கீற்றில் தேட

viduthalai_muzhakkam_logo

தொடர்புக்கு: தமிழ்நேயன், 2, பிரபாத வளாகம், சூளை, ஈரோடை - 638 004.
அலைபேசி: 97510 14559, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல வல்லரசுகளின் கையில் இப்போது உலகம் கிடைத்திருக்கிறது.

உலகம் மிகவும் அழகானது. வளமானதுதான். ஆனால் அது இப்போது வல்லரசு வெறியர்களால் குதறப்படுகிறது. உலக முதலாளிகள் எல்லாம் ஏழை எளிய நாடுகளின் மக்களைப் பிழிந்து குருதி குடிக்கின்றனர். பஞ்சப் பராரிகளாக பட்டினிச் சாவில் அழிகின்றனர் ஏழை எளிய மக்கள். தங்களின் ஆளுமைக்கு அடிபணிய மறுக்கும் எளிய நாடுகளை அடக்கி நசுக்கி வெறியிடுகின்றன வல்லரசுகள்.

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் ஜப்பானின் கிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட இரண்டு அணு குண்டுகளை விட ஆற்றலான அணு குண்டுகள் ஏறத்தாழ 23 ஆயிரம் அளவில் வல்லரசுகளிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் பெரும்பான்மையை அமெரிக்காவே வைத்திருக்கிறது. அமெரிக்காவிடமும், ரசியாவிடமும் இருக்கிற அணுகுண்டுகளின் எண்ணிக்கையே 22 ஆயிரம் ஆகும். எஞ்சிய 1000 அணுகுண்டுகளையும் சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இசுரேல், இந்தியா, பாக்கிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் வைத்திருக்கின்றன.

அன்றைக்கு 1945 இல் கிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போட்டு அழித்த பின்னர், அன்றைய அமெரிக்கா அதிபர் ரூசுவெல்ட் உலக நாடுகளை அழைத்து ஒரு மாநாட்டைக் கூட்டினார். உலகில் போர் பற்றிய நிலைகளைப் பேசி அமைதி ஏற்படுத்துவதற்கென அம் மாநாட்டில் நோக்கம் கொள்ளப்பட்டது. அதுபோன்றதொரு வழி முறையில் அணுக் கருவிகளை ஏராளமாகத் தன்னள வில் உருவாக்கி வைத்திருக்கிற அமெரிக்கா, ஒபாமா, 47 நாட்டுத் தலைவர்களை கடந்த ஏப்பிரல் 12, 13 நாள்களில் வாசிங்டனில் "அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாடு' நடத்த அழைத்திருக் கிறார்.

2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா வில் ஆறு அணுகுண்டுகளிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைத் திருந்த யுரேனியத்தை சில தீவிரவாதிகள் பாதுகாப்பு வளையத்தை மீறி நுழைந்து திருட முயன்றார்களாம்.

தீவிரவாதிகளின் கைகளில் அணு குண்டுகள் கிடைத்தாலோ, அல்லது அணுகுண்டு செய்வதற்கான மூல பொருள்களாக உள்ள யுரேனியம் தாதுப் பொருள் கிடைத்தாலோ என்ன செய்வது என்கிற அச்சம் வல்லரசுகளைக் கவ்விக் கொண்டதாம். எனவே, அமெரிக்காவும், ரசியாவும் ஆணு ஆயுதங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளலாம் என ஒப்புக் கொண்டனவாம். இந்தப் பின்னணியில்தான் கடந்த 2010 ஏப்பிரல் 12, 13 ஆம் நாள்களில் அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டைக் கூட்டியிருக்கிறது அமெரிக்கா. உலகின் எளிய நாடுகளை அணு ஆயுதங்கள் எனும் பெயரால் அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்காகவே இந்த மாநாட்டைக் கூட்டியிருக்கிறார் ஒபாமா.

அழைக்கப்பட்ட 47 நாடுகளுள், இசுரேல் கலந்து கொள்ளவில்லை. இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகள் தங்களது பாதுகாப்புத் தேவைக்கென ஆணு ஆயுதக் குறைப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஈரானை மாநாட்டிற்கு அழைக்கவே இல்லை. இந்நிலையில் அமெரிக்கா வல்லரசின் தொண்டரடியாகச் செயல்படுகிற இந்திய மன்மோகன் சிங், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி, இன்ன இன்ன பேச வேண்டு மாய் அமெரிக்கா கூறியவற்றைப்பேசி விட்டுத் தில்லி திரும்பியிருக்கிறார்.

அணு பாதுகாப்புக்குத் திட்டவட்ட மான செயல்திட்டம் தேவை என மன்மோகன் பேசினாராம். அதை சீனா, ஜப்பான், கனடா உள்ளிட்ட 25 நாடுகள் வரவேற்றனவாம்.

பாதுகாப்பு என்றால் என்ன? யாரிடமிருந்து? யாருக்குப் பாதுகாப்பு இதை யெல்லாம் மன்மோகன் சிங் விளக்கவில்லை. ஆனால் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பாதுகாப்பு யாரிடமிருந்து யாருக்கு?

அன்றைக்கு இரண்டாம் உலகப் போருக்காக உலக வல்லரசு நாடுகள் ஏராளமாய் வெடிமருந்துகளை உருவாக்கின என்பதும், அவற்றில் பெரும் பகுதி செலவு செய்யப்படாததால் அவ்வளவு மருந்துகளுக்குரிய நைட்ரேட், பாஸ்பேட், பொட்டாஷியம் போன்ற வேதியல் கலவைகளை வேளாண்மைக் குரிய வேதியல் மருந்துகள், உரங்கள் என்கிற பெயரில் எளிய நாடுகளின் தலையில் விற்றதும் அனைவரும் அறிந்த பழைய செய்திகள்.

ஆனால் அதைவிடக் கொடுமையானவை இப்போது நடந்து கொண்டிருக் கும் பின்வரும் செய்தி: கிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவும், இந்தியாவும் போர் முனைப் போட்டிக்காக பல்லாயிரக்கணக்கான அணுகுண்டுகளைச் செய்து காத்திருக்கின்றன.

நீண்ட காலக் காத்திருப்புக்குப் பின்னர் பழைய சோவியத்து ரசியாவில் இருந்த உக்ரைனின் செர்னோ (1986 இல்) அணுமின் நிலையத்திலும், அமெரிக்கா வில் தொடர்ச்சியாகவும், மிக அதிகமாக வும் அணுமின் நிலையங்களிலும் மிகப் பெருமளவில் நேர்ச்சிகள் ஏற்பட்டன. ஒவ்வொரு முறை நேர்ச்சியிலும், ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். பல ஆயிரக்கணக்கான அணுக்கதிர் வீச்சினால் உடல் அளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் படிப்படியாகத் தங்கள் நாடுகளில் அணுமின் நிலையங்களை நிறுவுவதை நிறுத்திக் கொண்டார்கள். பிற மூன்றாம் நிலை அடிமை நாடுகளில் அணுமின் நிலையங்களை நிறுவத் தொடங்கினர்.

அந்த வகையில் அணுகுண்டு வெடிப்பதும், அணுமின் நிலையங்களால் ஏற்படும் பாதிப்புகளும் வேறுபாடு கொண்டவை இல்லை என்பதை அறியாத அடிமை அரசுகள், அணுமின் நிலையங்களை வரவேற்று தங்கள் தங்கள் நாடுகளில் நிறுவிக் கொண்டன. அந்த வகையில், கல்பாக்கத்தில் நிறுவப்பட்ட அணுமின் நிலையத்தால் பலமுறை எளிய நிலையில் கதிர் வீச்சு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் இந்திய அரசு மூடி மறைத்து விட்டது.

