“என்ன? நாளைய தலையங்கம் தயாராகி விட்டதா? படியும் கேட்போம்'' கேட்டார் சனமணி (தினமணி) நிறுவனர். ஆசிரியரான நானும் “ஐயா, இதோ படிக்கிறேன்'' என்று படிக்கத் தொடங்கினேன்.

“நமது அண்டை நாடான இலங்கையில் நடந்து வரும் மிகப் பெரிய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்து மனித இனத்தின் சுதந்திர சமத்துவ சமதர்ம கோட்பாடுகளுக்காக் குரலெழுப்ப வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.

இலங்கையை சிரிலங்கா என்று பெயர் மாற்றிக் கொண்டது. தமிழும் ஆட்சி மொழியாக இருந்ததை நீக்கி தமிழர்களுக்கு அரசுப் பணி மறுக்கப்பட்டது. தொழிற் கல்விகளில், காவற் படைப் பணிகளில் தமிழர்களை அமர்த் தாமல் ஒதுக்கி, தமிழர் வாழ் வுரிமை முற்றிலும் மறுக்கப் பட்டதால் தானே குடியாட் சிக்கு உட்பட்டு போராடி போராடித் தோற்றுப் போனதால் புலிப் படைப் பிரிவுகள் அறமன்றமென அமைத்து தமிழராட்சியை நிறுவினர் ஈழத்தில்.

இந்தியாவைப் போல் டொமினியன் அந்தஸ்துக்கு ஈழம் தயாராக இல்லை. பூரண சுதந்திரந்தான் எங்கள் ஒரே கொள்கை என்று தெளிவுபடுத்தி இந்திரா காந்தியையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன். விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் படைப் பயிற்சி வழங்கி ஏனைய உதவிகளையும் அள்ளிக் கொடுத்தவரல்லவா இந்திரா காந்தி.

இந்திரா படுகொலையிலிருந்து அது திசைமாற்றப் பட்டது. இராசீவ் தலைமை அமைச்சராகி அமைதிப் படையனுப்புகிறேன் என்று அமளிப் படையை அல்லவா அனுப்பினார்! இலங்கைப் படையினரை விட இந்தியப் படையினர் செய்த பாலியல் வன்முறையும் ஏனைய அழிமதிகளும் கொஞ்ச நஞ்சமல்லவே? புலிகள் இயக்கத்தினர் தான் இராசீவைக் கொன்றனர் என்று முடிவெடுத்து இந்தியா நடந்து கொண்டது சரியா? இலங்கை (அரசினால்) ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாய் வெற்றி கொள்ள முடியாது தனி ஈழ ஆட்சி நடத்திய மேதகு பிரபாகரன் படையை பயங்கரவாதம் என்று பசப்பி சீனம், சப்பான் என்கிற நாடுகளின் துணையுடன் சோனியா பழிவாங்கியது அடுக்குமா? இன்றும் ஈழத்தின் மீட்பர் பிரபாகரன் போற்றப்பட்டு அவர் படம் பல வீடுகளில் வரவேற்பறைகளில் இருப்பதை ஏன்? இதயத்தில் ஏற்றி வைத்திருப்பதைக் காண முடியும்.

இங்குள்ள சில அரசியல்வாதிகள் தாங்கள் ஆட்சிக்கு வர ஈழத் தமிழர்களை கூலிக்கு கொலை யாளியாக அமர்த்தியது அந்த நாளில் பேசப்பட்டது. அது உண்மையை உணரத்தக்க வகையில் கொலை நிகழ்வில் இராசீவ் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எவரும் சிக்காமல் தப்பியதை நாடே பேசியது. உண்மையை உலகுக்கு மறைக் கவே கூலிக்கு அமர்த்திய கொலையாளிகளை சுட்டுக் கொன்றும், நளினி, முருகன் மீது பழியைப் போட்டும், தண்டனைக் காலம் முடிந்தும் வெளியே விடாமல் வைத்திருப் பதாகவும் சில அரசியல் வாதிகள் பேசி வருகின்றனரே! தி.மு.க. மீது பழிபோட்டு இராசீவ் கொலைக்குப் பிறகு தேர்தலிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதை அகிலமே அறியும்.

