சூயெஸ் (SUEZ) மற்றும் விவெண்டி (Vivendi Environnement) என்று முன்பு அழைக்கப்பட்ட வியோலி என்விராண்மெண்ட் (Veolia Environment) என்னும் இரு நிறுவனங்கள்தான் பிரான்ஸின் தண்ணீர் வினியோகத்தைக் கட்டுப்படுத்தும் மிகப் பெரிய நிறுவனங்கள்.

சூயெஸ் நிறுவனம் தண்ணீர் வணிகத்தில் 1822ஆம் ஆண்டு முதல் உள்ளது. உலகம் முழுக்க 15 கோடி வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறது.

  • அதே போல் வியோலி நிறுவனம் 150 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நிறுவனம். நூறு நாடுகளில் 11 கோடி வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் மற்றும் வடிகால்த் தேவைகளை நிறைவு செய்கிறது. உலகில் 7000 நகரங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இவ்விரு நிறுவனங்களும் குடிநீர் வணிகத்திற்காக ஒப்பந்தமிடும் மாநகராட்சிகளேயே விலைக்கு வாங்கும் பொருளாதார வலிமை கொண்டவை !
  • ஆனால் இம்மாபெரும் நிறுவனங்களின் பங்களிப்போடு தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் பாரீஸ் உட்பட பல நகரங்களில் இன்று இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு மீண்டும் மாநகராட்சிகளே பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதுதான் மிக முக்கியக் காரணமாகும்.
  • மேலும் இந்தத் தண்ணீர் நிறுவனங்கள் தங்களுடைய ஒப்பந்தத்தை தக்கவைத்துக் கொள்ள அரசியல்வாதிகளுக்குக் கொடுத்த லஞ்சம் அம்பலமாகியது. பாரீசின் நகரத் தந்தையாக (Mayor) இருந்தவரான ஜாக்விஸ் சிராக் பிரான்ஸ் நாட்டின் அதிபராக வெற்றி பெற்ற பிறகும் பாரீஸின் நகரத் தந்தையாகவும் சில மாதங்கள் தொடர்ந்ததற்கு தண்ணீர் கம்பெனி களிடமிருந்து கிடைத்த கையூட்டுதான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.
  • உலக நாடுகளில் தண்ணீர் நிறுவனங்கள் தங்களுடைய வருவாயிலிருந்து 3 முதல் 5 விழுக்காடுவரை அரசியல்வாதிகளுக்கு கையூட்டாகவும் சில அரசியல் பிரமுகர்களை தங்கள் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணிபுரிவதாக பொய்யாகப் பதிவு செய்து அவர்களுக்கு ‘சம்பளமாக’ கொடுத்த சம்பவங்கள் பல அம்பலமாகியுள்ளன!

லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் நுழைந்த சூயஸ் நிறுவனம் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அந்நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தி அரசுக்கு மனு அளித்தனர். 65 சதவிகித மக்கள் பரிந்துரைத்த படி அரசியலைமைப்புச் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு இயற்கை வளங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பது நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எல்லா இயற்கை வளங்களும் அரசுடைமையாகவே இருக்க வேண்டும் என்ற மக்கள் போராட்டங்கள் லத்தீன் அமெரிக்கா முழுவதும் வெடித்தெழுந்தன.

தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்ட பிறகு உயர்த்தப்பட்ட தண்ணீர் கட்டணத்தை மக்கள் செலுத்த முடியாமல் போனதால் 2003 மற்றும் 2004ஆம் ஆண்டு ஒரு கோடி மக்களின் குடிநீர் இணைப்பை அரசு துண்டித்தது.

GDF Suez என்னும் நிறுவனம் தெற்கு ஜெர்மனியில் போடப்பட்ட மேகால் பைப்லைன் (MEGAL Pipeline) ஒப்பந்தத்தில் போட்டி நிறுவனங்களுடன் ‘Collusion’ என்னும் கூட்டுக்களவு ஒப்பந்தத்தில் ஈடுபட்டதால் சூயெஸ் நிறுவனத்திற்கு 2009ம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பிய ஆணையம் 553 மில்லியன் யூரோவிற்கான (4424 கோடி ரூபாய்) தண்டம் விதித்தது.

