்பது என்பது மற்ற தேர்தல் கட்சிகளை மறைமுகமாக ஆதரிப்பது என்ற நிலை இதில் இருப்பதால் "தேர்தல் மறுப்பு' என்றநிலைபாட்டை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற  கருத்தும் முன்வைக்கப்பட்டது. இந்தக் கருத்தே பெரும்பான்மை பெற்றது. இறுதியாகத் "தேர்தல்  மறுப்பு' என்ற  முடிவையே நடைமுறைப்படுத்துவது என்று முடிவானது.

2. அமைப்பு தொடக்கக்காலம் முதலே தோழர்களுக்குள் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதை வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் 12ஆம் பொதுக்குழுவில் சாதி மறுப்புத் திருமணம் என்பதை எப்படி வரையறுப்பது என்றும், வரையரைப்படிச் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளாதவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்ற முடிவும் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது.

சாதி மறுப்புத் திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளும் இணையரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருத்தல் வேண்டும். இதையே சாதி மறுப்புத் திருமணமாக அங்கீகரிக்க முடியும் என்றும் வரையறைப்படி  இல்லாத திருமணங்களை சாதி மறுப்புத் திருமணங்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் முடிவானது. அதேபோல அமைப்பின் இவ்வரையறையை மீறுகின்ற பொதுக்குழு மட்டம் வரையில் உள்ள தோழர்களின் மீது அமைப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்ற விதி உருவாக்கப்பட்டது. அந் நடவடிக்கை என்பது ஓராண்டுக் காலம் பொறுப்பிறக்கம் செய்வது என்று முடிவாக்கப்பட்டது.

இதன்படித் திருமணம் செய்து  கொள்ளாத பொதுக்குழுத் தோழர்கள்   பொறுப்பிறக்கத்திற்கு ஆளானார்கள். இதற்கான காரணங்களை ஆய்வு செய்யும் பொழுது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட பெரும்பான்மை தோழர்கள்  சாதி ஒழிப்பின்  மீது அக்கறை இல்லாதவர்கள் என்று கருத முடியவில்லை.

மேலும் இவர்களின் சமூக இருப்பு, பொருளாதாரப் பின்னணி,    பின்தங்கிய வாழ்வியல் சூழல் இயல்பாகவே இதுபோன்று தோழர்களுக்கு திருமணம் செய்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது. அமைப்பின்  வரையறைப்படி சாதி மறுப்புத் திருமணம், நடைமுறைச் சிக்கலாகவே இருக்கிறது.

மேலும் அமைப்பும் திருமணத்திற்கு பொறுப்பேற்காத நிலை, அமைப்பில் பெருவாரியான பெண்கள் இல்லாததும் நடைமுறைச் சிக்கல்களாகும். அதேநேரத்தில் செயற்குழு மட்டத்தில் இருந்தவர்கள் சமூக பொருளாதார பின்னணியில் ஓரளவிற்கு வாய்ப்புள்ளவர்கள். அமைப்பின் விதிமுறைக்கு எதிராகச் செய்து கொண்டு அமைப்பையே விமர்சிக்கும் போக்குகளும் நடந்தேறின. குறிப்பாக 12ம் பொதுக்குழுவில் அப்பொழுது செயற்குழு உறுப்பினர்களாக இருந்த சில தோழர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்து  கொள்ளாதவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்கள்.