கல்பாக்கம் அணுமின் நிலையக் கழிவு நீர் கடலில் கலப்பதால் ஏறத்தாழ நூறு கிலோ மீட்டர் சுற்று வட்டாரக் கடல் பகுதியில் மீன்கள், கடல் உயிரிகள் வாழ இயலாமல் விலகி ஆந்திரப் பகுதி கடலுக்குப் போய்விடுகின்றன என்று தமிழக மீனவர்கள் பெரும் கவலை கொள்கின்றனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையின் போது கல்பாக்கம் அணுமின் நிலையமும் அதனால் பாதிக்கப்பட்டது. அப்போது கனநீர் கசிவும், சேகரித்து வைக்கப்பட்ட அணு உலைக் கழிவுப் பொருள்களும் பேரலை யில் வெளியேறி நூற்றுக்கணக்கினர் இறந்து போயினர். ஆனால் அதையெல் லாம் அணுமின் நிலைய அதிகார வட்டாரங்கள் மூடி மறைத்ததுடன், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொய் கூறின.

கடந்த 2009 அன்று கருநாடகத்தின் கார்வார் பகுதிக்கு அருகில் உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 55 ஊழியர்கள் கதிர்வீச்சுக்கு ஆளாகி பெரும் இன்னல் பட்டனர். ஆனால் அதையும் அணு உலைக் கசிவினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் என்று அந்த அணுமின் நிலைய அதிகார வட்டாரங்கள் மறுத்து விட்டன. ஆக, அணுமின் நிலையங்கள் என்பவை என்றுமே அஞ்சத் தகுந்தவை தாம். அவற்றால் பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்பட்டு பேரழிவு ஏற்படாது என்று யாராலும் உறுதி கூறிவிட முடியாது.

அணுமின் நிலையத்தில் நிறுவப்படும் அணு உலை செயலற்றுப் போனால் கூட பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் கதிர் வீச்சை வெளியிடுகிற வகையில் அணு உலைக் கதிர்கள் அழிந்து விடாமல், அந்த உலைக்குள்ளேயே இருந்திடும். இயற்கையின் பெருஞ் சீற்றங்களால் அந்த அணு உலைக்குப் பெரும் தாக்கங்கள் ஏற்படும்போது, அணுக் கதிர் வீச்சு ஏற்பட்டுப் பெரும் பேரழிவுகளே உருவாகும். ஆக, அணு மின் நிலையம் என்பதே அணுகுண்டை வைத்திருக்கும் கிடங்கு போன்று கொடுமையானதுதான்.

அமெரிக்காவின் சூழ்ச்சி

அது அவ்வாறிருக்க தமிழகத்தில் இரண்டு அணுமின் நிலையங்களையும், கருநாடகத்தில், மராட்டியத்தில், இராஜஸ் தானில் எல்லாம் ஒவ்வோர் அணுமின் நிலையத்தையும் இந்திய அரசு நிறுவியிருக்கிறது. இந்த ஐந்து நிறுவனங்களுமே அமெரிக்கத் தொழில் கூட்டில் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் உலக மயமாக்க நெருக்கடியில் அதிக அளவில் மின்சாரம் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் வகையில் அமெரிக்கா இந்தியா அரசை நெருக்கி அணு ஆற்றல் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைத்தது. அதன்படி 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அணு உலைகளை முதல் தவணை யாக அமெரிக்காவிடமிருந்து வாங்கிக் கொள்ள வேண்டுமாய் நெருக்கடி கொடுத் திருக்கிறது.

அதைவிடக் கொடுமை என்னவெனில், அவ்வாறு நிறுவப்படும் அணுமின் தொழிலகங்களில் நேர்ச்சி ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்காதாம். அதுமட்டு மல்லாமல் இழப்பீட்டுத் தொகையாக அதிக அளவில் 500 கோடி மட்டும்தான் கொடுக்குமாம். இழப்பு எவ்வளவு பெரிதாயினும் அதற்கு மேல் எவ்வளவு இழப்பாயினும் அத்தனை கோடி ரூபாயை இந்திய அரசுதான் தரவேண்டுமாம்.

இந்த இடத்தில் இன்னொரு செய்தி நம் நினைவுக்கு வரவேண்டும். 1984 ஆம் ஆண்டு திசம்பர் இரவு 10 மணிக்கு, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தால் ஏறத்தாழ 390 டன் வேதிப் பொருள்களின் நச்சு காற்று பரவி நடந்த மிகப் பெரும் நேர்ச்சியும், அதை அந்த அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம் எவ்வாறு எதிர் கொண்டது என்பதையும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அந்தக் கொடும் நிகழ்வில் இறந்த வர்கள் 25,000 பேருக்கு மேலானவர்கள் என்று அரசே கூறுகிறது. அப்படியானால் இறந்தவர்கள் இன்னும் பல மடங்கினர்.

அந்த யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் லாரன் ஆண்டர்சனைக் கைது செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்தது இந்திய அரசின் நீதிமன்றம். ஆனால் அந்த ஆன்டர்சனை அமெரிக்கா பாதுகாத்து வைத்திருப்பது மட்டுமல்ல, எங்களின் குடிமகனை உங்களிடம் ஒப்படைக்க எங்கள் சட்டம் இடம் தரவில்லை என்று சொல்லி, இன்றுவரை ஒப்படைக்க மறுத்துவிட்டார்கள்.

ஆக, அவர்களின் தொழிலாக நச்சுக் காற்றால் இலக்கக் கணக்கான மக்களை அழிக்க மட்டும் அவர்களின் சட்டம் இடம் தருகின்றது என்றால் அமெரிக்காவையும், அதற்கு அடிமையாய்த் தலையாட்டும் இந்திய அரசையும் புரிந்து கொள்ள வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்காவுக்குச் சென்று விருந்து தின்று, குடித்துக் கும்மாளம் அடித்து வரும் இந்திய அதிகார வகுப்பினர் எவரும் வாரன் ஆன்டர்சனை எங்களிடம் தரவேண்டும் என வலியுறுத்தியவர்கள் இல்லை. இதற்கிடையில் அந்த போபால் கொடுமைக்கு இழப்பீடாக 713 கோடியைத் தர வேண்டும் என கேட்கப்பட்டு வெகு காலத்திற்குப் பின்பே அதை அந்த நிறுவனம் தந்தது.

அதை அப்படியே இந்தியப் பாதுகாப்பு வங்கியில் போட்டு வைத்ததிருந்ததில் வட்டியோடு அது 1503 கோடியாகப் பெருகியிருந்தது. இருப்பினும் 2004 ஆம் ஆண்டு வழக்கு மன்ற வலியுறுத்தலால் 713 கோடியை மட்டும் இந்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தது. எஞ்சிய தொகையை ஏப்பம் விட்டனர்.

ஆக, அமெரிக்க இந்திய அரசுகளின் இத்தகைய அயோக்கியத் தனங்களை எண்ணிப் பார்த்துக் கொண்ட நிலையில், இன்றைக்கு அமெரிக்கா தன் வலியுறுத்தலால் தொடங்கக் கூறும் அணுமின் நிலையத் தொழிலகங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பே அவற்றில் நேர்ச்சி ஏற்பட்டால் எந்த வகையில் இழப்பீடு செய்யப்படும் என்கிற நயவஞ்சகமான ஒப்பந்தத்தைப் போடுவதை கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் கிரோஷிமா, நாகசாகிகளாய் கல்பாக்கம், கூடங்குளம்

அத்தகைய நயவஞ்சக ஆதிக்க வெறி பிடித்த அமெரிக்க அரசின் கட்டளைகளுக்கு அடிபணிந்து அதற்கு இசைவாக சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிடத் துடிக்கிறார்கள் காங்கிரசு கட்சியினரும், அவர்களின் ஒட்டுண்ணிக் கட்சிகளும். எதிர்க்கட்சிகள் எவையும் கூட அவற்றைப் பெரிய அளவில் எதிர்க்க வேண்டும் என்றோ, மக்களுக்கு இதை விளங்க வைத்து, மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்றோ அக்கறை செலுத்திடவில்லை.

