Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கருஞ்சட்டைத் தமிழர்

தமிழகத்தின் அரசியல் காட்சிகள் விரைந்து மாறிக்கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையிலான மோதல் திடீரென்று அரங்கிற்கு வந்துள்ளபோதிலும், எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் அது. இரண்டு கட்சிகளின் இணைப்பும் சில அரசியல் தரகர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயற்கையான ஒன்று. எப்படியேனும் தி.மு.கழக அரசை வீழ்த்திவிட வேண்டும் என்னும் நோக்கில் அவர்கள் ஏற்படுத்திய கூட்டணி, இத்தனை நாள் தாக்குப்பிடித்ததே வியப்புக்குரியது. இப்போது அவரவர்களின் உண்மை நிறம் வெளிப்பட்டு, நீயா - நானா என்று வெளிப்படையாகச் சண்டைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

விஜயகாந்தின் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவர் என்னும் முறையில் சட்டமன்றத்தில் தன் கருத்துகளை எடுத்துச் சொல்வதற்கு அவருக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை நியாயம். அதே வேளையில், அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதும் எதிர்க்கட்சியின் கடமையாகும். சட்டமன்ற மரபுகளை மீறி, ஒருவரை ஒருவர் மிரட்டுவதும், இழிவாகப் பேசிக்கொள்வதும், அவர்களுக்கு மட்டுமின்றி, சட்டமன்றத்திற்கும் பெருமை சேர்க்காது. அப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் அண்மையில் நடந்துள்ளன.

 விஜயகாந்த் நாக்கைக் கடித்துக்கொண்டு, விரலை நீட்டி மிரட்டும் தொனியில் பேசினார் என்றும், அந்த அநாகரிகத்திற்காக அவையில் இருந்து பத்து நாள்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு, அ.தி.மு.க.விற்கு எந்த ஒரு அடிப்படைத் தகுதியும் இல்லை என்பதை நாடறியும். சென்ற சட்டமன்றத்தில் இதனை விடத் தரக்குறைவாக அன்றைய சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் அடிக்கப்பாய்ந்த காட்சியை அனைத்து ஏடுகளும் அன்று வெளியிட்டிருந்தன. அன்று விதைத்தது இன்று விளைந்திருக்கிறது.

ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் உள்ள இருவரும் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசாமல், சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டுச் சட்டமன்றத்தில் உரையாடுவதும், மோதிக்கொள்வதும் மக்களால் வெறுக்கப்படும் செயல்களாகும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

"இந்தக் கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னுடைய கட்சிக்காரர்களைத் திருப்தி செய்வதற்காகத்தான் இந்தக் கூட்டணிக்கு நான் சம்மதித்தேன்...தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், அதில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுகூடப் புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டு இருப்பதைப் பார்க்கும்போது இவர்களுடன் கூட்டணி சேர்ந்து, அ.தி.மு.க. தேர்தலைச் சந்தித்ததே என்று நினைக்கும் போது, நான் வருத்தப்படுகிறேன். உள்ளபடியே அதற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்", என்று சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

மறுநாள் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்," அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப் படுகிறேன், வேதனைப்படுகிறேன்", என்று கூறியதோடல்லாமல், விஜயகாந்த் இன்னொரு செய்தியையும் அங்கு வெளிப்படுத்தியுள்ளார். கூட்டணி சேர மறுத்த என்னிடம் வந்து, யார் யார், எப்படி எப்படியயல்லாம் கெஞ்சினார்கள் என்பதை வெளியில் எடுத்துச் சொன்னால் எவ்வளவு அருவருப்பாக இருக்கும் தெரியுமா என்றும் பேசியுள்ளார்.

இவர்களுக்கிடையில் நடக்கும் மோதலில் எந்தவொரு அரசியல் பார்வையோ, சமூக சிந்தனையோ இடம்பெறவில்லை என்பதை இவர்களின் பேட்டிகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை ஜெயலலிதா ஏற்கனவே பலமுறை உலகிற்கு எடுத்துக்காட்டி இருக்கிறார். இப்போது அதே வழியில் தன் கூட்டணிக் கட்சியும் நடைபோடுவதாக அவர் வாக்குமூலம் தந்திருக்கிறார்.

