தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் உள்ள சிட்லிங் என்னும் கிராமத்தில், பழங்குடி மாணவி செளமியா(17 வயது) பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டதினைத் தொடர்ந்து, காவல் துறையின் அலட்சியப்போக்கினாலும், சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காததினாலும் உயிரிழந்தார். இந்த சம்பவத்தினை பல்வேறு அமைப்புகளும், முற்போக்கு சிந்தனையாளர்களும் தொடர்ச்சியாக கண்டித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு சார்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒருங்கிணைந்து உண்மை அறியும் குழுவாக செயல்பட்டோம். 

sowmiya victimஉண்மை அறியும் குழுவின் உறுப்பினர்கள்:

மகாலஷ்மி – பெண்கள் எழுச்சி இயக்கம், மதுரை

பிரியா - பெண்கள் எழுச்சி இயக்கம், கோயம்புத்தூர்

ஈஸ்வரி – தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம், சென்னை

மீனாட்சி – வழக்கறிஞர் (PRPC), சென்னை

கிரேஸ்பானு – திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கான உரிமை குழு, சென்னை

அனுஷ்ரீ - திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கான உரிமை குழு, சென்னை

ஜெரினா ஜமீலா - வெல்ஃபேர் பார்ட்டி, சென்னை

வளர்மதி - பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், சேலம்

பரிமளா – சமூக ஆர்வலர், சென்னை

தமயந்தி – தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர் சங்கம், சேலம்

ராம கிருஷ்ணன் – சமூக ஆர்வலர், மதுரை

வேடியப்பன் – சமூக ஆர்வலர், தருமபுரி

கடந்த 13.11.2018 அன்று, சம்பவம் நிகழ்ந்த சிட்லிங் மலைப்பகுதிக்கு, இக்குழு சென்று, இறந்த பெண்ணின் குடும்பத்தினர், அக்கம் பக்கத்து வீட்டார் மற்றும் ஊர் மக்களிடம் விசாரித்து, ஒலி-ஒளிப் பதிவாகத் தகவல்களைச் சேகரித்ததுடன், முதல் தகவல் அறிக்கை, செளமியாவின் அண்ணன் கொடுத்த மனு; மேலும் செளமியா இறந்த பிறகு அவரது தாயார் கொடுத்த மனு, அதனைத் தொடர்ந்து திருத்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஆகியவை சேகரிக்கப்பட்டுத் தொகுத்து வழங்கப்படுகிறது.

சிட்லிங்பழங்குடி மலைக்கிராமத்தின் பின்னணி:

இந்தியாவின் தேசிய சராசரிக் கல்வி சதவீகிதம் 72.99. மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அறியப்படும் தர்மபுரி மாவட்டத்தின் சராசரிக் கல்வியறிவு 61 சதவிகிதம் ஆகும். இதில் பெண்களின் கல்வியறிவு சதவிகிதம் 53 மட்டுமே. இம்மாவட்டத்தின், அரூர் வட்டத்தில் உள்ள சிட்லிங் மலை கிராமம் கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய கிராமம். சுமார் 400 குடும்பங்களைக் கொண்ட இக்கிராமம் மலையாளி, லம்பாடி போன்ற பழங்குடி மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. அங்கே சரியான கல்வி நிலையங்களோ, மருத்துவ வசதிகளோ, பேருந்து வசதிகளோ கிடையாது. பொருளாதரத்திலும், கல்வியிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் இக்கிராமத்தின் சிறுவர்கள் வெளியூரில் சென்று தங்கிப் படிக்கும் சூழ்நிலை தான் உள்ளது. இம்மலைக் கிராமத்தின் பக்கத்து கிராமங்களான தீர்த்தமலை, கோட்டப்பட்டி, வேப்பம்பட்டி போன்ற கிராமங்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள்(Reserved Forest) வருகிறது. “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி” என அரசு அறிவித்து வரும் வனப்பகுதிகளில் பெருநிறுவனங்கள் கனிமவளங்களைச் சுரண்ட மட்டும் அனுமதிக்கும் அரசு, அந்நிலத்தின் பூர்வகுடிகளான மலைவாழ் மக்களை விரட்டி அடித்து வருகின்றது என்பதினை தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம். தற்பொழுது, 497.5 ஹெக்டேரை அம்பானிக்கு தாரை வார்த்த அரசு, அங்கே அருகிலிருந்த காட்டில் வாழ்ந்த ஆவ்னி புலியை, ‘ஆட்கொல்லி’ (Man-Eater) என அறிவித்து, அப்புலி மனிதர்களைக் கொன்ற சாட்சிகள் ஏதுமில்லாத பொழுதும், சுட்டுக்கொன்றது என்பது நாம் அறிந்ததே. இப்படித் தொடர்ச்சியாக காடுகளின் மீதான சுரண்டலும், பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும் கண்டிக்கத்தக்கது. பூர்வகுடிகளான பழங்குடிகளின் நிலங்களை தட்டிப்பறித்த அரசு, அவர்களின் பொருளாதரத்திற்கும், கல்வியறிவிற்குமான மாற்று ஏற்பாடுகளில் கவனம் கொள்வதில்லை. சிட்லிங் மலைக்கிராமத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் வெளியூரில் சென்று தான் வேலை செய்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான் செளமியா என்னும் 17 வயது மாணவி, பாப்பிரெட்டிப்பட்டியில் தங்கி, மேல்நிலைக் கல்வி பயின்று வந்தார்.