பின்னாளில் அதே தோழர்களின் திருமணம் அமைப்பு விதிக்கு எதிராக இருந்தது. இதை அமைப்பு கேட்டபோது அமைப்பு விதி சரியில்லை. அமைப்பு விதியை மாற்ற வேண்டும் என்றும் அவருக்கு ஆதரவாக செயலர் தோழர் பிரச்சாரம் செய்தார்கள். 12ம் பொதுக்குழுவில் தாங்கள் மிகப்பெரிய கொள்கை வாதியாக காட்டிக் கொண்டவர்கள் இரண்டாண்டில் தங்களின் சொந்த நலனுக்காக அமைப்பு விதி சரியில்லை என்று  அப்பட்டமான அமைப்புக்கு எதிரான சந்தர்ப்பவாதிகளாக மாறி விட்டனர். ஆக பொதுக்குழு அளவில் உள்ள தோழர்கள்  தாங்கள் அமைப்பு விதிகளை மீறிவிட்டோம், எங்கள் மீது அமைப்பு எடுத்த நடவடிக்கை  சரியானதே என்று ஒருபுறம் கருத்து அறிவிக்கும் நிலையில், மறுபுறம் அமைப்பின் மேல்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அமைப்பைக் குறை கூறி வெளியேறும் போக்குகளும் கவனத்தில் கொள்ளப்பட்டது. இந்த முரண்பட்ட நிலையும்ஆய்வுக்கு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அமைப்பு விதிப்படி திருமணம் செய்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கையை தளர்த்துவது குறித்து ஏன் மறு ஆய்வு செய்யக் கூடாது என்று செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. விவாதம் இப்பொதுக் குழுவிலும் முன்வைக்கப்பட்டது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளாத தோழர்களின் மீது நடவடிக்கை தளர்வு என்பது த.ஒ.வி.இ.யை அரசியலான சாதி ஒழிப்பு அரசியலுக்கு முரணானதாக மாறிவிடும் என்றும், நடவடிக்கை என்பது ஓராண்டு பொறுப்பிறக்கம் என்பதால், இது ஒன்றும் பெரிய நடவடிக்கை இல்லை என்ற கருத்துகள் முன்வைக்கப் பட்டது.

அதே நேரம் மாற்றுக் கருத்தாக நாம் வகுக்கும் விதி என்பது நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றால் அவ்விதியை இடைக் காலத்திற்கு தளர்வுப் படுத்துவது சிறந்தது என்றும், வம்படியாக ஒரு விதியை வைத்துக் கொள்ள தேவையில்லை என்ற கருத்துகளும்

முன்வைக்கப்பட்டது. இறுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்யாத தோழர்கள் மீது நடவடிக்கை தளர்வு படுத்துவது என்று பெரும்பான்மை அடிப்படையில் முடிவானது. அதேநேரம் சாதி மறுப்பு திருமணம் என்பது அடிப்படையானது என்றும், சாதிமறுப்பு திருமணம் குறித்தான வரையறையில் எந்தமாற்றமும் இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளாத தோழர்கள்  தங்களின் திருமண நிகழ்வை அமைப்பாக நடத்தக் கூடாது என்று முடிவானது. பொதுக்குழுவில் 15 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அதில் இரண்டு தீர்மானங்கள் செயல் தீர்மானங்களாக கொண்டுவரப்பட்டன.

1. தமிழீழ மக்களுக்காக போராடிய த.ஒ.வி.இ. செயலர் தோழர் பொழிலனுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்தும், தோழரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை   முன் வைத்தும், இவ்வாண்டு முழுவதும் தொடர் பரப்புரை இயக்கம்,  தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

2. தமிழகத்தின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கின்ற வகையில் "தமிழ்நாடு விடுதலை அறிவிப்பு மாநாடு' நடத்துவது என்றும், தமிழ்த் தேசத்தின் சமரசமற்ற தேசிய விடுதலைப் போராளியாக வாழ்ந்து மறைந்த ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் முன்வைத்த மொழி, இன, நாட்டு விடுதலைச் சூளுரையை உயர்த்திப் பிடிப்பது, தமிழ்த் தேசிய   எழுச்சியை பெருமக்கள் இயக்கமாகக் கொண்டு செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இவ்விரண்டு தீர்மானமும் இவ்வாண்டின் செயல்தீர்மானங்கள் ஆகும்.

