"இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும் வாய்ப்புள்ளது என்று கடந்த ஜூலை மாதமே உளவுத் தகவல் அளிக்கப்பட்டு டெல்லி காவல்துறை அதிகபட்ச அலர்ட்டில் இருந்த நிலையில் இப்படித் தாக்குதல் நடந்திருப்பது துரதிருஷ்டவசமானது..'' என்று டெல்லி ஹைகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.
இப்படிச் சிதம்பரம் சொல்வது முதன் முறையல்ல. கடந்த ஆண்டு மும்பைத் தாக்குதல் நடந்தபோதும் அவர் அதே பதிலைத் தான் சொன்னார். குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழும்போதெல்லாம் இது குறித்து உளவுத் தகவல் வந்தது; அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரித்திருந்தது; புடலங்காய் அமைப்பு எச்சரித்திருந்தது என்று சொல்வதும் விசாரணைக் குழுவை அமைத்து காலம் முழுவதும் குற்றவாளிகளைத் தேடித் திரிவதும் வாடிக்கையாகி விட்டது.
ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றும் கோயில் களை தீவிரவாதிகள் தகர்க்கச் சதி, ரயில்களை குண்டு வைத்து தகர்க்கச் சதி என்று 1993ம் ஆண்டு முதல் கீறல் விழுந்த ரிக்கார்டாக நமது உளவு அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. அன்றைய தினத்தில் எந்தத் தாக்குதலும் நடந்ததில்லை. ரயில் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் இதனால் சோதனை என்ற பெயரில் ஏற்படும் சிரமங்களும், பீதியும்தான் மிச்சம்.
ஆனால் அதே சமயம், இந்தியாவில் பயங்கரவாத சம்பவம் நிகழலாம் என்று வெளிநாட்டு உளவு அமைப்புகள் எச்சரிக்கை செய்தபோதெல்லாம் பெரும்பாலானவை உண்மை என்பதை அப்போது நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் நிரூபித்திருக்கின்றன. ஆக, வெளிநாட்டு உளவு அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் நமது உளவு அமைப்புகள் அசட்டையாக இருந்துள்ளன என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது.
குண்டு வெடிப்புகள் நிகழக் கூடும் என்று முன் கூட்டியே தகவல் கிடைத்த பின்பும் இந்திய காவல்துறை மற்றும் உளவுத்துறைகளின் கையாலாகத்தனம் இதுபோன்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் பளிச்சிடுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், எந்த வெளிநாட்டுச் சக்திகளும், வெளிநாட்டு தீவிரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுறுவி பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்துவதில்லை என்பதே!
இந்தியாவிற்குள் இருந்து இயங்கும் பயங்கரவாத குழுக்கள்தான் பயங்கரவாதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் இன்னமும் இனம் காணப்படாமல் இருக்கின்றன. நாட்டிற்குள்ளே பயங்கரவாதக் குழுக்களை இனம் காண முடியவில்லை என்றால் காவல்துறையும், உளவுத் துறையும் எதற்காக இயங்குகின்றன?
“பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்க பல அமைப்புகள், நவீனப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆயினும் தீர்க்க இயலாத சிக்கல்களும், பலவீனங்களும் நமது அமைப்பில் உள்ளன. அதனை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்...'' என்று இயலாமையை வெளிப்படுத்துகிறார் நாட்டின் தலைமை அமைச்சரான மன்மோகன் சிங். இதன் அர்த்தம் என்ன?
எங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் முரண்பாடுகளும், பலவீனமும் இருப்பதால் தான் குண்டு வெடிப்பு நிகழ்கிறது என்றுதானே அர்த்தம்? இதைச் சொல்வதற்கு பிரதமர் வெட்கப்பட வேண்டாமா? முன் கூட்டியே கிடைக்கும் தகவல்களில் கூடுதல் கவனம் எடுக்காமல் - பயங்கரவாத சம்பவம் நிகழ்ந்த பின் இயலாமையைச் சொல்லிப் புலம்புவது ஒரு வல்லரசு நாட் டுக்கு ஏற்புடையதாகுமா?
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் இத்தனை ஆண்டுகளில் ஒரு பயங்கரவாதச் சம்பவமும் நிகழவில்லையே. அப்படி என்றால் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் அந்தச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்?
நாம் ஏன் இன்னும் பாடம் படிக்கவில்லை? பயங்கரவாதச் செயல்களைத் தடுக்க சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏன் நம்மிடத்தில் இல்லை?