தமிழகத்தின் வடக்கு, தெற்கு, இரண்டு பகுதிகளிலும் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டல்ல, மடியில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு இருப்பதுபோல் தமிழகம் தத்தளிக்கிறது. அமெரிக்க அயோக்கியத்தனத்தாலும், இந்திய ஆணவ வெறித்தனத்தாலும் அடிமைப்பட்டிருக்கிற தமிழகத்தில் நேரப் போகிற இக் கொடுமைகளைக் கண்டு வாய் திறந்து பேச கருணாநிதிக்கு அக்கறையில்லை.

மானாட மயிலாட பார்ப்பதற்கும், அரை அம்மண ஆட்ட கூத்தியர்கள் நடத்தும் பாராட்டு விழாக்களில் மனம் குளிர உட்கார்ந்திருப்பதுமான கருணாநிதிக்குத் தமிழகத்தைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. அவர் கவலைப்படுவதெல்லாம் அவருடைய வாரிசுகளுக்கு அரசியல் பதவி அமைத்துத் தருவதைப் பற்றித்தான். ஆனால் தமிழக மக்களின் அடுத்த தலைமுறையினர் எத்தகைய கொடுமைக்கு ஆளாகப் போகின்றனரோ, தமிழகத்தில் ஒரு கிரோஷிமா, நாகசாகியாக கல்பாக்கம், கூடங்குளங்கள் இருந்து விடக் கூடாது என்று மக்கள் கவலைப்படாமல் இருந்திட முடியாது.

எனவே அணு உலைவிபத்து இழப்பீட்டு மசோதாவை மட்டும் அல்ல, அணு உலை அமைக்கும் தொழிற் சாலைகளை அமைப்பதையே தடுத்திட பேரெழுச்சி கொள்ள வேண்டும். கல்பாக்கம், கூடங்குளங்களை இழுத்து மூடிட வேண்டும்.

Pin It

கடந்த மே 17 தொடங்கி 19 வரை தமிழீழத்தில் தமிழர்களைக் கொத்து கொத்தாகக்கொன்று மண் மூடி வைத்து உலகத்தின் கண்களை மறைத்து வைத்து ஓராண்டு முடிந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த நாளை இனவெறிக்கு எதிரானது என பறைசாற்றியுள்ளனர். சிங்கள இன வெறி அரசுக்கு துணையாக இந்திய அரசும் அதற்கு இணையாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் துணை புரிந்துள்ள நிலைகளை கண்டு தமிழர்கள் மனம் கொதித்துள்ள நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் இனத்தின் அடிப்படையில் நடந்த பேரழிவு படுகொலை என இதைத்தான் குறிப்பிட வேண்டும். எத்தியோப்பியாவில் எரித்திரியா மக்கள் மீது நடந்த படுகொலை, ஈராக் சதாம் உசேன், குர்து மக்கள் மீது நடத்திய படுகொலை நிகழ்வுகளுக்கு, அந்த மக்களின் துயரங்களுக்குப் பின் நடந்த மிகப் பெரிய பேரழிவு முள்ளி வாய்க்கால் படுகொலை. ஈராக் அதிபர் சதாம் உசேன் குர்து மக்களை கொன்றதற்காக அமெரிக்கப் படைகள் அந்த நாட்டை ஆக்கிரமித்து பின் அவரை தூக்கில் போட்டுக் கொன்றது. யுகோசோவிய அதிபர் போஸ்வின் மக்கள் நடத்திய இனவெறி படுகொலையை ஐரோப்பிய ஒன்றியங்கள் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது உலக நாடுகள் வழக்கு பதிவு செய்யாதது மட்டுமல்ல, அவரை போர்க் குற்றவாளி என்று சொல்வதற்கு எந்த நாடும் முன்வரவில்லை என்பது வரலாற்று துயரம்.

vanni_330முப்பது ஆண்டுகள் இயக்கம்நடத்தி வந்த புலிகள் ஓர் ஆண்டு முடிந்த பின்னும் வெளிப்படையாக இந்த படுகொலையை கண்டிப்பதற்கோ அல்லது உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்லவோ சரியான தலைமை இல்லாதது அதைவிட கொடூரமானது எதுவும் இருக்க முடியாது. ஆனால் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்பவர்கள் இந்த படுகொலையை உலக அளவில் எடுத்துச் சொல்ல என்ன முயற்சி செய்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. இந்நிலையில்உலக முழுக்க வாழும் தமிழர்கள் மத்தியில் ஒருவித ஏமாற்றமும், வேதனையும் கலந்து நடை பிணமாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நாம் வெளிப்படையாக சொல்லித்தான் ஆக வேண்டும். "தமிழர்களை யாரும் வெல்ல முடியாது' என்று வாய்சவாடல் அடித்து வந்தவர்கள் இன்று நாதியற்ற இனமாக உள்ள தமிழினத்தை யார் காப்பார்கள் என்று கேள்வி கேட்க நாம் அணியமாக வேண்டிய தேவையுள்ளதையும், வள்ளுவத்தின் அறத்தையும் புறநானூற்று வீரத்தையும் பேசி பேசி நாம் நம் வாயில் நாமே வாய்க்கரிசி போட்டுக் கொண்டோம்.

அதே நேரத்தில் உலக வல்லரசுகள் ஒன்று சேர்ந்து கொண்டு ராஜபக்சேவின் அரசை ஆதரித்தன. இந்தியப் பேரரசு தமிழர்களுக்கு எதிராக இருந்தது. தமிழக ஆட்சியாளர்கள் நாம் எதிர்பார்த்த அளவுக்குப் போராடவில்லை. இப்படியாக பல்வேறு எளிமையான காரணங்கள் இப்போதும் உண்டு. அது மட்டும்தான் காரணம் என்று சொல்லி நாம் அனைத்து செய்திகளையும் மறந்துவிட முடியாது.

உலக அளவில் போராடுகிற இயக்கங்களில் வலுவான இயக்கமாக விடுதலைப் புலிகளைத்தான் சுட்டிக் காட்டப்பட்டன. அப்படிப்பட்ட இயக்கம் இன்று என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படி ஒரு இயக்கத்தை ஒரேயடியாக அழித்துவிட முடியுமா? என்ற கேள்வியும் அனைவருக்கும் உண்டு. அதற்கு விடை சொல்ல வேண்டியவர்கள் விடுதலைப் புலிகளும், அதனைச் சார்ந்த ஆதரவாளர்களும்தான். ஆனால் யாரும் வாய் திறந்து பதில் சொல்லவில்லை.

முள்ளி வாய்க்கால் மரண துயரங்களை உலகில் பரந்து வாழும் தமிழர்கள் தங்கள் துயரமாகப் பதிவு செய்கிறார்களே தவிர மற்ற மக்களிடம் அதைப் பற்றி எந்த கருத்தும் இதுவரை இல்லை. அமெரிக்கப் படையின் வன் செயல்களை வியட்நாம் மக்கள் மற்றும் உலகஅளவில் உள்ள இடதுசாரி அரசுகள், இடதுசாரி இயக்கங்கள் ஒன்று சேர்ந்து தங்கள் துக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இரண்டாம் உலகப் போரின் போது கொல்லப்பட்ட யூதர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்கு உலக சமூகம் உள்ளது. ஆனால் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டிக்கவும், அந்தத் துயரத்தில் பங்கு எடுக்கவும் யாரும் இல்லை என்பதை உணரும்போது, நாம் எங்கோ அரசியல் பிழை செய்து இருக்கிறோம் என்பதை உணர வேண்டியவர்களாய் உள்ளோம்.

இன்று சர்வதேசங்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகள் மீட்கப்படுவதின் அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச மன்றங்களில் தங்கள் சிக்கலை வெளிக் கொண்டு வரவேண்டும். அதேபோல் 1 லட்சம் தமிழர்கள்மேல் கொல்லப்பட்டதற்கு போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டியதும் இன்றைய தேவை.

