மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா பகுதியை பாதுகாக்க 100 கோடியில் திட்டம். தீவுப் பகுதியில் வலைகளை உலர்த்தவோ, ஓய்வு எடுக்கவோ, ஆபத்து காலங்களிலோ மீனவர்கள் ஒதுங்கினால் 7 ஆண்டு சிறைதண்டனை. 25 ஆயிரம் ரூபாய் அபராதம். என்ற தண்டனைகள் நடைமுறையில் உள்ளது.

தீவுப் பகுதிக்கு சென்ற மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையினால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளனர். பல ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியுள்ளனர்.

இப்படியெல்லாம் தீவுகளைப் பாதுகாப்பது எதற்காக என்றால் உலகில் அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழக்கூடிய பகுதியாக மன்னார் வளைகுடா கடல் இருப்பதாலும், பவளப்பாறைகள், அலையாத்திக் காடுகள் காணப்படுவதாலும்தான்.

இத்தகைய அரிய, பல்லுயிர் சூழல் மிகுந்த தீவுப்பகுதிகளில் 'மரைனா' என்ற பெயரில் புதிய சுற்றுலாத் திட்டத்தை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக நிர்வாகம் அறிமுகப்படுத்துகின்றது. இந்த திட்டத்திற்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

ஒப்பந்தம் எடுத்துக் கொண்ட தனியார் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் தீவுகளைக் கொண்டு வரும். அப்புறம் அங்கு கூத்தும், கும்மாளமும் களை கட்டும். பவளப்பாறை, கடல்பசு, கடல் குதிரை பற்றியெல்லாம் கவலையில்லை.

கடல் வளத்தைப் பாதுகாக்க ரூ.100 கோடி. அதே கடல் வளத்தை சுற்றுலா என்ற பெயரில் அழித்திட ரூ.304 கோடி.

தேசிய கடல் வளப் பூங்காவை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் இத்தனை ஆண்டுகாலம் மீனவர்களை தீவுப்பகுதிக்குள் அண்ட விடாமல் தடுத்து, துன்புறுத்தி, பாசி எடுக்கும் மீனவப் பெண்களின் உடைகளை கடலில் தூக்கிப் போட்டு, சோற்றுச் சட்டியில் மண்ணை அள்ளிப் போட்டு, பல கோடி ரூபாய் அபராதம் வசூலித்து தினம் தினம் அச்சுறுத்தி வந்த இந்திய கடலோரக் காவல்படை, கடலோரப் பாதுகாப்பு குழுமம், வனத்துறை ஆகியோர் இப்போது என்ன செய்யப் போகின்றார்கள்.

மீனவர்களின் இழப்பிற்கு பதில் சொல்வார்களா? இழந்த பணத்தையும், மாண்மையும், காயங்களின் துன்பத்தையும் திருப்பித் தருவார்களா?

ஒட்டுமொத்தமாக மீனவ சமூகத்திற்கும், கடல் சூழலுக்கும் வேட்டு வைக்கும் இந்த சுற்றுலாத் திட்டம் யாருக்காக?

சிங்களவனின் இலங்கைக்கு கப்பல் விடும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் தமிழகத்தின் தீவுகளை சுற்றுலாத் தளமாக மாற்றுவது யாருக்காக?

இந்திய அரசே... துறைமுக நிர்வாகமே… தமிழகத்தில் இன்னும் மக்கள் உயிரோடுதான் இருக்கின்றார்கள்…

- நிலவன்

Pin It