நகரங்களில் தண்ணீரைக் காசு கொடுத்துத்தான் வாங்கிக் குடிக்க வேண்டியுள்ளது. காசுக்கு வழியற்ற ஏழை எளிய மக்களோ இரண்டு நாளைக்கோ, மூன்று நாளைக் கோ, ஒருமுறை சில பகுதிகளில் கிழமைக்கு ஒரு முறை குழாய் வழியோ அல்லது வண்டியிலோ வரும் தண்ணீரைப் பிடித்து வைத்துத்தான் குடித்துக் காலத்தை ஓட்டுகின்றனர்.

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், தண்ணீரை உறைகளில் அடைத்து வைத்து விற்பார்கள், புட்டியில் அடைத்து விற்பார்கள் என்று சொன்னால் அப்போதைய மக்கள் சிரித்திருப்பார்கள். ஆறுகளில் தண்ணீர் அப்போது ஓடியது. ஒவ்வோர் ஊரிலும் ஏரி, குளங்கள் நிரம்பியிருந்தன.

அப்போதெல்லாம் முகவை மாவட்டமும், நெல்லையில் கரிசல் காட்டுப் பகுதிகளும் தாம் வானம் பார்த்த நிலம். மழையை மட்டுமே நம்பி இருந்த பகுதிகள். அங்கெல்லாம் கூட அப்போது ஊருணிகள் இல்லை. 1950களில் தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரிகள் இருந்ததாகக் கணக்குகள் சொல்கின்றன. இப்போது தமிழக ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன. ஏரிகள், குளங்கள் எல்லாம் மேடு தட்டிப் போய் அரசியல்காரர்கள் வளைத்துப் போட்ட இடங்களாகி விட்டன. சில ஆயிரம் ஏரிகளே எஞ்சி இருக்கின்றன. நிலத்தடி நீருக்கும் இருநூறு முந்நூறு அடிகளுக்குக் கீழே போனால்தான் உண்டு. கோடை வந்து விட்டாலே இந்தக் கொடுமைதான்.

kinley_360இன்னொரு புறம் மழைக் காலங்களிலோ மழை பொழியாமல் இல்லை. பொழிகிற மழை வெள்ளப் பெருக்கெடுத்து வீணாகிறது. ஒவ்வொரு முறை மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்கால் நூற்றுக் கணக்கினர் இறந்து போகின்றனர். இலக்கக் கணக்கான டி.எம்சி. தண்ணீர் வீணே கடலில் கலக்கிறது.

ஆறுகளில் தடுப்பணைகள் கட்டித் தேக்கி வைத்து நீரைப் பாதுகாக்கிற எந்தத் திட்டத்தையும் அரசு செய்யவில்லை. அன்றைக்கு ஆங்கிலேயன் ஆண்ட காலத்தில் இருந்த மக்கள் தொகை அளவீட்டிலே கூட தண்ணீரைத் தேக்கிடும் வகையில் மேட்டூர், வைகை, முல்லைப் பெரியாறு, சாத்தனூர் அணைகளைக் கட்டினார்கள். விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்ட காலத்திற்குப் பின் எந்த அணைகளையும் இந்த அரசுகள் கட்டியதில்லை.

புதிதாக எந்த ஓர் ஏரியையும், குளத்தையும் வெட்டிடவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த ஏரி, குளங்களைக் கூட தூர் எடுத்து, ஆழப்படுத்தி அதற்குரிய அரண்களை ஒழுங்குபடுத்தி வைத்தார்களா என்றால் இல்லை. பல ஏரிகளை அரசியல்கட்சிக் காரர்களே கூறு போடடு விற்றுக் கொழுத்துப் போனார்கள். சில ஏரிகளில் வெளிநாட்டுத் தொழிற்சாலைகளுக்கு இடத்தைக் கொடுத்து, அதற்குரிய பங்குத் தொகையையும் வாங்கி அழுத்திக் கொண்டார்கள்.