செயலர் குழு தோழர்களின் விவாதங்களிலும், விளக்க உரைகளிலும், பொதுச் செயலரின் தொடக்க உரையிலும், நிறைவு உரையிலும் முன் வைக்கப்பட்ட அரசியல், அமைப்பியல் தொடர்பான முகாமையான

முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்:

இன்றைய உலகமயமாக்கல் நிலையில் உலக வல்லரசிய முதலாளிகள் ஒன்று சேர்ந்து ஒடுக்கப்பட்ட தேசங்கள் மீதான சூறையாடல்கள் நடத்தி வருகின்றன. தேசங்களின் வாழ்வுரிமைகளையும், தேசியப்  பொருளாதாரத்தையும் நிலைகுலையச் செய்கிறார்கள். தமிழகத்தில் இதன் தாக்கம் வேகமாக இருக்கிறது. அதுபோல இந்தியாவின் பேராதிக்கமும்,

நமது தேசத்தையும், நமது மக்களையும் முற்றடிமையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே உலகமயமாக்கலும், இந்திய ஆதிக்கமும் நம்மை தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தத்தை நமக்கு வழங்கி இருக்கிறது. நமது அமைப்பின் கொள்கை, சாதி ஒழிப்பு, தேச விடுதலை என்ற இரு அடிப்படையைக் கொண்டது.சாதி ஒழிப்பும், தேச விடுதலையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.

அம்பேத்கரின் நூற்றாண்டை முன்னிட்டு எழுந்த தாழ்த்தப்பட்ட மக்களின்   எழுச்சி புரட்சிகர போராட்டங்களை தவிர்க்க முடியாததாக மாறி விட்டது. சாதி ஒழிப்பு விடுதலைப் போராட்டத்தின் முன் நிபந்தனை என்றளவில் அது முக்கியத்துவம் பெற்றது. இந்தச் சூழலில் சாதி ஒழிப்பு பேசுகின்ற இயக்கங்களையும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு போராடுகின்ற தலைவர்களையும் ஒருங்கிணைத்து, தாழ்த்தப்பட்டோர் விடுதலை என்பது  தனியாக சாத்தியம் இல்லை. அது தமிழ்த்தேசிய விடுதலையோடு பிணைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தது. மேலும் இதனடிப்படையில் "தமிழகத் தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணி' உருவாக த.ஒ.வி.இ.யும் காரணமாக இருந்துள்ளது.

ஆதிக்கச் சாதி வெறியர்களை அம்பலப்படுத்துகின்ற வகையில் பல முனைகளில் பரப்புரை இயக்கங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்தது. அன்றைய நிலையில் சாதி ஒழிப்பு போராட்டக் காரணிகள் முன்னோக்கி வந்ததால் அதுவே முதன்மைப் போராட்ட வடிவமாக முன்னெடுக்கப் பட்டது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான காரணிகள் முன்னோக்கி  வந்துள்ளது. எனவே இன்றைய நிலையில் "தமிழ்நாடு விடுதலையே' நமது முதன்மை இலக்காக இருக்கிறது. சாதி ஒழிப்பும், தேச விடுதலையும் நமது கோரிக்கைகள்தான். எனவே தற்போது தேச விடுதலைக்    கோரிக்கையை முன்னோக்கியுள்ளது. நமது முதன்மை எதிரி இந்தியாதான். நமது எதிரியை வரையறுப்பதில் நமக்கு குழப்பம் வரக் கூடாது.

நமது எதிரி யார் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில், அடையாளப்படுத்த வேண்டும். அதேபோல் நமது கொள்கையும் மக்கள் புரிந்து கொள்கின்ற வகையில் ஒரு வரியில்  விடையளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எதிரியை எளிமையாக அடையாளப் படுத்தாததின் விளைவு புரட்சிகரப் போராட்டத்தை இங்குள்ள கம்யூனிஸ்டுகளால்  முன்னெடுக்க முடியவில்லை. அதேபோல் நமது எதிரியை தனிமைப்படுத்த வேண்டும். குறிப்பான எதிரியை வரையறுத்துக் கொண்டு அந்த எதிரிக்கு எதிராக அனைத்து ஆற்றல்களுடன் நாம் ஒன்றிணைய வேண்டும். அப்பொழுது நமது வெற்றி எளிமை யானதாக இருக்கும்.

