காவேரி டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது ஒரு தனியார் நிறுவனத்தின் திட்டம். தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்’ என போற்றப்படும் தஞ்சாவூரில் சுமார் 4 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி ஆகிய மூன்று காலங்களில் நெல் மட்டுமே பிரதான விளைச்சலாக இருந்து வருகின்றது.

டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு, ரியல் எஸ்டேட் தொழில் ஒருபுறம் கொடிகட்டிப் பறக்கிறது. இப்போது அடுத்த ஆபத்து தனியார் நிறுவனத்தால் உருவாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்கு தெற்குப் பகுதி வரை காவிரிப் படுகையில் பழுப்பு நிலக்கரியும், மீத்தேன் எரிவாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இதற்காக மன்னார்குடி பகுதியை ஜூன் 2010 தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்ட கிரேட் ஈஸ்டெர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் (Great Eastern Energy corporation Limited - GEECL) என்ற தனியார் நிறுவனம் 26.08.2010 அன்று மத்திய அரசுடன் உற்பத்தி பகிர்மான ஒப்பந்தம் செய்து கொண்டு, 04.01.2011 அன்று தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். திட்ட செயலாக்கம் குறித்து 24.05.2011 அன்று விதிமுறைகள் வகுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 23.01.2012 அன்று மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முனியநாதன் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் நலினா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இத்திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்தன. எனினும் அக்கூட்டத்தின் அறிக்கையைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 12.09.2012 அன்று இத்திட்டத்திற்கு தடையில்லா சான்று வழங்கிவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய வட்டங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய வட்டங்களிலும் 24 சதுர கி.மீ. பரப்பளவில் பழுப்பு நிலக்கரியும், எஞ்சிய 667 சதுர கி.மீ. (1,66,210 ஏக்கர்) பரப்பளவில் மீத்தேன் வாயுவும் என மொத்தம் 691 சதுர கிலோமீட்டரில் எடுக்க கிரேட் ஈஸ்டெர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

பாகூர் பகுதியில் 766 மில்லியன் டன். நெய்வேலி, ஜயம் கொண்டான், வீராணம் பகுதியில் 6835 மில்லியன் டன். மன்னார்குடி பகுதியில் 19,788 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீத்தேன் வாயுவின் மதிப்பீடு 98,000 கோடி கன அடி என்று கூறப்படுகின்றது.

முதற்கட்டவேலையாக தஞ்சை மாவட்டத்தில் 12 உள்ளுறை கிணறுகளும், திருவாருர் மாவட்டதில் 38 உள்ளுறை கிணறுகளும் அமைக்க வேண்டும்.

கும்பகோணம் வட்டத்தில் கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்டுவாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி, விட்டலூர், குமாரமங்கலம், நாச்சியார்கோயில், திருவிடைமருதூர் வட்டத்தில் மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டை, ஒரத்தநாடு வட்டத்தில் குலமங்கலம், குடவாசல் வட்டத்தில் சித்தாடி, குடவாசல், மேலைப்பாளையம், மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக்குடி, பத்தூர், கொரடாச்சேரி, ஆர்பார், மஞ்சக்குடி, வடவேர், செல்லூர், வலங்கைமான் வட்டத்தில் சாரநத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், அனுமந்தப்புரம், கீலவடமல், ராசேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கொயில்வெண்ணி, ஆதனூர், கண்டியூர், நீடாமங்கலம் வட்டத்தில் பூவனூர், கீழவாந்தச்சேரி(தண்டிலம்), அரிச்சபுரம், அனுமந்தப்புரம், அன்னவாசல்,காளாச்சேரி, மன்னார்குடி வட்டத்தில் கர்ணாவூர், வடபாதி, சேரன்குளம், மன்னார்குடி, அரவத்தூர், சவளக்காரன், மூவர்கோட்டை, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு ஆகிய கிராமங்களில் 88 கிணறுகள் சோதனை அடிப்படையில் அமைக்கப்படும்.

இப்படி அமைக்கப்படும் கிணறுகளில் இருந்து நிலக்கரிப் படிமத்தில், அதன் நுண்துளைகள், வெடிப்புகளில் நிலக்கரிப்பாறைகளின் தளப்பரப்பில் ஒட்டியிருக்கின்ற, அதாவது தரைமட்டத்திற்கு கீழே 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை காணப்படுகின்ற படிமங்களை எடுப்பார்கள்.

ஆய்வின் திட்ட செயலாக்க அறிக்கையின் படி முதல் கட்டமாக ஐயாயிரம் கோடி செலவில் 19,500 மில்லியன் டன் மீத்தேன் உறிஞ்சி எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் போது, அதில் லிக்னைட் 40 முதல் 50 சதமும், கரியமில வாயு 17 முதல் 20 சதமும், சாம்பல் 4 முதல் 12 சதமும், எளிதில் ஆவியாகின்ற பொருட்கள் 18 முதல் 23 சதமும் இருக்கும். நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றி விட்டுத்தான் மீத்தேன் எடுக்க முடியும்.

இதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்க உள்ள நிலையில்தான் விவசாயிகளிடையே எதிர்ப்புகளும் வலுத்துள்ளது.

