கடந்த மே 17 தொடங்கி 19 வரை தமிழீழத்தில் தமிழர்களைக் கொத்து கொத்தாகக்கொன்று மண் மூடி வைத்து உலகத்தின் கண்களை மறைத்து வைத்து ஓராண்டு முடிந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த நாளை இனவெறிக்கு எதிரானது என பறைசாற்றியுள்ளனர். சிங்கள இன வெறி அரசுக்கு துணையாக இந்திய அரசும் அதற்கு இணையாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் துணை புரிந்துள்ள நிலைகளை கண்டு தமிழர்கள் மனம் கொதித்துள்ள நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் இனத்தின் அடிப்படையில் நடந்த பேரழிவு படுகொலை என இதைத்தான் குறிப்பிட வேண்டும். எத்தியோப்பியாவில் எரித்திரியா மக்கள் மீது நடந்த படுகொலை, ஈராக் சதாம் உசேன், குர்து மக்கள் மீது நடத்திய படுகொலை நிகழ்வுகளுக்கு, அந்த மக்களின் துயரங்களுக்குப் பின் நடந்த மிகப் பெரிய பேரழிவு முள்ளி வாய்க்கால் படுகொலை. ஈராக் அதிபர் சதாம் உசேன் குர்து மக்களை கொன்றதற்காக அமெரிக்கப் படைகள் அந்த நாட்டை ஆக்கிரமித்து பின் அவரை தூக்கில் போட்டுக் கொன்றது. யுகோசோவிய அதிபர் போஸ்வின் மக்கள் நடத்திய இனவெறி படுகொலையை ஐரோப்பிய ஒன்றியங்கள் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது உலக நாடுகள் வழக்கு பதிவு செய்யாதது மட்டுமல்ல, அவரை போர்க் குற்றவாளி என்று சொல்வதற்கு எந்த நாடும் முன்வரவில்லை என்பது வரலாற்று துயரம்.

vanni_330முப்பது ஆண்டுகள் இயக்கம்நடத்தி வந்த புலிகள் ஓர் ஆண்டு முடிந்த பின்னும் வெளிப்படையாக இந்த படுகொலையை கண்டிப்பதற்கோ அல்லது உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்லவோ சரியான தலைமை இல்லாதது அதைவிட கொடூரமானது எதுவும் இருக்க முடியாது. ஆனால் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்பவர்கள் இந்த படுகொலையை உலக அளவில் எடுத்துச் சொல்ல என்ன முயற்சி செய்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. இந்நிலையில்உலக முழுக்க வாழும் தமிழர்கள் மத்தியில் ஒருவித ஏமாற்றமும், வேதனையும் கலந்து நடை பிணமாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நாம் வெளிப்படையாக சொல்லித்தான் ஆக வேண்டும். "தமிழர்களை யாரும் வெல்ல முடியாது' என்று வாய்சவாடல் அடித்து வந்தவர்கள் இன்று நாதியற்ற இனமாக உள்ள தமிழினத்தை யார் காப்பார்கள் என்று கேள்வி கேட்க நாம் அணியமாக வேண்டிய தேவையுள்ளதையும், வள்ளுவத்தின் அறத்தையும் புறநானூற்று வீரத்தையும் பேசி பேசி நாம் நம் வாயில் நாமே வாய்க்கரிசி போட்டுக் கொண்டோம்.

அதே நேரத்தில் உலக வல்லரசுகள் ஒன்று சேர்ந்து கொண்டு ராஜபக்சேவின் அரசை ஆதரித்தன. இந்தியப் பேரரசு தமிழர்களுக்கு எதிராக இருந்தது. தமிழக ஆட்சியாளர்கள் நாம் எதிர்பார்த்த அளவுக்குப் போராடவில்லை. இப்படியாக பல்வேறு எளிமையான காரணங்கள் இப்போதும் உண்டு. அது மட்டும்தான் காரணம் என்று சொல்லி நாம் அனைத்து செய்திகளையும் மறந்துவிட முடியாது.