அதேபோல் நமது அமைப்புகளிடத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். முதலில் நாம் வெகுமக்கள் இயக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நமது மாவட்டச் செயலர்கள் ஆளுமை மிக்கவர்களாக இருக்க வேண்டும்.  அரசியல் போராட்டங்களில் தலைமையேற்கின்ற திறன் இருப்பது போலவே, அன்றாடம் நடக்கும்  மக்கள்  போராட்டங்களை கட்டியமைக்கவும், வழி நடத்தவும், தலைமையேற்கவும் தகுதி  உள்ளவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள தயக்கங்களை களைந்து, வெளிப்படையானவர்களாக மாற வேண்டும்.

நமது கொள்கைகளையும் அரசியலையும் யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வைத்திருக்கக் கூடாது. அனைத்தும் மக்களுக்கானது  வெளிப்படையானது, அதேபோல் நமது அமைப்பையும் திறந்து வையுங்கள்.   நம்மைச் சுற்றிலும் தடுப்புகளைப் போட்டுக் கொண்டும், கோட்டைகளைக் கட்டிக் கொண்டும், இருக்கத் தேவையில்லை. எல்லாத் தடைகளையும்   உடைத்தெறியுங்கள். சிறு சிறு முரண்பாடுகளையும், தேர்தல் கட்சிகளில் உள்ளவர்களை எதிர்மைப்படுத்தி பார்க்கின்ற போக்கும் அவர்களிடம் நெருங்காதப் போக்கும் சரியானதில்லை.

நம்முடைய உறவுகளை விரிவாக்க வேண்டும். விரிவுபடுத்த வேண்டும், எதிரிகளை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர, நம்மை நாமே  தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது, அனைவரையும் அமைப்பாக்க வேண்டும். தமிழ்நாடு விடுதலையை முதன்மை இலக்காகக்  கொண்டு  செயல்படும் நாம் பொது வேலைத் திட்டத்தின் எல்லோரோடும் சேர்ந்து இயங்க வேண்டியிருந்தது. அந்த வகையில் நாம்  இணைந்து செயல்பட்டுக்   கொண்டிருந்த "தமிழ்த் தேசிய முன்னணியைத்' தொடர்ந்து செயல் தளத்தை நோக்கிக் கொண்டு செல்வதில் நமக்கு முகாமையான பொறுப்பு இருக்கிறது. பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்களை அதனுடன் இணைத்து பலமானதொரு முன்னணியை உருவாக்க நாமும் துணை செய்வோம். முன்னணியின் தேவையை அனைத்து தமிழ்த் தேசிய செய்தியாளர் நடுவில் கொண்டு செல்வோம். தமிழ்நாடு விடுதலைதான் நமது ஒற்றை இலக்கு.

நமது இலக்குகளை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்வோம்! நமது இலக்கை வெல்ல நாம் அர்ப்பணிப்போடு செயல்படுவோம்! இதுவே நமது வெற்றியை எளிதாக்கும். இறுதியில் தலைவர் வேலூர் மாவட்டத் தோழர்களின் செயல்பாடுகளையும், சிறப்பான பொதுக்குழு ஏற்பாட்டையும், பாராட்டி பொதுக்குழுத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி கூறினர்.