”மீத்தேன் எடுப்பதற்காக வெளியேற்றப்படும் நீர் நச்சு கலந்து வெளியேறும். அப்படி கெட்டதாக மாறிய நீரை பாசனத்திற்கும், குடிக்கவும் பயன்படும் வாய்க்கால்கள், ஆறுகள், ஓடைகளின் வழியே வெளியேற்றுவார்கள். நிலத்தடியில் இருந்த நீரையும், வாய்க்கால், ஆறு, குளம், ஓடைகளில் உள்ள நீரையும் நச்சு நீராக மாற்றி விடும்” என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில், வடுவூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடத்தின் 10 கி.மீ. சுற்றளவில் 4 கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. இது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை உண்டாக்கும் என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்.

”பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின்” அமைப்பாளர் லெனின் மற்றும் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவருமான பொறியாளர் கோ.திருநாவுக்கரசு ஆகியோர், “இத்திட்டத்தின்படி மீத்தேன் எடுப்பதற்கு நிலக்கரிப்பாறையின் மேல்மட்டத்தில் உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்ற வேண்டும். அடுத்தகட்டமாக வெற்றிடமுண்டாக்கும் கருவிகளைக்கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்றவேண்டும். அப்போதுதான் மீத்தேன் வாயுவை எடுக்க முடியும். இதனால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்று விடும்.

வெளியேற்றப்படும் நிலத்தடி நீர் பலவகையான மாசுகளைக் கொண்டதாக இருக்கும். கடல்நீரில் இருக்கும் உப்பைவிட சுமார் ஐந்துமடங்கு வரை அதிகமான உப்பு இருக்கும். குளோரைடு, சோடியம், சல்பேட், பை-கார்பனேட், புளூரைடு, இரும்பு, பேரியம், மக்னீசியம், அமோனியா, ஆர்செனிக், மர்றும் பலவித நீர்-கரிமப் பொருட்கள், கதிரியக்க கழிவுகள் போன்ற மாசுகளும் இருக்கும்.

டெல்டா மாவட்டங்களில் 80 ஏக்கர் நிலத்திற்கு ஒரு கிணறு அமைப்பதாக எடுத்துக்கொண்டால் சுமார் 2000 கிணறுகள் தோண்டப்படலாம். நாள் ஒன்றுக்கு சுமார் 20000 கேலன் ( 75000 லிட்டர்) நீர் ஒரு கிணற்றில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும்.

ஒரு புறம் நிலத்தடி நீரின் அழிவு. மறுபுறம் மாசுமிக்க உப்பு மிக்க கழிவு நீரின் தாக்கம். இவை காவிரிப்படுகையை பாலை நிலமாக மாற்றும். இந்த திட்டத்தால் வேளாண்மையும், வேளாண் மக்கள் சமூகமும் அழிந்துபோகும்” என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.

காவிரி சமவெளி பாதுகாப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் என். குணசேகரன், ”மீத்தேன் வாயு சூழல் வெப்ப உயர்வை உண்டாக்கும் மோசமான வாயு. ஆனால், அதை எடுத்து எரிப்பதால் சூழல் மேன்மை பெறும் என்றும், மீத்தேன் மாசுபாடுகள் அற்ற தூய்மையான எரிபொருள் என்றும், இது பசுமைத் திட்டம் எனவும் தனியார் நிறுவனம் விளம்பரம் செய்கிறது. நிலத்தடி நீர் மட்டம் 500 அடிகளுக்குக் கீழே இறங்கிவிடுவது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலத்தடி நீர் வறண்டுபோகும். அருகிலுள்ள வங்கக் கடலின் உப்பு நீர் காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவும். இதனால், காவிரிப் படுகை ஒரு உப்பளமாக மாறும் பேரழிவு நிகழும். நிலநடுக்கங்கள், மண் உள்வாங்குதல் போன்றவையும் நிகழக்கூடிய அபாயம் உண்டு. ஆபத்தான, நாசத்தை விளைவிக்கக்கூடிய இந்தத் திட்டத்தால் பேரிடர், பேரழிப்புக்கு தமிழகத்தை உள்ளாக்கும்” என்கின்றார். இதையே வாய்ப்பாக்கி கீழே புதைந்துள்ள நிலக்கரியை அள்ள திட்டமிடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் பலமாக எதிரொலிக்கின்றது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், இந்தியாவில் இத்திட்டம் முதன் முதலாக செயல்படுத்தப்படுகின்றது.

இதனிடையே மீத்தேன் எடுக்கும் அமெரிக்க நிலப்பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நிலம் உள்வாங்கவும் பிற இயற்கை சீற்றங்களுக்கும் ஆளாகியுள்ளன என்கின்ற செய்திகள் மக்களிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தை முற்றிலும் கைவிடக் கோரி விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து வருகின்ற 04.05.2013 அன்று ”காவிரிப்படுகையை விழுங்க வரும் மீத்தேன் திட்டம்” என்ற தலைப்பில் இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் தலைமையில் தஞ்சாவூர் காவேரி நகர் சுந்தர்மகாலில் மிகப்பெரிய கூட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

- நிலவன்

Pin It