ஆக மொத்தம் இவர்கள் இருவருக்கும் வாக்களித்ததற்காகத் தமிழக மக்கள்தான் வெட்கப்படவும், வேதனைப்படவும் வேண்டியவர்களாக உள்ளனர்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 seyed muhammed 2012-02-11 00:00
விஜயகாந்த் கை விரல் நீட்டி நாக்கை துருத்தி சவால் விட்ட போது பின் வரிசையிலிருந்த அதிமுக உறுப்பினர்களில் சிலர் தம்பி இது சினிமா அல்ல என்றார்கள்.
இந்த வசனம் ஜெயாவின் காதில் விழுந்ததா என தெரியவில்லை.ஆனா ல் புரட்சி நடிகர் எம்ஜியாரை நடிகராய் பார்க்கத்தவறிய அதிமுக தொண்டர்களை பார்த்து பொது மக்கள் கேட்கிறார்கள் எம்ஜியாரின் ஏழைப்பங்காள குணம் சினிமாவிற்கான ஏற்ப்பாடு என்பதை ஏன் மறந்தீர்கள்?மக் களையும் ஏன் ஏமாற்றினீர்கள்?
சினிமாவை மய்யப்படுத்தி சமுகங்களை நிர்ணய்யம் செய்யும் திராவிட இயக்க தோழர்களிடம் ஒரு வேண்டுகோள்:கொள் கைக்காக மடிய ஆயத்தமாகுங்கள். சினிமா போன்ற சில்மிஷங்களுக்க ு அடிமையாய் நீங்களும் ஆகி மக்களையும் ஆக்கி விடாதீர்கள்.
விஜயகாந்தையும் ஜெயல்லிதாவையும் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பிய மக்களிடம் பேசிப்பாருங்கள் .தமிழகத்தின் தாழ் நிலை புரியும்.
அதிமுக ஆதரவாளர் ஒருவர் கூறினார்:அம்மா அம்மா தான்?
இந்த மன நிலையில் உள்ள தமிழகத்தை மீட்க ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.திராவி ட இயக்கத்தினர் தயாரா?
Report to administrator
0 #2 mohamed 2012-02-13 15:43
விஜயகாந்த் கை விரல் நீட்டி நாக்கை துருத்தி சவால் விட்ட போது பின் வரிசையிலிருந்த அதிமுக உறுப்பினர்களில் சிலர் தம்பி இது சினிமா அல்ல என்றார்கள். இந்த வசனம் ஜெயாவின் காதில் விழுந்ததா என தெரியவில்லை.ஆனா ல் புரட்சி நடிகர் எம்ஜியாரை நடிகராய் பார்க்கத்தவறிய அதிமுக தொண்டர்களை பார்த்து பொது மக்கள் கேட்கிறார்கள் எம்ஜியாரின் ஏழைப்பங்காள குணம் சினிமாவிற்கான ஏற்ப்பாடு என்பதை ஏன் மறந்தீர்கள்?மக் களையும் ஏன் ஏமாற்றினீர்கள்? சினிமாவை மய்யப்படுத்தி சமுகங்களை நிர்ணய்யம் செய்யும் திராவிட இயக்க தோழர்களிடம் ஒரு வேண்டுகோள்:கொள் கைக்காக மடிய ஆயத்தமாகுங்கள். சினிமா போன்ற சில்மிஷங்களுக்க ு அடிமையாய் நீங்களும் ஆகி மக்களையும் ஆக்கி விடாதீர்கள். விஜயகாந்தையும் ஜெயல்லிதாவையும் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பிய மக்களிடம் பேசிப்பாருங்கள் .தமிழகத்தின் தாழ் நிலை புரியும். அதிமுக ஆதரவாளர் ஒருவர் கூறினார்:அம்மா அம்மா தான்? இந்த மன நிலையில் உள்ள தமிழகத்தை மீட்க ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.திராவி ட இயக்கத்தினர் தயாரா?
Report to administrator

Add comment


Security code
Refresh