பேராசிரியர் டாக்டர் யூட் லால் பெர்னாண்டோ (Jude Lal Fernando) அவர்கள் யேர்மனிய நீதிமன்றில் 10.06.2022 அன்று வழங்கிய ஆய்வின் தொடர்ச்சி...
நீதிபதி : இந்த வரைவு யாரால் தயாரிக்கப்பட்டது?
“சிறிலங்கா அரசின் சமாதானச் செயலகம் மற்றும் தமிழீழ நடைமுறை அரசின் சமாதானச் செயலகம், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் தரவுகளின்படி தயாரிக்கப்பட்டது. (வரைவில் 2002 - 2006 வரை சிறிலங்கா அரசால் கொல்லப்பட்ட போராளிகள், பொதுமக்களது எண்ணிக்கைகள் காட்டப்பட்டன.)
2002-ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமானத்தளம் தாக்குதலுக்கு உள்ளானது. அது பயணிகள் விமானத்தளம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதன் அருகிலேயே விமானப்படை முகாமும் உள்ளது என்பதுடன், பயணிகள் விமானங்களுக்கான ஓடுபாதையையே விமானப்படையும் உபயோகித்தது. ஆதலால் இது இராணுவத் தளம் என்றே சொல்ல முடியும். இந்த விமானத்தளம் தாக்குதலுக்கு உள்ளானபோது சிங்களப் பொதுமக்கள் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை. செய்தி திரட்டச் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் மட்டும் காயமடைந்தார். இது கரும்புலித் தாக்குதல் என்று சொல்லப்பட்டது. இதன் பின்னர் சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியுற, தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் பின்னர் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. ஆனால் அதற்குத் தேர்தல் காரணமல்ல. பொருளாதார வீழ்ச்சியே காரணம். நான் முதலில் கூறியது போல, எப்போது சிறிலங்காவின் இராணுவ பலம் சிதைகிறதோ, அதன் பிறகே அவர்கள் சமாதானத்தை நோக்கி வருகிறார்கள் என்பது இதிலுள்ள உண்மையாகும். இதன் பிறகே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. யேர்மனிய அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் முழு ஆதரவு வழங்கின. இது வரலாற்றுச் சிறப்பான நிகழ்வு.”
நீதிபதி : இக்காலத்தில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லையா?
“இல்லை; அவ்வாறு நடந்திருந்தால் அது எமக்குச் செய்தியாக வரும். ஏனெனில் அவ்வேளையில் நான் பத்திரிக்கையில் பகுதி நேரமாகப் பணிபுரிந்தேன்.
2006-இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் 7 நாடுகளாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் (த.வி.பு) தடை செய்யப்படுவதற்கு முன்னதாக, போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ஃப் என்ரிக்சன் (Ulf Henrickson) அவர்களால் ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அக்கடிதத்தில் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தால் பேரழிவுகள் ஏற்படும் என அவர் எச்சரித்திருந்ததை, அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.”
நீதிபதி : புலிகள் அரசியல் வழியை நேசிப்பவர்களாக இருந்தால் 2005 தேர்தலைப் புலிகளும் மக்களும் புறக்கணிக்கக் காரணம் என்ன?
“இராணுவத் தீர்வை நோக்கி நகர்ந்த சிறிலங்கா அரசையும், அதன் புறக் காரணிகளையும் தடுக்கவே 2005-இல் தமிழீழ மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.”
நீதிபதி : யார் கருணா?
“கருணா என்பவர் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்தவர். அவர் சமாதானச் சமநிலையை உடைக்கப் பயன்படுத்தப்பட்டார். அவ்வாறே புலிகளிலிருந்து உடைந்து வெளியேறினார். இவரை வைத்து ஒட்டுக்குழுவை உருவாக்கிய சிறிலங்கா அரசு படுகொலைகளை நிகழ்த்தியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சமாதானத்திற்காகப் பாடுபட்ட புலிகளைத் தடை செய்த ஐரோப்பிய ஒன்றியம், சமாதானத்தைக் குழப்பிய கருணா குழுவைத் தடை செய்யவில்லை என்பதுவேயாகும்.”
நீதிபதி : புலிகள் எவ்வாறு தமது படையில் ஆட்களை இணைத்தனர்?
“தாமாகவே போராட்டத்தில் இணைந்தவர்கள் பலர். பின்னர் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உள்ள குடும்பங்களில் ஒருவரைப் போராட்டத்தில் இணைய வருமாறு புலிகள் அழைத்தனர்.”
நீதிபதி : புலிகள் சிறுவர்களை இணை‘த்’தனரா? புலிகளோடு சிறுவர்கள் இணை‘ந்’தனரா?
“புலிகளோடு இணைந்த சிறுவர்களைப் புலிகள் போர் தவிர்ந்த வேறு செயற்பாடுகளில் ஈடுபடுத்தினார்கள். கல்வி, விளையாட்டு போன்றவற்றினூடாகக் கற்பித்தார்கள். பெற்றோரை இழந்த 5000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அங்கே இருந்ததாகக் கிறித்தவ மதகுரு ஒருவரை ஆதாரம் காட்டிப் பணியகம் தெரிவித்தது. போர்ச்சூழலில் வேறெந்த நிறுவனங்களும் இயங்க முடியாத சூழலில் புலிகளைத் தவிர வேறெவராலும் அங்கேயுள்ள சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த இயலாது. அதனால் புலிகளோடு இணைந்த சிறுவர்கள், புலிகளால் உருவாக்கப்பட்ட இல்லங்களில் இணைக்கப்பட்டார்கள். இது எப்படிப் போரில் இணைக்கப்பட்டதாகக் கருதப்பட முடியும்?”
நீதிபதி : சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்படவில்லையா?