அதே நேரத்தில் ஈழத் தமிழர்கள் மேற்கொண்டு வரும் "நாடு கடந்த தமிழீழ அரசு' எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும்.அதில் குறிப்பாக தமிழகத்தின் பங்கு என்ன என்பதையும் தெளிவாக உணர வேண்டியவர்கள் அவர்கள்.அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இயக்கங்கள், மனித உரிமையாளர், அறிவு ஜீவிகள் பங்கு என்ன என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

தமிழ் இனத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் துயரம் தமிழ்நாட்டில் உள்ள அறிவு ஜீவிகளைப் பாதித்ததாகவே தெரியவில்லை. அதற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. அங்கு ஈழப் பிரச்சினையைப் பேசியவர்கள் அதை ஓர் அரசியல் பிரச்சினையாக பார்த்தார்கள். அது அவர்களின் பிரச்சனையல்ல. இங்குள்ள அறிவு ஜீவிகள் தேசிய இனப் போராட்டம் என்பது பிற்போக்கு தனமானது என்று ஒதுங்கிக் கொண்டு, அதற்கு எதிராக இருந்து வந்துள்ளனர்.அதனால் இங்குள்ள சில "மார்க்சிய அறிவு ஜீவிகள்' என்று சொல்லிக் கொள்பவர்கள். விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக கொட்டமடித்து கொண்டிருக்கும் சிங்கள அரசைக் கண்டிக்காமல் இதற்கு காரணம் புலிகளின் தவறான அரசியல்கள்தான் என்று பெருந்தேசிய வெறிக்கு துணை நின்ற நிகழ்வுகளும் நடந்தேறியது என்பது வெட்கக் கேடானது என்பதை மட்டும்தான் நாம் சொல்ல முடியும்.

உலகத்தின் கோடிக்கணக்கான மக்களால் மதிக்கப்படுகிற ஒப்பற்ற அறிவு ஆசான் காரல் மார்க்ஸ் நாம் உண்மையான சர்வதேச வாதியாகவும் உழைக்கம் மக்களுக்கு உண்மையானவர்களை இருக்கும் பட்சத்தில் அயர்லாந்து விடுதலைப் போராடுகிற இயக்கத்திற்கும் அயர்லாந்து மக்களுக்கும் நாம் துணையாக நிற்க வேண்டும் என்று தன் அறிக்கையில் தெளிவாக எழுதி இருந்தார். இதைப் படித்த நம் மார்க்சியர் அதை மட்டும் மறந்து விட்டனர்.அதேபோல் சுவிடன் நார்வே பிரிவை ஏற்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். அந்த மரபில் வந்ததாகச் சொல்லிக் கொள்பவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழ மக்களுக்கும் இன்று வரை எதிராக நிற்பதன் நோக்கம் என்ன?

நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்றுவரை வன்னி முகாமில் உள்ளவர்கள் பற்றி எந்தவிதமான உண்மை செய்திகள் வெளி உலகிற்கு வருவதில்லை. அப்படி வருமாயின் அது பெண்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டப் படுகிறார்கள் என அவ்வப்போது வெளிவரும் ஒருசில செய்திகளைத் தவிர உண்மை நிலை வெளிவருவதில்லை.

அதேபோல் இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளுக்காக ஐ.நா. சபையே விளக்கம் கேட்டு உள்ள நிலையில் ஐ.நா. சபையை சார்ந்த அதிகாரிகளே கூட இந்த இனப் படுகொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஐ.நா. பொதுச் செயலாளரின் தலைமை செயலாளராக உள்ள விஜய் நம்பியார் ஈழத்தில் நடந்த யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் ஒரு சமாதானத் தீர்வை எட்டுவதற்காகப் பலரிடமும் அணுகி பேசி வந்தார். யுத்தத்தின் கடைசி நாட்களில் புலிகளின் மூத்த தலைவர்கள் சிலர் விஜய் நம்பியார் மூலமாக சமாதானம் பேச முற்பட்டனர். அவர்கள் தான் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதில் விஜய் நம்பியாருக்கு பங்கு உள்ளது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அவர் மீதும் ஐ.நா. சபை விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளதையும், முள்ளி வாய்க்காலில் நடந்த இன அழிப்புப் போரில் இந்தியாவின் பங்கு அதிகமாக உள்ளது என்பதையும் இன்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஆனால் இங்குள்ள தமிழ்த் தலைவர் என்று சொல்பவர் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தான் உதவ முடியும் எனவும், அதற்கு அனைத்து வகையிலும் அதற்கு என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று கருணாநிதி போன்றவர்கள் சொல்வதை இங்குள்ளவர் அப்படியே ஒப்புவித்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழீழத்தில் நடந்த இந்த இன அழிப்புப் போரில் இலங்கை அரசுக்கு இணையாக இந்திய அரசு செயல்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்கக் கூடாது. அதேநேரத்தில் தமிழீழ விடுதலைக்கு தமிழீழ மக்கள் இதுவரை இந்தியாவையும் இந்திய அரசையும் நம்பி வந்ததை சரி செய்து கொண்டு இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு துணையாக இருக்காது இருக்கவும் முடியாது என்பதையும் வரலாற்று தெளிவோடு புரிந்து கொள்ள வேண்டும். இந்த முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு மூலக் காரணம் சிங்கள பேரின அரசும், இந்தியப் பார்ப்பனியமும்தான் மூலம் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா சொல்வார்: "வெள்ளை நிற வெறி அரசு எங்கள் மக்கள் மீது நடத்திய கொடுமைகளை மன்னிக்க முடியும்.ஆனால் மறக்க முடியாது.'' தமிழன் உள்ள வரை சிங்க இன வெறியன்களையும், இந்தியப் பார்ப்பன வெறியர்களின் கொடுஞ்செயலை மறக்க முடியாது.

Pin It

இலைகளில் படர்ந்து கொண்டிருந்த வெள்ளி வெயில் கண்களைக் கூச வைத்தது. என்னோடு பயணித்துக் கொண்டிருந்த உறவுக்காரப் பிள்ளைகள் இருவரும் தங்களுக்குள் கலகலத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தனியான வாகனத்தில் தொலைதூரப் பய்ணம் என்பது அவர்களவில் ஒரு ஊருக்கும் சிறைப்பட்டிருந்த உற்சாகத்தின் விடுதலை. வெளிக் காற்றின் மலர்ச்சியில் விகசித்துக் கொண்டிருந்தன அவர்களது இளம் முகங்கள். ஏ9 வீதியின் இரு கரையும் இராணுவப் பச்சையும் மரப் பச்சையுமாய் நீண்டிருந்தது. ஒரு துளிப் பசுமையுமற்ற வனாந்திரத்தினூடாகப் பயணிப்பது போன்ற வறண்ட மன நிலையை என்னால் தவிர்க்க முடியவில்லை. மனதின் புழுக்கம் என் கண்களுக்கு ஏறியிருக்கலாம். கூரையும் கதவுகளுமற்ற சில வீடுகளில் அகதியாக விதிக்கப்பட்ட விரட்டப்பட்ட மனிதர்கள் எண்ணெய் காணாத தலையோடு அமர்ந்திருந்தார்கள். அவர்களது விழிகள், எங்களைப் போன்றவர்களால் எக்காலத்திலும் உணர்ந்து கொள்ளப்பட முடியாத துயரத்தோடு ஏதோ ஞாபகத்தில் இலக்கின்றி நிலைத்திருந்தன. பாதையை ஞாபகத்தில் இலக்கின்றி நிலைத்திருந்தன. பாதையை அண்மித்திருந்த பகுதிகளில் மஞ்சள் நிற நாடாக்கள் கண்ணி வெடி அபாயப் பகுதிகளைப் பிரித்துக் காட்ட, குப்பை விறாண்டி போன்ற கருவியினால் இராணுவத் தினர் மண்ணைக் கிண்டி அபாயக் கிழங்குகளைக் கல்லிக் கொண்டிருந்தார்கள்.

yaal_library“இந்த வீதி எத்தனை பேரை போரைக் கண்டிருக் கும்!'' என்று நினைத்துக் கொண்டேன். ஜெயசுக்குறு நினைவில் வந்தது. வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கிறதாம். எழுத்தில், கல்வெட்டில், சுவடிகளில், வாய்ப் பேச்சில், மனிதர்களில் வரலாறு வாழ்கிறதென்கிறார்கள். வீதிகளும் வரலாற்றைப் பதிவு செய்து வைத்திருக்கின்றன. ஆனால், அவை மௌன சாட்சியங்களாக மிதிபட்டும் சிதையுண்டும் நீள நெடுகக் காலகாலமாகக் கிடக்கின்றன.