செளமியாவிற்கு நிகழ்ந்த சம்பவம்:

      செளமியா என்னும் பெண் ”மலையாளி” என்னும் பழங்குடி இனத்தினைத் சேர்ந்த பெண். பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 375/500 மதிப்பெண்கள் பெற்ற செளமியா, 12 ஆம் வகுப்பினை பாப்பிரெட்டிப்பட்டியில் தங்கி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார்.

செளமியாவின் அண்ணன் A.முனீஷ்வரன் அவர்களிடம் விசாரித்தபொழுது, தீபாவளி விடுமுறையினை ஒட்டி, வீட்டிற்கு வந்த செளமியா, 05.11.2018 அன்று மதியம் 1 மணியளவில், இயற்கை உபாதைக்காக வெளியே சென்றதாகவும், அங்கே, சதீஷ் த/பெ சாமிக்கண்ணு மற்றும் ரமேஷ் த/பெ பெருமாள் இருவரும் செளமியாவினை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகவும், கிழிந்த உடைகளுடன் செளமியா வந்துள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், கூலி வேலைக்கு சென்ற பெற்றோர்கள் திரும்பி வரும் வரையில் காத்திருந்து, கோட்டப்பட்டி காவல்நிலையம் சென்று மனு கொடுத்துள்ளனர். முதலில் காவல்துறையினர் செளமியா நேரில் வரவேண்டும் என சொல்லியிருக்கின்றனர். பின்னர் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு பெண்காவலர்கள் கிளம்பி அங்கே வந்து, செளமியாவினை பார்த்து, அவர்கள் அறிவிக்கும் வரையில், குளிக்கக்கூடாது; மருத்துவமனை செல்லக்கூடாது என சொல்லிவிட்டு சென்றுள்ளனர். மறுநாள் 06.11.2018 அன்று காவல்துறையினர், செளமியாவைக் கூட்டிச்சென்று, வயிறுவலி எனக் காட்டி மருந்து வாங்கிக் கொடுத்து காப்பகத்தில் விட்டிருக்கின்றனர். செளமியா தர்மபுரியில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார். இதுவரை ரூபாய் 5000க்கும் அதிகமாகக் காவல்துறையினரின் டீசல் செலவுகளுக்கென மட்டுமே கொடுத்துள்ளோம் என்றார்.

 செளமியாவின் தாயார் மலர் அவர்களிடம் பேசிய போதுது, “என் மகளை பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்தி உள்ளனர். காவல்துறை அதை பாலியல் வன்கொடுமை வழக்காகப் பதிவிடாமல், பெண்ணின் பெயர் கெட்டுவிடும் எனச் சொல்லி, பாலியல் வன்புணர்விற்கு ஆட்படுத்த முற்பட்டனர்; எவ்வளவு சொல்லியும் கேட்காமல், எனது மகள் அவர்களிடமிருந்து தப்பித்துவிட்டாள் என்றே வழக்கினை பதிந்தனர். சரியான மருத்துவ உதவி கூட அளிக்காத அரசு மருத்துவமனையில் எனது மகளுக்கு படுக்கை வசதி கூட செய்துகொடுக்கப்படாமல், தரையிலேயே படுக்கவைத்தனர். என் மகள் என் மடியினிலே இறந்தார்” எனச் சொல்லி அழுதார்.