சூயஸ் கால்வாயைக் கட்டி நிர்மாணித்த மாபெரும் நிறுவனம் என்று பெருமையோடு கூறும் மாநகராட்சி ஆணையருக்கு சூயஸ் நிறுவனத்தின் இந்தக் கசப்பான வரலாறும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.

உலக சம்பவங்கள், குறிப்பாக தண்ணீரைத் தனியார்மயமாக்கி வெற்றி கண்டதாகக் கூறப்படும் பிரான்ஸ் நாட்டில், சூயஸ் நிறுவனம் கொடி கட்டிப் பறக்கும் நாட்டில் 2008ம் ஆண்டு தனியாரிடமிருந்து தண்ணீர் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பாரீஸ் மாநகராட்சியே (Remunicipalisation) குடிநீர் விநியோகத்தை ஏற்று நடத்துகிறது. அப்படியானால் ‘குறைந்த செலவில் நிறைந்த சேவை ’ என்ற முழக்கத்தோடு புகுத்தப்பட்ட தனியார் பங்களிப்பு, அது எந்த வடிவத்தில் வந்தாலும், அது தோற்றுவிட்டது என்பது மட்டுமின்றி மக்களால் விரட்டியடிக்கப் பட்டிருக்கிறது என்பதும் வரலாறாகும். ஆப்பிரிக்காவையும் லத்தீன் அமெரிக்காவையும் சுரண்டி கொழுத்த அனுபவத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது நம்மை சுரண்ட வந்துள்ளன. அவற்றை எதிர்கொள்ள லத்தீன் அமெரிக்க மக்கள் நமக்கு வழிகாட்டுகிறார்கள்.

உலக வங்கியின் தண்ணீர் கொள்கை:

உலக வங்கி தண்ணீர்த் துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் நீராதாரங்களை வணிக மயமாக்கித் தண்ணீர் பயன்பாட்டை தனியார்மயப் படுத்துவதை தொடங்கி வைத்தது. 1992 ஆம் ஆண்டு “நீராதார மேலாண்மையை மேம்படுத்துவது” “Improving Water Resources Management” என்னும் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வின் அடிப்படையான புரிதலே இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் பகிரப்படும் தண்ணீர் இலாபகரமானதாகவோ திறன் கொண்டதாகவோ அமையாது என்பதுதான்.

பொதுச் சேவையாக விநியோகிக்கப்படும் தண்ணீரில் 40 முதல் 50 விழுக்காடு வீணாகிறது அல்லது திருடப்படுகிறது. இதனால்தான் ஏழை எளிய மக்களுக்குத் தேவையான தண்ணீரை அவர்களுக்கு அளிக்க முடியவில்லை. ஆகவே தண்ணீர் விநியோகத்தைத் திறமையாக கையாள தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என உலக வங்கி பரிந்துரைக்கிறது.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது!

உலக வங்கி மற்றும் உலக நிதியம் கொடுக்கும் கடன்களை வாங்கும் நாடுகள், வாங்கிய கடனைத் திரும்ப செலுத்துவதற்கு நாட்டின் செலவினங்களை குறைக்க வேண்டும். அதற்கு நாட்டில் பொது நலன் கருதி கொடுக்கப்படும் மானியங்களையும், இலவசங் களையும் அறவே நிறுத்த வேண்டும். மேலும், பொதுச் சேவைகளை குறைத்து கட்டணச் சேவைகளாக மாற்ற வேண்டும் என உலக வங்கி வலியுறுத்துகிறது. காசில்லாமல் எவர் ஒருவரும் எந்த சேவையையும் பெற முடியாது என்பதைப் பொருளாதாரக் கொள்கையாகவும் ஆட்சிக் கொள்கையாகவும் மாற வேண்டுமென உலக வங்கி வற்புறுத்துகிறது.

