இலங்கை முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரின் போது, ஆயிரக்கணக்கான அப் பாவித் தமிழர்களையும், சரணடைய வந்த விடுதலைப் புலிகளையும் சிங்கள இராணுவம் கொன்று குவித்த சம்பவம் சர்வதேச அரங்கில் போர் குற்றமாக எழுப்பப்பட்டது.

சிங்கள இராணுவம் நிகழ்த்திய தமிழினப் படு கொலைகள் குறித்து விசாரிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவா ளியாக அறிவிக்க வேண்டும் என இன்றுவரை எதிர்ப்புக் குரல்கள் ஒலித்து வரும் நிலையில், சிங்கள இராணுவம் போரின்போது இன்னொரு பாதகச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள் ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை கொடூரமாக சுட்டுக் கொன்று உலக அரங்கின் தனது கொடூரத் தன்மையை வெளிக்காட்டி இருக்கிறது இலங்கை இராணுவம்.

பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டு கிடக் கும் காட்சிகளை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக் காட்சி கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. இதில் பாலச்சந்திரன் இராணுவ கட்டுப்பாட்டில் இருக் கிறான். கால் சட்டை அணிந்து தோளில் லுங்கியை (துண்டு போல) போட்டிருக்கும் நிலையில் எதையோ சாப்பிட்டபடி அமர்ந்திருக்கிறான்.

அடுத்தடுத்த காட்சிகளில் சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு அவர்களின் உடல் சிதறிக் கிடக்கிறது. அவர்களுக்கு மத்தியில் குண்டடிபட்ட நிலையில் இறந்து கிடக்கிறான் பாலச்சந்திரன்.

பாலச்சந்திரனின் மார்பு பகுதியில் 5 குண்டுகள் பாய்ந்திருக்கின்றன என்றும், குண்டுகள் துளைத் திருக்கும் காயங்களைப் பார்த்தால் அது மிக அருகி லிருந்தவாறு பாலச்சந்திரன் சுடப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது என்றும் சேனல் 4 தொலைக் காட்சி கூறியுள்ளது.

பாலச்சந்திரனின் அருகில் கொல்லப்பட்டு இருக்கும் புலிகள் இறுதிகட்ட யுத்தத்தின்போது பாலச்சந்திரனின் பாதுகாப்பிற்காக பிரபாகரனால் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

போர் தடை செய்யப்பட்ட மண்டலம் அல்லது பாதுகாப்புப் பகுதி என்று உலகத்தை நம்ப வைத்து 40 ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்திருக்கி றது இலங்கை அரசு என்ற குற்றச்சாட்டுக்கு இணை யாகத்தான் பாலச்சந்திரன் படுகொலை சம்பவத் தையும் பார்க்க முடிகிறது.

இந்தப் படுகொலையை அனைத்து தரப்பினரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்த தகவலை வெளியிட்ட சேனல் 4 தொலைக் காட்சி அடுத்தடுத்தும் ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்களை தொடர்ந்து வெளியிடும் என்று தெரி வித்திருப்பது ராஜபக்சேவை பீதியடையச் செய் துள்ளது.

எல்லாவிதமான நவீன ஆயுதங்களையும் அரு கிலேயே வைத்துக் கொண்டு பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவித்து, அங்கு தனது இராணுவத் தைக் கொண்டு அனைத்து திசைகளிலிருந்து ஆயு தப் பிரயோகம் செய்தது போர்க் குற்றம் மட்டுல்ல; மனித குலத்திற்கு எதிரான துரோகம்.

பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்க ளில்தான் பாலச்சந்திரன் எதையோ தின்று கொண்டு இருக்கிறான். ஆக, இலங்கை இராணுவத் தின் பிடியில் இருந்த அவன் கொல்லப்பட்டிருப் பது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட பச்சை படுகொலை என்பதற்கு சாட்சியே!

சேனல் 4 வெளியிட்டிருக்கும் இந்த ஆவணப் படத்திற்கு No Fire Zone : Killing Fields of Sri Lanka (பாதுகாக்கப்பட்ட பகுதி: (என்பது) இலங்கையின் கொலைக் களம்) என்று தலைப்பிட்டிருப்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது.

ராஜபக்சே... குற்றவாளிதான் என்று உலகத் தமிழகர்கள் மட்டுமல்லாது சர்வதேச சமூகமும் ஒப்புக் கொண்டு வரும் நிலையில், சேனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப் படம் இக்கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக இருக்கிறது.

இதனால் இலங்கைக்கு கடுமையான பின்ன டைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலை யில், இந்தியாவின் செயல்பாடுகள் இந்த விஷயத் தில் திருப்திகரமாக இல்லை. இலங்கையின் போர்க் குற்றங்களை ஐ.நா. பொது சபைக்கு எடுத்துச் செல் வதில் இந்தியா வேகம் காட்ட வேண்டும். அப்படி வேகம் காட்டினால் இதன் மூலம் இந்தியா வின் ஜனநாயகத்தன்மை உலக அளவில் வெளிப்படும்.

மனித குலத்திற்கு எதிரான அநியாயங்களை போர் என்கிற பெயரிலோ, தீவிரவாதக் குழுக்களை அழிக்கிறோம் என்ற பெயரிலோ எந்த நாடும் நியா யப்படுத்த முடியாது. ஈழத் தமிழர்கள் மீதான அட் டூழியங்களுக்கு சர்வதேச அரங்கில் நீதி கிடைக்க வேண்டும் என்றால் இலங்கை அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

8000 போஸ்னிய மக்களை படுகொலை செய்த சொர்ப்பிய இனத்தைச் சேர்ந்த இராணுவத் தளபதி ராட்கே மிலடிக்கை போர்க் குற்றவாளியாக அறி வித்து கைது செய்யும்போது 40 ஆயிரம் தமிழர் களை படுகொலை செய்த ராஜபக்சே போர்க் குற்ற வாளியாக அறிவிக்கப்பட மிக தகுதி வாய்ந்தவர்.

ஒரு நகரத்தை தனது படைகளைக் கொண்டு சூழ்ந்து நின்று சுமார் 44 மாதங்களாக முற்றுகை யிட்டு, குடிநீர், மின்சாரம், உணவு போன்றவற்றை தடை செய்து அந்நகரத்தின் மீது குண்டு மழை பொழிந்த கொடூரன்தான் ராட்கே மிலாடிக்.

இதேபோலத்தான் முள்ளிவாய்க்காலை முற்றுகையிட்டு தமிழ் மக்களை திறந்த வெளி முகாமில் அடைத்து அட்டூழியம் புரிந்துள்ளார் ராஜ பக்சே.

போஸ்னியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைத்திருக்கிறது. ஆனால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி எப்போது கிடைக் கும் என்று எழுப்பப்படும் கேள்வியே ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று பிரகடனப்படுத்துகிறது.

இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இலங்கை மண்ணில் மீண்டும் ஒருமுறை இரத்தம் சிந்தப்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும் என்று சேனல் 4 வெளியிட்ட ஆவணப் படத்தை இயக்கிய கெலம் மெக்ரே கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

Pin It