த.ஒ.வி.இ. பொதுக்குழு தீர்மானம்

கடந்த பிப்ரவரி 26, 27 தேதிகளில் அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் 15வது பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட முக்கிய தீர்மானங்கள்:

1. தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கியும், கொலை செய்துவரும் சிங்கள இனவெறி அரசையும், இதனை வேடிக்கைப் பார்க்கும் இந்திய, தமிழக அரசுகளையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

2. தமிழில் கிரந்தத்தை கலப்பதும், கிரந்தத்தில் தமிழ் மொழியை கலப்பதுமான பார்ப்பன நயவஞ்ச கத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

3. ராசீவ் கொலை வழக்கில் தொடர்ந்து இருபது ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட சிறையாளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

4. தமிழீழ மக்களுக்கு ஆதரவாகப் போராடிய த.ஒ.வி.இ.யின் செயலர் தோழர் பொழிலன் அவர்களை உடனடியாகவிடுதலை செய்ய வேண்டும் என இப்பொதுக்குழுக் கேட்டுக் கொள்கிறது.

5. தொடர்ந்து இருபது வருடங்களாக சிறையில் வாடும் தமிழ்நாடு   விடுதலைப்படை தோழர் தென்தமிழன் அவர்களை விடுதலை செய்யக் கோரி இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

6. த.ம.உ.க. தோழரும்,சட்டக் கல்லூரி மாணவருமான தோழர் இனியவன் மீது காவல் துறையின் கொலைவெறி தாக்குதலை இப்பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

7. தமிழீழத்தில் தமிழர்களை வெளியேற்றி சிங்களர்களைத் திட்டமிட்டு குடியேற்றம் செய்யும் சிங்கள இனவெறி அரசை இப்பொதுக்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது.

8. காஷ்மீர், மணிப்பூர், அசாம்,நாகலாந்து போன்ற வடகிழக்கு தேசங்களின்  விடுதலை போராட்டங்களை உளமார்ந்த விடுதலை உணர்வோடு இப்பொதுக்குழு ஆதரிக்கின்றது.

9. செங்கை, பூந்தமல்லி சிறப்பு ஈழ அகதி முகாமை உடனே இழுத்து மூட  இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

10. முல்லைப் பெரியாறு ஆற்றுச் சிக்கலில் கேரளாவின் அடாவடித்தனத்தைக் கண்டிப்பதோடு உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் இந்திய அரசையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

11.  பாலாற்றில் ஆந்திர அரசு தொடர்ந்து அணை கட்டுவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

12. கல்வியில் பன்னாட்டு நிறுவனங்களை தாராளமாய் அனுமதிக்கும் இந்திய அரசையும், இப்பொதுக்குழு வன்மையாய்க் கண்டிக்கிறது.

13.  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப் பாளரும், தமிழர் மீட்சிப் படையின் பொறுப்பாளருமான தோழர் முத்துக்குமார் அவர்களின் படுகொலையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டனம் செய்கின்றது.

14. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 85 விழுக்காடு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

15. மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த பார்வதி அம்மாள் அவர்களை திருப்பி அனுப்பி அவரின் இறப்புக்குக் காரணமான இந்திய அரசையும், துணைநின்ற தமிழக அரசையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டனம் செய்கிறது.

16. தமிழ்மொழிக் கல்வியை கட்டாயமாய் நடைமுறைப்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

17. மனித உரிமைப் போராளி மருத்துவர் பினாயக் சென் அவர்களுக்கு அநீதியாய் வழங்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனையை உடனே நீக்கம் செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

18.  தமிழகத்தில் காவிரியில் குடிநீர் எடுப்பதாகக் கூறி, அதனை ஆந்திர பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையாக மாற்றும் தமிழக அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

19.  உலக மட்டை பந்து போட்டி என்ற பெயரில் மின்சாரத்தை தாராளமாய் வழங்கி தேர்வு நேரத்தில் தமிழகத்தில் மின்வெட்டை ஏற்படுத்தி தமிழக மாணவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும், தமிழக அரசை இப்பொதுக்குழு வன்மையாய் கண்டிக்கின்றது.

நிலவன், பொதுச் செயலாளர்

Pin It