உலக அளவில் போராடுகிற இயக்கங்களில் வலுவான இயக்கமாக விடுதலைப் புலிகளைத்தான் சுட்டிக் காட்டப்பட்டன. அப்படிப்பட்ட இயக்கம் இன்று என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படி ஒரு இயக்கத்தை ஒரேயடியாக அழித்துவிட முடியுமா? என்ற கேள்வியும் அனைவருக்கும் உண்டு. அதற்கு விடை சொல்ல வேண்டியவர்கள் விடுதலைப் புலிகளும், அதனைச் சார்ந்த ஆதரவாளர்களும்தான். ஆனால் யாரும் வாய் திறந்து பதில் சொல்லவில்லை.

முள்ளி வாய்க்கால் மரண துயரங்களை உலகில் பரந்து வாழும் தமிழர்கள் தங்கள் துயரமாகப் பதிவு செய்கிறார்களே தவிர மற்ற மக்களிடம் அதைப் பற்றி எந்த கருத்தும் இதுவரை இல்லை. அமெரிக்கப் படையின் வன் செயல்களை வியட்நாம் மக்கள் மற்றும் உலகஅளவில் உள்ள இடதுசாரி அரசுகள், இடதுசாரி இயக்கங்கள் ஒன்று சேர்ந்து தங்கள் துக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இரண்டாம் உலகப் போரின் போது கொல்லப்பட்ட யூதர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்கு உலக சமூகம் உள்ளது. ஆனால் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டிக்கவும், அந்தத் துயரத்தில் பங்கு எடுக்கவும் யாரும் இல்லை என்பதை உணரும்போது, நாம் எங்கோ அரசியல் பிழை செய்து இருக்கிறோம் என்பதை உணர வேண்டியவர்களாய் உள்ளோம்.

இன்று சர்வதேசங்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகள் மீட்கப்படுவதின் அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச மன்றங்களில் தங்கள் சிக்கலை வெளிக் கொண்டு வரவேண்டும். அதேபோல் 1 லட்சம் தமிழர்கள்மேல் கொல்லப்பட்டதற்கு போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டியதும் இன்றைய தேவை.

அதே நேரத்தில் ஈழத் தமிழர்கள் மேற்கொண்டு வரும் "நாடு கடந்த தமிழீழ அரசு' எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும்.அதில் குறிப்பாக தமிழகத்தின் பங்கு என்ன என்பதையும் தெளிவாக உணர வேண்டியவர்கள் அவர்கள்.அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இயக்கங்கள், மனித உரிமையாளர், அறிவு ஜீவிகள் பங்கு என்ன என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

தமிழ் இனத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் துயரம் தமிழ்நாட்டில் உள்ள அறிவு ஜீவிகளைப் பாதித்ததாகவே தெரியவில்லை. அதற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. அங்கு ஈழப் பிரச்சினையைப் பேசியவர்கள் அதை ஓர் அரசியல் பிரச்சினையாக பார்த்தார்கள். அது அவர்களின் பிரச்சனையல்ல. இங்குள்ள அறிவு ஜீவிகள் தேசிய இனப் போராட்டம் என்பது பிற்போக்கு தனமானது என்று ஒதுங்கிக் கொண்டு, அதற்கு எதிராக இருந்து வந்துள்ளனர்.அதனால் இங்குள்ள சில "மார்க்சிய அறிவு ஜீவிகள்' என்று சொல்லிக் கொள்பவர்கள். விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக கொட்டமடித்து கொண்டிருக்கும் சிங்கள அரசைக் கண்டிக்காமல் இதற்கு காரணம் புலிகளின் தவறான அரசியல்கள்தான் என்று பெருந்தேசிய வெறிக்கு துணை நின்ற நிகழ்வுகளும் நடந்தேறியது என்பது வெட்கக் கேடானது என்பதை மட்டும்தான் நாம் சொல்ல முடியும்.