      அங்கிருக்கும் செல்வி என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பகிர்ந்து கொண்டதாவது: “மாதவிடாயின் இரண்டாம் நாளில் இருந்த செளமியா, இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற பொழுது, சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் துணியினைக் கொண்டு செளமியாவின் தொண்டை வரை அடைத்துள்ளனர். செளமியாவின் உள்ளாடையினை உருவி, ஒருவர் மார் மீது ஏறி அமர, மற்றொருவர் செளமியாவின் உடையினைக் கிழித்து, நேப்கினுடன் இருந்த உள்ளாடையினை உருவித் தள்ளி, அவரை பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்தியுள்ளனர், அங்கே சென்ற ஒருவர் சப்தமிட்டதால், அப்பெண்னை விட்டுவிட்டு ஓடியுள்ளனர். கிழிந்த உடைகளுடன் மயக்கமிட்டிருந்த செளமியாவை மீட்டுள்ளனர்.”

“சிட்லிங் கிராமத்தில் கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால் அதை குளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும். கழிவுத் தொட்டியை ஒழுங்காகப் புதைக்காததால் கழிவறையாக அதை யாரும் பயன்படுத்த முடியாது” என்கிறார் ப்ளம்மிங் வேலை செய்யும் சௌமியாவின் அண்ணன். மேலும், "கிராமத்திற்குள் பேருந்து வராததனால் இரவு எட்டு மணிக்கு மேல் அந்தக் காட்டுப் பகுதியில் பெண்கள் தனியாகத்தான் வீட்டிற்கு வர வேண்டியிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் எங்கள் கிராமத்திலேயே மேலும் நிறைய சௌமியாக்கள் இறக்க நேரிடும்" என எங்களிடம் அந்த கிராமத்து பெண்கள் சிலர் கூறினார்கள்.

சௌமியாவினை பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்திய ரமேஷ் என்பவருடைய தகப்பனார் வன்னியர் சமூகம்; தாயார் பழங்குடிச் சமூகம். இவர்களின் தொழில் சாராயம் விற்பது. இவர்கள் காவல் துறையின் துணையோடு தான் இந்த வேலையை செய்கிறார்கள் என கிராமவாசிகள் நம்மிடம் கூறினார்கள்.

பாலியல் வன்புணர்வும் மரணமும் குறித்ததான சம்பவம் குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள்:

ஆடு மேய்தல், விவசாயக் கூலி வேலை செய்யும் அண்ணாமலை - மலர் ஆகியோருக்கு மகளாக பிறந்த சௌமியா 12 ஆம் வகுப்பு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். தீபாவளியைக் கொண்டாட 05.11.2018 அன்று சொந்த ஊர் வந்த செளமியா அன்று இயற்கை உபாதையைக் கழிக்க பகல் 1 மணியளவில் காட்டுப் பகுதிக்குச் சென்ற போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் துணியினை சௌமியாவின் வாயில் அடைத்து, அவர்கள் கட்டியிருந்த சாரத்தால் கைகளைக் கட்டி, மார்பகங்கள் மீதேறி அமர்ந்தும், உதட்டைக் கடித்தும், மாதவிடாய்ப்பொழுதில் இருந்த செளமியாவின் உள்ளாடையினை உருவி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். பின் அந்த வழியாக வந்த சௌமியாவின் உறவினர் ஒருவர் பார்க்க அவரையும் அந்த வெறிக் கும்பல் மிரட்டுகிறது. “வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன்” என்றும், “தேவைப்பட்டால் நீயும் அனுபவிடா” என்றும் கூறியிருக்கிறார்கள். மயக்கமாய் இருந்த செளமியாவை காப்பாற்றிய உறவினர் மற்றும் செளமியாவின் அண்ணன் ஆகியோர் செளமியாவிற்கு நடந்ததை கூலி வேலை முடித்து வீடு திரும்பிய செளமியாவின் தாயாரிடம் கூறுகிறார்கள்.

sowmiya murder criminals

(குற்றவாளிகள்)