‘பிள்ளைப் பேறு’ உட்பட எல்லா சேவை களும் விற்பனைக்கே ! ஆகவே அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடன் பெறுவதற்கான நிபந்தனைகளாக முன்வைக்கப் படுகின்றன. பொதுத்துறைத் சேவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து அவற்றைத் ‘திறம்படவும்’ ‘இலாபகரமாகவும்’ நடத்தலாம் என்று வலியுறுத்துகின்றனர். இந்த வரிசையில் தான் குடிநீர் விநியோகமும் வருகிறது. தண்ணீர் தனியார்மயமாக்கலின் மிக முக்கியமான இந்திய அனுபவத்தை இங்கே பதிவு செய்தாக வேண்டும். சட்டீஸ்கர் அரசாங்கம் குடிநீர் வினியோகத்தை ரேடியஸ் வாட்டர் என்னும் தனியார் கம்பெனியிடம் ஒப்படைத்தது. 22 ஆண்டு ஒப்பந்தம். இதில் சிவ்நாத் என்னும் நதியின் முழுக்கட்டுப்பாட்டை 23. 6 கிலோ மீட்டருக்கு இந்த நிறுவனத்திற்கு ஒப்படைக்கப் பட்டது. இதன் காரணத்தால் இந்த பகுதியில் மீனவர்களுக்கான மீன்பிடி உரிமை மறுக்கப் பட்டது. விவசாயிகளுக்கான தண்ணீர்ப் பயன்பாடு குறைக்கப்பட்டது. மறுபுறம் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் தண்ணீர் வழங்கப்பட்டது. இதற்கு எதிரான மக்கள் போராட்டங்களும் தொடர்கின்றன. தண்ணீர் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவை என்பதோ அதனை வணிகப்பொருளாக மாற்றக் கூடாது என்பதோ உலக வங்கியின், உலக முதலாளியக் கண்ணோட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்காது. ஆனால், மக்களின் நலவாழ்வில் அக்கறை யுள்ள சனநாயக அரசாங்கங்கள் உலக வங்கியின் இந்த அணுகுமுறையை அடியோடு மறுத்திருக்க வேண்டும்.

கருநாடக மாநில அனுபவம் கூறுவது என்ன?

மத்திய அரசாங்கம் 2002ம் ஆண்டு முன்மொழிந்த தேசியத் தண்ணீர்க் கொள்கையை (National Water Policy, 2002) அடியொற்றி, தண்ணீரை ஒரு வணிகப் பொருளாக்கி, குடிநீர் சேவையை தனியார்மயமாக்கிய முதல் மாநிலம் கருநாடகம் ஆகும். உலக வங்கி 2003ம் ஆண்டு கடன் வழங்குவதற்கு முக்கிய நிபந்தனையாக முன்மொழிந்த தண்ணீர் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்று கருநாடக அரசும் உலக வங்கியும் மேற்கொண்ட ஒத்திசைவிற்கு ஏற்ப கருநாடகத்தில் குல்பர்கா, பெல்காம், ஹுப்பள்ளி, தார்வாட் ஆகிய நகரங்களில் ஏறக்குறைய இரகசியமாக பொதுமக்களுக்கு எவ்வித அறிவிப்பும் இன்றி 2005-6 ஆம் ஆண்டில் தண்ணீர் விநியோகம் பிரென்ச் கம்பெனியான வயோலியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 16 நகரங்களில் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதி உதவியுடன் தண்ணீர் தனியார் மயமாக்கத் திட்டமிடப்பட்டன. அவ்வகையில் தண்ணீர்த் தனியார்மயமாக்குவதற்கான இந்தியாவின் தலை நகரமாக கருநாடகம் திகழ்ந்தது என்றால் மிகையில்லை. பொதுத்துறை -தனியார் ஒப்பந்தம் (PPP - Public Private Partnership) என்னும் பெயரில் இவை மக்கள் மீது சுமத்தப்பட்டன.

“ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு தண்ணீர்” என்று ஆசை வார்த்தை காட்டப்பட்டது. மைசூரில் காலம் காலமாக குடிநீர் விநியோகித்து வந்த பொதுநிறுவனமான வாணிவிலாஸ் தண்ணீர் நிறுவனத்திடமிருந்து (Vanivilas water works) விநியோகத்தை மாற்றி டாடா நிறுவனமான JUSCOவிற்கு 148 கோடி ரூபாய் செலவில் மூன்றாண்டிற்கான திட்டமாக ஒப்படை க்கப்பட்டது. (வாணி விலாஸ் தண்ணர்ீ நிறுவனம் என்பது 150 ஆண்டுகளுக்கு முன்பு, மைசூர் ராணியாரின் தங்கக்காசுகள் கோர்த்த தங்கச்சங்கிலியை விற்று மக்களுக்காக உருவாக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவாகும்). ஒப்பந்தம் போட்ட காலத்திலிருந்தே எதிர்ப்பும் கிளம்பியது.

தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டவுடன் பொதுக் குழாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. பொதுக் கிணறுகளும் ஆழ்குழாய்க் கிணறுகளும் மூடப்பட்டன. குடிசைகள் உட்பட எல்லா வீடுகளுக் கும், நீரின் பயன்பாட்டைக் கணக்கிடும் தண்ணீர் மானிகள் (Water Metres) பொறுத்தப்பட்டன.

இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக செலவிடப்பட்ட தொகையை வட்டியுடன் ஈட்டுவதற்கு தண்ணீர்க் கட்டணம் ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டது. 24 மணி நேர குடிநீர் விநியோகம் என்று முதலில் கூறப்பட்டது. பிறகு 24 மணி நேரம் என்றால் 8 மணி நேரம் தான் என்று விளக்கம் அளிக்கப்பட்டது!

மைசூரில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்திய நேரத்தில் மாநகரசபை தற்காலிகமாக நிறுத்தப் பட்டிருந்தது. மாநகரச் சபை நடைபெறாத நேரத்தில் இத்தகைய திட்டத்தை நகர மக்கள் மீது திணிக்கக்கூடாது என கொதித் தெழுந்தனர். இதன் விளைவாக நகரம் கொந்தளித்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு கட்டண உயர்வைத் தவிர சேவையில் எந்த முன்னேறமும் இல்லை என்பது நிரூபணமானது. குறிப்பாக ஏழை எளியமக்கள், விளிம்பு நிலை மக்கள் மீது சுமத்தப்பட்ட தண்ணீர்க் கட்டணத்தை மக்கள் செலுத்த முடியாமல் திணறினர். கட்டண பில்கள் பல்மடங்கு பெருகின. தார்வாடில் மட்டும் ரூபாய் 10000 முதல் 57000 வரை தண்ணீர்க் கட்டணம் செலுத்த வேண்டிய பில்கள் குவிந்தன. இதற்கு எதிர்வினையாக “கட்டண பில்களை கொளுத்தி தண்ணீர் உலையை வைத்து குளித்து விடுவோம்” என்று தார்வாடில் ஒருவர் கூறியது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. போராட்டத்தின் விளைவால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டன. தனியார் நிறுவனங்கள் தயவு தாட்சண்யமின்றி நடந்து கொண்டன.

மக்கள் எதிர்ப்பின் விளைவாக மைசூர் நகரில் மீண்டும் மாநகராட்சியே குடிநீர் விநியோகத்தை ஏற்றது. அவ்வகையில் இந்தியாவில் தண்ணீர் விநியோகத்தை தனியாரிடமிருந்து மீட்டு மாநகராட்சியே அதனை பராமரிக்கும் மீள் மாநகரமயமாக்கம் (Re-municipalisation) ஏற்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை மைசூர் நகரம் பெற்றுள்ளது. மைசூருக்குப் பிறகு மற்ற நகரங்களில் போடப்பட்டுள்ள குடிநீர் விநியோக திட்டங்கள் பலத்த எதிர்ப்புகளிடையே தொடர்கின்றன. தொடர்வது மறு பரிசீலனையில் உள்ளன.

கருநாடகத்தின் பிற நகரங்களில் அமல் படுத்துவதற்கு முன்பு முதன் முதலில் பெங்களூரில் தண்ணீர் தனியார் மயமாக்கு வதற்கான திட்டம் முன்மொழியப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் பலத்த எதிர்ப்பு இருந்ததால் கருநாடக அரசு அத்திட்டத்தை கைவிட்டது. ஆனால் ஐந்து சிறு நகரங்களில் எவ்வித அறிவிப்பும் இன்றி இரகசியமாக தனியார்மயத் திட்டங்கள் அமல்படுத்தப் பட்டன.

மேலும் 16 நகரங்களில் அமல்படுத்தும் திட்டமும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஆனால் மக்களின் ஏகோபித்த எதிர்ப்பின் காரணமாக நான்கு சிறு நகரங்களைத் தவிர பிற இடங்களில் உள்ளூர் நிறுவனங்களோடு ஒப்பந்தப் புள்ளி போடப்பட்டுள்ளன.

பல நகரங்களில் HDPE உயர்தர குழாய்களை போடுகிறோம் என்ற பெயரில் கட்டமைப்பு ஒப்பந்தங்களை தனியாருக்குக் கொடுத்துள்ளனர்.

- பொன்.சந்திரன்

Pin It