ஓமந்தையில் வாகனப் பரிசோதனைக்கென நிறுத்தப் பட்டோம். ஆட்களை இறக்கவில்லை. பொதிகளைக் கிளறவில்லை. கடந்த தடவையைப் போல மோப்ப நாய் எதுவும் எனது புகைப்படக் கருவியினுள் குண்டு இல்லையென்று உறுதி செய்யவில்லை. அசிரத்தையான, சோம்பல் படிந்த கேள்விகளும் என்னை நோக்கி எறியப்படவில்லை. அடையாள அட்டையை மட்டுமே காட்ட வேண்டியிருந்தது. “வேலைக்குப் போகிறீர்களா?'' என்றொரு இராணுவத்தான் கேட்டான். “இல்லை'' என்றேன்.

“போகாவிட்டாலென்ன'' என்பதுபோன்ற கனிந்த புன்னகையை அவன் தனது முகத்தில் தவழ விட்டான். “ஒத்துழைப்பிற்கு நன்றி'' என்று வழியனுப்பி வைத்தவர்களைக் கொஞ்சம் வியப்போடு கவனித்தோம்.

“நன்றாகத்தானே இருந்தார்கள்... திடீரென என்ன வாயிற்று!'' என்றாள் சித்தியின் மகள். தமிழர்கள்பால் "அன்பு' செலுத்தப்பட வேண்டுமென்று அவர்களுக்கு மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டிருப்பது தெளிவாகவே தெரிந்தது. "பிளாஸ்டிக்' கருணைகளை எப்போதும் தாங்க முடிவதில்லை. "பிளாஸ்டிக்' புன்னகைகளையும் அந்தப் பிரிவின் வழி அவர்கள் சொல்ல நினைக்கும் சேதிதான் என்ன? “விடுதலைப் புலிகள் அழிந்து விட்டார்கள். இனி நீங்கள் நிம்மதியாக வாழலாம்'' என்பதா? “உங்களவர்களை நாங்கள் கொன்று விட்டோம்தான்... இனி அது தொடராது'' என்ற குற்றவுணர்விலிருந்து பிறந்த குழைவா? எதுவானாலும் எங்களால் திடீர் தோசை மாவு போன்ற திடீர் அன்பைத் தாங்க முடியாமலிருந்தது.

தென்னிலங்கைச் சிங்களவர்களுக்கு புதிதாக ஒரு சுற்றுலாத் தலம் கிடைத்திருக்கிறது. அது யாழ்ப்பாணம்! அங்கே புத்தம் புதிதான விகாரைகள் முளைத்திருக் கின்றன. அவற்றை வழிபடுவதற்காக நாளாந்தம் ஆயிரக் கணக்கில் சிங்களச் சனங்கள் யாழ்ப்பாணத்திற்குப் போகிறார்கள். ஹைஏஸ் வாகனங்களிலும், பேருந்துகளி லும், விறகுகள், சட்டி பெட்டிகள், குழந்தைகள் சகிதம் அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். கொள்ளளவை மீறி அன்னாசிப் பழங்கள் நிறைக்கப்பட்ட வாகன மொன்று மூச்சுத் திணறியபடி நகர்ந்தது. “இந்திய மக்களின் அன்பளிப்பு'' என்று எழுதப்பட்ட வெள்ளை பாலித்தீன் பொதிகளடங்கிய வாகனமொன்று கடந்து போனது. கிலுகிலுப்பை, காப்புகள், ஒப்பனைப் பொருட்கள் இன்னபிற பிதுங்கி வழிய சிற்றூர்தியொன்று கடந்து விரைந்தது. யாழ்ப்பாணத்திற்கு அவர்கள் நாகரிகத்தைக் கொண்டு போனார்கள்.

நீலப் படங்கள், களியாட்டங்கள் வழியாக அங்குள்ள இளைஞர்களது உணர்வுகள் திசை திருப்பப்பட்டுக் கொண்டிருப்பதாக நான் சந்தித்த பெரியவர்களில் ஒருவர் ஆதங்கப்பட்டார். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். குறிப்பாக விடுதலையை அதன் பொருட்டான உடமை, உயிரிழப்புகளை. வழியில் வாகனம் நிறுத்தப்பட்டிருக்க, தலைவாரிக் கொண்டிருந்த சிங்கள இளம் பெண்ணொருத்தி மெதுவாகக் கடந்த எங்கள் கண்களை உற்று நோக்கினாள். அவள் எதையோ சொல்ல விழைவது போலிருந்தது! அது எனக்கு பிரமையாகவுமிருக்கலாம். அவர்கள் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாங்கள் உண்மையில் தெரிந்து கொள்ள விரும்பினோம். சாதாரண சிங்களச் சனங்கள் தமிழர்களின் "வீழ்ச்சியை'க் கொண்டாடு கிறார்களா? எங்களுக்காக அவர்கள் எப்போதாவது துயருற்றார்களா?

“எங்கள் மண்ணை நாங்கள் தோற்று விட்டோம்'' என்ற நினைவு நெருடிக் கொண்டேயிருக்கிறது. இருந்து விட்டுப் போங்கள் நாய்களா!'' என்று அவர்கள் யாசகம் இட்ட நிலத்தில் வாழ்வதைப் போன்ற கூச்சத்தைத் தோலில் உணர முடிந்தது. துட்டகை முனு எல்லாளன் வரலாறு திரும்பியதைப் போல ... ச்சே! இந்தப் புளித்த உதாரணங்களால் புண்ணை நக்கிக் கொள்வதை முதலில் நிறுத்தியாக வேண்டும். முன்னர் விடுதலைப் புலிகளின் சோதனைச் சாவடி இருந்த இடத்தில் ஒரு சுவடுமில்லை. எல்லாம் தலைகீழாகி விட்டது. காற்று மட்டும் உலாவிக் கொண்டிருக்கும் வெற்றிடத்தைக் கடந்து செல்கையில் உரத்து விம்மியழ வேண்டும் போலிருந்தது. கடல் கோள் கொண்ட கிராமத்திலாவது எச்சங்கள் மீதியிருக்கம்.

பிரதான வீதி திருத்தப்படும் இடங்களை, உள்நோக்கி இறங்கும் உப பாதைகள் நிவர்த்திக்கின்றன. அந்தப் பாதைகளில் ஓயாத வாகனப் போக்குவரத்து நிகழ்ந்துக் கொண்டிருக்க, செம்மண் புழுதியேறி சிவந்த தலைகளோடும் உடலோடும் நின்ற பனை மரங்கள் காட்சிப் பிழை போல் தோன்றின. பயண நெடுகிலும் அபத்த நாடகமொன்றில் தவறிப் போய் வந்தமர்ந்து எழுந்தும் போகவியலாமல் அலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்குமொருத்தியைப் போலிருந்தேன். நான் கிளம்பும் போதே அம்மா கேட்டா, “இப்ப ஏன் யாழ்ப்பாணத்துக்குப் போறாய்?'' “சும்மா பார்க்க'' என்று சொன்னேன். பழகிய, அறிந்த, உறவு மனிதர்களே ஊரெனப் பொருள் கொண்டால், நான் யாழ்ப்பாணத் திற்குப் போயிருக்க வேண்டிய அவசியமில்லை. நானறிந்த, பழகிய, உறவு மனிதர்களில் அநேகர் தொலை நகரங்களுக்கும் தேசங்களுக்கும் பெயர்ந்து போய் விட்டார்கள். அந்த அநிச்சய அமைதியை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். இனியொரு போதிலும் அங்கு போக வாய்க்காது என்று பயந்தேன். இறந்த காலத்தை மீள் சேகரிக்கும் பேராவலே அந்தப் பயணத்தை நோக்கி என்னைச் செலுத்தியது.

