தமிழ்த்தேச உருவாக்கம் நீண்ட நெடிய படிநிலைகளைக் கொண்டது. உள்ளும் புறமும் சிக்கல் நிறைந்தது. அதன் பன்முகக் களங்களிலும் தன் சுவடுகளைப் பதித்தவர் ஒருவர். அவர் பெரியார். 21 ஆம் நூற்றாண்டில் இந்தியச் சிறைக்கூடம் நிறுவப்பட்ட காலத்தின் சான்றாளராய் (சாட்சியாய்) நின்றவர் பெரியார்.
தமிழின் கடந்த காலக் கலகக் குரல்களின் இடையறாத் தொடர்ச்சியில் பெரியாரின் வரவு ஒரு புதிய தொடக்கம் எனச் சொன்னால் அது மிகையில்லை. மாட்சிமைக்குரிய முகம்மது அலி ஜின்னாவின் பாகிஸ்தானிய திட்டம் கருவாகும் முன்பே ஒரு தேசத்தைக் கனவு கண்டு கற்பிதம் செய்தவர் அவர்.
1938 இல் அவர் தமிழ்நாடு தமிழர்க்கே என் முழங்கியபோது அது ஐரோப்பியப் பாணியிலான "தேசியத்தின் இடிமுழக்கம்' என்று நமக்குத் தோன்றினால் அது பிழை; பெரியாரின் வழி முழுதும் எதிர்வினையாளராக அவர் புரிந்த 'அரசியல் இடையீடு'களால் நிரம்பிக் கிடக்கிறது. பெருமிதங்களை கேலி செய்த அவர் குரல், உன்னதங்களைப் போட்டுடைத்த அவர் தருக்கம், பெரும் நிறுவனங்களை சிரித்து 'ரசிக்கத்தக்க' கேலிக் கூத்துக்களாக மாற்றிய அவரின் உத்திகள் என பெரியார் தமிழகத்தில் நிகழ்த்திய அட்டகாசங்கள் ஒன்றா இரண்டா பட்டியலிட?
தமிழ்த்தேச உருவாக்கத்தில் பெரியாரின் தனிப் பெரும் சிறப்பு என நாம்கொள்வது தமிழர்களின் அடிநெஞ்சிலேயே இந்தியா மீதான வெறுப்பை விதைத்த தொடர்பேச்சும் பரப்பலும்தான். இந்தியா என்பது பார்ப்பன பணியாவின் ஆதிக்கக் கூடாரம் என 1937இலிருந்து தொடர்ந்து பேசிப் பரப்பி வந்த பெரியாருக்கு தன் இறுதிக் காலம் வரை அதில் ஐயமோ சலிப்போ ஏற்படவில்லை.
ஆகஸ்ட் 15ஐ துக்க நாளாக அறிவித்த திமிரும், தமிழகம் நீங்கலான இந்தியப் படத்தைக் கொளுத்தும் வீரியமும் பார்ப்பனியத்தின் தமிழ்த் தேச வடிவங்களை சினத்துடன் புறமொதுக்கிய கூர்ந்துணர்வும் தமிழ்த் தேசிய வரலாற்றின் மிகச் சிறப்பான பக்கங்களாக இடம் பிடித்திருக்கின்றன என்பது உண்மை.
பழமைப் பெருமையிலிருந்தல்ல, நிகழ்கால அடிமைத்தனத்தின் மீதான எதிர்ப்புணர்விலிருந்து ஒரு தேசத்தை கட்டமைக்க அவர் முயன்றபோது திராவிட நாடு குழப்பம் அவரை ஆட்கொண்டது. வெளித் தெரியும் குழப்பத்தினுள்ளே பெரியாருக்கு ஒரு தெளிவு இருந்தது. திட்டங்கள் தயார், கொள்கைகள் தயார், நடைமுறைப்படுத்த ஒரு நிலப்பரப்பு வேண்டும். இதுவே பெரியாரின் எண்ணமானது.
"இந்தியா ஒரு நேஷனா? அதற்கு மொழி எது? மதம் எது? இந்து மதத்தால் இந்தியா நேஷன் ஆயிற்று என்றால்... இஸ்லாமியருக்கும் கிறிஸ்துவருக்கும் பவுத்தருக்கும் பார்சிகளுக்கும் இந்திய நேஷனாகுமா? மொழியைக் கொண்டு நேஷன் பிரிப்பது என்றால் மாகாணம் ஒன்றுக்கு நான்கு அய்ந்து நேஷன் ஆகிவிடாதா?"
