கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

குற்றம் சாட்டப் பிரிவு 147, 148, 294 (பி), 323, 234, 307 ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய் யப்பட்ட ஒரு வழக்கில் சிலர் கைதாகி ஜாமீனில் வந்த நிலையில் கைதாகாமல் இருக்கும் மீத முள்ள குற்றவாளிகள் குறித்தும், காவல் துறை மற்றும் நீதித்துறையில் வழக்கின் வீரியத் தன்மை எந்த அளவிற்கு இருக்கின்றது என்பது குறித்தும், புகார் செய்த ஒருவரால் அறிந்து கொள்ள முடியுமா? எந்த வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் இது பற்றிய மேலதிக விபரங்களைப் பெறலாம்?

- ஜி.என்., பரங்கிப்பேட்டை

இரண்டு கேள்விகளை ஒரே கேள்வியாகக் கேட்டிருக்கிறீர்கள். அதோடு, தங்களது வினாவில் சிறு திருத்தம், காவல்துறை குற்றச் செயலுக்காக ஒரு நபரின் மீதோ அல்லது பல நபர்களின் மீதோ எஃப்.ஐ.ஆர். போடுவதால் மட்டுமே அவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர் களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றே அழைக்க வேண்டும். மேற்படி குற்றச்சாட்டு நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டால்தான் அவர் குற்ற வாளி என்ற ழைக்கப்படுவார். இப்பொழுது உங் கள் கேள்விக்கான பதிலைக் காண்போம்.

பொதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டத் தைப் பொறுத்தவரையில் குற்றமிழைக்கப்பட்டவர், அதாவது புகார்தாரரின் பங்கு என்பது அவர் பாதிக்கப்பட்டவுடன் காவல்துறையிடம் புகார் அளித்து அப்புகார் எஃப்.ஐ.ஆர்.ஆக பதிவு செய்யப்பட்ட பின், அந்த எஃப்.ஐ.ஆரின் நகலை பெற்று, விசாரணையின்போது வாக்குமூலம் அளிப்பதோடு நின்று விடுகிறது.

பின்னர் அவ்வழக்கு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையாக, (Charge Sheet) தாக்கல் செய்யப் பட்டு வழக்கு விசாரணை தொடங்கும்போது முதல் அரசு தரப்பு சாட்சியாக மேற்படி புகார்தாரர், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் அங்கம் வகிக்கிறார்.

இங்கு உங்கள் கேள்வியில் குறிப்பிட்ட 147, 148, 249 (பி), 232, 234, 307 ஐ.பி.சி. ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும். ஏனெனில் இங்கு 307 ஐ.பி.சி. என்பது கொலை முயற்சி என்பதை குறிக் கும். இக்குற்றம் குற்ற நடைமுறைச் சட்டப்படி கைது செய்வதற்குரிய குற்றம், இங்கு கைது நடவ டிக்கையை மேற்கொள்ள வேண்டியது காவல்து றையின் கடமை. எனினும் குற்றம் சாட்டப்பட் டுள்ளவர்களில் சிலரை கைது செய்தும், சிலரை கைது செய்யாமலும் இருப்பதற்குக் காரணம், மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் பெற்றிருக்கலாம் அல்லது காவல்துறை அலட்சியம் காட்டியிருக்கலாம். அவ்வாறு அலட்சியம் காட்டும் காவல் துறையினரை அவர்களுக்கு ரிய உயர் அதிகாரிகளிடம் குற்ற முறையீட்டாளர் என்ற முறையில் ஒரு நபர் புகார் தெரிவிக்கலாம்.

மேற்படி புகார் குறித்து எவ்வித கைது நடவடிக் கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் காவல்துறையினர் இறுதி அறிக்கையை நீதிமன் றத்தில் தாக்கல் செய்யும் சமயத்தில் நீதிமன்றமே வாரண்ட் பிறப்பிக்கலாம் அல்லது சம்மன் அனுப்பி ஆஜராக கோரலாம். அவ்வாறு (கைது செய்யப்படாமல் இருக்கும் எதிரிகள்) ஆஜராகும்போது அன்றைய தினமே ஜாமீன்தாரர்களை ஏற்று அவர்களை பிணையில் விடுவிக்கலாம்.

எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து கைது செய்தல், பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் வெளிவருதல், காவல்துறை வழக்கை விசாரித் தல் உள்ளிட்டவை காவல்துறை விசாரணை யின் நிலைகளாகும். காவல்துறை குற்ற வழக்கை முழுமையாக விசாரித்து இறுதி குற்ற அறிக்கையை தாக்கல் செய்யும்போது தான் நீதி விசாரணை ஆரம்பிக்கிறது.

