தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமாக கருத முடியாது என்று ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் தூதுவர் எலின் சம்பர்லைன் டொனஹே கருத்து தெரிவிக்கும் அளவிற்கு பற்றி எரிந்து கொண்டு இருக்கின்றது மாணவர்கள் போராட்டம்.

ரத்தச் சகதியில் உறவுகளைப் பறிகொடுத்து விட்டு, உயிர்வாழ உத்திரவாதமின்றி அகதிகளாக சுற்றித் திரியும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும், முள்வேலி முகாம்களில் பசித்த வயிறோடு பரிதவித்து, சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத்து தமிழ்மக்களிடத்திலும் சிறிதேனும் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றதென்றால் அது தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி என்றுதான் கூறவேண்டும்.

இலங்கையில் ராணுவத்தினரின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தமிழர்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் நிலவுகின்றது. அதற்கு தமிழ் மாணவர்களின் போராட்டம்தான் ஒரு முடிவைத் தேடித்தரும் என்ற நம்பிக்கை உலகத் தமிழர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையில் இலங்கை அரசுக்கு எதிரான வாக்கெடுப்பு தொடர்பான விவாதங்கள் நடந்து வரும் வேளையில், தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது.

இந்தப் போராட்டங்களின் விளைவாக, இலங்கையில் ஆயுதமேந்திய போராட்டத்தை ஒடுக்குகின்றேன் என்று ராணுவத்தினர் செய்த இனப்படுகொலைகள், போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

தமிழக அரசு அனைத்து கலை, அறிவியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்த பின்னரும் கூட மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கூடுகின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியாக சென்று போராடி வருகின்றனர்.

தொடர் உண்ணாவிரதம், அடையாள உண்ணாவிரதம், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, விமான நிலையம் முற்றுகை, சாலை மறியல், ரயில் மறியல், ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பு என்று பல்வேறு வடிவங்களில் நடக்கின்ற மாணவர்களின் போராட்டம் தமிழகத்தில் கடும் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க சில இடங்களில் காவல்துறையின் அத்துமீறல்களும், தடியடியும் நடந்தது. திருச்சியைத் தொடர்ந்து, மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் அய்யாத்துரை காவல்துறையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபோன்ற செயல்கள் மத்திய காங்கிரஸ் அரசு மீது மட்டுமின்றி தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசின் மீதும் மாணவர்களிடத்தில் கோபத்தை உண்டாக்க காரணமாக அமைந்தது. அதனால் போராட்டத்தின் வீரியமும் அதிகமானது.

இதனிடையே டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், மும்பை போன்ற இந்தியாவின் பெருநகரங்களிலும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டங்கள் நடந்தேறி வருகின்றது.

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பு 3 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதமிருக்கும் மூன்று தமிழர்களும், ”இனஅழிப்பு தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். தமிழர்கள் மீது இலங்கை அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை தடுக்கும் விதமாக ஐ.நா.சபையின் நேரடி மேற்பார்வையில் பாதுகாப்பு நெறிமுறைகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணமல் போன போராளிகள் மற்றும் பொதுமக்களின் விபரங்களை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். கால வரையறை இன்றி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இலங்கையில் தமிழர் பகுதியான வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள், அரச படைகளின் அத்துமீறிய நில அபகரிப்புகள், வழிபாட்டுத் தளங்கள் அழிக்கப்படுவது போன்ற செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அங்கு முகாமிட்டு இருக்கும் இலங்கை ராணுவப் படைகள் உடனே வெளியேற்றப்பட வேண்டும்” என்ற கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு வைத்துள்ளனர்.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா நீர்த்துப் போக செய்துவிட்டது என்று சர்வதேச மன்னிப்புச் சபையான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணைக்குப் பரிந்துரைத்திருந்தார். இதனை ஏற்று அமெரிக்காவும் தனது தீர்மானத்தில் சேர்த்து இருந்தது. இறுதியாக வாக்கெடுப்புக்காக முன் வைத்திருக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தக் கோருவது என்பது நீக்கப்பட்டுவிட்டது. இதற்கு இந்தியாவின் அழுத்தமே காரணம் என்கிறார் ஆம்னஸ்டி அமைப்பின் இந்திய பிரதிநிதி ஆனந்த பத்மநாபன்.

இலங்கைக்கு மிக ஆதரவாக இருக்கக் கூடிய கியூபா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்த வேலைகள்தான் அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஐ.நா. தீர்மானம் குறித்து பேசிய இந்தியா, “அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது. வெளி விவகாரக் கொள்கை தடையாக உள்ளது” என்று கூறி வருகின்றது.

ஆனால், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு சிக்கலினைத் தீர்க்க ஏற்கனவே இந்திய இராணுவத்தை மத்திய அரசு அனுப்பியுள்ளது. நேபாள நாட்டின் மாவோயிஸ்டுகளை ஒடுக்க இந்தியா தலையீடு செய்துள்ளது.

ஆனால் இலங்கை விவகாரத்தில் மட்டும் மவுனம் சாதித்து வருகின்றது மத்திய காங்கிரஸ் அரசு.

ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நன்மை பயக்குமா, ஒன்றுமில்லாமல் போகுமா என்பதோடு ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டுள்ள மாணவர்களோ அரசியல் கட்சிகளின் பின்னால் செல்லாமல் தன்னெழுச்சியான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகளும், ம.தி.மு.க., புதிய தமிழகம், பா.ம.க., நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வியாபாரிகளின் கடையடைப்பு, பொதுமக்களின் போராட்டம் என்று பற்றி எரியும் ஈழ விடுதலைக்கான போராட்டம் இலங்கையில் மட்டுமின்றி இந்தியாவிலும், தமிழகத்திலும் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என்று இந்தியாவின் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் இறுதி எல்லை 'தனி ஈழம்' அமைவதாக இருக்க வேண்டும் என்றுதான் போராடும் மாணவர்கள் விரும்புகின்றனர்.

- நிலவன்

Pin It