சிங்களக் காடையர் 1983ல் வெளிக்கடை சிறையை உடைத்து, குட்டிமணி உள்ளிட்டோர் கண்களை தோண்டியெடுத்து காலால் மிதித்து நசுக்கியது. தமிழர்கள் இறைச்சி இங்கே கிடைக்கும் என அறிவிப்புச் செய்தது. தமிழச்சிகளை பாலியல் வன்கொடுமை செய்ததை மறக்கத்தான் முடியுமா?

ஈழத்தில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் மீது பன்னாட்டு மன்ற போர்ச் சட்டத்தை மீறி வேதியியல் எரி குண்டுகளை வீசியும், கொத்து குண்டுகளை வீசியும், வீடுகளையும், பள்ளி மருத்துவமனைகளையும் தகர்த்துப் போர்க் குற்றம் புரிந்ததை எவர்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? வரதராசனையும், கருணாவையும் கைக்கூலியாக்கிக் கொண்டு தமிழினத்துக்கு செய்த கொடுமைகள் கொஞ்சமா? நாளும் ஊடகங்கள் வழி தெரிந்து கொண்டோமே!

தமிழர்களை எல்லாம் மந்தை ஆடுகளை ஒதுக்கி ஓரிடத்தில் கூட்டுவதைப் போன்று சுற்றி வளைத்து ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்து குண்டு போட்டும் தகரிகளைக் கொண்டு நசுக்கியும் கொன்ற கொடுமைகள் கொஞ்சமா?

மேதகு பிரபாகரன் தன் துணைவியையும், குழந்தை களையும் பெற்றோரையும் சந்தித்தே இருபது ஆண்டுகளுக்கு மேலே இருக்கும் என எழுதப் பேசப்பட்டது!

ஒருநாளா? இரு நாளா? ஒரு திங்களா? இரு திங்களா? ஓராண்டா? ஈராண்டா? இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரத்தையே ஈழத்தில் துண்டித்ததோடு மட்டுமல்லாமல், ஈழத்திற்கு பொருள் போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்தையே துண்டித்துச் சாலைகள் மூடப்பட்டதே! கண்ணி வெடிகளை அகற்றுகிறோம் என்று இன்றும் திசை திருப்பி மக்கள் வாழ்விடங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளதே! தமிழ் மக்கள் வீடுகளிலும் விளை நிலங்களிலும் சிங்களவர்களைக் கொண்டு இறக்கி பாதுகாப்புக் கொடுத்து வருகின்றதாகச் சொல்லப்படுகின்றதே!

மரணத் தருவாயிலிருந்து மேதகு பிரபாகரனின் தாயார் மருத்துவத்திற்காக இந்தியாவில் தமிழ் நாட்டுக்கு வானூர்தியில் வந்திருந்தபோது தரையிறங்க விடாமல் வானூர்தியில் வைத்து அப்படியே திருப்பப்பட்ட கொடுமையை நாடு அறிந்ததுதானே!

சமரசப் பேச்சுக்கென இந்தியா மேதகு பிரபாகரனை அழைத்து இந்திய படைத் தலைவரை விட்டுப் பிரபாகரனைச் சுட்டுக் கொல்ல பணித்ததும், அது சரியான நெறியல்ல நான் செய்ய மாட்டேன் என்று படைத் தலைவர் மறுத்ததை நாடு முழுவதும் பேசப்பட்டதே!

பாவலரேறு பெருஞ்சித்திரனார், இன அழிம்பு செய்த இராசீவ் மீது 1988ல் அறம் பாடினார், அது அப்படியே நடந்தது. இதோ அப்பாடல்

இட்ட சாவம் மூட்டுக

“முண்டையின் மகனே! முண்டையின் மகனே!