“இல்லை.”
மீண்டும் அழுத்தமாக நீதிபதி : சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்படவில்லையா?
“இல்லை.”
நீதிபதி : அப்படியென்றால் சிறுவர்களுக்குப் புலிகள் போர்ப்பயிற்சி அளிக்கவில்லை என்கிறீர்களா?
“மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே! நான் புலிகள் இயக்கத்தின் இராணுவக் கட்டமைப்பைப் பற்றி அறிந்தவனல்ல. நான் தேடும் தகவல்கள் அனைத்தும் அந்த மண்ணிலிருந்து பெறப்பட்டவை. சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்துதல் என்பது வேறு, பயிற்சி அளித்தல் என்பது வேறு. தமிழர் நிலப்பரப்பின் எல்லைப் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் கைகளில் சிறிலங்கா அரசு பாதுகாப்பிற்கென ஆயுதம் வழங்கிப் பயிற்சியும் வழங்கியது. அப்படியென்றால் அவர்களை சிறிலங்கா இராணுவம் போருக்குப் பயன்படுத்தியதென்று சொல்ல முடியுமா?”
நீதிபதி : புலிகள் 2002-க்குப் பிறகுதான் சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்தவில்லையா அல்லது அதற்கு முன்பிருந்தே ஈடுபடுத்தவில்லையா?
“அதற்கு முன்பும் சிறுவர்களைப் புலிகள் போரில் ஈடுபடுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை.”
நீதிபதி : வயது குறைந்த என்பதற்கும் சிறுவர்கள் என்பதற்குமான வேறுபாடு என்ன?
“இதற்கான பதிலை நான் சொல்வதற்கு முன்பு மதிப்பிற்குரிய நீதிபதி அவர்கள் அங்கேயிருந்த சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசு நடத்திய போரின் காரணமாக அங்கே பல சிறுவர்களுக்குப் பெற்றோர்கள் இல்லை. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் படையில் இணைந்தால் அவர்களது உருவத்தைக் கொண்டு நாம் வயதைக் கணிப்பிட முடியாது. அவர்கள் வயதில் குறைந்தவர்களாக அல்லது சிறுவர்களாக அடையாளம் காணப்பட்டால் அவர்களைப் புலிகள் போரில் ஈடுபடுத்தியதற்கான ஆதாரங்கள் எதையும் நான் காணவில்லை.”
நீதிபதி : 2002-இன் பின்னர் 900 சிறுவர்கள் புலிகளால் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. அவர்கள் சிறுவர்கள் என்றால் அவர்கள் ஏன் புலிகளோடு இணைந்தார்கள் அல்லது இணைக்கப்பட்டார்கள்?
“இதற்கும் நான் முதலில் கூறிய பதிலே பொருத்தமானதாகும். உணவு, கல்வி மற்றும் பெற்றோர்கள் அற்ற நிலையில் இருந்த பல சிறுவர்களைப் புலிகள் தம்மோடு அரவணைத்துக் கொண்டார்கள். சிறுவர்களுக்கும் அது பாதுகாப்பாக இருந்தது. தொடர்ந்து போர் நடைபெற்று வருகின்ற மண்ணில் சிறுவர்களை அநாதரவாக விட இயலாது என்பதற்காக அவர்களை அணைத்து வளர்த்ததற்காக, அவர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பது பொருத்தமற்றதாகும்.”
நீதிபதி : அப்படியானால் 900 சிறுவர்களும் விடுவிக்கப்பட்டபோது எங்கே சென்றார்கள்?
“குறித்த வயதிற்குப் பின்னர் தமக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. த.வி.பு நடாத்திய அனைத்துலகப் பத்திரிக்கையாளர் மாநாட்டில் பல கேள்விகளுக்கான பதில்கள் அடங்கியிருந்தன. அது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிகுந்த சந்திப்பு!”
நீதிபதி : இலங்கை சனாதிபதி பிரேமதாசவைக் கொன்றது புலிகள் அல்லவா?
“இல்லை; இதற்கு ஆதாரமாக அப்போதைய பிரமுகர் பிரட்மன் வீரக்கோன் வெளியிட்ட அறிக்கையை நான் காண்பிக்க முடியும். பிரேமதாச புலிகளால் கொல்லப்படவில்லை என்பது அவரால் அறிக்கையாக வெளியிடப்பட்டிருந்தது. இவ்விடயத்தில் பேராசிரியர் ரோசல் (Rössler) தவறாகத் தனது அறிக்கையைத் தந்திருக்கிறார்.
சிங்கள இராணுவம் தமிழர்கள் அனைவரையுமே புலிகளாகவே நோக்கியது. புலி உறுப்பினருக்குக் குடிப்பதற்கு ஒரு குவளையில் நீர் கொடுத்தவரும் புலி என்றே வருணிக்கப்பட்டார். மருத்துவமனைக்கும், தேவாலயங்களுக்கும், கோயில்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக இராணுவத்தினர் செயற்பட்டனர். செஞ்சோலை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் இதற்குச் சிறந்த உதாரணமாகும். இதை அப்போதைய ஐ.நா-வின் வதிவிடப் பிரதிநிதி கார்டன் வெய்ஸ் (Cordon Weiss) சுட்டிக் காட்டியிருந்தார். பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் (No Fire Zone) அறிவிக்கப்பட்ட பிரதேசத்தினுள் சென்ற மக்களில் 147,000 மக்களைக் காணவில்லை என அருட்தந்தை இராயப்பு யோசேப் தெரிவித்தது பற்றி இந்த நீதிமன்றம் ஆராய வேண்டும். அதே போல சார்லஸ் பாட்ரிக் (charles Patric) அறிக்கையையும் ஆராய வேண்டும்.”
(தொடரும்...)
- சபா