எனக்கேட்கும் அவருள் எளிதில் யாரும் புதிய இந்தியப் பற்றை ஊட்ட முடியவில்லை. இந்தியா தேசமில்லை என்றால் எனக்கான தேசத்தை நானே நிறுவுவேன் என்கிற தெளிவிலிருந்து அவரது திராவிட நாடு அரசியல் தோற்றங் கொள்கிறது.
பின்னாட்களில் மொழிவாரி மாநிலங்கள் உருக் கொள்வதோடிணைந்து திராவிட நாட்டை தமிழ் நாடாக பெரியார் 'திருத்திக்' கொள்ள நேர்ந்தது. தேச விடுதலைக் கோரிக்கை வைக்கும் போதும் பின் அதை திருத்த நேர்ந்த போதும் நல்ல எதிர்வினை அரசியலாளராக நம்மால் பெரியாரைப் பார்க்க முடிகிறது.
தேசங்களின் பிறப்பு எளிய நடைமுறையில் நிகழும் கணநேர நிகழ்வல்ல என்பதும் அது நீண்ட போராட்டத்தின் விலைமதிப்பற்ற புதியதொரு வரலாற்றுத் தொடக்கம் என்பதும் மெய்யெனில் பெரியாரின் தேச விடுதலை அரசியல் என்பது கருத்துப் பரப்பல் காலகட்டத்திலேயே நின்று போனதை நாம் உணர முடியும்.
அதுவும் கூட பல்வேறு அன்றாடக் கோரிக்கைகளுக்கு வலிமை கூட்ட விடப்படும் மிரட்டலாகப் பல நேரங்களில் ஆகிப் போனதை நாம் அறிய முடிகிறது. பெரியாரின் அரசியல் களத்தைத் தொடர்ச்சியாகக் கண்ணுற்றால் நேரடி தேச விடுதலைக் களத்தை கட்டுவது பெரியாரின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று நாம் புரிந்து கொள்வது கடினமில்லை.
தன் அடிப்படை அரசியலின் மேற்படலத்தின் அதற்கான உடனடிக் கோரிக்கைகளை மாற்றிக் கொண்டே இருந்தவர் பெரியார் என்பதை அவரின் தனித்தன்மையாக விளங்குகிறது. உடனடிக் கோரிக்கைகள் பட்டியலில் வந்து போகும் அவரின் தேச விடுதலை முழக்கங்கள் அவ்வப்போது எழுவதும் தாழ்வதுமாக அவரது காலம் கழிந்தது.
பெரியாரின் அரசியல் இடையீட்டை புரிந்து கொள்வது அவரைப் புரிந்து கொள்வதே.
பெரியாரின் அரசியல் எதிர்வினைகளால் நிரம்பியது. அந்த எதிர்வினை பல எதிர்காலத் தமிழ்த் தேச உருவாக்கத்தில் ஆகப் பெரிய தாக்கத்தை விளைவிக்க வல்லவை. 'தமிழ் காட்டுமிராண்டி பாஷை' என பெரியார் பேசியபோது தமிழ் அடிப்படைவாதம் தன் மெய்யியல் அடித்தளம் தகர்வதைக் கண்டு திகைத்தது.
பார்ப்பனிய எதிர்ப்பை பார்ப்பன எதிர்ப்பாய் மோசடியாய் விவரனை செய்து தமிழ்ச் சமூகத்தின் ஆகப் பெரிய ஆதிக்கச் சாதிகள் 'வேளாளர் பண்பாடே தமிழ்ப் பண்பாடாக, வேளாளர் வரலாறே தமிழர் வரலாறாக' முன் வைத்தபோது அந்தத் தமிழ் அடிப்படைவாதம் பெரியாருக்கு உடனடியாக ஒவ்வாமையாக மாறிப் போனது.
வடநாட்டு எதிர்ப்பு, பார்ப்பன பார்ப்பனிய இந்து மத எதிர்ப்பு, ராமன் பட எரிப்பு என பெரியார் பரிசளித்த ஆழ்ந்த பொருளுள்ள மெய்யியல் / நடைமுறைக் கொடைகள் இந்தியாவுக்கெதிரான தமிழகத்தின் கேடயங்கள் என நாம் பெருமை கொள்ள முடியும். தமிழ்த்தேச எதிரிகளை மெய்யியல் தளத்தில் உணர்ந்து தெளிய, எச்சரிக்கை கொள்ள, எதிர்த்து நிற்க பெரியாரின் வகை வகையான பங்களிப்புகள் தமிழ்த் தேச விடுதலை அரசியலின் பாதை காட்டும் விளக்குகளாக இருப்பதுடன் அவை விரிவும் செறிவும் மிக்கவை என்பதை நாம் உணரத் தலைப்படுவோம்.