உலகத்தின் கோடிக்கணக்கான மக்களால் மதிக்கப்படுகிற ஒப்பற்ற அறிவு ஆசான் காரல் மார்க்ஸ் நாம் உண்மையான சர்வதேச வாதியாகவும் உழைக்கம் மக்களுக்கு உண்மையானவர்களை இருக்கும் பட்சத்தில் அயர்லாந்து விடுதலைப் போராடுகிற இயக்கத்திற்கும் அயர்லாந்து மக்களுக்கும் நாம் துணையாக நிற்க வேண்டும் என்று தன் அறிக்கையில் தெளிவாக எழுதி இருந்தார். இதைப் படித்த நம் மார்க்சியர் அதை மட்டும் மறந்து விட்டனர்.அதேபோல் சுவிடன் நார்வே பிரிவை ஏற்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். அந்த மரபில் வந்ததாகச் சொல்லிக் கொள்பவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழ மக்களுக்கும் இன்று வரை எதிராக நிற்பதன் நோக்கம் என்ன?

நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்றுவரை வன்னி முகாமில் உள்ளவர்கள் பற்றி எந்தவிதமான உண்மை செய்திகள் வெளி உலகிற்கு வருவதில்லை. அப்படி வருமாயின் அது பெண்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டப் படுகிறார்கள் என அவ்வப்போது வெளிவரும் ஒருசில செய்திகளைத் தவிர உண்மை நிலை வெளிவருவதில்லை.

அதேபோல் இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளுக்காக ஐ.நா. சபையே விளக்கம் கேட்டு உள்ள நிலையில் ஐ.நா. சபையை சார்ந்த அதிகாரிகளே கூட இந்த இனப் படுகொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஐ.நா. பொதுச் செயலாளரின் தலைமை செயலாளராக உள்ள விஜய் நம்பியார் ஈழத்தில் நடந்த யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் ஒரு சமாதானத் தீர்வை எட்டுவதற்காகப் பலரிடமும் அணுகி பேசி வந்தார். யுத்தத்தின் கடைசி நாட்களில் புலிகளின் மூத்த தலைவர்கள் சிலர் விஜய் நம்பியார் மூலமாக சமாதானம் பேச முற்பட்டனர். அவர்கள் தான் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதில் விஜய் நம்பியாருக்கு பங்கு உள்ளது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அவர் மீதும் ஐ.நா. சபை விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளதையும், முள்ளி வாய்க்காலில் நடந்த இன அழிப்புப் போரில் இந்தியாவின் பங்கு அதிகமாக உள்ளது என்பதையும் இன்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஆனால் இங்குள்ள தமிழ்த் தலைவர் என்று சொல்பவர் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தான் உதவ முடியும் எனவும், அதற்கு அனைத்து வகையிலும் அதற்கு என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று கருணாநிதி போன்றவர்கள் சொல்வதை இங்குள்ளவர் அப்படியே ஒப்புவித்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழீழத்தில் நடந்த இந்த இன அழிப்புப் போரில் இலங்கை அரசுக்கு இணையாக இந்திய அரசு செயல்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்கக் கூடாது. அதேநேரத்தில் தமிழீழ விடுதலைக்கு தமிழீழ மக்கள் இதுவரை இந்தியாவையும் இந்திய அரசையும் நம்பி வந்ததை சரி செய்து கொண்டு இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு துணையாக இருக்காது இருக்கவும் முடியாது என்பதையும் வரலாற்று தெளிவோடு புரிந்து கொள்ள வேண்டும். இந்த முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு மூலக் காரணம் சிங்கள பேரின அரசும், இந்தியப் பார்ப்பனியமும்தான் மூலம் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா சொல்வார்: "வெள்ளை நிற வெறி அரசு எங்கள் மக்கள் மீது நடத்திய கொடுமைகளை மன்னிக்க முடியும்.ஆனால் மறக்க முடியாது.'' தமிழன் உள்ள வரை சிங்க இன வெறியன்களையும், இந்தியப் பார்ப்பன வெறியர்களின் கொடுஞ்செயலை மறக்க முடியாது.

Pin It