சௌமியாவின் தாயார் மலர் சம்பவ தினத்தன்று (05.11.2018) மாலையே கோட்டப்பட்டி காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்கச் செல்கிறார். அங்கே பணியில் இருந்த உதவி ஆய்வாளரும் சௌமியாவின் அண்ணன் கொடுத்த புகாரை முதலில் பெற்றுக் கொள்ள, கோட்டபட்டி காவல் நிலையத்தில் உள்ளவர்கள் மறுக்கிறார்கள். சம்பந்தப்பட்ட சௌமியாவை நேரில் வரச் சொல்கிறார்கள். செளமியாவின் உடல்நிலை அதற்கு ஒத்துவரவில்லை என்பதினை அறிந்த பின்னர் ஒரு பெண் காவலர் ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் நேரில் சென்று சௌமியாவை விசாரிக்கிறார்கள். விசாரித்த பின்பு செளமியாவை குளிக்கக்கூடாது எனவும், மருத்துவமனை செல்லக்கூடாது எனவும் சொல்கின்றனர். மறுநாள் 06.11.2018 காவல் நிலையத்திற்கு சென்ற சௌமியாவின் குடும்பம், அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் முத்துகிருஷ்ணனும், உதவி ஆய்வாளர் சுனிலும் அரூரில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி அரூரில் உள்ள மருத்துவமனைக்கு செளமியாவைக் கொண்டு சென்று, வெறும் முதலுதவி சோதனை செய்து, வயிற்றுவலி மாத்திரை கொடுக்கப்பட்டு, தருமபுரியில் உள்ள வள்ளலார் குழந்தைகள் இல்லத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்படுகிறாள். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட செளமியா, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் பின்னர் சரியான சிகிச்சை இன்றி, செளமியா 10.11.2018 ஆம் தேதி சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.

      குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்-2012(POSCO)ன் பிரிவுகளின் கீழ் 5(g), 6, 18 சம்பவம் நடந்த நாளுக்கு அடுத்த நாளில் முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்துள்ளது காவல்துறை. செளமியா இறந்த பிறகு, செளமியாவின் தாயார் மலர் அளித்த மனுவின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையில் மாற்றம் செய்ய 376(d), 362 நீதிபதியிடம் அனுப்பியுள்ளது.

நடந்த சம்பவங்களின் அடிப்படையில், எங்கள் உண்மை அறியும் குழு விசாரிக்க சென்றதினை அறிந்த காவல்துறையினர், அவர்களது தவறினை மறைக்க குழுவினைப் பாதியிலேயே தடுத்தி நிறுத்திக் காவலில் வைத்தது. இதனால் செளமியா தங்க வைக்கப்பட்டிருந்த வள்ளலார் குழந்தைகள் இல்லம் மற்றும் தருமபுரி அரசு மருத்துவமனை மற்றும் காவல்துறையினர் ஆகியோரிடம் மேற்கொண்டு விசாரிக்க இயலவில்லை. மேலும் குழுவினருள் நான்கு நபர்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்படி உண்மை அறியும் குழுவினை செயல்படவிடாமல் தடுத்து, குற்றவாளிக்கு ஆதரவாய் செயல்பட்ட காவல்துறையினரின் செயல் கண்டனத்துக்குரியது.

கோரிக்கைகள்: 

  1. செளமியாவை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சதீஷ், ரமேஷ் இருவரையும் பாலியல் வன்புணர்வு செய்ததிற்கான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.
  1. காவல்துறையின் அலட்சியப்போக்கினால் பழங்குடி மாணவி உயிரிழந்துள்ளார். எனவே, காவல் துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கிடையில், நேப்கினுடனான உள்ளாடையை சம்பவம் நடந்த இடத்திலேயே இருந்தது. குற்றவாளிக்குத் துணை போகின்ற வகையில், சாட்சிகளை சரியான முறையில் ஆவணப்படுத்தாத காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
  1. பாலியல் வன்புணர்வு செய்ததிற்கான பரிசோதனையை மேற்கொள்ளாமலும், சரியான மருத்துவம் வழங்காமலும் கடமை தவறிய மருத்துவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
  1. இறந்த பழங்குடி மாணவி செளமியாவிற்கு நிதியுதவியாக 10 இலட்சம் மற்றும் செளமியாவின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்பட வேண்டும்.
  1. சிட்லிங் மலைக்கிரமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான, கல்வி, மருத்துவம், போக்குவரத்து, வீடு, கழிவறை, வேலைவாய்ப்பு போன்றவற்றை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தொடர்புக்கு:

காளீஸ்வரி, 7/8, தயாள் நகர், 2வது தெரு,தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்,கோடம்பாக்கம்,சென்னை.

& வழக்கறிஞர் தமயந்தி, சேலம்     

Pin It