பெரியார் திருஉருக்களைக் கேலிபேசியவர், மகாத்மாக்களுக்கு முன் சாதாரண ஆத்மாவாக நின்று கேலி பேசுவது எளிதில்லை. மெல்ல நகர்ந்த வரரலாற்றில் பெரியாரின் உருவம் திருஉருவாகிப் போனது ஒரு பெருந்துயரம். பெரியாரின் பகுத்தறிவின் துணையோடு சில கேள்விகளும் ஐயங்களும் நம்முள் எழுவதை நாம் உணர முடிகிறது.
ஆதிக்க வெறியும் வலிமையும்மிக்க காங்கிரசை ஒழிக்க வேண்டியவற்றின் பட்டியலில் வைத்திருந்த பெரியார் காந்தியை மிக ஆழமாக வெறுத்தார். முழுமையாக அறிந்திருந்தார். ஆனால் அவரின் போராட்டங்கள் பல காந்தியவாதிகளே காதலுறும் போராட்டங்களாக இருந்தன என்பது ஓர் அழகிய முரண்.
தமிழ்த்தேச வரலாற்றின் ஆகச் சிறந்த எழுச்சியான 1965 மொழிப் போராட்டக் களம் பெரியாருக்கு கருப்பு சிவப்புக் கண்ணீர்த் துளிகளின் களமாகப்பட்டதை என்னசொல்ல?
சாதியொழிப்பு அரசியலின் சாத்தியப்பாடுகளைப் பொருத்தவரை அவரின் அரசியல் என்பது தலைவர் தமிழரசன் சொல்வதைப் போல 'வாய் மிரட்டல்கள்' எனும் வரம்பைத் தாண்டவில்லையே எனும் அயர்ச்சி நமக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
போராட்டங்களை கலாட்டாவாகவும், போராட்டக்காரர்களின் வினைகளை காலித்தனமாகவும் இறுதியில் போராடுபவர்களைக் காலிகளாகவும் சில பல நேரங்களில் அவர் சுட்டியது நமது ஆழ்ந்த பார்வைக்குரியவை.
பெரியார் இறுதிவரை உக்கிரம் மிக்க போராட்டங்களை வசைபாடும் ஒருவகை ஒவ்வாமையால் பீடிக்கப்பட்டிருந்தார் என்பதும் அதற்கான காரணம் பெரியாரின் வகுப்புப் பின்னணியே என்ற முடிவுக்கு வர தருக்க ஞாயமுண்டு என்பதே நம் கருத்து.
ஆயினும், பெரியாரின் பங்களிப்பு மிகப் பொதுவானது. தமிழர் தமிழ்நாடு ஆகியவை அவரின் இயங்குதளமாக இருப்பினும், எந்த வரம்பைம் எளிதாகத் தாண்டிச் செல்ல அவரால் முடிந்தது. பாரத மாதாவாக இருப்பினும் தமிழ்த் தாயாக இருப்பினும் அவரின் அறிவுத் தராசில் ஒரே எடைதான்.
வரலாறு ஓர் ஓடை. ஒருமுறை குளித்த நீரில் மறுமுறை குளிக்க முடியாத ஓட்டம் அதன் சிறப்பு. அந்த வகையில் பெரியார் தமிழ்த்தேச வரலாற்றின் ஒரு காலத் தொகுதியின் நாயகர். பாவலரேறு மெய்மறந்து சொல்வதுபோல் காலத்தின் வரலாறாக வரலாற்றின் காலமாக வாழ்ந்து முடித்த வாழ்வு அவருடையது.
1938இல் தான் எழுப்பிய 'தமிழ்நாடு தமிழர்க்கே' எனும் முழக்கத்தின் தேவையை தன் இறுதிப் பேருரையில் மீள எழுப்பியபோது அது தமிழக மக்களுக்கு அவர் அளித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இறுதி அறைகூவலானது.
'எனது காலத்திற்குப் பிறகு வரும் இளைஞர்கள் என்னைப் போல இருக்க மாட்டார்கள்' என முன்னூகத்துடன் சொன்ன, தமிழ்த்தேச உருவாக்கத்தின் மூத்த வித்தாக தமிழகத்திற்கு வாய்த்த பெரியாரை தாளாத அன்போடு அணைத்துக் கொள்கிறாள் தமிழ்த் தாய். உச்சி முகர்ந்து மெய்சிலிர்க்கிறது தமிழ்த் தேசம்.
தன்னைக் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னாலும் தமிழ்த் தாய்க்கு பெரியாரின் மீது சிறிதும் சினமில்லை. ஆம்; பிள்ளையின் சினம் மூர்க்கமான அன்பின்றி வேறில்லை என தாய்க்குத் தெரியாதா?