ஆனால் நம் பிரதமருக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் பத்திரமாக இருக்கிறார்கள். ஆறு அதிரடிப் படைகளைக் கொண்ட வீரர்களுடன், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஃபாய் அமெரிக்காவில் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்ட சுப்பிரமணிய சுவாமி வலம் வருகிறார். ஆனால் இந்த தேசத்தை நேசிக்கும் அப்பாவி மக்கள் பயங்கரவாதத்திற்கு பலியாகின்றனர்.
மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தாமல் தங்களின் பாதுகாப்பை மட்டும் முழுமைப்படுத்திக் கொண்டு அரசியல் தலைவர்கள் உலா வருவதால்தான் நாட்டின் பாதுகாப்பை பற்றிய அக்கறை இவர்களிடம் இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே தங்களின் இயலாமையை மறைக்க ஏதாவதொரு இஸ்லாமிய இயக்கத்தின் மீது பழியைப் போட்டு விடுகிறது விசாரணை அமைப்புகள்.
டெல்லி ஹைகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து சில மணித் துளிகளில் ஹுஜி தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றிருக்கிறது என்று ஊடகங்களுக்கு செய்தி கொடுக்கின்றன விசாரணை அமைப்புகள். அடுத்த நாள் இல்லை! இல்லை!! இந்தியன் முஜாஹித்தீன் பொறுப்பேற்கிறது என்று கூறுகின்றன.
இதற்கு விசாரணை அமைப்புகள் முன் வைக்கும் ஆதாரம் - குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களோ, தடயங்களோ அல்ல... இன்ன அமைப்புகள் தான் என்று உறுதிபட கூறும் ஆதாரங்களும் அல்ல... மாறாக இமெயில் வந்ததை பெரிய ஆதாரமாகக் காட்டுகிறார்கள்; இதற்கு வெட்கப்பட வேண்டாமா?
இமெயில் உலகின் எந்த மூலையிலிருந்து எவர் வேண்டுமானா லும் அனுப்பலாமே! இந்தியன் முஜாஹித்தீன் அனுப்பிய இமெயிலின் ஐ.டி. என்கிறது டெல்லி காவல்துறை. இது ஒரு ஆதாரமா?
நாட்டிற்குள் இருக்கும் பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் மீது பழி போட கடந்த காலங்களில் பல குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பது தெளிவாக இனம் காணப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்ட இந்துத்துவா இயக்கமான அபினவ் பாரத் குண்டு வெடிப்பை நிகழ்த்திவிட்டு இந்தியன் முஜாஹித்தீன் பெயரில் ஏன் இமெயிலை அனுப்பியிருக்கக் கூடாது?
இதற்கு முகாந்திரம் இருக்கிறதே! ஆனால் இந்தியன் முஜாஹித்தீன் குண்டு வைத்ததாக இதுவரை எந்தச் சம்பவத்திலும் நிரூபிக்கப்படவில்லையே! இன்னும் சொல்லப் போனால், “இந்தியன் முஜாஹித்தீன் என்கிற ஒரு அமைப்பே இயங்கவில்லை. இது டெல்லி காவல்துறையின் மூளையில் உதித்த இயக்கம்'' என்று எழுத்தாளர் அருந்ததிராய் அடித்துச் சொல்வதை டெல்லி காவல் துறைத் தலைமை இதுவரை மறுத்து - அருந்ததியின் கூற்றை பொய்யாக்க முனையவில்லை என்கிறபோது அருந்ததியின் கூற்று மெய்யல்லவா?
“அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை கூடாது என்று காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் நாடு இப்படித்தான் அமைதியாக இருக்குமா?'' என்று ராஜீவ் கொலை வழக்கில சம்பந்தப்பட்ட 3 பேர் குறித்து தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை தொடர்ந்து காஷ்மீர் முதல்வர் உமர் பேசியிருந்தார். இதற்காக இந்துத்துவா அமைப்புகள் கொந்தளித்தன.
அப்சல் குருவை விடுதலை செய்வது பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்வதற்கு வழி வகுத்து விடும் என்ற சிந்தனையை நாட்டு மக்களின் மனங்களில் விதைத்திட - நாட்டிலுள்ள உள்நாட்டுத் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பே டெல்லி ஹைகோர்ட்டை பதம் பார்த்தது என்ற சந்தேகம் வலுவாகவே எழுகிறது.
- அபு