நீல நிறக் கூடாரங்கள் சீன எழுத்துக்களுடன் காற்றுக் குப் பழிப்புக் காட்டிக் கொண்டிருந்தன. கூரையைப் பிரித்து கூடாரத்தை வழங்கியிருக்கும் சீன பகவானுக்கு நன்றி.

முறிகண்டிப் பிள்ளையாரைச் சுற்றி வந்த போது அதுகாறும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் பெருகியோடி யது. எத்தனைதான் நடந்தபோதும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் கல்லுப் பிள்ளையார்களிடத்தில் நமது கண்ணீரைக் கொட்டித் தீர்ப்பதன்றி வேறு போக்கிடந்தான் ஏது? ஏதேதோ ஞாபகங்கள்... பழகிய போராளிகள். முள்ளிவாய்க்கால், நந்திக் கடல் சிதைந்து சதைக் கூழாய்க் கிடந்த உடல்கள், வைத்திய சாலைகளில் இரத்தக் கட்டோடு வலியில் கதறிக் கொண்டிருந்த குழந்தைகள், "எங்களைக் காப்பாற்றுங்கோ' என்று இரக்கமில்லாத வர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்ட பின் அனைவராலும் கைவிடப்பட்ட கண்ணீர் முகங்கள். வாழ்க்கை மிகக் குரூரமானது! அதிகாரங்களைச் சுண்டு விரலில் வைத்திருக்கும் அரசாங்கங்களே முதலில் தூக்கிலிடப்பட வேண்டியவை. சாதாரண சனங்களின் துரதிர்ஷ்டம் பயங்கரவாதிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருப்பதே!

கிளிநொச்சி சிதைந்து போய்க் கிடக்கிறது. சமாதான காலத்தில் (?) கண்ட கிளிநொச்சி நகரத்தை தலைகீழாகத் தூக்கி வீசியெறிந்தாற் போலிருக்கிறது. பள்ளிக் கூடத்தில் அகதிகள் இருக்கிறார்கள். நீதிமன்றக் கட்டிடத்தை ஊகிக்க முடிந்தது. ஒரு பெரிய காங்கிரீட் மலை சாய்ந்து கிடப்பதைப் போல் தண்ணீர்த் தொட்டி விழுந்து கிடக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்களின் "பாஸ்' போன்ற விடயங்களைக் கவனித்த "நந்தவனம்' இப்போது இராணுவ நிலையமாகியிருக்கிறது. "அறிவமுது புத்தக சாலை' யைத் தேடினேன். காணவில்லை. பேருந்து நிலையமும் பெயர்க்கப்பட்டு விட்டது. அநேகமாக அனைத்துக் கட்டிடங்களும் கூரையிழந்திருந்திருக்கக் கண்டோம். "த' என்று தொடங்கும் இலக்கத் தகட்டினை யுடைய வாகனங்கள் ஒருபுறத்தில் தகரக் குவியல்களாகக் கிடப்பதைப் பார்த்தோம். கரடிப் போக்குச் சந்தியருகில் புதிதாக ஒரு புத்தர் கருணைபாலித்தபடி எழுந்தருளி யிருக்கக் கண்டோம். நம்புதற்கியலாத கனவைக் கண்டு கொண்டிருப்பதைப் போன்றி ருந்தது.

கரடிப் போக்கு சந்தியினைக் கடந்து உப்பளப் பிரதேசத்தினுள் வாகனம் போய்க் கொண்டிருந்தது. உப்பு வாடை மூக்கில் அறைய, அந்த இடத்தில் அலைந்து கொண்டிருந்த வறட்சி மனதில் மேலும் முள் பரத்தியது. இதே ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதும், இராணுவச் சமநிலையில் அந்த வெற்றியானது அந்நாளில் ஏற்படுத்திய மாற்றமும் ஞாபகத்தில் வந்தது. "பொய்யாய் பழங்கதையாய் போயினவே' என்ற அரதப் பழசான புலம்பலும் கூடவே. ஆனையிறவினருகில் உப்புக் காற்றால் துருவேறிய ஒரு கவச வாகனம் கிடந்தது. அதன் மீது ஒரு புகைப்படம் வைக்கப்பட்டிருக்க, இளஞ்சிவப்பு பூக்கள் அதனடியில் கிடந்தன.

தொலைவில் இருந்து பார்க்கும்போது அது ஒரு இராணுவத்தானுடையதாகப் போலிருந்தது. அதைச் சுற்றி நின்று சில இளம் புத்த பிக்குகள் படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். இராணுவத்தைச் சேர்ந்த யாரோ ஒருவரின் வெற்றியை ஞாபகங் கொள்ளும் சின்னமாக அங்கே அந்தக் கவச வாகனம் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது என்பதை ஊகிக்க முடிந்தது. இயக்கச்சி, பளை, கொடி காமம், சாவகச்சேரி எங்கெங் கிலும் இராணுவப் பச்சையால் வேலியமைத்திருக் கிறார்கள். “விடுதலைப் புலிகள் வெற்றி கொள்ளப்பட்டு போர் உண்மையாகவே முடிந்து விட்டதெனில், மக்களைக் காட்டிலும் அதிகப்படியான இராணுவம் வழியில் குவிக்கப்பட்டிருப்பது எதனால்?'' என்ற கேள்வி அந்த வழியாகச் செல்லும் எவருக்கும் எழுவே செய்யும்.

இறந்த காலமும் பிறந்த மண்ணுந்தான் எத்தகைய கிளர்ச்சியூட்டுவனவாக இருக்கின்றன!

"ஆயுபோவன் வெல்கம் ரூ ஒஅஊஊNஅ என்ற வாசகத்தைத் தாங்கிய வரவேற்புப் பலகை ஆரவாரமாக யாழ்ப்பாணத் தினுள் வரவேற்கிறது. கைதடி நாவற் குழிப் பாலத்தில் சிங்கக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. ராஜபக்சே இங்கும் அகலமாகச் சிரித்தபடி நிற்கிறார். என்னவொரு வாஞ்சை வழியும் புன்னகை! டக்ளஸ் தேவானந்தாவும் "கட் அவுட்'களில் தன் பங்கிற்கு அளவாகப் புன்னகைக் கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக "டயலொக்' தொலை பேசியின் விளம்பரப் பலகைகளிலும் கடைகளின் பெயர்ப் பலகைகளிலும் ஒரு பெண் தீராத சிரிப்புடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள். "ஒரே நாடு ஒரே மக்கள்' இன்ன பிற ஐக்கியத்தைக் கோரும் வாசகங்கள் புளகாங்கிதமடையத் தூண்டுகின்றன.