கொண்டையில் லாத ஒழுகிய முழக்குழல்

கூர்த்த கலுழன் செவ்வாய் மூக்கின்

ஆர்த்த செருக்கோ டாண்மையின் தோற்றத்து

நாவலந் தீவின் நாயகி யென்ன

மேவலந் திரிந்த அரசியல் மேனகை

ஆரியக் கௌடிலி இந்திரா என்னும்

பூரியை பிதுக்கிய முண்டையின் மகனே!

 

சிங்களக் கொலைஞன் செயவர்த் தனன்எனும்

வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து

செந்தமிழ் இனத்தைச் சீரழித் திடவே

முந்து"இரா சீவ்' எனும் முண்டையின் மகனே!

 

உலகப் பந்தின் உயிர்ச்செறி எம்மினம்

விலகாக் குறியினன் ஆகி, விதிர்ப்புற

யாழ்த்தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம்

போழ்த்துயிர் குடிக்கும் அரக்கப் பூதனே!

 

நீயுநின் துணையும் நின்னிரு மக்களும்

ஏயுமிவ் வுலகத்து இருக்குநாள் தோறும்

எந்தமிழ் நல்லினத் தோற்றம் குலைதலால்

வெந்தழி யும்நாள் விரைந்துனக் கெய்துக

 

இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்

குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்

கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!

திடுமென நினையொரு நீச்சூழல் சூழ்க!

 

சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்

வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்

சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே!

திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க!

 

எந்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்

நொந்துயிர் துடிக்கையில் உனக்குலை நொய்ந்தே

இட்ட சாவங்கள் இணைந்து கூடி

முட்டுக நின்னுயிர்! மூளி, நீ யாகுக!

தமிழினம் தகைக்கும் தருக்களே! நின்குடி

அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!

தணலும்எம் நெஞ்சின் தவிப்பை

மணல், நீர், நீ வளி, வானம் ஆற்றுகவே!

 தென்மொழி சுவடி: 24, ஓலை: 3 மார்ச்சு ஏப், 1988

என்கிறார் புலவர்

இராசபட்சே, சோனியா, மன்மோகன் சிங், சரத் பொன்சேகா, இரணில் விக்ரமசிங்கே உடன் பணி யாற்றிய பிற நாட்டு ஆட்சியின் முதன்மையாளர்கள் எவறானாலும் பொய்யா மொழிப் புலவர் திருவள்ளுவர் கூறியுள்ள

மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு குறள் 204 (தீவினையச்சம்)

என்ற அறப்பாடலுக்கு உட்பட்டே தீருவர் நடந்த இன அழிம்புக் கொடுமைகளுக்கு தீர்வே கிடையாது. உப்பைத் தின்றவன் நீர் குடித்தே ஆக வேண்டும் என்பது போல அறத்தின் தாக்கத்தை தாங்கியே ஆக வேண்டும். அந்த நாளை தமிழினம் விம்மிய நெஞ்சோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

நடந்தது நடந்தேறி விட்டது. இருப்பினும், கொடுங் கோலாட்சியில் ஏதிலிகளாக எஞ்சி இருக்கின்ற (இருக்கின்ற) தமிழினத்தினருக்கு அரசியல், வாழ்வுரிமை, சமத்துவம் மண்ணுரிமை அனைத்தை யும் பெற்றுத் தரவும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைப் படையினரால் கொலை செய்யப்படுவதி லிருந்தும், வலைகள் மீன்கள் கொள்ளை அடிக்கப்படு வதிலிருந்தும் படகுகள் உடைத்தெறிவது, மீனவர்கள் உடல் சிதைவுக்கு உள்ளாக்கம் செயல்களைத் தடுக்க இந்திய அரசு முன்வருமா?

"சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இந்தியாவில் எழுந்த குரல் இன்னமும் ஈழத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரம், சனநாயகம் என்று மார்தட்டிக் கொள்ளும் உலக நாடுகள் ஈழத்தில் இலங்கையில் நடக்கும் அடக்கு முறைகள், முள்வேலிக்குள் அடைத்து பாதுகாத்து வருகிறேன் என்று நடத்தும் கொடுவதையை வேடிக்கைப் பார்க்கிறது என்று மேலே கண்ட செய்திகள் எல்லாம் நாளும் நாளேடுகளிலும் வந்ததே, அரசியலாளர்களாலும் பரவலாகப் பேசப்பட்டதே, இதை நாடே அறியுமல்லவா?

இலங்கையின் ஈழத்திலும் நடந்தேறியது போன்றே மியன்மரிலும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மியன்மரில் நடக்கும் அடக்கு முறைகளை உலக நாடுகள் வேடிக்கைப் பார்க்கிறது. சூச்சிக்கு நோபல் பரிசு கொடுத்து விட்டால் ஆயிற்றா? மனித உரிமை பற்றி வாய் கிழிய பேசிவிட்டால் போதுமா?

இலங்கையின் ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்கும் மியான்மரில் நடக்கும் அடக்கு முறைகளுக்கும் எதிராக ஏன் உலகம் கொதித்து எழவில்லை?

இதைப் பற்றியெல்லாம் மேதகு பிரபாகரனின் போராளிகளோ, ஈழ மக்களோ கவலைப்படுவதாக இல்லை. அவர்களது போராட்டம் தொடர்கிறது. அவர்களுக்கு சனமணியின் ஆதரவும் தான்.''

என படித்து விட்டு நிமிர்ந்தேன்.

“நேற்றைய தினமணி தலையங்கத்தை அப்படியே புரட்டி எழுதியது போல் இருக்கிறதே!'' தொடர்ந்தார் நிறுவனர். “முண்டாசுக் கவிஞன் பாரதி மீசையை மட்டும் வைத்து முண்டாசை நீக்கி உறவுப் பாசம் காட்டும் உண்மையை தெரிந்து சொன்னார் எழுதினார் தினமணி ஆசிரியர். ஈழத் தமிழரின் உண்மை நிலை தெரியாமல் எழுதி விட்டு விட்டார் போலும். தாங்கள் தமிழின உணர்வோடு எழுதியுள்ளீர்கள் போலும். ஆனால் சட்டச் சிக்கல் ஏதும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்றார், “சரி பார்த்துக் கொள்கிறேன்'' என்றேன்.

“தாத்தா... தாத்தா'' என்று குரல் கேட்டு திடுக்கிட்டு கண்ணை நன்றாகக் கசக்கி விட்டு விழித்தேன். எழுந்தேன். அருகே பெயரன் பல் துலக்கியவாறு பல்லை இளித்துக் கொண்டு நின்றான்.

ஆகா நாம் கண்டது கனவா? சரிதான் தினமணி "இதுவல்லவா தலைமை' தலையங்கம் கடந்த நாள் படித்தது மனதில் பதிந்து ஏற்படுத்திய பாதிப்பின் வெளிப்பாடுதான் இக் கனவு போலும் என்று அந்த உறுத்தலான கனவின் வெளிப்பாட்டை எண்ணி படுக்கையை விட்டு எழுந்தேன். அந்த கனவு உங்களுக்கும் தெரியட்டும் என்றுதான் இதை பதிப்பித்தேன். வேறல்ல?

“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்

அஞ்சுதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்

துஞ்சுவதில்லை'' எனவே தமிழர் தோளெழுந்தால்

எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!

 பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இனி தினமணியின் "இதுவல்லவோ தலைமை' யையும் உங்கள் பார்வைக்குத் தருகிறேன். இதோ...

தினமணி, 15.11.2010ன் தலையங்கத்தினால் தமிழனுக்கு வந்த கனவு

Pin It