தடுப்பு மருந்துகளின் தட்டுப்பாடு, அல்லது தடுப்பு மருந்துகளை வாங்கும் அளவிற்கு வசதியின்மை போன்ற காரணங்களால் ஏழை நாடுகளிலுள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.

டயரியா என்று சொல்லப்படுகின்ற வயிற்றுப் போக்கு, நிமோனியா நோயினால் பாதிப்படையும் நுரையீரல், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உயிர் காக்கும் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. இதுபோன்ற கொடிய நோய்களுக்கான மருந்துகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

உயிர் காக்கும் இம்மருந்துகளை ஏழை நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு கொண்டு சென்று சேர்க்கும் பணியில் தடுப்பு மருந்து மற்றும் நோயெதிர்ப்பு மருந்துகளுக்கான உலகக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது.

இவ்வமைப்பு மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில், தடுப்பூசி போட்டிருந்தால் தவிர்த்திருக்கலாம் என்பது போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 25 லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள் என அதிர்ச்சித் தகவலைத் தருகிறது.

தடுப்பூசி மருந்துகளின் கடுமையான விலை உயர்வு - வசதியற்ற குழந்தைகளுக்கு அம்மருந்துகள் கொண்டு போய் சேர்ப்பதில் தடையாக இருக்கிறது என்றும் கூறி வருகிறது இந்த அமைப்பு.

தடுப்பூசிகளின் விலையேற்றம் இருக்கும் நிலையிலும், ஏழை நாடுகளை ஒருங்கிணைத்து கூட்டாகச் சேர்த்து மருந்துகளை வாங்கிப் பகிர்ந்து கொள்ளும் முறையை கையாண்டு மனித குலத்திற்கு சேவை செய்து வருகிறது தடுப்பு மருந்து மற்றும் நோயெதிர்ப்புக்கான உலக கூட்டமைப்பு. அப்படியிருந்தும் கிடுகிடு விலையேற்றத்தால் விழி பிதுங்கி நிற்கும் இவ்வமைப்பு மூவாயிரத்து எழுநூறு கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்து வருவதாக கவலையுடன் தெரிவிக்கிறது.

இந்நிலையில் கொஞ்சம் போல மனமிறங்கி வந்துள்ள தடுப்பு மற்றும் நோயெதிர்ப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களான கிளாக்úஸô ஸ்மித் லைன், மெர்க், ஜான்சன் அண்ட் ஜான்சன், சனோஃபி அவெண்டிஸ் ஆகியவை மருந்துகளின் விலையைக் குறைப்பதாக அறிவிப்புச் செய்துள்ளன.

இந்த விலைக்குறைப்பு கூட பொதுவான குறைப்பாக இல்லாமல் தடுப்பு மற்றும் நோயெதிர்ப்பு மருந்துகளுக்கான உலகக் கூட்டமைப்பின் மூலமாக விற்கப்படும் மருந்துகளின் விலைகளைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன. அதே சமயம் இந்த மருந்துகளுக்கான விலை குறைப்பின் மூலம் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பணக்கார நாடுகளுக்கு விற்கும் மருந்துகளின் விலையை கூட்டவும் மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

சர்வதேச மருந்து கம்பெனிகளின் விலைக் குறைப்பு அறிவிப்பு இந்திய மருந்து கம்பெனிகளையும் விலையைக் குறைக்கச் செய்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தியே!

இந்திய மருந்து நிறுவனங்களான சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பனேஷியா பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும், தொண்டையடைப்பான் (டிப்தீரியா), நரம்பிழப்பு நோய் (டெட்டனஸ்), கக்குவான் இருமல் (பெர்டர்ஸிஸ்), மஞ்சள் காமாலை நோய் (ஹெப்பாடிடிஸ்-பி), இரத்தக் காய்ச்சல் (ஹீமோ குளோஃபிலஸ் இன்ஃபுளுவென்ஸபி) போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்தின் விலையைக் குறைக்க சம்மதித்திருக்கின்றன.

தடுப்பு மருந்துகளின் விலைக் குறைப்பு அறிவிப்பை வரவேற்றுள்ள சமூக ஆர்வலர்கள், ஏனைய இந்திய மருந்து தயாரிப்பு கம்பெனிகளும் விலைக் குறைப்பை செய்ய முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் 40 லட்சம் குழந்தைகளின் பெயர்களைத் தடுப்பூசிகள் மூலம் காப்பது என்ற திட்டத்தை முன் வைத்தது. இதனை ஒரு இயக்கமாகவே நடத்திச் செல்கிறது தடுப்பு மருந்து மற்றும் நோயெதிர்ப்பு மருந்துக்கான உலகக் கூட்டமைப்பு.

பெரும் ஜனத்தொகையைக் கொண்ட நாடான இந்தியா, வல்லாதிக்க ஏகாதிபத்தியங்களோடு கைகோர்த்துக் கொண்டு நாட்டின் பாதுகாப்பிற்கும், ஆயுதத் தயாரிப்புகளுக்கும் பல கோடிகளை செலவு செய்து வருகிறது - ஏழை மக்கள் நிறைந்து வாழும் இங்கே மனித அழிவுக்கான ஆயுதங்களை தயாரிக்கும் செலவில் பெருமளவைக் குறைத்து - உயிர் காக்கும் மருந்துகளை வாங்கி ஏழை மக்களுக்கு பயன்படச் செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் தடுப்பு மருந்துகளுக்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்து தரவும் மத்திய அரசு முன் வர வேண்டும்.

மாநில அரசுகளும் இது போன்ற தடுப்பு மருந்துகளுக்கு மானியம் வழங்கி மருந்துகளின் விலையைக் குறைத்தால் ஏழை பெற்றோரின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறதோ இல்லையோ அவர்களின் குழந்தைகளது உயிராவது மிஞ்சும்.

- ஃபைஸல்

Pin It