பயணம் குறித்த கிளர்ச்சி ஏறத்தாழ தீர்ந்து விட்டி ருந்தது. உண்மையில் அந்த நிமிடமே நானும் திரும்பிச் செல்ல விரும்பினேன். ஏதோவொரு விசித்திரமான உணர்வு என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தது. அந்நிய மனிதர்கள் சாரை சாரையாகச் செல்வதைப் பார்த்தபடி அந்நிய நகரமொன்றில் எரிக்கும் வெயிலில் நின்று கொண்டிருப்பதாக உணர்ந்தேன். "ஊர் என்பது மனிதர்களே' என்பதை இத்தனை தூரம் வந்து தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

நாங்கள் யாழ்ப்பாண நூலகத்தைப் போய்ப் பார்ப்பதாகத் தீர்மானித்தோம். நாலரை மணியளவில் நூலக வாசலைச் சென்றடைந்தோம். வாசலில் ஒரே கூட்டமாயிருந்தது. "பார்வையாளர் நேரம் பிற்பகல் 56 வரை என்று வாயிலில் எழுதப்பட்டிருந்தது. தென்னிலங் கையிலிருந்து சுற்றுலா வந்திருந்த சிங்களச் சனங்கள் நிறையப் பேர் வாசலில் காத்திருந்தார்கள். “இவர்கள் திரும்பவும் எதற்காக வந்திருக்கிறார்கள்?'' என்று என் தங்கை கேட்டாள். "திரும்பவும்' என்ற சொல்லில் கசப்பு வழிந்தது. பெறுமதி மதிப்பிடவியலா இலட்சக்கணக்கான நூல்களை தீக்கிரையாக்கத் துணிந்த அந்தக் கொடிய இரவும் அதன் வழி உமிழப்பட்ட காழ்ப்புணர்வும் இனவெறியும் மறக்கப்படக் கூடியனவல்ல. உயிர், உடமையிழப்பினைக் காட்டிலும் அறிவழிப்பு என்பது மிகக் கீழ்த்தரமான படுபாதகம்.

யாழ்ப்பாணத்தில் எனது நண்பர்களில் சிலர் எஞ்சியிருந்தார்கள். அவர்களது தொலைபேசி இலக்கங்களும் என்னிடமிருந்தன. ஆனால் அவர்களைச் சந்தித்து என்ன கதைப்பது என்று தெரியவில்லை. உண்மையில் நான் அவர்களைப் பார்க்க விரும்பினேன். எதையும் கேட்க விரும்பவில்லை. நான் எனக்கே எனக்கேயான நம்பிக்கைகளில் வாழ்ந்து கொண்டி ருக்கிறேன். அவை சிதைக்கப்படுவதை நான் விரும்ப வில்லை. ஆதர்ச மனிதர்களும் ஆதர்ச உலகமும் என்றென்றைக்குமாக எனக்குள் வாழ்ந்து கொண்டி ருக்கட்டும். கோண்டாவிலில் எனது தோழியின் வீட்டுப் பக்கம் வாகனத்தைச் செலுத்தப்பணித்தேன். அங்கே அவளில்லை என்பதை நானறிவேன். புகைப் போக்கியிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த புகைச்சுருள் அங்கே யாரோ இருக்கிறார்கள் என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது. மனதின் நீர்ப்பரப்பில் காட்சியலை எழுந்தடங்கிற்று.

நல்லூர்க் கோயில் பூட்டப்பட்டிருந்தது. மாலை ஐந்து மணியோடு பூட்டப்பட்டு விடுவதாக அங்கே நின்றிருந்த ஒருவர் தெரிவித்தார். "திலீபன் இந்த இடத்தில்தான் உண்ணாவிரதமிருந்து மறைந்தார்' ஓரிடத்தைக் காட்டி தங்கையிடம் சொன்னேன். திலீபன் பசியில் கருகியபோது அவள் மூன்று வயதுக் குழந்தையாயிருந்தாள். (சித்தியின் மகளுக்கும் எனக்குமிடையில் பல்லாண்டுகள் வயது வித்தியாசம்) ஆலய முன்புறத்தில் மத்திய கல்லூரி மாணவர்கள் ஏதோவொரு நிகழ்வை முன்னிட்டு பறையினையொத்த மேளமொன்றை அறைந்து கொண்டிருந்தார்கள்.

“இன்றைக்கே வீட்டுக்குத் திரும்பிப் போய்விடலாம்'' என்றாள் தங்கை. எனது எண்ணமும் அதுவாகவே இருந்தது. உண்மையைச் சொன்னால் யாழ்ப்பாணத்தின் முகத்தை எங்களால் பார்க்க முடியவில்லை. ஏதோவொரு மாயக் குரல் என்னை அழைத்தது. பிறகு அது மெல்ல மெல்லத் தேய்ந்து அடங்கிப் போயிற்று. ஏ9 பாதையில் அவரவர் நினைவுகளில் ஆழ்ந்த முகங்களுடன் இருளை ஊடறுத்தபடி திரும்பிக் கொண்டிருந்தோம். பரந்தன் கிளிநொச்சியைக் கடந்தபோது பெரும் வலியொன்று வாள் போல் நெஞ்சைக் கீறிப் பிளந்தது. ஆங்காங்கே மினுங்கிக் கொண்டிருந்த வெளிச்சப் பொட்டுக்கள் இராணுவ முகாம்கள் என்பதை நாங்களறிவோம். அதற்குமப்பால் இருளுக்குள் காடுகளுக்குள் எத்தனை யெத்தனை ஈரக் கண்கள் நிராதரவாய் காத்திருக் கின்றனவோ என்ற ஞாபகம் உயிரைத் தின்றது. கடவுள் என்ற ஒருவர் இருப்பாரங்கில், அவரிடம் கேட்பதற் கென்றொரு கேள்வியுண்டு.

“இவ்வளவு கேவலமாக நாங்கள் கைவிடப்படுவதற்கு அப்படியென்ன பாவம் செய்தோம் ஆண்டவரே!''

குறிப்பு: கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்திற்குச் சென்று திரும்பிய பிறகு எழுதியது.

- தமிழ்நதி

Pin It

நகரங்களில் தண்ணீரைக் காசு கொடுத்துத்தான் வாங்கிக் குடிக்க வேண்டியுள்ளது. காசுக்கு வழியற்ற ஏழை எளிய மக்களோ இரண்டு நாளைக்கோ, மூன்று நாளைக் கோ, ஒருமுறை சில பகுதிகளில் கிழமைக்கு ஒரு முறை குழாய் வழியோ அல்லது வண்டியிலோ வரும் தண்ணீரைப் பிடித்து வைத்துத்தான் குடித்துக் காலத்தை ஓட்டுகின்றனர்.

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், தண்ணீரை உறைகளில் அடைத்து வைத்து விற்பார்கள், புட்டியில் அடைத்து விற்பார்கள் என்று சொன்னால் அப்போதைய மக்கள் சிரித்திருப்பார்கள். ஆறுகளில் தண்ணீர் அப்போது ஓடியது. ஒவ்வோர் ஊரிலும் ஏரி, குளங்கள் நிரம்பியிருந்தன.

அப்போதெல்லாம் முகவை மாவட்டமும், நெல்லையில் கரிசல் காட்டுப் பகுதிகளும் தாம் வானம் பார்த்த நிலம். மழையை மட்டுமே நம்பி இருந்த பகுதிகள். அங்கெல்லாம் கூட அப்போது ஊருணிகள் இல்லை. 1950களில் தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரிகள் இருந்ததாகக் கணக்குகள் சொல்கின்றன. இப்போது தமிழக ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன. ஏரிகள், குளங்கள் எல்லாம் மேடு தட்டிப் போய் அரசியல்காரர்கள் வளைத்துப் போட்ட இடங்களாகி விட்டன. சில ஆயிரம் ஏரிகளே எஞ்சி இருக்கின்றன. நிலத்தடி நீருக்கும் இருநூறு முந்நூறு அடிகளுக்குக் கீழே போனால்தான் உண்டு. கோடை வந்து விட்டாலே இந்தக் கொடுமைதான்.

kinley_360இன்னொரு புறம் மழைக் காலங்களிலோ மழை பொழியாமல் இல்லை. பொழிகிற மழை வெள்ளப் பெருக்கெடுத்து வீணாகிறது. ஒவ்வொரு முறை மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்கால் நூற்றுக் கணக்கினர் இறந்து போகின்றனர். இலக்கக் கணக்கான டி.எம்சி. தண்ணீர் வீணே கடலில் கலக்கிறது.