இங்கு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு குறிப்பிட்ட நாள்களுக்குள் குற்ற இறுதி அறிக் கையை தாக்கல் செய்ய கால வரையறை இல்லை. இது காவல்துறையினரால் வழக்கு சரியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதற் காக ஏற்படுத்தப்பட்டது. (இது குறித்து விரி வாக அறிய இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய சட்டமும், இந்திய சட்டமும் தொடரை தொடர்ந்து படித்து வரவும்)

மேலும் இறுதி அறிக்கையைப் பற்றி காவல்துறையினரை அணுகி புகார்தாரர் தெரிந்து கொள்ளலாம். மேற்படி காவல் துறையினர் மறுக்கும்பட்சத்தில், இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் புகார்தாரர் அவ்வழக்கின் வீரியத் தன்மையை குறித்து அரசு குற்றத்துறை வழக்கறிஞரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

மேற்படி இறுதி அறிக்கை நகலை அரசு குற்றத்துறை வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் நகல் மனு (Copy Application) செய்து பெற் றுக் கொள்ளலாம்.

மேலும் ஒரு குற்ற வழக்கின் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டு விட்டதா? என்பதை அறிந்து கொள்ள புகார்தாரர் தன் வசம் வைத்திருக்கும் எஃப்.ஐ. ஆர். காப்பியில் உள்ள குற்ற எண் வைத்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் உள்ள தலைமை எழுத்தரை அணுகி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேற்படி செய்திகளில் எந்த ஒரு அரசு அலுவலரும் தங்களுக்கு தகவல் தர மறுத் தால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன் கீழ் மனு செய்து தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெறலாம்.

கடுங்குற்றம் பற்றி வழக்கு தாக்கல் செய்த ஒருவரது கவனத்திற்கு வராமல் அந்த வழக்கை செயலிழக்க செய்யவோ அல்லது வழக்கின் ஸ்திரதன்மையைக் குறைக்கவோ பிறரால் முடியுமா?

- ஜி.என். பரங்கிப்பேட்டை

கடும் குற்றம் செய்த ஒருவர் மீது புகார்தா ரர் புகார் செய்து பதியப்படும் வழக்கானது மேற்படி புகார்தாரருக்கு தெரியாமலே அவ் வழக்கின் தன்மையை குறைக்கவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ பிற நபர்களால் முடியாது. ஆனால் காவல்துறையினரால் முடியும். ஏனெனில் குற்றவழக்குகளை பொறுத்தவரையில் புகார்தாரரின் வேலை குற்ற முறையீடு செய்வது மடுமே ஆகும்.

மேலும் அக்குற்ற முறையீடு உண்மையா அல்லது பொய்யானதா என்பதை விசாரிக் கும் அதிகாரம் காவல்துறைக்கு மட்டும்தான் உண்டு.

எ.கா. : உங்களை ஒருவர் கொல்ல முயற்சித் தார் என்று நீங்கள் காவல்நிலையத்தில் புகார் செய்து அவர் மீது 307 ஐ.பி.சி.யின் கீழ் வழக்கு (எஃப்.ஐ.ஆர்.) பதியப்பட்டு அந்த நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட லாம். பின்னர் அவர் ஜாமீனில் வெளி வரலாம். இந்நிலையில் நீங்கள் அளித்த புகார் மீது காவல்துறைவிசாரணை செய்து தனது இறுதி அறிக்கையில் இது கொலை முயற்சி (307 ஐ.பி.சி) அல்ல. காயம் ஏற்படுத்துதல் (323 ஐ.பி.சி.) என்று மாற்றி வழக்கின் வீரியத் தன்மையை குறைக்கலாம்.

இவ்வாறு புகார்தாரருக்கு அறிவிக்காமல் வழக்கின் வீரியத்தன்மையை காவல்துறை குறைத்தால் சாட்சி விசாரணையின்போது புகார்தாரர் நீதிபதியிடம் தெரிவித்தால் வழக்கின் தன்மையை நிலைப்படுத்தலாம்.

மேலும் அக்காவல்துறையானது உங்க ளது புகாரை விசாரித்து அப்புகார் தவறா னது என முடிவு செய்து Mistake of Fact (M.F) வழக்கை செயலிழக்கச் செய்யலாம்.

இந்நிலையில் புகார்தாரரான நீங்கள் 156 (3) ஆர்.பி.சி.யின் கீழ் நீதித்துறை நடுவரிடம் மனு செய்து முறையிடலாம். அல்லது 200 ஆர்.பி.சியின் கீழ் தனியாக குற்றவழக்கு தொடுக்கலாம். அல்லது உயர் நீதிமன்றத்தை அணுகி 482 சி.ஆர்.பி.சி.யின் கீழ் மனு செய்து நிவாரணம் பெறலாம்.