விஜயகாந்த் பத்திரிகையாளர்களை தரக் குறைவாக பேசியதாக பத்திரிகையாளர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் விஜயகாந்திற்கு எதிராக கடந்த 28ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

சில தினங்களுக்கு முன் மதுரை செல்லத் தயாராக இருந்த விஜய காந்தை சென்னை விமான நிலை யத்தில் சந்தித்த பத்திரிகையாளர்கள், அண்மையில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசி யது தொடர்பாக கேட்க... இதற்கு பதிலளிக்க மறுத்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை தகாத வார் த்தைகளால் அர்ச்சித்துள்ளார்.

அதோடு, “தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை, டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?'' என்று கேட்டபடியே விமான நிலையத்திற்குள் சென்று விட்டார். விஜயகாந்த்துடன் அப்போது இருந்த தேமுதிக எம்.எல்.ஏ. ஒருவரும், அக்கட்சியினரும் ஒரு பத்திரிகையாளரை தாக்கியுள்ளனர்.

விஜயகாந்த் தங்களை அவமதித்து விட்டதாக உணர்ந்த பத்திரிகையாளர்கள், அவர் தரக்குறைவாகப் பேசியதாகவும், பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர்.

தனது கட்சி எம்.எல்.ஏக்கள் நால்வர், தான் அரசியல் எதிரியாகக் கருதும் ஜெயலலிதாவைச் சந்தித்திருப்பது விஜயகாந்திற்கு இயல்பாகவே கோபத்தை உண்டு பண்ணியிருக்கலாம். ஏற்கெனவே விஜயகாந்த்தை டென்ஷன் பார்ட் என்று சொல்வார்கள். அப்படியிருக்கும்போது ஜெயலலிதாவை தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது அவருக்கு கடுமையான கோபத்தை தான் எற்படுத்தியிருக்கும். இந்த நிலையில் அதே மேட்டர் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டிருந்தாலும் அந்தக் கேள்விக்கு அவர் கோபத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக பதில் சொல்லியிருக்கலாம்.

தனது கோபத்தை பொது இடம் என்றும் பாராமல் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படுத்தியது. அதுவும் தகாத வார்த்தைகள் பேசியது விஜயகாந்தின் அரசியல் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது. ஒரு கட்சியைச் சேர்ந்த 4 எம். எல்.ஏக்கள் எதிர் முகாமின் தலைமையைச் சந்திப்பது என்பது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு செய்திதான். இதற்கு பத்திரிகையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தான் செய்வார்கள். அதனால்தான் விஜயகாந்தை சந்தித்து பதில் தேட அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள்.

பொறுப்பு வாய்ந்த எதிர் கட்சித் தலைவர் அந்தஸ்த்தை வகிக்கும் விஜயகாந்த் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். பல வருடங்களாக தமிழக அரசியலை கவனித்து வரும் விஜய காந்த் இப்படி கோபப்படுவதுது அவருக்கோ, அவரது கட்சிக்கோ சாதகமாக இருக்காது.

மின்சாரம் தட்டுப்பாடு, டெங்கு காய்ச்சல் இதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா என்றும் கேட்டிருக்கிறார் அவர். இவையெல்லாம் முக்கியமான பிரச்சினைதான். அதனால்தான் இன்றுவரையிலும் இந்தப் பிரச்சி னைகள் மீடியாக்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ஆனாலும் பத்திரிகையாளர்களை நோக்கி இந்தக் கேள்விகளையெழுப்பியவாறே, பத்திரிகையாளர்களின் கேள்விகளை அமைதியான முறையில் எதிர் கொண்டிருக்கலாம் விஜயகாந்த். அல்லது காங்கிரஸ் தலைவர்களைப் போன்று ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லியாவது சமாளித்தி ருக்கலாம். இதையெல்லாம் விட்டு விட்டு பத்திரிகையாளர்களை தனது கட்சித் தொண்டர்கள் போல் நினைத்து தரக்குறைவாக விஜயகாந்த் பேசியிருப்பது ஏற் றுக் கொள்ள முடியாது. இது அவரது பக்குவமற்ற அரசியல் அறி வைத்தான் காட்டுகிறது.

- அபு

Pin It