ஆறுகளில் தடுப்பணைகள் கட்டித் தேக்கி வைத்து நீரைப் பாதுகாக்கிற எந்தத் திட்டத்தையும் அரசு செய்யவில்லை. அன்றைக்கு ஆங்கிலேயன் ஆண்ட காலத்தில் இருந்த மக்கள் தொகை அளவீட்டிலே கூட தண்ணீரைத் தேக்கிடும் வகையில் மேட்டூர், வைகை, முல்லைப் பெரியாறு, சாத்தனூர் அணைகளைக் கட்டினார்கள். விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்ட காலத்திற்குப் பின் எந்த அணைகளையும் இந்த அரசுகள் கட்டியதில்லை.

புதிதாக எந்த ஓர் ஏரியையும், குளத்தையும் வெட்டிடவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த ஏரி, குளங்களைக் கூட தூர் எடுத்து, ஆழப்படுத்தி அதற்குரிய அரண்களை ஒழுங்குபடுத்தி வைத்தார்களா என்றால் இல்லை. பல ஏரிகளை அரசியல்கட்சிக் காரர்களே கூறு போடடு விற்றுக் கொழுத்துப் போனார்கள். சில ஏரிகளில் வெளிநாட்டுத் தொழிற்சாலைகளுக்கு இடத்தைக் கொடுத்து, அதற்குரிய பங்குத் தொகையையும் வாங்கி அழுத்திக் கொண்டார்கள்.

அதற்கெல்லாம் மேலாகத் தமிழகத்தில் இருக்கிற பாலாறு தொடங்கி, தமிரவருணி வரையுள்ள ஆற்றோரங்களில் எல்லாம் அமெரிக்க நிறுவனமான பெப்சி, கொக்கோ கோலா தொழில் நிறுவனங்களுக்கு இடத்தைக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. அங்கு 4000 அடிகள் ஆழம் வரை குழாய்கள் செருகி நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன அந்த நிறுவனங்கள். இதனால் அண்டை ஊர்களில் உழவுக்குக் கூட நிலத்தடி நீர் கிடைக்க வழியின்றி போகிறது. அவ்வாறு உறிஞ்சும் தண்ணீரை ஆக்குவானபீனா, கின்லே என்று புட்டிகளில் நிறைத்து விற்றுக் கொள்ளையடிக்கின்றன அந்த நிறுவனங்கள்.

பெப்சி, கொக்கோ கோலா போன்ற இந்த அமெரிக்க நிறுவனங்கள் நீர் வளம் நிறைந்த கேரளாவில் நிறுவ முடியவில்லை. அந்த மக்கள் கடுமையாகப் போராடி விரட்டி அடித்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலோ வறண்டுபோன ஆறுகளின் கரைகளில் நிறுவப்பட்டுள்ள அந்தத் தொழிலகங்கள் நிலத்தடி நீரையும் ஒட்ட உறிஞ்சிக் கொழுக்க வழி அமைத்துத் தந்திருக்கிறது தமிழக அரசு.

இதன் வழி தமிழகத்தில் தெருவுக்குத் தெரு, இருந்த குளிர் குடிப்பு சோடா நிறுவனங்களையெல்லாம் இழுத்து மூடும்படி செய்துவிட்ட அந்த அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் பெப்சி, கொக்கோ கோலா குளிர் குடிப்புகளை மட் டுமே விற்பனை செய்கின்றன. ஆக, சொந்த நிலத்தின் தண்ணீரைக் கூடப் பெறத் தகுதியற்றவர்களாக மண்ணின் மக்கள் ஆக்கப்பட் டுள்ளனர்.

இயற்கை அளித்திருக்கிற தண்ணீர், காற்று எனும் கொடைகளைக் கூட மக்கள் காசு கொடுத்துத் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் எனும் கொடுமையை உலக முதலாளிகள் உருவாக்கி வருகிறார்கள். அதற்கு வழி அமைத்துத் தருகின்றன இந்திய, தமிழக அரசுகள்.

தண்ணீர் வண்டி எப்போது வரும் எனத் தவம் கிடக்கின்றனர் நகர மக்கள். தங்கள் வாழ்க்கை முயற்சி களில் பெரும்பகுதி காலத்தைத் தண்ணீருக்காகவே இழக்கின்றனர் சிற்றூர்ப் புற மக்கள். இவற்றையெல்லாம் நிலையாக மாற்றுகிற வகையில் அரசு திட்டங்கள் தீட்டியாக வேண்டும். ஏரிகள், குளங்கள் தூர் வாரப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும். புதிதாக ஏரிகள் பல வெட்டப்பட வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு மழைக்கால வெள்ள நீர் தேக்கப்பட வேண்டும்.

இயற்கையின் கொடையாக இருக்கும் தண்ணீர் காற்று ஆகியவை மக்களுக்கு இலவயமாகக் கிடைக்க அரசு வழி அமைத்திட வேண்டும். மக்களின் பொழுதுபோக்கிற்காகத் தொலைக்காட்சிப் பெட்டியை இலவயமாகத் தரும் தமிழக அரசு, மக்களின் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படை யான தண்ணீரை இலவயமாகத் தந்தாக வேண்டும்.

தமிழக அரசே! தண்ணீரை இலவயமாகக் கொடு! என்று மக்கள் போராட வேண்டும்.

தண்ணீரைக் காசுக்கு விற்கும் கயமைப் போக்கைத் தடை செய்ய வேண்டும். காசுக்கு விற்போரைச் சிறை செய்ய வேண்டும்.

தமிழகத் தண்ணீரை உறிஞ்சி விற்றுக் கொள்ளை யடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களைத் தமிழகத்தி லிருந்து விரட்டியாக வேண்டும்.

தமிழக மக்களே விழித்தெழுவோம்! தமிழக நீர் வளத்திற்கு, நீர் உரிமைக்குப் போராடுவோம்!

Pin It

தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் “சவுக்கு'' என ஒரு இணையதளம் தொடங்கப்பட்டு அந்த இணைய தளத்தில் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் போலி என்கவுண்டர் கொலையையும் உயர் அதிகாரிகளின் ஊழலையும் வெளிக் கொண்டு வந்து மக்களின் பார்வைக்கு வைக்கிறார்கள். அந்த வகையில் தமிழக உளவுத் துறையின் தலைவர் சாபர் சேட் அரசை ஏமாற்றி தன் மகள் பேரில் ஒரு கோடிக்கும் அதிகமானவிலையில் வீட்டு மனை பெற்றது உளவுப் பிரிவின் இரகசிய நிதியிலிருந்து தன்னுடைய செலவினங்களுக்காகத் திருடிக் கொண்டது. இதுபோலவே நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ், சாபர் சேட் வாங்கிய வீட்டு மனை அருகிலேயே அவரும் அரசை ஏமாற்றி வீட்டு மனை வாங்கியது, மேலும் சாபர் சேட் சனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் எதிராக 25 போலி என்கவுண்டர் படு கொலை செய்தது என தொடர்ச்சியாக ஆதாரங்களோடு வெளியிட்டு வந்தது.

இதனைக் கண்டு பொறுக்க முடியாத சாபர் சேட் சவுக்கு இணைய தளத்திற்கு உதவியாக இருந்த சங்கர் என்பவரை பொய் வழக்கில் கைது செய்தது. மேலும் சங்கர் மீது ரவுடிகளை ஏவி கொலை செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளதாவும் செய்திகள் வருகிறது. மக்களுக்கு எதிரான ஊழல்வாதிகள், ஒடுக்குமுறை யாளர்கள் ஆகியோருக்கு எதிராக அணி திரள்வோம். சனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கம் கொலைகார கும்பலை அடித்து விரட்டுவோம்.

மேலும் செய்திகளுக்கு www.savukku.net இணையத்தைப் பாருங்கள்.

Pin It

உட்பிரிவுகள்