அதற்கெல்லாம் மேலாகத் தமிழகத்தில் இருக்கிற பாலாறு தொடங்கி, தமிரவருணி வரையுள்ள ஆற்றோரங்களில் எல்லாம் அமெரிக்க நிறுவனமான பெப்சி, கொக்கோ கோலா தொழில் நிறுவனங்களுக்கு இடத்தைக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. அங்கு 4000 அடிகள் ஆழம் வரை குழாய்கள் செருகி நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன அந்த நிறுவனங்கள். இதனால் அண்டை ஊர்களில் உழவுக்குக் கூட நிலத்தடி நீர் கிடைக்க வழியின்றி போகிறது. அவ்வாறு உறிஞ்சும் தண்ணீரை ஆக்குவானபீனா, கின்லே என்று புட்டிகளில் நிறைத்து விற்றுக் கொள்ளையடிக்கின்றன அந்த நிறுவனங்கள்.

பெப்சி, கொக்கோ கோலா போன்ற இந்த அமெரிக்க நிறுவனங்கள் நீர் வளம் நிறைந்த கேரளாவில் நிறுவ முடியவில்லை. அந்த மக்கள் கடுமையாகப் போராடி விரட்டி அடித்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலோ வறண்டுபோன ஆறுகளின் கரைகளில் நிறுவப்பட்டுள்ள அந்தத் தொழிலகங்கள் நிலத்தடி நீரையும் ஒட்ட உறிஞ்சிக் கொழுக்க வழி அமைத்துத் தந்திருக்கிறது தமிழக அரசு.

இதன் வழி தமிழகத்தில் தெருவுக்குத் தெரு, இருந்த குளிர் குடிப்பு சோடா நிறுவனங்களையெல்லாம் இழுத்து மூடும்படி செய்துவிட்ட அந்த அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் பெப்சி, கொக்கோ கோலா குளிர் குடிப்புகளை மட் டுமே விற்பனை செய்கின்றன. ஆக, சொந்த நிலத்தின் தண்ணீரைக் கூடப் பெறத் தகுதியற்றவர்களாக மண்ணின் மக்கள் ஆக்கப்பட் டுள்ளனர்.

இயற்கை அளித்திருக்கிற தண்ணீர், காற்று எனும் கொடைகளைக் கூட மக்கள் காசு கொடுத்துத் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் எனும் கொடுமையை உலக முதலாளிகள் உருவாக்கி வருகிறார்கள். அதற்கு வழி அமைத்துத் தருகின்றன இந்திய, தமிழக அரசுகள்.

தண்ணீர் வண்டி எப்போது வரும் எனத் தவம் கிடக்கின்றனர் நகர மக்கள். தங்கள் வாழ்க்கை முயற்சி களில் பெரும்பகுதி காலத்தைத் தண்ணீருக்காகவே இழக்கின்றனர் சிற்றூர்ப் புற மக்கள். இவற்றையெல்லாம் நிலையாக மாற்றுகிற வகையில் அரசு திட்டங்கள் தீட்டியாக வேண்டும். ஏரிகள், குளங்கள் தூர் வாரப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும். புதிதாக ஏரிகள் பல வெட்டப்பட வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு மழைக்கால வெள்ள நீர் தேக்கப்பட வேண்டும்.

இயற்கையின் கொடையாக இருக்கும் தண்ணீர் காற்று ஆகியவை மக்களுக்கு இலவயமாகக் கிடைக்க அரசு வழி அமைத்திட வேண்டும். மக்களின் பொழுதுபோக்கிற்காகத் தொலைக்காட்சிப் பெட்டியை இலவயமாகத் தரும் தமிழக அரசு, மக்களின் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படை யான தண்ணீரை இலவயமாகத் தந்தாக வேண்டும்.

தமிழக அரசே! தண்ணீரை இலவயமாகக் கொடு! என்று மக்கள் போராட வேண்டும்.

தண்ணீரைக் காசுக்கு விற்கும் கயமைப் போக்கைத் தடை செய்ய வேண்டும். காசுக்கு விற்போரைச் சிறை செய்ய வேண்டும்.

தமிழகத் தண்ணீரை உறிஞ்சி விற்றுக் கொள்ளை யடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களைத் தமிழகத்தி லிருந்து விரட்டியாக வேண்டும்.

தமிழக மக்களே விழித்தெழுவோம்! தமிழக நீர் வளத்திற்கு, நீர் உரிமைக்குப் போராடுவோம்!

Pin It